செய்திகள்

Sunday, January 23, 2022

செய்திகள்

செய்திகள்

கிழக்கில் சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் இன்று வவுனியா அரச அதிபரிடம் கையளிப்பு

cm.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு கிழக்கு மாகாணத்தில் சேகரிக்கப்பட்ட உலர்உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் ஒரு தொகுதியை இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா அரச அதிபர் ஊடாக கிழக்கு மாகாணமுதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கையளிக்கவிருக்கிறார்.

இதற்காக வவுனியா சென்றுள்ள முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வவுனியா மாவட்டச் செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபரைச் சந்திப்பதுடன் நலன்புரி முகாமுக்கும் விஜயம் செய்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து நிவாரணப்பொருட்களைக் கையளிப்பார் என்று முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கையளிக்கப்படவிருக்கும் முதலாவது தொகுதி உலர்உணவு நிவாரணம் சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியானது. இடம்பெயர்ந்து வரும் வன்னி மக்களுக்கு வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அமைப்புகள், ரி.எம். வி.பி. கிளைகள் மூலம் முதலமைச்சரின் வழிகாட்டலில் உலர் உணவுப்பொருட்கள் வீடுவீடாகச்சென்று சேகரிக்கப்பட்டு வந்தன. அவற்றின் ஒரு தொகுதியே இன்று வவுனியாவில் கையளிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கோர்ட் முன் தீக்குளிக்க காங். வக்கீல் முயற்சி

 நாகர்கோவில் கோர்ட் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க வக்கீல் ஒருவர் முயன்றதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் கோர்ட் வாளகத்தின் முன் வக்கீல் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டில் ஒன்றுடன் வந்தார்.

பின்னர் அவர் இலங்கை தமிழர் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக அறிவித்தார். இதையடுத்து கோர்ட் வளாகத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். விசாரணையில் அவர் நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் கோசல்ராம் என்றும் அவர் ஒரு காங்கிரஸ் பிரமுகர் என்பது தெரிய வந்தது

விசுவமடு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா 500 பொதுமக்கள் கொல்லப்பட்ட போது கண்டனம் தெரிவிக்காதது ஏன்?- செல்வம் அடைக்கலநாதன்

selvam.jpgசிறி லங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடு பகுதியில் நேற்று நடைபெற்ற குண்டுத் தாக்குதலுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 500-க்கும் அதிகமானோர் காயப்பட்ட போதும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் உண்மை நிலைமை என்னவென்று யாருக்கும் தெரியாது. அத்துடன் அப்பிரதேசத்தில் போர் தீவிரமாக நடைபெறுகின்றது. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைத்தரப்பும் கூறுகின்ற கதைகளை கேட்டு எப்படி கண்டனம் தெரிவிக்க முடியும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று விடுதலைப் புலிகளிடம் வேண்டுகோள் விடுத்து கண்டனம் தெரிவித்த கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் வாழும் அகதிகள் தொடர்பான முழு விபரங்களும் வெளியிடப்படவேண்டும்:ஆனந்த சங்கரி

sangari.jpgஇடம் பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் தொடர்பான முழு விபரங்களையும் வெளியிடுவதன் மூலம் அது அவர்களின் உறவினர்களின் பதட்டத்தையும், அச்சத்தையும் போக்குவதுடன் அவர்களுக்கு வேண்டிய சில தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வன்னியில் விடுதலைப் புலிகளிடமிருந்து உயிரை பயணம் வைத்து தப்பி ஓடி வவுனியா பிரதேசத்துக்குள் வந்துள்ள இடம் பெயர்ந்த மக்களைப் பற்றிய அறிய மிக ஆவலாக அவர்களின் உறவினர்கள் பிற நாடுகளிலிருந்து பல தொலைபேசி அழைப்புக்கள் நேற்றும் இன்றும் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்பதையும். அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதையும் அறிய விரும்புகின்றனர். அப்பாவி மக்களை விடுவிக்குமாறு சர்வதேச அமைப்புக்களாகிய ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுத் தலைமை நாடுகள் மற்றும் அமெரிக்கா கனடா, பிரித்தானியா இந்தியா போன்ற நாடுகளும் விடுதலைப் புலிகளை வேண்டியுள்ளன. தமிழ்நாடோ, தமிழ் தேசிய கூட்டணியினரோ விடுதலைப் புலிகளிடம் இத்தகைய வேண்டுகோள்களை விடுக்காதது துரதர்pஷ்டமே. அதைவிடுத்து அவர்கள் இன்றும் வெளியிட்டுள்ள முட்டாள்தனமான அறிக்கை அதிர்ச்சியைத் தருகிறது.

நான் தங்களிடம் மூன்று கோரிக்கைகளை விடுக்க விரும்புகிறேன். முதலாவதாக யார் யார் இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ளார்களோ அவர்களின் பெயர் விபரம், தற்போது தங்க வைக்கப்பட்டள்ள இடம் போன்ற விபரம் அடங்கிய பட்டியலை வெளியிட வேண்டும். அது அவர்களின் உறவினர்களின் பதட்டத்தையும், அச்சத்தையும் போக்குவதுடன் அவர்களுக்கு வேண்டிய சில தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும்.

இரண்டாவதாக, வந்துள்ளவர்களில் முதியோர், சிறு பிள்ளைகள், நோய்வாய்ப்பட்டுள்ளோரை வவுனியாவில் உள்ள அவர்களின் உறவினர்கள் ஏற்பார்களேயானால் அவர்களை அனுமதிப்பதோடு எஞ்சியவர்களை உரிய விசாரணையின் பின் அவர்களின் பெற்றோரிடம் கையளிக்கலாம். எனது வேண்டுகோள்களுக்கு ஆதரவாக இரு சம்பவங்களை குறிப்பிட விரும்புகின்றேன். எனக்குத் தெரிந்த கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் இரு கால்களும் அற்ற நிலையில் மன்னார் வைத்தியசாலையில் நினைவிழந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் குடும்பத்தினர் பற்றிய செய்தி எதுவும் தெரியாத நிலை உறவினரை தேடித் தருமாறு என்னைத் தொந்தரவு செய்கின்றனர். மற்றுமோர் சம்பவத்தில் ஓர் பெண்மணி ஒரு காலில் படுகாயப்பட்டு அவரின் தாயார் அவரை மன்னார் வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கின்றார். மறுநாள் வவுனியா வந்த அவர் கணவர் வவுனியா வைத்தியசாலையில் தன் மகன் ஒருவரை பராமரிக்கின்றார். இவர்களை அவர்களின் உறவுக்காரர்கள் அவர்களை தம்முடன் தம் வீட்டில் வைத்திருக்க சம்மதம் தெரிவிக்கின்றனர்.

எனது மூன்றாவது வேண்டுகோள் உள்ளுர் பொது அமைப்புக்கள், அரசியற்கட்சிகள், கிராம முன்னேற்ற சங்கங்கள், சனசமூக நிலையங்களைச் சேர்ந்தவர்களை அகதிகள் சந்தித்து உதவ அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அனுமதிப்பதால் விடுதலைப் புலிகள் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அவர்களின் பொய்ப்பிரச்சாரம் இளைஞர்களை மற்றவர் அறியாத இடத்துக்கு மாற்றப்படுவதாகவும், பெண்கள் காணாமல் போகிறார்கள் என்றும் பொது மக்கள் சிறைக்கைதிகள் போல் நடத்தப்படுகிறார்கள் என்றும் வழங்கப்படும் உணவின் தரம் மிகக் குறைவாக இருப்பதாகவும் இதுபோன்ற இன்னும் பலவாகும். நாளுக்குநாள் முகாமுக்குள் வந்து சேரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இத்தகைய தொண்டர்களின் உதவி மிக பிரயோசனமானதாக இருக்கும்

பாக்கு நீரிணையில் இந்திய போர்க் கப்பல்கள்!

boats-1002-2.jpgஇலங்கையில் யுத்தம் தீவிரமடைந்து வரும் வேளையில் இராமேஸ்வரம் கடல்பகுதியில் புலிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் விமானப்படையினரின் போர் விமானங்களும் போர்க்கப்பலும் தீவிர கண்காணிபபில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்தியச் செயதிகள் தெரிவிக்கின்றன.

அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுருவலாம் எனக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இராமநாதபுரம் கடல் பகுதியின் மாவட்டக் கடலோரப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான 4 போர்க்கப்பல்கள் 500 க்கும் மேற்பட்ட கமாண்டோ படைவீரர்களுடன் தீவிரமாக பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றன.

இராமேஸ்வரம் தனுஷ்கோடி, பாம்பன் மண்டபம் ஆகிய பாககு நீரிணை  கடல்பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான் போர்க்கப்பல்கள் ரோந்தில் ஈடுபட்டுள்ளன

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் தூத்துக்குடியில் உள்ள கடலோர காவல் படைக்குசொந்தமான போர்க்கப்பல் ஒன்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படை ஹெலிகொப்டர்  இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்றும் கடலில் தாழ்வாகப் பறந்து கண்காணித்து வருகிறது மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான தரையிலும் நீரிலும் அதிவேகமாக செல்லக்கூடிய 2 ஹோவர்கிராப்ட் ஐசி 181 183 ஆகியவையும் 24 மணிநேரமும் கடலில் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றன

கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களின் அடையாள அட்டைகள் படகுகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இதுதவிர கியூப்பிரிவு பொலிஸார் கடலோரப்பகுதியில் ரோந்து சென்று இலங்கையில் இருந்து யாரும் தப்பிவருகிறார்களா இலங்கைக்கு பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா என்று கண்காணித்து விசாரணை நடத்திவருகின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்களப் பேரினவாதப் போக்கால் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகிவிடுவார்கள் – ஜுனியர் விகடனுக்கு மங்கள சமரவீர அளித்த பேட்டி

mangala_saramaweera.jpgசர்வகட்சி பிரதிநிதிகள் குழுவென்பது சர்வதேச நெருக்குதலை குறிப்பாக இந்திய அழுத்தத்தை சமாளிப்பதற்கான கேலிக்கூத்து. இந்தியாவில் நடைமுறையிலிருப்பது போன்ற கூட்டாட்சி அமைப்பே இலங்கையின் சிக்கலைத் தீர்க்க தேவைப்படுகிறது என்று நம்புகிறேன் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜுனியர் விகடனுக்கு அவர் அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். பேட்டி வருமாறு;

கேள்வி: மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாவதற்கு நீங்கள் பெரிதும் உழைத்தீர்கள். ஆனால், இப்போது அவருடனான உறவை முறித்துக் கொண்டது ஏன்?

பதில்: கடந்த 2005 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது ராஜபக்ஷவுக்கு தலைமைப் பிரசார ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன். அவர் ஜனாதிபதியானதும், எனக்கும் அமைச்சரவையில் பங்கு கொடுக்கப்பட்டது. 2006 இற்கு பிற்பகுதியில் தான் எங்கள் உறவில் கசப்பு ஏற்படத் தொடங்கியது. குறிப்பாகச் சொன்னால் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்தும், மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டது குறித்தும் நான் கவலை தெரிவித்த போதுதான் கசப்பு மேலிட்டது.

இத்தகைய கொடுமைகள் நடக்கும்போது அரசு செயலற்று இருந்தால், சர்வதேச அளவில் ஏற்படும் பழிச்சொல் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற முறையில் அவரிடம் எடுத்துரைத்தேன். நானும் ராஜபக்ஷவும் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருந்தபோது, இது போன்ற நிலைமைகளை சந்திரிகா எவ்வாறு கையாண்டார் என்பதை சுட்டிக் காட்டினேன்.

1995 இல் பொல்கோட வாவியில் பிணங்கள் மிதந்தபோது, சந்திரிகா அரசு குற்றவாளிகள் மீது உறுதியாக நடவடிக்கை எடுத்தது. கிருஷாந்தி குமாரசாமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கிலும் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் மீதும் வழக்குத் தொடரப்பட்டு, முடிவில் அவர்களுக்கு தண்டனை கிடைத்தது. ஆனால், இப்போது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால், அது இராணுவத்தின் மனஉறுதியைக் குலைத்துவிடும் என்று சாக்குச் சொல்லி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனவே, என் கவலைகளை எல்லாம் 13.12.2006 இல் ஜனாதிபதிக்கு ஒரு கடிதமாகக் கொடுத்தேன். ஆறு வாரம் கழித்து 27.1.2007 இல் நான் வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டேன். 09.02.2007 இல் அமைச்சரவையிலிருந்தே அகற்றப்பட்டேன். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் போற்றி வளர்த்த ஜனநாயக நிறுவனங்களை ராஜபக்ஷவும் அவருடைய சகோதரர்களும் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். சிங்கள பௌத்த பேரினவாத கொடுங்கோலாட்சியை, பர்மிய அரசு மாதிரி நிறுவக் கனவுகாணும் தீவிரவாத சக்திகளான இவர்களின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க என் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை.

கேள்வி: நீங்கள் உரிமைகளுக்காகப் பேசக்கூடியவராக அறியப்பட்டுள்ளீர்கள். உங்கள் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நிறுவுவதற்கு அடிப்படையாக இருந்த ஜனநாயகசோஷலிசக் கொள்கைகளை, உறுதியாக நம்புகிறவன் நான். ஆனால், ராஜபக்ஷ ஆட்சியில் மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்ளாத இருண்ட காலம் உருவாகி இருக்கிறது. தீவிரவாத சக்திகள், ஆளுங்கட்சியைக் கைப்பற்றி, அதன் மிதவாதக் கொள்கையை ஒழித்துக்கட்டிவிட்டு, இராணுவ சர்வாதிகாரம் போன்ற ஒன்றை உருவாக்கி வருகின்றன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் அரசாங்கம் எம்முடைய நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் திட்டமிட்டே நொருக்கி வருகிறது. பொலிஸ் துறையும், தேர்தல் ஆணையமும் அரசு நிர்வாகமும் சுயேச்சையாக இயங்குவதை உறுதி செய்யும் 17 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளிவிட்டனர். நீதித்துறை கடுமையான நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளது. தலைமை நீதிபதியையே ஆட்சியாளர்கள் தாக்கி வருகின்றனர். இனவாதமே அரசாங்கக் கொள்கையாகிவிட்டது.

கொழும்பில் உள்ள தமிழர்களை வெளியாளர்கள் என்று சொல்லி பொலிஸ் துறை சித்திரவதை செய்கிறது. இது ஒரு சிங்களபௌத்த நாடு. இங்கே சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கு இடமில்லை என்று ஜாதிக ஹெல உறுமய அமைச்சர் சம்பிக்கவும் இராணுவத் தளபதி பொன்சேகாவும் கூறிய கருத்தும் இதைத்தான் காட்டுகின்றன. அரசில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இவ்வளவு மோசமான கருத்துகளை வெளியிட்டபோதும், யாரும் இதை மறுக்கவோ திருத்தவோ இல்லை.

கேள்வி: ராஜபக்ஷ அரசு போர் வெறிபிடித்து அலைவதாக உலக நாடுகள் சிலவும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனவே?

பதில்: இலங்கையின் மக்கள் தொகை வெறும் இரண்டு கோடிதான். ஆனால், இவர்களை ஆள்வதற்கு அனைத்து வசதிகளோடும் சலுகைகளோடும் 113 அமைச்சர்கள் உள்ளனர். இதனால், ஏற்படும் வீண்செலவும் ஊழலும் சேர்ந்து இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கின்றன. இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு கருவியாகத்தான் போர் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை நிலைமை குறித்துக் கவலை தெரிவிக்கும் நட்பு நாடுகளைச் சேர்ந்த தூதர்களும், ஐ.நா. உயர் அதிகாரிகளும் கூட அரசு நடத்தும் ஊடகங்களால் புலி ஆதரவாளர்களாக தவறாகச் சித்திரித்துக் காட்டப்படுகின்றனர். இந்தப்போர், ஒரே நாட்டில் இரு இனக்குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல். இதில் வெற்றிபெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் என்று யாரும் இல்லை. பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, நீடித்த அமைதி மலரச் செய்வதற்கு இங்கே ஒரேயொரு வழி உண்டென்றால், அது தமிழ் மக்களின் உண்மையான மனக்குறைகளைப் போக்குவதுதான்.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் அப்பட்டமான பேரினவாதக் கொள்கைகள், மிதவாதத் தமிழர்களைக்கூட அதிதீவிர நிலைகளுக்குத் தள்ளிவிடுகின்றன. தற்போதைய போரில் பிரபாகரனையே ஒழித்துவிட்டாலும், சிங்களப் பேரினவாதப் போக்கால் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகிவிடுவார்கள் என்பது நிச்சயம். இதனால், இலங்கையின் துயரம் அடுத்த தலைமுறைக்கும் தொடரும்.

கேள்வி: அப்படியென்றால், ராஜபக்ஷ மனதிலுள்ள திட்டம் தான் என்ன?

பதில்: ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தீர்வு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவரே அனைத்துக் கட்சி ஆய்வுக் குழுவிடம் ஒற்றையாட்சி திட்டத்தைத் தாண்டிச் சிந்திக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவு செய்வதில் அவருக்கு அக்கறை இல்லை.

கிழக்கு மாகாணத்தை விடுதலை செய்து, அங்கு ஜனநாயகத்தை நிறுவி இருப்பதாக உலகுக்குக் காட்டுகிறார்களல்லவா. அந்தக் கிழக்கு மாகாண சபைக்கு எவ்வித அதிகாரமும் தரப்படவில்லை. அப்பகுதியின் முதலமைச்சர் அரசுத் தரப்பின் ஆளாக இருந்தும் தனக்கு அதிகாரமே தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். 13 ஆவது சட்டதிருத்தத்தின்படியான அதிகாரங்கள் கூட எந்த மாகாண சபைக்கும் தரப்படவில்லை.

அனைத்துக் கட்சி ஆய்வுக்குழு என்பது சர்வதேச நெருக்குதலையும் குறிப்பாக இந்திய நெருக்குதலையும் சமாளிப்பதற்காக நடத்தப்படும் கேலிக்கூத்து. இந்தியாவில் இருப்பது போன்ற கூட்டாட்சி அமைப்பே எம்முடைய சிக்கலைத் தீர்க்கத் தேவைப்படுவதாக நம்புகிறேன். 2000 த்தில் சந்திரிக்கா முன்வைத்த அரசமைப்புச் சட்ட வரைபை தமிழர் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கருதலாம்.

கேள்வி: சிவராம், லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் இலங்கையில் உண்மைகளை வெளியிட்டதற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பின்னணியில் அரசின் கைங்கரியம் தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?

பதில்:அனுமதிப்பத்திரம் இல்லாத மோட்டார் பைக்குகளில் வந்தவர்கள் இராணுவப் பாணி தாக்குதலில் இறங்கி இரத்மலானை விமான நிலையம் அருகில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் லசந்தவை கொன்றனர். ஒரு சராசரிக் குடிமகன் நம்பர் பிளேட் இல்லாமல் இப்பகுதியில் 10 மீற்றர் தூரத்தைக்கூட கடந்து செல்லமுடியாது. நம்மிடம் திட்டவட்டமான சான்று ஏதும் இல்லையென்றாலும் பாதுகாப்புத் துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள நம்பத்தக்க தகவலின்படி இதுபோன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கென்றே பயிற்சி பெற்ற கொலைக்குழுக்கள் இலங்கையில் பல இருப்பதாக தெரிகிறது.

இந்தக்குழு பாதுகாப்புத் துறையில் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரிக்கு மட்டும்தான் பதில் சொல்லவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை இவர்கள்தான் கொன்றனர். கீத்நோயர் என்ற பத்திரிகையாளர் மீது நடைபெற்ற கொடுந்தாக்குதலும் லசந்த கொல்லப்பட்டதும் இவை எல்லாம் இப்படியொரு கொலைக்குழு இருப்பதையே காட்டுகின்றன.

கேள்வி: ராஜபக்ஷவின் ஆட்சி நடைமுறைக்கு எதிராக ஹிலாரி கிளின்டனை அணுகி புகார் தெரிவிக்க நீங்கள் திட்டமிட்டு இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. உங்களின் முயற்சிக்குப் பலன் கிடைக்குமா?

பதில்: பாதுகாப்புத் துறைச்செயலாளர் அமெரிக்கக் குடிமகன் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் பசில் ராஜபக்ஷவும் பச்சை அட்டை வைத்திருப்பவர்கள். இந்த மூவரின் குற்றச் செயல்கள் குறித்து ஓர் ஆவணத்தைத் தொகுத்துக் கொண்டிருந்தபோதுதான் லசந்த கொல்லப்பட்டார் என்பது எனக்குத் தெரியும் . இப்போது நானும் வேறு சிலரும் சேர்ந்து இந்த ஆவணத் தொகுப்பை முடித்துவிட முடியும் என நம்புகின்றோம். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம்இந்தத் தொகுப்பை கையளிப்பதற்காக சந்திப்பு நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்போம்.

ஒபாமா அரசாங்கம் ஜனநாயகத்திலும் சட்டத்தின் ஆட்சியிலும் உறுதியான பற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் ஆசியாவின் மிகத் தொன்மையான ஜனநாயகங்களில் ஒன்றாகிய இலங்கையில் ஜனநாயகப் பாரம்பரியத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கக் குடிமக்களான இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறோம்.

இதையெல்லாம் செய்வதற்காக என்மீதும் அரசு தரப்பு பழிவாங்குதலையும் தாக்குதலையும் நடத்தக்கூடும். என் ஆதரவாளர்கள் மூலமாக எதையும் சமாளித்து கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்டுவேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் மங்கள சமரவீர.

இரு வருடங்களில் யாழ். குடாநாட்டை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் – டக்ளஸ்

epdp.jpgயாழ். குடாநாட்டின் அபிவிருத்திப் பணிகள் அனைத்தையும் ஆரம்பித்து வைத்துவிட்டு வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள மக்கள் மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுக்கவிருப்பதால் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் தங்களது முழுமையான பங்களிப்புகளை வழங்க முன்வர வேண்டும். சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ். மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்களை அண்மையில் சந்தித்து சமூக மட்டத்திலான பல்வேறு வேலைத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது, எம்மக்களின் நலன்சார்ந்து உழைப்பதற்கு எமக்குக் கிடைத்த பல்வேறு அரிய சந்தர்ப்பங்களை தமிழ்த் தரப்பு அரசியல் தலைவர்களும், ஆயுதமேந்திய இயக்கங்களும் ஒழுங்குற பயன்படுத்தத் தவறியதால், இன்று எம்மக்களுக்கு இவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இனி மேலும் நாம் இந்த வரலாற்றுத் தவறுகளை செய்யக் கூடாது. நொந்து, நொடிந்து போயிருக்கும் எமது சமூகத்தை தூக்கி நிறுத்துவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் பங்களிப்புகளை வழங்க முன்வர வேண்டும்.

தத்தமது தனிப்பட்ட வளர்ச்சியினை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல், அனைவரும் எமது சமூக மேம்பாடு கருதி சிந்தித்து செயற்பட முன்வர வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்தினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவர், சுமார் இரண்டு தசாப்த காலத்திற்கும் மேல் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவும் இயற்கை காரணமாகவும் ஏற்பட்டுள்ள அழிவுகளை இருவருட காலத்திற்குள் மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இதற்கு அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்புகள் அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின்போது சமூக சேவைகள் உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய புதிய வேலைத் திட்டங்கள் போன்றவை தொடர்பிலான திட்ட அறிக்கைகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன. இந்த அறிக்கைகளை ஆராய்ந்து, இவற்றில் அடங்கியிருக்கும் விடயங்கள் குறித்து மீளக் கலந்துரையாடி உரிய வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

“ரிவிர’ ஆசிரியர் தாக்குதல்; தகவல் வழங்கினால் ரூபா 10 இலட்சம் சன்மானம்

rivira-editor-02.jpg“ரிவிர’  பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோனை தாக்கியவர்கள் தொடர்பாக தகவல் வழங்குவோருக்கு ரூபா 10 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

சிலவாரங்களுக்கு முன்னர் “ரிவிர’ ஆசிரியர் தென்னக்கோன் கடுமையாக தாக்கப்பட்டார். இவரை தாக்கியவர்களை கைது செய்ய முடியவில்லை என்று பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். ஆயினும் உபாலி தென்னக்கோனின் மனைவி தெரிவித்த தகவலின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரென நம்பப் படும் ஒருவரின் உருவப்பட மாதிரியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு ஜனவரி 25 இல் உபாலி தென்னக்கோனும் அவரது மனைவியும் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

பாதுகாப்பை நாடி வரும் சிவிலியன்களின் நலன்கருதி இன்று முதல் புதிய நடைமுறை

mahinda_samarasinghe.jpgபுலிகளின் பிடியிலிருந்து விடுபட்டுப் பாதுகாப்பை நாடி வரும் சிவிலியன்களின் நலன்கருதி இன்று முதல் புதிய நடைமுறையை பாதுகாப்புப் படையினர் அமுல் படுத்தவுள்ளதாக இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு பாதுகாப்பை நாடி வரும் அப்பாவி மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டு பாதுகாப்பை நாடி மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதற்கு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  விசுவமடு, சுதந்திரப் பிரதேசத்தை நோக்கி வந்த சிவிலியன்களை இலக்கு வைத்து புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரி நேற்றுக்காலை மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் :-

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் அழைப்பை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வரத்தொடங்கினர்.  சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கடந்த சில நாட்களுக்குள் வந்துள்ளனர். நேற்றும் ஐயாயிரம் பொது மக்கள் வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சியை நோக்கி படகுகள் மூலம் 2 ஆயிரம் பொதுமக்கள் வருகை தந்துள்ளனர் என்று யாழ். அரச அதிபர் தனக்கு தகவல் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பை நாடி எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான சகல நிவாரண நடவடிக்கைகளை செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

தற்பொழுது படுதோல்வியடைந்துள்ள புலிகள், இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சிவிலியன்களே புலிகளை பாதுகாத்துக் கொள்ளவுள்ள ஒரே ஒரு ஆயுதமாகும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு நாடி வருவதையிட்டு விரக்தியடைந்த புலிகள் அப்பாவி பொதுமக்களை கொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தப்பிவரும் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி அவர்களின் வருகை கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பை நாடி வந்த ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள ஏழு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளோம்.
இந்த மக்களை தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளோம். இந்த மக்களை தங்க வைக்கவென மேலும் 5 நலன்புரி நிலையங்களை அமைக்க வவுனியா அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

72 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்த்து கனடிய தமிழர் சாதனை

suresh.jpgஇலங்கை யைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவருமான சுரேஷ் ஜோக்கிம் (39 வயது) என்பவர் 72 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சியைப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  சுரேஷ் ஏற்கனவே 52 கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஏற்கனவே கடந்த 2005 இல் நியூயோர்க்கில் ஏபிசி ஸ்ரூடியோவில் 69 மணித்தியாலங்கள் 48 நிமிடங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து சாதனை படைத்திருந்தார். இப்போது ஸ்ரொக்ஹோமில் 72 மணித்தியாலங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து தனது முன்னைய சாதனையை முறியடித்துள்ளார்.

கின்னஸ் ஏட்டில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ள சுரேஷ் ஜோக்கிமை சுவீடனின் தொலைக்காட்சி சேவையான ரிவி4 நிலையம் சுவீடனைச் சேர்ந்தவருடன் போட்டியிடுமாறு அழைத்திருந்தது. அதற்கிணங்கி அங்கு சென்று ஞாயிற்றுக்கிழமை ஜோக்கிம் சாதனை புரிந்துள்ளார்.  ரொறன்ரோவில் மிஸ்ஸிசாகுவா பகுதியில் தனது மனைவியுடன் சுரேஷ் வாழ்ந்து வருகிறார். கோப்பி குடித்தவாறு தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்ப்பதில் தனது நேரத்தை செலவிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியை பார்க்கும் போட்டியை ஆரம்பித்த அவர் ஞாயிறு மாலையே பார்ப்பதை நிறுத்தியுள்ளார். தனது சாதனையை முறியடிக்க கடந்த 3 வருடங்களாகப் பலர் முயன்றதாகவும் ஆயினும் முடியவில்லை என்று ஜோக்கிம் கூறியுள்ளார்.

25 மணித்தியாலங்கள் 49 நிமிடங்களில் மரதன், 120 மணிநேரம் வானொலி ஒலிபரப்பு, ஒற்றைக்காலில் 76 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள், 55 மணித்தியாலங்கள் 5 நிமிடங்கள் உடுப்புகளை இஸ்திரிகை செய்தமை என்பன இவரின் சாதனைகளில் முக்கியமானவையாகும்.  தொடர்ச்சியாக 84 மணித்தியாலங்கள் மேளம் அடித்தமை, 168 மணித்தியாலங்கள் ரெட்மில்லில் (659.27 கிலோமீற்றர் தூரம்) ஓடியமை, 4.5 கிலோகிராம் எடை கொண்ட 135.5 கிலோ மீற்றர் தூரம் காவிச் சென்றமை, 56.62 கி.மீ.தூரம் தொடர்ந்து தவழ்ந்தமை, 100 மணித்தியாலங்கள் நடனமாடியமை, 24 மணித்தியாலயத்தில் 19.2 கி.மீ.தூரம் காரை தள்ளிச் சென்றமை என்பனவும் ஜோக்கிமின் சாதனைகளாகும்.