செய்திகள்

Sunday, January 23, 2022

செய்திகள்

செய்திகள்

இலங்கை வானொலியினூடான மறு ஒலிபரப்பை பிபிசி இடைநிறுத்தியது.

tamil_news_bulletin_.jpgஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை ஊடாக இதுவரை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டுவந்த பிபிசி தமிழோசையின் ஒலிபரப்பு இன்றோடு (09) இடை நிறுத்தப்படுகிறது என்பதை பிபிசி தமிழோசை நேற்று அறிவித்தது

அந்த அறிவித்தல் வருமாறு:

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்த மறு ஒலிபரப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து நடந்து வந்தது. கடந்த சில மாதங்களாக, பிபிசி தமிழ், சிங்கள மற்றும் பிபிசி ஆங்கில மொழி நிகழ்ச்சிகளின் மறு ஒலிபரப்பு பல முறை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வேண்டுமென்றே வெட்டப்பட்டுவந்தது என்பது இலங்கை நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை 17 முறை தமிழோசை நிகழ்ச்சிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வெட்டப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிபிசியின் உயர் நிர்வாகம் மூலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது போன்று, நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அல்லது பகுதிகளை இடையில் வெட்டுவது என்பது, பிபிசியின் நிகழ்ச்சிகளின் சுயாதீனத் தன்மையை பாதிப்பதாக அமைகிறது என்பதை பிபிசி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு தெளிவாக்கியது. பிபிசியின் இந்த முயற்சிகளுக்குப் பின்னரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், பிபிசி நிகழ்ச்சிகளை வெட்டிய சம்பவங்கள் கடந்த வாரத்தில் நடந்தன.

இந்த ஒலிபரப்பு இடை நிறுத்தம் குறித்து கருத்துக் கூறிய பிபிசியின் இயக்குநர் நைஜல் சாப்மன், தொடர்ந்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டபோதும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இந்த வெட்டும் நடவடிக்கைகள் தொடர்வது ஏமாற்றமளிப்பதாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

எமது நேயர்களுக்கு செய்திகளை நடுநிலையாக வழங்குவது என்ற நோக்கத்தில் பிபிசி தனது ஒலிபரப்புக்கு முக்கியமானதாகக் கருதும், செய்திச் சுதந்திரம் பக்கசார்பின்மை மற்றும் பல தரப்புக் கருத்துக்களுக்கு இடமளித்தல் போன்ற விழுமியங்களைப் பேணிவருகிறது என்று கூறும் நைஜல் சாப்மன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிபிசியின் நிகழ்ச்சிகளை இடையில் வெட்டாமல் ஒலிபரப்பும் என்ற உத்திரவாதம் தரும்வரை, பிபிசி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலம் ஒலிபரப்புவதை இடை நிறுத்துவது என்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசி நிகழ்ச்சிகள் மீது ஏதும் புகார்கள், குறைபாடுகள் குறிப்பாக இருந்தால் அது குறித்து பிபிசி விசாரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் நைஜல் சாப்மன், ஆனால் இது வரை இந்த மாதிரி எந்தப் புகாரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடமிருந்து வரவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை நேயர்கள் நாளையிலிருந்து (10) (இன்றிலிருந்து) எமது நிகழ்ச்சியை சிற்றலை ஒலிபரப்பு மீட்டர் பேண்டுகள், 31ல் 9540 கிலோஹேர்ட்ஸ், 41ல் 7205 கிலோஹெர்ட்ஸ் மற்றும் 49ல் 6135 கிலோஹெர்ட்ஸ் ஆகியவற்றில் கேட்கலாம். எனவும் அறிவித்திருந்தது.

கடற்புலிகளின் பாரிய தளம் முல்லை காட்டுப் பகுதியில் அழிப்பு

mi24_2601.jpgமுல்லைத் தீவு காட்டுப் பகுதியில் மறைவான முறையில் அமைக்கப்பட்டிருந்த கடற் புலிகளின் பாரிய தளம் மற்றும் கட்டடத் தொகுதி என்பனவற்றை நேற்றுக் காலை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப் படையினரின் இந்த கடுமையான தாக்குதல்களில் கடற் புலிகளின் பாரிய கட்டடத் தொகுதிகளுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான படகுகள் மற்றும் உழவு இயந்திரங்களும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடலேரிக்கு வடக்கேயும், வெள்ளைமுல்லை வாய்க்கால் காட்டுப் பகுதியின் கரை யோரத்திற்கு மேற்கே ஒரு கிலோ மீற்றர் தொலைவிலும் இந்த முகாம் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் மற்றும் மிக் – 27 ரக தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி நேற்றுக்காலை 7.00 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் உரிமைக்காக உயிரை துறக்கிறார்கள் தமிழக தலைவர்களோ பதவியை விடக்கூடத் தயாரில்லை – விஜயகாந்த்

vijayakanth.jpgஇலங் கைப் பிரச்சினையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளால் பயனில்லை என்று தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை எதிர்ப்பதாகவும், ஆனால் இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதாகவும் கூறி ஒரே நிலையை எடுத்துள்ளன. இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகள் வேறு, பொதுமக்கள் வேறு என்று பிரிக்க முடியாது. இராணுவ நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் கட்டாயம் பாதிக்கப்படுவார்கள். பெரிய கட்சிகள் தங்கள் பக்கம் இருக்கின்றன என்பதால் இந்திய அரசு நிம்மதியாக இருக்கிறது.

இந்தப் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தும் கூட, இந்திய அரசில் பங்கு வகிக்கின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியும் பதவி விலகத் தயாராக இல்லை. இலங்கைத் தமிழரைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக, கடந்த அக்டோபர் 2 ஆம் திகதி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்ற போது, அதை எதிர்த்து தி.மு.க.சார்பில் மயிலாப்பூரில் கருணாநிதி பொதுக்கூட்டம் நடத்தினர்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமென்று ஒரு சில கட்சிகள் ஆரம்பித்தபோது, அதற்குப் போட்டியாக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்று ஆரம்பித்தது ஒற்றுமை முயற்சியா? தற்போது எம்.ஜி.ஆர்.கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறும் கருணாநிதிதான், அப்போது போட்டி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். உலகமே தமிழினப் படுகொலை என்று உரத்த குரல் எழுப்புகிற போது, எல்லோரும் தன் தலைமையை ஏற்று ஒன்றுபடுங்கள் என்று சொல்வது மேலும் காலம் கடத்துவதற்கான தந்திரமே தவிர, இனப்படுகொலையைத் தடுக்க உதுவுமா?

கருணாநிதியின் இன்றையப் போக்கு அவரது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பயன்படுமே தவிர, இலங்கையில் தமிழினப் படுகொலைக்குத் துணைபோன வரலாற்றுப் பழியை துடைக்காது. இந்திய அரசு தமிழ் மக்களைப் புறக்கணிக்கிற போது, தமிழ் மக்கள் ஏன் இந்திய அரசைப் புறக்கணிக்கக் கூடாது. அதற்குள்ள ஒரே வழி, வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களை தமிழ்நாடே புறக்கணிப்பதுதான். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களும் தங்களது உணர்வைப் பதிவு செய்ய முடியும். தேர்தல் புறக்கணிப்பு இப்போதே அறிவிக்கப்பட்டால், இந்திய அரசு எப்படியும் தமிழர்களின் குறை தீர்க்க கட்டாயம் முன்வரும்.

இலங்கையின் உரிமைகளுக்காக தமிழர்கள் உயிரைத் துறக்கிறார்கள். ஆனால், இங்குள்ளவர்கள் பதவியைக் கூட விடத் தயாராக இல்லை என்ற பழியிலிருந்து மீள இது வழிவகுக்கும். ஆகவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் பதவிகளைப் பெரிதாக கருதிவில்லை என்று எடுத்துக் காட்டும் வகையிலும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வரும் பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம். வெறுமனே அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபடுங்கள் என்று முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கிற வேண்டுகோளால் பயனில்லை. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கட்சியினரும், அனைத்துத் தரப்பு மக்களும் ஒருமித்த கருத்தோடு தேர்தலைப் புறக்கணிப்போம் என்று இப்போதே முடிவெடுத்து அறிவிக்க வேண்டியது வரலாற்று கடமையாகும்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ ஐ. நா தொண்டு நிறுவனங்கள் மீண்டும் தயார்

mullai-ahathi.jpgஇலங் கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தி்லிருந்து இடம்பெயர்ந்து இராணுவத்தின் கட்டு்ப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதிலும், அவர்களின் முக்கிய அவசர தேவைகளை ஈடுசெய்வதிலும், ஐநா மன்றத்தின் தொண்டு நிறுவனங்கள் தமது பங்களிப்பை வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் பிரதேசங்களில் இருந்து இந்த நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அங்கிருந்து வெளியேறி வந்து வவுனியாவில் தமது அலுவலகங்களை அமைத்திருந்த போதிலும் அந்த நிறுவனங்கள் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கான நிவாரண பணிகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த அனர்த்த முகாமைத்துவ மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் வவுனியா செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டம் ஒன்றில் ஐநா மன்றத்தின் தொண்டு நிறுவனங்கள், அரசாங்கத்தின் வழிகாட்டலில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக ஆராயப்பட்டு, அவற்றிற்கான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

போர்ப்பிரதேசத்திலிருந்து இதுவரையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்து சேர்ந்திருக்கின்றார்கள் என்பதும், ஏற்கனவே இராணுவத்தினரிடம் வந்து சேர்ந்துள்ள மேலும் 12 ஆயிரம் பேர் இந்த முகாம்களுக்கு படிப்படியாகக் கொண்டு வந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் அரச திணைக்களங்களும் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்படத் தொடங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மேல் மாகாண சபைத் தேர்தலில் சுசந்திகாவும் களத்தில் குதிக்கிறார்

susanthika.jpgமுன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் வேட்பாளராகவே இவர் எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

சுசந்திகா தடகள விளையாட்டுகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக கடந்தவாரம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய அரசியல் கட்சியொன்றிலிருந்து அண்மையில் விலகிச் சென்ற குழுவினரே இப்புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். இக்கட்சியின் தலைவர் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுசந்திகா உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் அணுகியுள்ளதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவரைப்போலவே தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர்கள் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு பாஃப்டா விருது

rahman.jpg‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரகுமானுக்கு, பிரிட்டிஷ் பிலிம் அகாடமியின் பாஃப்டா விருது கிடைத்துள்ளது.

பிரிட்டிஷ் இயக்குனர் டேனி பாயல் இயக்கத்தில் வெளியான ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம், ஆஸ்கார் விருதுக்கு அடுத்து உயரியதாகக் கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்றது.

இப்படத்தில் இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கோல்டன் குளோப்’ விருதும் கிடைத்தது. மேலும் ஆஸ்கார் விருத்துக்கும் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் உயரியதாகக் கருதப்படும் பாஃப்டா விருதை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களுக்கு பிரிட்டிஷ் பிலிம் அகாடமி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் இசையமைத்ததற்காக ஏ.ஆர். ரகுமானுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்து திரைக்க‌தை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் என மேலும் ஆறு விருதுகளையும் ‘ஸ்லம்டாம் மில்லினர்’ பெற்றுள்ளது.

வடபோர்ப்புல மக்களை பாதுகாப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐ. நா அதிகாரிகளுடன் பேச்சு

civilians_arrive.jpgஇலங்கை யில் வடக்கே மோதல்களினால் பாதிக்கப்படும் பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பில் இலங்கை வெளிநாட்டமைச்சர் தலைமையிலான உயர்குழுவொன்று (09) கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருக்கிறது.

இந்தச் சந்திப்புக் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள வெளிநாட்டமைச்சு, இதன்போது தமிழீழ விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்து மக்களை வெளியேறவிடாது தடுத்து வருவது குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்து வெளியாகும் சில தவறான தகவல்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டதாகவும், அரசும், ஐ.நாவின் தொண்டு நிறுவனங்களும் சிவிலியன்களின் உண்மையான தேவைகள் குறித்தும், மக்களின் பாதுகாப்புக் குறித்து அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுவதெனவும் உடன்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சந்திப்பின்போது ஐ.நாவின் வதிவிடப்பிரதி தலைமையில், யுனிசெவ், யூ.என்.எச்.ஆர்.சி மற்றும் உலக உணவு ஸ்தாபனம் போன்றவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருக்கிறார்.  இந்தக்கூட்டத்தில் கருத்துவெளியிட்ட பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, புலிகளின் தாக்குதலினால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் முழுமையான அளவில் வெளியிடப்படுவதில்லை என்று தெரிவித்திருந்ததாகவும், புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், அவர்களின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்திலிருந்து வெளியேறும் சிவிலியன்களின் தொகை இருபதினாயிரத்தையும் தாண்டியிருப்பதாகவும் இது மிகவும் உற்சாகமளிப்பதாகவும் தெரிவித்ததாகவும் வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் சில சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் தகவல்களை வெளியிடும்போது பொறுப்புடன் செயற்படவேண்டுமென்றும் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மக்களை அழைத்துவர 40 பஸ்கள் சேவையில்

bus.jpgவன்னியில் இருந்துவரும் மக்களை வவுனியாவுக்கு அழைத்துவருவதற்கென 40 பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வந்த சுமார் 12 ஆயிரம் பேர் ஓமந்தை மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கட்டம் கட்டமாக வவுனியா அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார்.

மக்களை அழைத்துவர இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, வவுனியாவுக்கு அழைத்துவரப்படும் மக்கள் வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்ட பின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

ஆஸ்திரேலியா காட்டுத்தீ: பலி 173 ஆக உயர்வு

forest_fire.jpgஆஸ்தி ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இறந்தோர் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. தீயை அணைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள காடுகளில் கடந்த சனிக்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வீசும் அனல் காற்று, வெப்பம் காரணமாக தீ மேலும் பல இடங்களுக்கு பரவியது. சுமார் 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் உடனடியாகப் பலன் உண்டாகவில்லை.

இந்த தீ விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இதுவரை 173 பேர் உயிரிழந்திருப்பது தெரிய வந்திருப்பதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், 750-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. பொது மக்களின் உடமைகளுக்கும் பலத்த சேதம் உண்டானது. காட்டுத் தீயில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இந்த அளவுக்கு பெரிய தீவிபத்து ஏற்பட்டதில்லை என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. காட்டுத் தீயால் கடும் பாதிப்பை சந்தித்திருக்கும் மேரிஸ்வில்லி, கிங்ஸ்லேக் ஆகிய இரு நகரங்களுக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஊர்களிலும்தான் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

வவுனியா வரை யாழ்தேவி

train.jpgவவுனியா வுக்கான யாழ்தேவி கடுகதி ரயில்சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் வவுனியா வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த சில தினங்களாக இந்த சேவை மதவாச்சி வரையுமே நடத்தப்பட்டு வந்தது. இதேவேளை, இரவு தபால் ரயில்சேவை தொடர்ந்தும் மதவாச்சி வரையுமே நடைபெற்று வருகிறது. யாழ்தேவி ரயில் சேவையும், இரவு தபால் ரயில் சேவையும் பாதுகாப்பு காரணங்களால் கடந்த சில மாதங்களாக மதவாச்சி வரையுமே நடத்தப்பட்டு வந்தது.

எனினும், கடந்த டிசம்பர் மாதம் யாழ்தேவி சேவை மட்டும் வவுனியா வரை நீடிக்கப்பட்டது. இதேவேளை, நாடு முழுவதும் நடத்தப்படுகின்ற ரயில்சேவைகளின் நேரங்களில் சில மாற்றங்களை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.