இலங்கையின் வடக்கே அரச படைகளுக்கும் வி்டுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஒரேயொரு தற்காலிக மருத்துவமனையாகிய புது மாத்தளன் மருத்துவமனையைச் சூழ்ந்த பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 140க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்கள் இந்த மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், சிகிச்சை பயனளிக்காத காரணத்தினால் அவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவித்தார்.
வியாழக்கிழமை மாலை வரையில் தொடர்ச்சியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்ததாகவும், ஷெல் தாக்குதல்களில் சம்பவ இடங்களில் இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும், டாக்டர் ரீ.வரதராஜா கூறினார்.
புதுமாத்தளன் மருத்துவமனையில் குழந்தைகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற விடுதி பக்கமாக உள்ள வேலியருகில் இன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஷெல் ஒன்று வந்து வீழ்ந்து வெடித்ததாகவும், இதனையடுத்து, அந்த குழந்தைகள் விடுதியில் தங்கியிருந்த நோயாளர்கள் அனைவரும் மருத்துவமனையைவிட்டு ஓடிவிட்டதாகவும், தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் காரணமாக மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் பதட்டத்தி்ற்கு உள்ளாகியிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவித்தார். அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், வலயர்மடம் ஆகிய பிரதேசங்களில் இன்று நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருக்கி்ன்றார்கள்.
முன்னதாக இன்று அதிகாலை புதுமாத்தளன் மருத்துவமனைமீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 நோயாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் காயமடைந்ததாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவிக்கின்றார்.