செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கொழும்பை அண்மித்ததான பாரிய தமிழ் ஈழ இராச்சியத்தை உருவாக்கும் நோக்கில் புலிகள் – பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய

sec-def.jpgகொழும்பை அண்மித்ததாக இலங்கையின் தென்பகுதியையும் உள்ளடக்கிய பாரிய தமிழ் ஈழ இராச்சியத்தை உருவாக்கும் நோக்கத்தை விடுதலைப்புலிகள் கொண்டிருந்ததாக பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பாரியளவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்படை, விமானப்படை, தற்கொலைப்படையினரை உள்ளடக்கிய தரைப்படை என்பன புலிகளின் இந்த நோக்கத்தை வெளிப்படுத்துவதாக கோதாபய கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் இராணுவ தளபாடங்கள், பயிற்சிக்களம் என்பனவற்றை நாம் பார்த்தபோது பாரிய ஈழ இராச்சியத்தை உருவாக்க அவர்கள் நோக்கம் கொண்டிருந்தது தெளிவாகத் தென்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அந்த இடங்களிலிருந்து பெற்றுக்கொண்ட வரைபடங்கள் இந்த விடயத்தை உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் நீர்கொழும்பு முதல் யால வரை அநுராதபுரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளை உள்ளடக்கி ஈழத்தை ஸ்தாபிக்க எதிர்பார்த்திருந்ததாகவும் கோதாபய கூறியுள்ளார்.  கொழும்புக்கு வடக்கே 40 கி.மீ. தொலைவில் நீர்கொழும்பு உள்ளது. யால தென்னிலங்கையில் அமைந்துள்ளது.

இந்த மனிதாபிமான நடவடிக்கையை நாம் ஆரம்பித்திராவிடின் என்ன பதில் நடவடிக்கையை நாம் கொண்டிருப்போம், என்பது தெளிவானது என்றும் அவர் குறிப்பிட்டதாக பி.ரி. ஐ. செய்திச்சேவை தெரிவித்தது.

இலங்கை விவகாரம் குறித்து நவநீதம் பிள்ளையிடம் முறைப்பாடு

nawaneetappilli.jpg இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ. நா சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களை இந்தியாவின் மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான பியுசிஎல் அமைப்பினர் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேசியிருக்கிறார்கள்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் மோதல்கள் நடக்கும் பகுதியில், அரசால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தொடரும் உயிர்ப்பலிகள் தொடர்பிலும், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உருவாகிவரும் மனித அவலம் குறித்தும் பேசப்பட்டதாக, பியுசிஎல் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளுக்கான தலைவர் வழக்கறிஞர் வி. சுரேஷ் தெரிவித்தார்.

மேலும் அங்கு இலங்கை அரசின் படை நடவடிக்கையால் பலர் பலியாவதாக கூறிய அவர், இதற்காக இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்கள் மீது சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நடவடிக்கைகளை ஐ. நா மன்றம் துவங்க வேண்டும் என்றும் தாங்கள் கோரியதாகவும் கூறினார்.

பொலிஸாரினால் தேடப்பட்டுவரும் பேக்கரி உரிமையாளர் தலைமறைவு

t-mala-stu.png
திருகோணமலையில் உள்ள பேக்கரி ஒன்றில் தயாரிக்கப்பட்ட பனிஸ் நஞ்சானதன் காரணமாக தேடப்பட்டுவரும் பேக்கரி உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதாக திருகோணமலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பேக்கரியில் தயாரிக்கப்பட்ட பனிஸை உட்கொண்ட 62 வயது நபரொருவர் மரணமடைந்துள்ளார் எனவும் 80 மாணவர்கள் உட்பட 107 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளர் எனவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனையடுத்து குறிப்பிட்ட பேக்கரியை பொலிஸார் உடனடியாக சீல் வைத்து மூடியுள்ளனர்.

இன்று ரணிலுக்கு 60

ranil-wickramasinghe.jpgஎதிர்க் கட்சித்தலைவரும், ஐக்கிய தேசியக்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று 60ஆவது பிறந்த நாளாகும்.  இதனை முன்னிட்டு கட்சியாலும், ஆதரவாளர்களாலும் மதவழிபாட்டுத் தலங்களில் விசேட மதவழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதான வழிபாடு கொழும்பு கங்காராம விகாரையில் மாலை 6 மணிக்கு இடம் பெறவிருக்கின்றது. இந்த நிகழ்வின் போது “சுதந்திரத்துக்கான மேடை’ என்ற வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவமும் இடம் பெறவுள்ளது.

அதேநேரம் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பதவி வகிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் நேற்றைய தினம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக தொடர்ந்தும் கரு ஜயசூரிய நீடிப்பார் எனவும், கட்சித் தலைவரின் சில பொறுப்புக்கள் செயற்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், என்ன அதிகாரங்கள் செயற்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி சிரேஸ்ட தலைவர் பொறுப்பை ரணில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இரக்கண்டி பாலத்தின் அமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில்

bridge.jpg
திருகோணமலையிலிருந்து புல்மோட்டைக்குச் செல்லும் வீதியில் அமைந்தள்ள இரக்கண்டி பாலத்தின் அமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிய அரசின் உதவியில் அமைக்கப்பட்டுவரும் இப்பாலத்துக்கு  1800 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்த வீதியை விசாலமாக்கும் பணியில் அமைக்கப்படும் மூன்று முக்கிய பாலங்களில் இதுவும் ஒன்றாகும். புதுவைக்கட்டு மற்றும் யான் ஓயா பாலங்கள் ஏனைய இரு பாலங்களாகும்.

இந்தப் பாலத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி அப்போதைய பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சராகவிருந்து ஜெயராஜ் பொனாண்டோ புள்ளே நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமலையில் உணவு நஞ்சானதால் ஒருவர் மரணம்; 107 பேர் வைத்தியசாலையில் அனுமதி

foods.jpg
திருகோணமலையில் உணவு நஞ்சானதன் காரணமாக 62 வயதான ஒருவர் மரணமடைந்துள்ளார். எனினும் இவரது மரணம் தொடர்பில் ஊர்ஜித தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. பிரேத பரிசோதனையின் பின்பே இது பற்றி கூறமுடியும் எனத் திருகோணமலை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அனுஸ்யா ராஜ்மோகன் தெரிவித்தார் .

80 பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 107 பேர் வரை திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை திருகோணமலை வைத்தியசாலை தரப்பு உறுதிசெய்துள்ளது.

திருகோணமலையிலுள்ள பேக்கரி ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பணிஸ் வகையே இவ்வாறு நஞ்சானதாகக் கூறப்படுகின்றது. மேற்படி பேக்கரியைப் பொலிஸார் சீல் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வர்ஷா படுகொலைச் சந்தேக நபரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு தலை துண்டிப்பு – பொலிஸார் தெரிவிப்பு

Regie_Varsa
திருகோணமலை மாணவி வர்ஷாவின் (வயது 6) படுகொலைச் சந்தேகநபரும் சயனைட் அருந்தி தற்கொலை செய்தவருமான ஜனார்த்தனனின் சடலத்தை கடந்த சனிக்கிழமை இரவு புதைகுழியிலிருந்து தோண்டி எடுத்த சிலர் தலையை துண்டித்து முகத்தை மிகமோசமாகச் சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமலை சென்.மேரிஸ் கல்லூரி மாணவியான வர்ஷாவை பாடசாலையிலிருந்து ஆட்டோவில் கடத்திய சிலர் அவரது தாயிடம் பெருந்தொகை பணத்தை கப்பமாகக் கோரியதுடன், பின்னர் அந்த மாணவியை படுகொலை செய்தனர்.

இந்தக் கடத்தல் மற்றும் கொலையின் பிரதான சந்தேக நபர் மறுநாள் கைது செய்யப்பட்ட அதேநேரம், அவரை மாணவியின் உடல் கிடந்த இடத்திற்கு பொலிஸார் கொண்டு சென்றபோது பொலிஸாரைத் தாக்கிவிட்டு அவர் தப்பியோடமுற்பட்டதாகக் கூறி பொலிஸார் அவரை சுட்டுக்கொன்றனர்.

அதேநேரம், இவருடன் கைது செய்யப்பட்ட 2 ஆவது சந்தேக நபரும் அங்குள்ள தமிழ் அமைப்பொன்றின் பொறுப்பாளருமான ஜனார்த்தனன் எனப்படும் வரதராஜன் ஜனார்த்தனன் கடந்த 19 ஆம் திகதி பொலிஸாருடன் தடயப் பொருட்களை காட்டுவதாகக் கூறிக் கூட்டிச் சென்றபோது சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு புதை குழியிலிருந்து இவரது சடலத்தை தோண்டியெடுத்த இனந்தெரியாத சிலர் கழுத்தை துண்டித்ததுடன், முகத்தை மிக மோசமாகச் சிதைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

மறுநாள் காலை இது பற்றி அறிந்த பொலிஸார், அங்கு சென்று சடலத்தை மீண்டும் அதே குழியில் புதைத்துள்ளதுடன், அந்தப் பகுதியை கண்காணித்தும் வருகின்றனர். மாணவியின் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான விசாரணை தொடந்தும் நடைபெற்று வருகிறது.
 

‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தி திட்டத்துக்கு யாழ். தேவியின் ஒலி முன்னோடி சமிக்ஞை – ஜனாதிபதி

yaal-deevi.jpg‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு யாழ் தேவியின் ஒலி முன்னோடி சமிக்ஞை நாதமாக அமையுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ் தேவி வெறுமனே ரயில் சேவையாக மட்டுமன்றி இனங்களுக்கிடையில் உறவின் தூதுவனாகப் பயணிப்பது உறுதியெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கிற் கானரயில் சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையிலான செயற்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி வடக்கின் பனையும் தெற்கின் தென்னையும் மீண்டும் ஒன்று சேரும் நல்ல நாள் இது. நாம் அனைவரும் இணைந்து இந்த சகோதரத்துவப் பிணைப்பை கட்டியெழுப்புவது அவசியம் எனவும் தெரிவித்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான “தெற்கின் நண்பன்” கருத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியும் பிரபல சுழல்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரனும் இணைந்து இத்திட்டத்திற்கான இணையத்தளத்தை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

அமைச்சர்கள் டளஸ் அழகப் பெரும, டக்ளஸ் தேவானந்தா, மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, ஜீ. எல். பீரிஸ் உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் மதத் தலைவர்கள், முப்படைத் தளபதிகள், கலைத்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

படையினர் வடக்கை மீட்ட பின்னர் அந்த சுதந்திரத்தைப் பாதுகாப்பது எப்படி? என்ற கேள்வியையே பலரும் இந்நாட்களில் எழுப்புகின்றனர். இதனை வெறுமனே பார்ப்பதை விட இதற்கான நடைமுறை வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என்பதை உணர்ந்து அதற்கு ஒரு வழிமுறையையும் மேற்கொண்டோம். இதனோடு மக்களின் மனதை வெற்றிகொள்வது முக்கியம் என்பதாலேயே யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை ஆரம்பித்து வடக்கின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பல வருடங்களுக்கு முன்பு நாம் யாழ் தேவியில் பயணித்தோம், அன்று யாழ் தேவியின் ஒலி நாதம் ஆனந்தத்தை தந்தது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். அது ரயிலின் ஒலியன்று, மனித மனங்களின் இதயத்துடிப்பு என்றால் பொருத்தும்.

யாழ் செல்லும் அரச ஊழியர்கள் தமது விடுமுறைக்கு இங்கு வந்து விட்டு மீள யாழ் செல்வது இந்த யாழ் தேவியில் தான். அரச நிர்வாகம் போன்று யாழ்தேவியும் முழு அரச சேவையின் அடையாளமாகத் திகழ்ந்தது. இதனால்தான் புலிகள் இனங்களைப் பலிகொள்ள யாழ் தேவி மீது தாக்குதல் நடத்தினர். இதன் மூலம் புலிகள் யாழ்தேவியின் ஊடான சகோதரத்துவத்தையே சீர்குலைத்தனர். முருங்கனில் தாக்குதல் நடத்தினர், அதில் 11 ரயில் பெட்டிகள் சேதமாயின.

அதற்கடுத்து 1986 இல் பரந்தனில் யாழ்தேவி மீது தாக்குதல் நடத்தினர். மூன்றாவது தடவையாகவும் ஓமந்தையில் வைத்து தாக்குதல் நடத்தினர். புளியங்குளத்திற்கும் வவுனியாவுக்குமிடையில் ரயிலில் குண்டு வைத்தனர். இத்தனை தாக்குதல்களை நடத்தியும் இனங்களுக்கிடை யிலான நட்புறவை முறிக்க முடியாமற்போனது.

1987 இல் வவுனியா- கிளிநொச்சி ரயில் பாதை தகர்க்கப்பட்டது. இதனையும் நாம் புனரமைத்தோம் யாழ்தேவி பயணிக்கும் வரை நாட்டைப் பிளவு படுத்த முடியாது என எண்ணிய புலிகள் அடுத்தடுத்து அதனைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் 1990 இல் யாழ் தேவியின் சேவை முற்றாக நிறுத்தப்பட்டது.

புலிகளால் நாசமாக்கப்பட்ட ரயில் பாதையைச் சீரமைக்க அரசாங்கத்துக்கு 700மில்லியன் ரூபா நிதி தேவைப்பட்டது. தற்போது யாழ் புதிய ரயில் சேவையை ஆரம்பிக்கும் திட்டத்தின் கீழ் 28 ரயில் நிலையங்களை நிர்மாணிக்க வேண்டியுள்ளது. யாழ் ரயில் நிலையத்தை நிர்மாணிக்க நாம் நிதி செலவிடவுள்ளோம். சகல ரயில் நிலையங்களையும் நிர்மாணிக்கப் பெருமளவு நிதி தேவைப்படுகிறது. சகல மக்களும் இதற்கு பங்களிப்புச் செய்ய வேண்டியுள்ளது.

பயங்கரவாதிகள் அழிவைக் கட்டியெழுப்புகின்ற போது நாம் மக்களைக் கட்டியெழுப்ப முயல்கின்றோம். பயங்கரவாதத் திற்கு எதிரான எமது நடவடிக் கைகளுக்கு சீனா, ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான் என பல நாடுகள் எமக்கு உதவுகின்றன. அதேவேளை பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைக் கட்டியெழுப்பவும் உதவ முன்வந்துள்ளன.

யாழ். ரயில் சேவையைக் கட்டியெழுப்ப நான் எனது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்புச் செய்கின்றேன். ஜனாதிபதியின் செயலாளரும் செயலகப் பணியாளர்களும் அவர்களது பங்களிப்பை வழங்க முன்வந்து ள்ளனர். நாட்டைக் கட்டியெழுப்ப, இனங்களுக்கிடையிலான உறவுகளைக் கட்டியெழுப்ப விரும்பும் நல் மனம் படைத்தோர் தமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும்.யாழ் தேவி இனப்பாகுபாட்டை சுமக்கவில்லை. வடக்கு தெற்கின் உறவுப் பாலமாக அது அமையும். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ எனவும் ஜனாதிபதி தமதுரையில் தெரிவித்தார். ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

ஊடக அடையாள அட்டையை ஏற்க முடியாதென ஊடகவியலாளர் கைது

vv.jpgஊடக அடையாள அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் அவர்களை நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் கைதுசெய்தனர். இவர் ‘மாற்றம்’ பத்திரிகையின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆரம்பகாலங்களில் நவமணி பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் பணியாற்றியுள்ளதுடன்,  தேசம்நெற் இணையத்தளத்திலும் நஜிமிலாஹி எனும் பெயரில் இவர் நேரடியாக எழுதி வந்தார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவது,

ஊடக அடையாள அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீமை கொழும்பு பொரலை கொட்டா வீதியில் வைத்து கைதுசெய்துள்ளனர். அப்போது தன்னை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான ஆவணங்களை பாதுகாப்பு தரப்பிடம் சமர்ப்பித்தும் அவைகளை இராணுவத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாளஅட்டையைக் காட்டிய போதும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் பொரளை பொலிஸ் நிலையத்தில் எஸ்.எம்.    நஜீமை ஒப்படைத்தனர். 

பொரலை பொலிஸ் நிலையம் அவரை விசாரணைக்குட்படுத்தி சரிகண்ட போதும் குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் கட்டாயத்தால் ஊடகவியாலாளர் எஸ்.எம். நஜீம் பொரலை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனையடுத்து ‘மாற்றம்’ பத்திரிகையின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையம் வந்து நிபந்தனைகளின் அடிப்படையில் இரவு 10.30 மணியளவில் விடுவித்துள்ளனர். ஊடக அடையாள அட்டை பாதுகாப்புத்தரப்பிடம் காட்டிய போதும் பாதுகாப்புத்தரப்பினர் தகாத வார்த்தைப்பிரயோகங்களை உபயோகித்ததாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டதாக ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

மேலும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டையை இராணுவத்தினர் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள் என்பது புரியாத விடயமாகவே இருக்கின்றது. இச்சம்பவத்தைப் பார்க்குமிடத்து ஊடக அடையாள அட்டை என்பது இலங்கையைப் பொறுத்த மட்டில் அர்த்தமற்றதொன்றாகவே எண்ணத் தோன்றுகின்றது.  

திமுக கூட்டணி கட்சிகள் – பட்டியலை வெளியிட்டார் கருணாநிதி

karunanithi.jpgதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். இதில் ஏதாவது புதிய கட்சி (பாமக) சேருமானால் அதுகுறித்து தெரிவிக்கப்படும் என்றார். 2 நாட்களில் தொகுதிப் பங்கீட்டையும் அறிவிப்போம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பாமக, தேமுதிக ஆகியவற்றின் இழுத்தடிப்பு காரணமாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் தேமுதிக ஒரு மாதிரியாக தனது நிலை குறித்து சொல்லி வைத்துள்ளது. பாமக கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இந்தச் சூழ்நிலையில் நேற்று திமுக கூட்டணிக் கட்சிகள் குறித்த பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

அதன்படி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் விவரம் …

திமுக,
காங்கிரஸ்,
விடுதலைச் சிறுத்தைகள்,
இந்திய யூனியன்
முஸ்லீம் லீக்,
மனித நேயக் கட்சி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இன்னும் 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிப்போம். புதிய கட்சிகள் கூட்டணியில் சேருமானால் அப்போது அதையும் தெரிவிப்போம். தங்கபாலு, சுதர்சனம் ஆகியோர் என்னை வந்து சந்தித்தபோது, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்ற கூட்டணி பற்றி விவாதித்தோம் என்றார் கருணாநிதி.

வேறு கட்சிகள் சேருமானால் அதை அறிவிப்போம் என்று முதல்வர் கூறியுள்ளது பாமகவையே குறிப்பதாக தெரிகிறது. 26ம் தேதி பாமக திமுக அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அன்றுதான் பாமக செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. இதை மனதில் வைத்துத்தான் 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளதாக நம்பப்படுகிறது.