செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ். மாணவர்களுக்கு இந்தியா நூல்கள் கையளிப்பு

kganes.jpgஉள்ளூரில் இடம்பெயர்ந்துள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி புத்தகங்களும் பாடசாலை உபகரணங்களும் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே. கணேஸ் இவற்றை இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ ஆலோக் பிரசாத்திடமிருந்து பெற்றுக்கொண்டார். அப்பியாசக் கொப்பிகளுடன் எழுது கருவிகள் உள்ளிட்ட பல பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன. வரலாறு, இலக்கியம், கலாசாரம் என்பவற்றுடன் தொடர்புடைய புத்தகங்களும் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை; வீதி பாஸ்களும் ரத்தாகும்- அமைச்சர் டளஸ் எச்சரிக்கை

dalas_alahapperuma.jpgதனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த பஸ் வண்டிகள் மீது கல்லெறிந்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்றுத் தெரிவித்தார்.

இதேநேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பொது மக்களை அசெளகரியங்களுக்கு உள்ளாக்கிய தனியார் பஸ் வண்டிகளின் பாதை அனுமதிப் பத்திரமும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் ஊழியர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை தனியார் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல் குமாரகே குறிப்பிடுகையில்,

வேலை நிறுத்த நடவடிக்கையைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாகாண தனியார் போக்குவரத்து ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பஸ் ஊழியர்களின் ஒழுக்க விதிகள் சம்பந்தமான வேலைத் திட்டத்தை இடை நிறுத்துமாறு கோரி பஸ் ஊழியர்களில் சிறு தொகையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் பெரும்பாலான தனியார் பஸ் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபற்றவில்லை.

கடந்த 31 ஆம் திகதி காலை முதல் கொழும்பிலிருந்து காலி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, கண்டி, கதிர்காமம், பொலன்னறுவை, இரத்தினபுரி, பதுளை, சிலாபம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கான தனியார் பஸ் சேவை ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தம் நேற்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்றது. காலி, மாத்தறை, உட்பட பல பிரதேசங்களிலிருந்து தனியார் பஸ் வண்டிகள் நேற்று கொழும்புக்கான சேவையில் ஈடுபட்டன. 103 ஆம் இலக்க நாரஹென்பிட்டி மற்றும் களனி விகாரை, 135 ஆம் இலக்க கொஹுவல தனியார் பஸ் வண்டிகளும் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டன.

இதன் காரணமாக மாகாணத்தின் பல பிரதேசங்களில் நிலவும் நிலைமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு மூன்று முறை கோரிக்கை விடுத்த போதிலும் நேற்று நண்பகல் வரையும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஸ்டான்லி பெர்னாண்டோ கூறினார்.

இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் தேவை -ஐக்கிய ராஜ்ஜியம் கோரிக்கை

miliband.jpgஇலங்கை யில் நடக்கும் மோதல்களில் சிக்கியிருக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கிலான மனிதாபிமான போர்நிறுத்தம் ஒன்றை இலங்கை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமது கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்களை மோதல் நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் பலவந்தமாக பொதுமக்களை தமது படையணிகளில் சேர்க்கும் நடவடிக்கையையும் விடுதலைப்புலிகள் கைவிட வேண்டும் என்றும் மிலிபேண்ட் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதேசமயம், விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை காரணம் காட்டி, மோதல்களின் போது ஒரு ஜனநாயக அரசு எப்படி செயற்பட வேண்டும் என்கிற நியாயமான எதிர்பார்ப்பிலிருந்து இலங்கை அரசு தவறுவதை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பான ஐக்கிய ராஜ்ஜியத்தின் நிலைப்பாடு குறித்து, ஐக்கிய ராஜ்ஜிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கவலைகள் தொடர்பில் எழுத்துப்பூர்வமான பதில் அளித்த மிலிபேண்ட் அவர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மோதல்கள் நடக்கும் பகுதியில் இன்னமும் சிக்கியிருக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களை அங்குள்ள ஆபத்தான சூழலில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவருவது எப்படி என்பது தான் தற்போதுள்ள முக்கிய கவலை என்றும் அவர் கூறினார்.

பலதரப்பட்ட நிறுவனங்களால் விருது வழங்கி கௌரவித்தல்

dimujayarathna.jpgபலதரப் பட்ட நிறுவனங்களால்  விருது வழங்கி கௌரவிப்பது தொடர்பாக பிரதமரின் செயலாளர் மஹிந்த பந்துசேனவின் தலைமையில் நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ குழுவின் அறிக்கையையடுத்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள  அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

பெரும் தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம்.ஜயரத்ன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அறிக்கையில் உள்ளடங்கிய விடயங்கள் குறித்து ஆராய அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. அமைச்சர்கள் குழுவின் முடிவுக்கு ஏற்ப இதுதொடர்பான சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது.

ஒன்றரை வயது குழந்தை அநாதரவாக கண்டெடுப்பு

boy.jpgஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையொன்றை பாழடைந்த இடம் ஒன்றில் இருந்து பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் அலவத்துகொட பெலிஸார் கண்டெடுத்தனர். கடந்த முதலாம் திகதி புதன்கிழமை (நேற்று முன்தினம்) இரவு சுமார் 11.00 மணியளவில் பொலிஸார் இந்த சிறுவனை மீட்டனர். இந்தப் பாலகன் இவ்விடத்திற்கு எவரால் கொண்டுவரப்பட்டான் என்ற விபரங்களையும் சிறுவனது தாய் தந்தையர் யார் என்ற தகவலையும் பொலிஸார் தேடுவதில் ஈடுபட்டுள்ளனர்.

அலவத்துகொடை பொலிஸ் வட்டாரத்தைச் சேர்ந்த தெல்கஸ்தென்னை என்ற இடத்திலேயே சிறுவன் இவ்வாறு நட்டாற்றில் விடப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சிறுவன் பாழடைந்த பிரதேசத்தில் இருந்து தனிமையில் பல மணி நேரம் அழுவதைக் கேட்ட அப்பிரதேச பொதுமக்கள் பலரும் திரண்டு சம்பவம்பற்றி பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இந்த முஸ்லிம் சிறுவன் இப்பொழுது கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் குறித்த சிறுவனை தத்தெடுத்து வளர்க்க தாம் தயாரென ஒரு நபர் முன்வந்தபோதிலும் பொலிஸார் இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே அதற்கான முடிவைப் பெறவேண்டி யிருப்பதாகவும் அந்த நபரிடம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சிறுவனின் தாய், தந்தையார் என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஹக்மனை மாதிரி நகரம்

janakabandarathennakoon.jpgஹக்மனை நகரை மாதிரி நகரமாக்கும் துரித அபிவிருத்தித் திட்டத்தின்; கீழ் உள்ளக வீதிகளை; மற்றும்  வடிகாலமைப்பு ஆகியவற்றை நிர்மானிக்கும் பொறுப்புக்களை காணிகள் நிறப்பும் மற்றும் அபிவிருத்திசெய்யும் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

உள்ளக வீதிகள் மற்றும் வடிகால் அமைப்புத் திட்டத்துக்கு சுமார் 2 கோடியே 69 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது,  ஹக்மனை நகரை மாதிரி நகரமாக துரித அபிவிருத்தி செய்வதற்கான நிதியை அமைச்சு 2009 ஆம் ஆண்டுக்கான தமது அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மூலம் ஒதுக்கியுள்ளது

ஐ.நா. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்க அமெரிக்க தீர்மானம்

u-s-flag.jpgஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்க அமெரிக்க தீர்மானித்துள்ளது. இதனை ஐநா செயலாளர் பான்.கீ.மூன் வரவேற்றுள்ளார். அத்துடன் அமெரிக்காவுடன் வலுவான அடித்தளத்தை மனித உரிமை பேரவையில ஏற்படுத்த உள்ளது.

புஷ் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இணைவதில்லை எனத் தீர்மானித்திருந்தது. உலகில் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தாது, இஸ்ரேலில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மாத்திரம் விமர்சிக்கப்பட்டதால், புஷ் நிர்வாகம் அவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.

இந்த நிலையில் மனித உரிமை பேரவையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் நடவடிக்கையில் உதவியளிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூசிலாந்து பேரவையில் இருந்து விலகிய பின்னர், குறிப்பிடதக்க மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் அமெரிக்க குறிப்பிட்டுள்ளது.

புலிகள் மக்களை வெளியேற்ற மாட்டார்கள் : குமரன் பத்மநாதன் ஹோம்ஸிடம் தெரிவிப்பு

kp-jhooms.jpgதமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விடுதலைப்புலிகள் மக்களை செல்ல விடமாட்டார்கள் என புலிகளின் ச‌ர்வதேச‌ பிரதிநிதி குமரன் பத்மநாதன் ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோ‌‌ம்ஸிடம் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நோர்வேயின் அனுசரணையுடன் குமார் பத்மநாதன் ஜோன் ஹோம்ஸை சந்தித்து கலந்துரையாடியதாகவும் இதன் போது ஜோன் ஹோம்ஸ் முல்லைத்தீவில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்களை விடுவிக்குமாறு அவரிடம் கோரியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பையடுத்து ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி எச்.எம்.ஜி.எஸ்.பாலிக்காரவை ஜோன் ஹோம்ஸ் சந்தித்து முல்லைத்தீவில் மோதல்களில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பான விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. 

இந்திய கடலோரத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்—சிதம்பரம்

chidambaram1.jpgதமிழ்நாடு மற்றும் கேரள கடலோரம் வழியாக விடுதலைப் புலிகள் ஊடுருவல் தொடர்பாக குறிப்பான அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும், அதே நேரத்தில் ஊடுருவலுக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.  

நாடு முழுவதும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களின்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் எச்சரித்தார்

அதே நேரத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான பாதுகாப்புப் படைகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பீதியடையத் தேவையில்லை என்றும் சிதம்பரம் தெரிவித்தார். கடந்த இரண்டு வாரங்களில் பல ஊடுருவல்களை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளதாகவும், எல்லா உளவுத் தகவல்கள் மீதும் திவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உத்தேச மாலபே தனியார் பல்கலைக்கழகம் 30 வருடங்களின் பின்னர் அரசிடம் கையளிக்கப்படும்

pr-con-02042009.jpgமால பேயில் அமைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம்  30 வருடங்களின் பின்னர் இலங்கை உயர் கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்படும். அமைச்சினால் நியமிக்கடும் செயற்குழு அதனை  நிருவகிக்கும் என பொது நிருவாக மற்றும் உள்விவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும்; உரையாற்றுகையில், மாலபேயில் அமைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம் காரணாக இலங்கையில் உயர் கல்வி கற்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று  பிழையான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இது எதுவித ஆதாரமுமற்று வெறும் யூகமாகும்.

ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஐந்து மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் இந்த இநத தனியார்  பல்கலைக்கழகத்தில் பல்கலை அனுமதி பெறாத 1200 மாணவர்களுக்கு உயர் கல்வி புகட்டப்படும். இந்த பல்கலைக்கழக அனுமதியில் ஐந்த வீதம் படை வீரர்கள் மற்றும் சமுர்த்தி உதவி பெறுவோரின் பிள்ளைகளுக்காக ஒதுக்கப்படுவதோடு இவர்களுக்கு இலவசமாக கல்வி போதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்