செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பாகிஸ்தான் புலனாய்வு குழு வருகை

210909flag.jpgஇலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து விசாரணை செய்யவென பாகிஸ்தானிய புலனாய்வு குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் மூன்றாம் திகதி இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது லாகூரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இலங்கை சக்திகளுக்கும் தொடர்புகள் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.  இதனையடுத்து பாகிஸ்தான் குழுவினர் அது பற்றி ஆராய இலங்கை வருவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிய குழு இரு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள போதிலும், அது மேலும் நீடிக்கலாமென்றும் மலிக் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் பின்னணியில் செயற்பட்டவர்களைப் பகிரங்கப்படுத்துவதென பாகிஸ்தான் குழு தீர்மானித்துள்ளதுடன், துரித விசாரணைகளுக்காக இலங்கையுடனான ஒத்துழைப்பு தொடருமென்றும் அவர் கூறியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான தகவல் பரிமாற்றங்களின் மூலம் விசாரணையை வலுப்படுத்த முடியுமென்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால நீடிப்பு 70 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 70 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேறியது. பிரேரணைக்கு எதிராக 12 வாக்குகளும், ஆதரவாக 82 வாக்குகளும் கிடைத்தன.

ஐ. தே.க.,  ஸ்ரீல. மு. கா.,  ஜே. வி. பி. ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிக்கள் மட்டுமே எதிராக வாக்களித்தனர்.

ஜனாதிபதி தலைமையில் தம்புள்ளையில் ஏர்பூட்டு விழா

290909mahinda.jpgஇவ்வருடம் பெரும்போக வேளாண்மைச் செய்கையை மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கும் நோக்கில் தம்புள்ளையில் எதிர்வரும் 12ஆம் திகதி ஏர்பூட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெறும். இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  மாத்தளை மாவட்ட அரச அதிபர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
 
தம்புள்ளை கண்டலம வயல் வெளியில் நடைபெறவிருக்கும் இவ்வேர்பூட்டு விழவில் விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். 

கிழக்கு இலங்கையில் புடவை விற்பனையில் ஈடுபட்ட மேலும் சில இந்தியர்கள் கைது

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தங்கியிருந்து சட்ட விரோதமான முறையில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றத்தின் பேரில் ஐந்து இந்திய வியாபாரிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெற்று நாட்டிற்குள் நுழைந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டதாக வாகரைப் பொலிஸார், குறிப்பிட்ட சந்தேக நபர்களை விற்பனைப் பொருட்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். வாகரையிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இந்நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

   

பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்

091009.jpgநாகப் பாம்பு தன்னைத் தீண்டிவிட்டதை அறியாத பதினைந்து வயது பாடசாலை மாணவி, அப்பாம்பினை கொல்ல முயன்ற தகப்பனை தடுத்து பாம்பைக் காப்பாற்றினார். எனினும் சிறிது நேரத்தினுள் அப்பாம்பின் விஷம் உடலில் ஏறியதால் அம்மாணவி பரிதாபகரமாக மரணமானார். இச் சம்பவம் ஆனமடுவ தேர்தல் தொகுதியில் உள்ள ஊரியால என்னும் விவசாயக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

நெஞ்சை உருக்கும் இச்சம்பவம் குறித்து மேலும் கூறப்படுவதாவது :- ஊரியாவ கிராமத்தில் உள்ள விவசாயியான இலங்கக்கோன் தனது குடும்பத்தாருடன் இங்கு வசித்து வருகின்றார். சம்பவம் இடம்பெற்ற தினமான செவ்வாயன்று (06.10.2009) வழக்கம் போன்று இரவு பணிகளை முடித்துக் கொண்டு படுக்கைக்குச் சென்று விட்டனர்.

இரவு சுமார் 11.30 மணியளவில் தன் மீது ஏதோ ஊர்ந்து செல்வதை அவதானித்த இலங்கக்கோன் படுக்கையை விட்டு எழுந்து பார்த்தபோது நாகப்பாம்பொன்று ஒரு மூலையில் நிற்பதை அவதானித்தார். அவ்வமயம் வீட்டிலுள்ள அனைவரும் எழுந்துவிட்டனர்.

இலங்கக்கோன் பாம்பை அடித்துக்கொல்ல முயன்ற போது அவரது மகளான சிங்கள மகா வித்தியாலயத்தில் பயிலும் 15 வயது நிரம்பிய நிரோஷா சந்திரரத்தின என்பவர் குறுக்கிட்டு பாம்பை அடிக்க வேண்டாமென்றும் அது எமக்கு எதுவிதமான தீங்கும் செய்யவில்லையே என்று கூறவும் தகப்பன் மனம் இரங்கி பாம்பை கொல்லாமல் துரத்தி விட்டார்.

இதனையடுத்து சற்று நேரத்தினுள் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், தொண்டை அடைப்பதாகவும் மகள் நிரோஷா தெரிவித்தார். சில கைமருந்துகள் செய்தும் நிலைமை மோசமாகவே புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமானார்.

பிரேத பரிசோதனையின் போது நிரோஷாவின் காலில் நாகப் பாம்பு தீண்டியதற்கான அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. மரண விசாரணை நடத்திய புத்தளம் திடீர் மரணவிசாரணை அதிகாரி எம். எச். எம். சபீயூ பாம்பு கடித்ததால் ஏற்பட்ட விபத்து மரணம் எனத் தீர்ப்பு வழங்கினார். வைத்திய அதிகாரி ஏ. ரவீந்திரன் பிரேத பரிசோதனை நடத்தினார்.

இரண்டு கால்களையும் இழந்த மாணவர் ஒருவர் யாழ். மருத்துவ பீடத்தில் இணைவு

இடம் பெயர்ந்தோருக்கான வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில், இரண்டு கால்களையும் இழந்த மாணவர் ஒருவர் யாழ். மருத்துவ பீடத்தில் இணைந்துள்ளதாகப் பல்லைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.  இந்த மாணவருக்கு யாழ். மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனியான வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவருடன் இருந்து அவரது தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்

இந்த மாணவன் புதிய சூழலில் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் தனது படிப்பை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் இலங்கை – போட்டி நிகழ்ச்சிகள் 3 நாடுகளில்

cricket_.jpgஇலங்கை,  இந்தியா,  பங்ளாதேஷ் ஆகிய மூன்று நாடுகளில்  2011-ல் நடைபெற உள்ள ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை “ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இப்போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. ஏ,  பீ, என இரு பிரிவுகளிலும்; தலா 7 அணிகள் இடம் பெறுகின்றன.

ஜொஹனஸ்பர்கில் புதன்கிழமை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் வௌ;வேறு பிரிவுகளிலும்,  அவுஸ்திரேலியா,  தென்னாபிரிக்கா ஆகியவை வேறு பிரிவுகளிலும் இடம்பெற்றுள்ளன.

அதன்படி “ஏ’ பிரிவில் இலங்கை,  அவுஸ்திரேலியா,  பாகிஸ்தான், நியூஸிலாந்து, சிம்பாப்வே,  கனடா,  கென்யா அணிகள் இடம்பெறுகின்றன. “பி’ பிரிவில் இந்தியா,  தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்ளாதேஷ்; அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் அடங்குகின்றன.

ஸ்டாலின் தலைமையில் இந்திய அனைத்துக் கட்சி குழு 10ஆம் திகதி இலங்கை விஜயம்

நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்தவர்களின் நிலைமைகளை நேரடியாக பார்வையிடும் பொருட்டு தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகளை ஆராயும் பொருட்டு அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்றக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தமிழக அனைத்துக் கட்சிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையிலேயே பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்றை அனுப்பிவைக்கும் தீர்மானத்தை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.இது தொடர்பான இறுதிமுடிவு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காந்தி வீட்டை பிரான்ஸ் சுற்றுலா நிறுவனம் வாங்கியது!

011009-gandhi.jpgதென்னா பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் நகரில், மகாத்மா காந்தி தங்கியிருந்த வீட்டை பிரான்ஸ் சுற்றுலா நிறுவனம் வாங்கியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு மகாத்மா காந்தி சென்றிருந்த போது,  ஜொகன்னஸ்பர்க் நகரில் ஆர்சர்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டில் தான் தங்கியிருந்தார்.

இதைää காந்தியின் நம்பிக்கைக்கு உரியவரும்,  கட்டடக்கலை நிபுணருமான ஹெர்மன் கெலன்பாக் என்பவர் வடிவமைத்து இருந்தார். இந்த வீட்டில் தான் இருவரும் 1908ம் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் தங்கியிருந்தனர்.  அந்த வீட்டின் உரிமையாளரான நான்சிபால் கேப்டவுன் நகருக்கு குடிபெயர திட்டமிட்டுள்ளதால் காந்தி தங்கியிருந்த வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தார்.

வரலாற்று புகழ் பெற்ற இந்த வீட்டை வாங்க காந்தியின் பேத்தி கீர்த்தி மேனன் திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே இந்த வீட்டை,  பிரான்ஸ் சுற்றுலா நிறுவனமான “வொயேஜர் டூ மோண்டி’ பல கோடியே ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளது

இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: மூவர் பலி; 19 பேர் காயம்

காலி மாவட்டத்திலுள்ள கொஸ்கொடையில் நேற்று அதிகாலை இரண்டு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்திருப்பதுடன் 19 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பஸ்ஸ¤ம் காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இபோச பஸ்ஸ¤ம் ஒன்றுடனொன்று மோதியுள்ளன. விபத்தில் தனியார் பஸ்ஸின் சாரதி உட்பட மூவர் உயிரிழந்திருப்பதுடன்.

இரண்டு பஸ்களிலும் பயணித்தவர்களுள் 19 பேர் காயமடை ந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளனர். காயமடைந் தவர்கள் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.