சர்வதேச நாணய நிதியத்தை விரட்டியவர்கள் இன்று அதன் காலடியில் மண்டியிட்டுவருவதாக தெரிவித்த மத்திய மாகாண எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அமைப்பாளருமான எஸ்.பி.திசாநாயக்க, 17 நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டே கடனு தவியைப்பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஊழல், மோசடிகள், வீண்விரயங்களைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கவும் அரசு தவறினால் கடனுதவி கிடைப்பது சந்தேகத்துக் கிடமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே எஸ்.பி.திசாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் எமது நாட்டைப்பாதிக்காது என்று அரசு கூறிவந்தது இன்று பொய்யாகிவிட்டது. நாட்டின் நிதி நெருக்கடியும், பொருளாதார நெருக்கடியும் ஒரே சமயத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளது. 2002 இல் ரணில் விக்கிரமசிங்க வின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதமாக வளர்ச்சிகண்டு படிப்படியாக 2007 ஆம் ஆண்டாகும் போது 4.9 சதவீதம் வரை உயர்ச்சியடைந்தது. 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வீழ்ச்சியின் ஆரம்பம் இன்று முற்றிலும் எதிர்மறையான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது. 0.5 சதவீத படுமோசமான வீழ்ச்சிநிலையை அடைந்துள்ளது. உலகின் எந்தவொரு நாடும் காணாத பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தை நிறுவனமான சி.ரி.ஸ்மித் நிறுவனத்தின் அண்மைய அறிக்கையின் பிரகாரம் பங்குச்சந்தை 81 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதில் இலங்கையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற 16 இலட்சம் பேரில் மூன்று இலட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்து நாடு திரும்பியுள்ளனர்.
பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உண்மையிலேயே அரசு கட்டுப்படுத்தவில்லை. புதிதாக நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுவதைத் தவிர்த்து வருவதால் டொலரின் பெறுமதி கட்டுப்படுத்தப்படுகின்றது. அதன் காரணமாக பண வீக்கத்தை ஒரே நிலையில் வைத்திருக்க முடிகிறது.அரசாங்கத்தின் கடன் பளு படுமோசமாக அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் காணப்படுகிறது. இந்தநிலை மேலும் தொடருமானால் 1970-77 காலப்பகுதிக்கு நாடு மீண்டும் தள்ளப்படலாம். கியூவும் உருவாக்கக்கூடிய அபாயம் தெரிகிறது.
சர்வதேச நாணய நிதியிடம் கைநீட்டப் போவதில்லை எனவும் அதில் அடிக்கப்பட்ட ப்ளக் கழற்றப்படுமெனவும் வீராவேசம் பேசிய அரசாங்கம் இன்று சர்வதேச நாணய நிதியிடம் மண்டியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியின் உறுப்பு நாடுகளில் இலங்கையும் ஒன்று அதில் நிதிஉதவி கோருவது தவறென்று நான் கூறப்போவதில்லை அதிலிருந்து உதவி பெறும் உரிமை இலங்கைக்கு இருக்கின்றது.
ஆனால், அதன் உதவி தேவையில்லை என்று அதன் அனுபவத்திலேயே மூடச்செய்து விரட்டியவர்கள் இன்று அதன் காலடியில் வீழ்ந்துள்ளனர். சர்வதேச நாணயநிதி கேட்டவுடன் அள்ளிக் கொடுக்கும் நிலையில் இல்லை. அதன் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால் மட்டுமே நிதி உதவி கிடைக்கும் . இந்தத் தடவை 17 நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்திருப்பதாக நான் அறிய வருகின்றேன். இதில் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கை, அடிப்படை மனித உரிமைகளுக்குட்பட்ட பாதுகாப்பு, ஊடக சுதந்திரம் பேணப்படுதல், ஆட்கடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி, ஊழல், மோசடி, வீண் விரயங்களைத் தவிர்த்தல் போன்றவை முக்கிய அம்சங்களாகக் காணப்படுகின்றன. இந்த 17 நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் இணங்கியே ஆகவேண்டும்.
அரசாங்கம் நிதியை வீண்விரயம் செய்யவில்லை என்று கூறுவதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். 108 அமைச்சர்களைக் கொண்ட அரசு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதை பார்த்தாலே இதனை புரிந்துகொள்ள முடியும். அமைச்சர்களுக்கு எத்தனை வாகனங்கள், எத்தனை பாதுகாப்பு அதிகாரிகள், வீதியில் அவர்கள் போகும்போது பொதுமக்களுக்கு எவ்வாறு நெருக்கடி என்பதையெல்லாம் காணும்போது வீண்விரயம் செய்யவில்லை என்பதை நம்ப முடியுமா? அரசு நிவாரணத்துக்காக ஒதுக்கும் நிதியை விட இரண்டுமடங்கு நிதி அமைச்சர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்துள்ளது.
60 வருடங்களில் முன்னெப்போதும் காணப்படாத மோசமான பொருளாதார நெருக்கடியை நாடு எதிர் கொண்டுள்ளது. இதிலிருந்து விடுபட சரியான பொருளாதாரக் கொள்கையொன்று வகுக்கப்படாவிட்டால் நாடு பிச்சைக்கார நாடாக மாறும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் அவர் எச்சரித்தார்.