செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இரணைப்பாலையை முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் படையினர்

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு இரணைப்பாலை பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவரின் முக்கிய தளம் அமைந்துள்ள இரணைப்பாலை முழுவதையும் விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

படை நடவடிக்கைகள் மூலம் புலிகளை முற்றாக 30 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் படையினர் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள 30 சதுர கிலோ மீற்றர் பரப்பை முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் இராணுவத்தின் மூன்று படைப் பிரிவுகளும், ஒரு அதிரடிப் படைப் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பையும், அதனை அண்டிய பிரதேசங்களையும் கடுமையான மோதல்களுக்குப் பின்னர் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு ள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். புலிகள் தங்களிடம் எஞ்சியுள்ள பிரதே சங்களை படையினரின் தாக்குதல்களி லிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஐந்து பாரிய பாதுகாப்பு மண் அரண்களை அமைத்திருந்தனர்.

அவற்றில் மூன்று மண் அரண்களை பாதுகாப்புப் படையினர் கனரக ஆயுதங் களை பயன்படுத்தி முற்றாக தாக்கியழித் துள்ளதாக வன்னிகள முனையில் ஈடுபட்டுள்ள இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரணைப்பாலை பிரதேசத்தில் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் பொட்டு அம்மானின் முக்கிய தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புலிகள் தற்பொழுது அந்தப் பிரதேசத்தி லிருந்துகொண்டே படையினருக்கு எதி ரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு திட்ட மிட்டு வருவதாக இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார். புலிகளின் தலைவர் பிரபாகரனும் தொடர்ச்சியாக இந்த பிரதேசத்திலிருந்து கட்டளை பிறப்பித்துள்ளமை தெரிய வந்துள்ளதாக இராணுவ புலனாய்வு துறை யினர் உறுதி செய்துள்ளனர்.

இராணுவத்தின் 53வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா ஆகியோர் தலைமை யிலான இரு படைப் பிரிவுகளும், இராணுவத்தின் 8வது அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான படையினரும் புதுக்குடி யிருப்பின் கிழக்கு பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இதேவேளை, சாலை தென்பகுதியின் ஊடாக இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படை யினரும் முன்னேறி வருகின்றனர்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்ட வண்ணம் இராணுவத்தின் சகல படைப் பிரிவுகளும் கடுமையான மோதல் களுக்கு மத்தியில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தோர் சுகாதார நலன்: ஜேர்மன் செஞ்சிலுவை சங்கம் 6 கொள்கலன்கள் அன்பளிப்பு

sri-lanka-red-cross.jpgஇடம் பெயர்ந்த மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் வகையில் சுகாதார அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் ஆறு நடமாடும் கொள்கலன்களை சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது. சுமார் 5.5 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்கலன்களைக் கையளிக்கும் வைபவம் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜகத் அபேசிங்க, தேசிய செயலாளர் எஸ். எச். நிமல் குமார், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த அன் றெஸ் லிண்டனர், மொங்கோலிய நாட்டின் பிரதி சுகாதார அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சுகாதார அமைச்சர் உரையாற்றுகையில், இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் உரையாற்றுகையில், இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களுக்கு தேவையான மருத்துவப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் போதிய வைத்தியர்கள், தாதியர்கள் அப்பிரதேசங்களில் தங்கியிருந்து மக்களுக்கு தேவையான வைத்திய சேவைகளை வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் அனைத்து தேவைகளையும் அரசாங்கம் செய்து வருகின்றது. மஹிந்த சிந்தனையை உண்மைப்படுத்தும் வகையில் சுகாதார சேவைகளை சுகாதார அமைச்சு சிறப்பாக செய்து வருகின்றது. ஏனைய மக்களைப் போன்று இடம் பெயர்ந்த மக்களும் தேவையான சுகாதார தேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக பல்வேறு நிறுவனங்களின் உதவி தேவைப்படுகின்றது. எமது அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நட மாடும் கொள்கலன்கள் இடம்பெயர்ந் துள்ள மக்களின் பிரதேசங்களுக்கு விரை வாக அனுப்பி வைத்து அம்மக்களின் சுகாதார சேவைகளை தீர்க்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை உலக நாடுகளுக்கு முன்னுதாரணம் – அமைச்சர் ரோஹித

rohitha_bogollagama.jpgபயங்கர வாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை ஏனைய உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்றுத் தெரிவித்தார். பாதுகாப்பு உட்பட பாரிய செலவினங்களுக்குள்ளும் நாட்டின் சுகாதாரத்துறையில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு புலிகளின் பிரதேசத்திற்கும் அரசு மருந்துப் பொருட்கள், வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை அனுப்பி சிறந்த சுகாதார சேவையினை வழங்க நடவடிக்கை எடுத்து ள்ளதாகவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

சுகாதாரப் பராமரிப்புக்கான நிதி முக்கியத்துவம் குறித்து பிராந்திய அமைச்சர்கள் மட்ட மாநாடு நேற்று கொழும்பு சினமன் ஹோட்டலில் ஆரம்பமானது. இம்மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:- சாதாரணமான காலகட்டத்தில் மட்டுமன்றி அசாத்தியமான காலகட்டத்திலும் அரசாங்கம் வடக்கு, கிழக்கு உட்பட சகல பகுதிகளிலும் சிறப்பான அவசர சுகாதார சேவைகளை மேற்கொண்டு வந்துள்ளது.

இதற்கு உதாரணமாக சுனாமி கால கட்டத்தைக் குறிப்பிட முடியும். சுனாமிக்குப் பிறகு குறிப்பிடத்தக்க எந்த நோயும் இலங்கையில் பரவாமை இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகியுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பயங்கரவாதப் போராட்டத்தின் மத்தியிலும் சிறந்த சுகாதார சேவை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கிலும் சுகாதார சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை எந்தத் தடங்களுமின்றி சுகாதார சேவை முன் னெடுக்கப்பட்டு வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கும் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அரசாங் கத்தினால் அனுப்பப்படுகின்றன. போது மான வைத்தியர்கள் மற்றும் தாதிகளும் அனுப்பப்பட்டு சிறந்த சுகாதார சேவை அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புலிகள் மருந்துகளை தமது சொந்தப் பாவனைக்காக பயன்படுத்துகின்றனர் எனத் தெரிந்தும் அப்பகுதி மக்களின் நல னைக் கருத்திற்கொண்டு அரசு செயற்படுகிறது.  பல சந்தர்ப்பங்களில் பல்வேறு ஆபத்துக்களைச் சந்திக்க நேர்ந்த போதும் தரை, கடல், ஆகாய மார்க்கமாகவும் மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

இத்தகைய விடயங்களைப் பொறுத்த வரையில் பல்தேசிய நிதி நிறுவனங்கள் வர்த்தக சமூகங்கள், தனியார் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து செயற்படுவதையும் குறிப்பிட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

போர் சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளித்தே இராணுவ முன்னெடுப்புகள் நடத்தப்படுகின்றன – இராணுவ பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpgபடையினர், போர் சட்டவிதிமுறைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே தமது இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் போர்ச் சட்டத்தை மீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்று விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் அவ்வியக்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அச்செய்திச் சேவையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது விடுதலைப் புலிகளின் மேற்படி குற்றச்சாட்டினை பாதுகாப்பு தரப்பு என்ற ரீதியில் நாம் முற்றாக மறுக்கின்றோம். வன்னியில் இடம்பெயர்ந்துத் தங்கியுள்ள பொதுமக்கள்மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளர். நடேசன் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை. பொதுமக்களுக்கு சேதம் எற்படும் வகையில் படையினர் தமது இராணுவ முன்னெடுப்புக்களை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை. வன்னியில் சிக்குண்டுள்ள பொதுமக்களைக் கருத்திற் கொண்ட பிறகே அவர்கள் தாக்குதல்களை நடத்துகின்றனர். இதனால் படையினரின் தாக்குதல்களின் போது பொதுமக்களுக்கு எவ்விதச் சேதமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் வன்னியிலிருந்து வரும் பொதுமக்களை படையினர் மிகவும் அன்போடுதான் வரவேற்று வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் படையினராலேயே வழங்கப்பட்டு பின்னர் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அம்மக்களுக்குத் தேவையான பாதுகாப்பினை வழங்குவதிலும் படையினர் பின்வாங்கவில்லை. அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கச் சென்றதில் இராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்துள்ளனர் என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இராணுவத்தினர் போர் சட்டத்திற்கு மதிப்பளித்து தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் விடுதலைப் புலிகள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. அவர்களே பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இலங்கையில் வெளிநாடுகள் தலையிடுவதற்கு அரசே அழைப்பையும் விடுத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது -ஜே.வி.பி.

vijitha_herath.jpgஇலங்கை விடயத்தில் வெளிநாடுகளின் தலையீடுகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரான விஜித ஹேரத் எம்.பி., அரசாங்கமே இதற்கான அழைப்பையும் விடுத்து தலையீடுகளுக்கான வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைற்ற தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் அந்நிலையத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் கருத்து வெளியிடும் போதே விஜித ஹேரத் இவ்வாறு கூறியிருக்கிறார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

ஏற்கெனவே, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா போன்ற வெளிநாடுகளின் தலையீடுகள் இலங்கைக்கு வந்து விட்டன. அதை உறுதிப்படுத்துவது போல பிரிட்டன் எம்.பி.யான லியாம் பொக்ஸ் இலங்கை வந்து அவரது 2 ஆவது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார்.

ஏற்கனவே, லியாம் பொக்ஸ் முதல் அத்தியாயமாக சந்திரிகா குமாரதுங்கவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தேசிய பிரச்சினையில் தலையிட்டிருந்தார். அந்த வகையில் லியாம் பொக்ஸுக்கு இது இலங்கையில் 2 ஆவது அத்தியாயமாகும்.

இதேநேரம், தனது தேவைக்காக இலங்கை வரவில்லையெனவும் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இலங்கைக்கு வந்ததாகவும் லியாம் பொக்ஸ் கூறியிருக்கிறார். எனவே, அரசாங்கமே வெளிநாட்டுப் பிரதிநிதிகளை நாட்டுக்கு அழைத்து தலையீடுகளுக்கும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருவது தெளிவாகிறது.

இதற்கு முன்னர் பிரிட்டன் அரசாங்கத்தினால் இலங்கைக்கென பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்ட போது இலங்கை அரசாங்கம் அதை எதிர்த்திருந்தது. இது தொடர்பாக பிரிட்டன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் பேசியது மட்டுமன்றி இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் 2 முறைகள் ஜனாதிபதியை சந்தித்துப் பேசி ஏற்படுத்தப்பட்ட இணக்கத்துக்கு அமையே அந்தப் பிரதிநிதி நியமிக்கப்பட்டதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

இதேபோல் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பில் எப்படி செயற்படுகிறது என்பது குறித்து சில உபாயங்களை தம்வசம் கொண்டிருக்கின்றன. 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் அந்நாட்டின் யுத்த, அரசியல் தேவைகளுக்கு அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பது குறித்த உபாய மார்க்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அத்துடன், இந்து சமுத்திரத்தில் சீனாவின் பாதுகாப்பு வலைப் பின்னலுக்கு முகம் கொடுக்க அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றியும் அமெரிக்காவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

இதேநேரம், கடந்த 6 ஆம் திகதி கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் குமார் ரூபசிங்கவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் இலங்கைப் பிரச்சினைக்கு முதலில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென்றும் அதன் பின்னர் திஸ்ஸ விதாரண குழுவின் தீர்வு யோசனையை செயற்படுத்த வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது ராஜித சேனாரட்ன, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் அடங்கலாக அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய குழுவொன்றை நியமித்துள்ளது. இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை குமார் ரூபசிங்கவே செய்கிறார். எனவே, இவர்கள் மூலம் அமெரிக்க உபாயங்களே செயற்படுத்தப்படப் போகின்றன என்பது தெளிவாகிறது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் தெரிந்திருக்கவே இந்த வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. படையினரின் வெற்றிகளை பிரிவினைவாதத்துக்கு காட்டிக் கொடுக்க இடமளிக்க முடியாது. பிரினைவாதத்துக்கு கப்பம் வழங்கும் இந்த முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும். இதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

10 ஆயிரம் குடும்பங்கள் இம்மாத இறுதிக்குள் 4 கிராமங்களிலும் தங்கவைக்கப்படுவர்

rizad_baduradeen-01.jpgவன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருகைதரும் மக்களை வவுனியா மெனிக் பாம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் நான்கு கிராமங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மெனிக்பாம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த அமைச்சர் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் ஆனந்த குமாரசாமி, பொன். அருணாச்சலம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் கிராமங்களை பார்வையிட்டார். ஏற்கனவே, மெனிக்பாம் கதிர்காமம் கிராமத்தில் மக்கள் குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை, தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று கிராமங்களிலும் கதிர்காமர் கிராமத்தையும் உள்ளடக்கியதாக 10 ஆயிரம் குடும்பங்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கவைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறினார்.

இக்கிராமங்களில் உள்ளக பாதை, மின்சாரம், குடிதண்ணீர், பாடசாலைகள், ஏனைய திணைக்களங்களின் முக்கிய அலுவலகங்கள் என்பன அமைக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், இப் பணிகளைத் துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாகவும் கூறினார்.

இவ்விஜயத்தின் போது வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காததால் தீர்வு குறித்து தீர்மானிப்பதில் தாமதம் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காததால் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்துத் தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

“ஏசியன் ட்ரிபியூன்’ இணையத்தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கியிருக்கும் போட்டியொன்றிலேயே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

தொடர்ச்சியாக அழைப்புகள் விடுக்கப்பட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசத் தவறிவிட்ட நிலையில் எப்படி நாம் அதிகாரப் பகிர்வு யோசனை குறித்து திட்டமிடுவது என ஜனாதிபதி ராஜபக்ஷ கேள்வி யெழுப்பியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு 3 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளின் தலைவரின் கட்டளையின் பேரில் அவர்கள் அதற்கு வெளிப்படையாகவே பதிலளித்திருக்கவில்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, இலங்கை அரசாங்கத்துடன் எதுவும் பேசக் கூடாது என்ற பிரபாகரனின் கடும் உத்தரவின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். மனித கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் சில சமயம் விடுபட்டு வந்து விட்டால் பிரபாகரனுக்கு அவரது முகத்தை மறைத்துக் கொள்ள இடமில்லையென்று அவர் அச்சம் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி என்ற வகையில் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச அழைக்கிறேன். எனினும், அவர்களோ தமிழ் நாட்டுத் தலைவர்களிடமும் இந்தியாவின் வேறு இடங்களுக்கும் சென்று அங்குள்ள தலைவர்களிடம் எமக்கு பலவற்றை கூறுமாறு வலியுறுத்துகிறார்கள். இது அர்த்தமற்றதொன்றல்லவா? நாம் அவர்களுக்கு சந்தர்ப்பமளித்து எப்போதும் செவிமடுக்க ஆர்வமாக இருந்து பொறுப்பான கோரிக்கைகளுக்கு உறுதியளிக்கவும் அவர்களது நிலைப்பாடுகளை எம்மிடம் நேரடியாகவே தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கத் தயாராகவும் இருக்கின்ற போதும் அவர்கள் அதை செய்வதாக இல்லை. எனினும், தமிழ் நாட்டுத் தலைவர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் என்னிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே அவர்களது யோசனையுடன் வந்து எம்முடன் பேசுவதற்கு விருப்பமில்லாமல் இருந்தால் அனைத்துத் தமிழ் சமூகமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை எம்மால் எப்படி ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.  இதேநேரம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஓய்வு என்பதை முற்றாக நிராகரித்துள்ளார். இராணுவ நடவடிக்கை நிறுத்தத்தை புலிகள் மதிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாதென அவர் தெரிவித்திருக்கிறார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களது சுதந்திர நடமாட்டத்திற்கு இடமளிக்குமாறு அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கு 48 மணி நேர கால அவகாசம் வழங்கி நடவடிக்கைகளை ஓய்வுக்குக் கொண்டு வந்திருந்தது எனினும் அவர்கள் அந்த நல்லெண்ண சமிக்ஞையை மதிக்கத் தவறிவிட்டதுடன் அப்பாவிப் பொதுமக்களையும் பாதுகாப்பான இடம்நோக்கி நகர அனுமதிக்கவில்லை என்று ஜனாதிபதி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அத்துடன், நல்லெண்ண சமிக்ஞையாகத் தாக்குதல்களை இடை நிறுத்தி வைக்குமாறு அரச படையினர் கோரப்பட்டிருந்த போதிலும் புலிகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.  தாக்குதல்களை நிறுத்துமாறு படையினர் கோரப்பட்டிருந்தனர். எனினும், 24 மணி நேரம் கூட செல்வதற்கு முன்னர் புலிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததால் இறுதியில் அது நூற்றி ஐம்பது படையினர் காயமடையும் நிலைமையை ஏற்படுத்தியிருந்தது என்று மகிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். இதேநேரம், யுத்த சூனிய காலப்பகுதியென்பது சாத்தியப்படாத யோசனையாகவே இருக்குமென ஜனாதிபதி ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முன்னரான எமது சமிக்ஞைகளை மதிக்காத பிரபாகரனும் அவரது ஆட்களும் எனது கட்டளையின் பேரில் 48 மணி நேரத் தாக்குதல் தவிர்ப்பில் இருந்த எமது படையினர் காயமடைய காரணமாயிருந்திருக்கும் நிலையில் எப்படி மீண்டுமொரு முறை 48 அல்லது 72 மணிநேர யுத்த சூனிய காலப்பகுதியை வழங்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எமக்கு எந்தவொரு போர் நிறுத்தம் பற்றியோ அல்லது யுத்த சூனிய காலப்பகுதி பற்றியோ சிந்திக்க முடியாது. கடைசியாக நாம் அறிவித்த போது புலிகள் அதை மதிக்கத் தவறிவிட்டனர். அவர்கள் எமது படையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். தாக்குதல் நிறுத்தத்தில் இருக்கும் போது இலங்கை இராணுவத்தினர் தாக்கப்பட்டால் முப்படைத் தளபதி என்ற வகையில் அதற்கான பொறுப்பை நானே ஏற்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

மேல் மாகாணத்தில் 2299 கட்சிக் காரியாலயங்கள் அமைக்க அனுமதி

sri-lanka-elections.jpgமேல் மாகாணத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் 2299 கட்சிக் காரியாலயங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று தெரிவித்தது.

அரச நிறுவனங்கள் மற்றும் அரசாங்க விடுதிகள் என்பவற்றில் கட்சிக் காரியாலயங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலயங்களை அகற்ற பொலிஸாருக்கு பணித்துள்ளதாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

மேல் மாகாண சபைத் தேர்தலையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொழும்பு மாவட்டத்தில் 834 கட்சிக் காரியாலயங்களும் கம்பஹா மாவட்டத்தில் 942 காரியாலயங்களும் களுத்துறை மாவட்டத்தில் 523 காரியாலயங்களும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவற்றை ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு மூடிவிட வேண்டும் எனவும் பிரதான கட்சிக் காரியாலயங்களை 25ஆம் திகதி மூடிவிட வேண்டும் எனவும் சுமணசிறி தெரிவித்தார்.

இதேவேளை வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்ட பிரதேசங்களுக்கு 500 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சகல கட்சி அலுவலகங்களையும் மூடிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மீட்சி 2010ல் தான்

us-flag.jpg‘இன்னும் ஒரிரு ஆண்டுகளுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் இதே தடுமாற்றத்துடன்தான் இருக்கும். வருகிற 2010 முதல் மீட்சி நிலை ஆரம்பமாகும்’ என அமெரிக்க நிதித் துறைத் தலைவர் பென் பெர்னான்க் கூறியுள்ளார். அமெரிக்க டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கிட்டத்தட்ட உடைந்து போயுள்ளது அமெரிக்கப் பொருளாதாரம். மூன்றாண்டுகள் வரை இந்த நிலை நீடிக்கும். இதைத் தூக்கி நிறுத்த பெரிய மனோவலிமை கொண்ட, எப்படிப்பட்ட இடர்பாட்டையும் சமாளிக்கக் கூடிய அரசியல் தலைமை அவசியம். ஒருவிதத்தில் நம்மை நாமே சுயமாக சரிசெய்து கொள்ள இப்போதைய வீழ்ச்சி உதவியிருப்பதாகவே நம்புகிறேன்.

ஆனால் எல்லோரும் சொல்வதுபோல இந்த ஆண்டே பொருளாதார வீழ்ச்சி சரியாகிவிடாது. இந்த ஆண்டுதான் உச்சத்திலிருக்கும். அடுத்த ஆண்டு முதல் மீட்சி நிலை தொடங்கலாம்.

முன்பு போல மீண்டும் முழு வேலை நிலை என்ற சூழலுக்கு நாடு திரும்புவதும் கஷ்டம்தான். ஆனால் வலுவான ஒரு பொருளாதாரத்தைக் கட்டியமைக்க இந்த வீழ்ச்சி உதவும். கிடைக்கும் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் கீழை நாட்டு மனோபாவம் அமெரிக்கர்களுக்கும் வரும். அதற்கு இந்த வீழ்ச்சியும் மீட்சியும் காரணமாக அமையும்.

இந்த சூழலில் என் கவலையெல்லாம், வங்கி அமைப்பு மீது அமெரிக்க மக்களும் அரசியல் தலைவர்களும் நம்பிக்கை இழந்து போயிருப்பதுதான். வங்கித் துறை விரைவில் சீரடைவதுதான், நாட்டின் பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்தும், என்றார் பெர்னான்க்.

மாத்தறையில் தேடுதல் 99 தமிழர்கள் கைது

ranjeth-gunasekara.jpgமாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் 99 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை நடத்திய குண்டுதாரி குறித்த மாவட்டத்தில் அடிக்கடி நடமாடியதாகவும் அப்பகுதியிலேயே நீண்ட நாட்களாக தங்கியிருந்துள்ளார் என்றும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

முன்தினம் நேற்று இரவு நேற்று அதிகாலை வரை நடத்தப்பட்ட இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 2ஆயிரத்து 399 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மொரவக்க பிட்டபெத்தர மற்றும் தெனியாய போன்ற பகுதிகளிலுள்ள தொட்டப்புரங்களிலேயே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது.

இதன் போது 759 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் 2ஆயிரத்து 399 பேர் தீவிர விசாரணைகளுக்கு எட்படுத்தப்பட்டனர். இவர்களில் தமது பதிவை உறுதிப்படுத்தத் தவறிய 99 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய இந்த தேடுதலின் போது கைதான அனைவரும் அந்தந்த பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். உரிய விசாரணைகளை அடுத்து அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.