கூட்டுறவுத்துறை கடன்களையும், வட்டி நிலுவையையும் ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 55 கோடி ரூபாய் கடன்களை ரத்துச் செய்வதற்கு கடந்த புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக வர்த்தக நுகர்வோர் விவகார, கூட்டுறவுத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தைச் சேர்ந்த கூட்டுறவுத்துறையில் 12 கோடி ரூபாய் பெறுமதியான கடன்களை ரத்துச் செய்யும் நடவடிக்கை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (27) முற்பகல் நடைபெற்ற நிகழ்வில் இதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கூட்டுறவுத் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, “கூட்டுறவுத்துறைக்கு அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவதை உறுதிப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையாளர்களை ஜனாதிபதி தமது மாளிகைக்கு அழைத்துள்ளார்.
நாட்டில் நிலவளமும், நீர்வளமும் நிறைந்த ஒரு பகுதியைப் பிரித்துத் துண்டாடுவதற்காக புலிகள் இயக்கத்தின் முயற்சி உக்கிரமடைந்த வேளையில், அதனை முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்களின் வரிப்பணத்தில் 177 பில்லியன் ரூபாய் யுத்தத்திற்காக செலவிடப்பட்டது.
இது மூன்று மகாவலித் திட்டங்களை மேற்கொள்வதற்கான தொகையாகும். உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனாதிபதி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றார். உலகில் எந்தவொரு தலைவரும் இவ்வாறு ஒரே நேரத்தில் பல சவால்களை எதிர்நோக்கியதில்லை.
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக கூட்டுறவுக் கடன்களை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் 363 கோப் சிற்றிகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கூட்டுறவுக் கடைக்கும் ஜனாதிபதி நிதி வழங்கியிருக்கின்றார். இலங்கையில் பாரிய விநியோக வலையமைப்பைக்கொண்ட நிறுவனமாக கூட்டுறவுத்துறை விளங்குகின்றது.
கூட்டுறவுக் கடனை ரத்துச் செய்வதற்கு கடந்த புதன்கிழமை கூடிய அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கு 26800 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதுபோல், மகநெகும, கமநெகும உள்ளிட்ட அபிவிருத்திக்கென இவ்வருத்தில் 36800 கோடி ரூபாய் செலவிடப்படு கிறது. என்றாலும், கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்கு வரலாற்றில் முதற்தடவையாக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றார்.