செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஐ.நா. ஊழியரை விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்ததாக மீண்டும் குற்றச்சாட்டு

19a8fd8bfa777b52.jpg இலங்கையின் வடக்கே சேவையாற்றிவந்த தமது உள்ளூர் பணியாளர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் இவ்வார இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அமைப்பில் பலவந்தமாக ஆட்சேர்த்திருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இன்று குற்றஞ்சாட்டியிருக்கிறது.

வன்னியில் பணியாற்றிவந்த பணியாளர் ஒருவரையும், 16 வயதுடைய அவரது மகள் உட்பட அவரது குடும்பத்தினரையும் அரசினால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து புலிகள் ஆட்சேர்த்திருக்கின்றார்கள் என்று கொழும்பிற்கான ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள ஐ.நா அமைப்பு, தாமதிக்காமல் இவர்களை புலிகள் விடுவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதேபோன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஐ.நாவின் இன்னொரு உள்ளூர் பணியாளர் புலிகளினால் ஆட்சேர்க்கப்பட்டதாகவும், பலமுறை தாம் கோரிக்கை விடுத்தும் அவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும் ஐ.நா மன்றம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர்.

worldbank.jpgசர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ள கடனை வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 25ம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சர்வதேச நாணயநிதியத்திடம் கோரியுள்ள கடனை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுந்திரம் நாட்டில் பாதுகாக்கப்படல் ரூபாவின் பெறுமதியைப் பேணுதல் சகல நிவாரணங்களையும் விலக்கிக்கொள்ளல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றவற்றினை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

மூன்றாவது அணிக்கு பிரதமர் வேட்பாளர் இப்போது தேவையில்லை என்கிறார் ஜெயலலிதா

jayalalitha.jpgஇந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக உருவாகியுள்ள மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் முடிவுகள் எல்லாம் வெளியானபிறகு யோசித்துக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி இருக்கிறார்.

இப்போதே முடிவு செய்ய அவசரம் எதுவுமில்லை, அவ்வாறு செய்யாமலிருப்பதால் அணியின் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படப்போவதுமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்திரப் பிரதேச முதல்வருமான மாயாவதி ஞாயிறன்று அளித்த விருந்து பற்றி சரியான தகவல் கிடைக்காததால்தான் தன் கட்சிப் பிரதிநிதி அதில் கலந்துகொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

‘வற்’ வரி மோசடி: 200 வவுச்சர்கள் திணைக்கள உயரதிகாரிகளால் அழிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இடம்பெற்ற ‘வற்’ வரி மோசடியுடன் தொடர்புடைய 200 வவுச்சர்களை திணை க்கள உயரதிகாரிகள் சிலர் அழித்துள்ளதாக மேற்படி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

‘வற்’ வரி மோசடி தொடர்பான விசாரணை ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பரணகம முன்னிலையில் நேற்று நடைபெற்றது. ஆணைக் குழு முன்பாக சாட்சியமளித்த பிரதான சாட்சி ஒருவர் மேற்படி தகவல்களை வெளியிட்டுள்ளார். தற்பொழுது மேற்படி வவுச்சர்களில் 53 வவுச்சர்கள் மாத்திரம் எஞ்சியுள்ளதாகவும் சாட்சி கூறினார்.

‘வற்’ வரி மோசடியுடன் இறைவரித் திணைக்கள முன் னாள் ஆணையாளர் ஏ. ஏ. விஜேபால, பிரதி ஆணையாளர் இஸட். ஜயதிலக, கம்பியூட்டர் பிரிவு தலைவர் வத்தேதெனிய ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வற்’ மோசடி தொடர்பாக தன்னை கைது செய்ய பொலிஸார் தயாராவதாக தகவல் கிடைத்ததையடுத்து வத்தேதெனிய தற்கொலை செய்துகொண்டதாகவும் சாட்சி இங்கு குறிப்பிட்டார்.

ஆனால் வத்தேதெனிய மாரடைப்பினால் இறந்ததாகவே தனக்கு தகவல் கிடைத்ததாக ஆணைக் குழு தலைவர் கூறினார். சாட்சியின் விசாரணையை சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி பீ. தொடவத்த நெறிப்படுத்தினார்.

கனடிய வீதியை முடக்கிய போராட்டம் தமிழ் இளையோர் போராட்டம்

Canadian_Protest_13Mar09ரொரன்ரோ மத்தியில் மார்ச் 13 காலை 6.30 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை கனேடிய தமிழ் இளையோரால் மாபெரும் கவனயீர்ப்பும் வீதி மறியல் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 6.30 மணி முதல் ரொரன்ரோ மத்தியில் அமைந்துள்ள யங் மற்றும் ஷெப்பார்ட் சந்திப்பிற்கு அருகில் திரண்ட இளையவர்கள் தமிழீழ விடுதலை வேண்டியும் தமிழ் மக்களது அவலத்தைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறும் ரொரன்ரோ நகரின் மிக நெரிசல் மிக்க முக்கிய சந்தியை மறித்துக் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இந்த வீதித் தடைப் போராட்டம் தொடர்பான ஒரு வாக்கெடுப்பை சிபி24 என்ற ரொறன்ரோ செய்தி நிறுவனம் இணையத்தில் நடத்துகிறமை குறிப்பிடத்தக்கது.

Canadian_Protest_13Mar09தமிழீழத்தின் தேசியக் கொடியை ஏந்தி நின்ற இளையவர்கள் “விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்குங்கள்” “தமிழீழத்தை அங்கீகரியுங்கள்” போன்ற கோசங்களை எழுப்பி வீதியின் குறுக்கே படுத்து ரொரன்ரோவின் பிரதான சந்தியினை மறித்து நின்றனர். தமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படாது விடப்படுமானால் தம்மீது வாகனத்தைச் செலுத்தினாலும் தாம் அங்கிருந்து அகலப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வாகனநெரிசல் அதிகமாகவுள்ள காலை 8 மணியளவில், சுமார் 45 நிமிடங்களிற்கு மேலாக வீதியில் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தமிழீழ தேசியத்தலைமையை அங்கீகரிக்குமாறும், தமிழீழ விடுதலையை அங்கீகரித்து இலங்கைத் தீவில் தமிழனத்திற்கு சுய நிர்ணய உரிமையைப் பெற கனேடிய பல்லின சமூகம் தமிழினத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். தமிழர் தாயகமெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பை இனியும் கனேடிய இளைய சமூகம் பொறுத்திருந்து பார்க்காது என்றும் இளையவர்கள் கோபாவேசமாகத் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி 30 நிமிடங்களிற்குப் பின்ன அவ்விடத்திற்கு வந்த காவற்றுறையினர் வீதிப் போக்குவரத்தினை சீர்படுத்துவதற்காக கலகம் அடக்கும் காவற்றுறையினரின் உதவியையும் நாடினர்.

ஆயினும் தொடர்ந்து தமது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட கனடிய தமிழ் இளைய சமூகம் காவற்றுறையினருடன் தமது ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் தொடர்பாக உரையாடினர். இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த இளையவர்கள், ‘எமது உறவுகள் நித்தம் அழிக்கப்பட்டு இன அழிப்பினை சிறீலங்கா அரசு முன்னெடுத்து வருவது தொடர்பாக எமது கனடிய அரசிற்கு நாம் அமைதி வழியில் எடுத்துரைத்தோம். அதனைத் தடுத்து நிறுத்த ஆவன செய்யுமாறு வேண்டினோம். எதுவும் பயனளிக்கவில்லை. அந்நிலையிலேயே நாம் இப் போராட்டத்தை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம். இன்று நாம் இவ் வீதி மறியலில் ஈடுபடுவதற்கா முழுக் காரணமும் கனடிய அரசினையே சாரும்’ என்றனர்.

தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், எமது இத்தகைய ஆர்ப்பாட்டத்தினால் பலரும் தங்கள் பணிக்குச் செல்வதற்கு இடையூறு ஏற்படும் என்பதை நாம் அறிவோம். ஆயினும் எம் கண்முன்னே ஓர் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அதைத் தடுத்து நிறுத்தவேண்டிய பணி அனைவரிடமும் உள்ளது. அந்த வகையில் எம்மினம் அழிக்கப்படும் போது, அதனைக் காப்பதற்காக நாம்தான் போராட வேண்டும். அத்துடன் இந் நாட்டின் மக்களின் வரிப்பணம் இலங்கைக்கு உதவி என்ற பெயரிலே அள்ளிக் கொடுக்கப்படுகிறது. அந் நிதியுதவிகள் அனைத்தும் எம் இனத்தை அழிக்கும் நடவடிக்கைக்காக சிறீலங்கா அரசால் பயன்படுத்தப்படுகிறது. தங்கள் பணம் எவ்வாறு இனப்படுகொலைக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக நாம் இந் நாட்டு மக்களிற்கு இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம். ஆகையால், இதன் மூலம் மக்களிற்கு தாங்களும் இவ் இனப்படுகொலைக்குக் காரணகர்த்தாக்கள். தாங்களும் இதற்கெதிராகக் குரல்கொடுக்கவேண்டும் என்ன உண்மை எம்மால் புரியவைக்க முடியும் என்றனர்.

ரொரன்ரொ மத்தியில் ஏற்பட்ட வீதி நெரிசலால் பல்லின ஊடகங்களின் கவனத்தையும் இக்கவனயீர்ப்பு நிகழ்வு ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கனடியத் தமிழ் சமூகத்தில் இவ்வாறான சாலைமறியல் நடவடிக்கைகள் சட்டத்திற்குப் புறம்பானது, இவை தவிர்க்கபட்ட வேண்டும் என்ற எண்ணவோட்டத்தினால் இவ்விளையோரின் முயற்சிக்கு அவர்களது ஆதரவு குறைவாக இருந்தது கவனிக்கப்பட்டது. ஆயினும், இவ்வாறான நடவடிக்கைகள் பாரிய அளவில் அனைவரது ஆதரவோடும் செயல்வடிவம் கொள்ளும் போது இவ்விளையவர்களினால் பெறப்பட்ட கவனயீர்ப்பை விட அதிகளவில் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் இளையோர்கள் அணிதிரண்டு இந்தப் போராட்டத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் நடாத்தியமை கனேடிய தமிழர்களின் போராட்டங்களில் புதிய திருப்பு முனையாக அமையும் என பலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன்  இன்று 16ம் திகதி திங்கட்கிழமை கனடிய மாணவர் சமூகமும், அனைத்துத் தமிழ் சமூக அமைப்புக்களும் இணைந்து பாரிய மனிதச் சங்கிலி நிகழ்வொன்றினை ரொரன்ரோ மாநகரின் மத்தியில் ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை சிறுமி வர்ஷா படுகொலை சந்தேக நபரின் சடலத்தைப் பொறுப்பேற்க தாயார் மறுப்பு

varsa.jpg
திருகோணமலையில் 6 வயது சிறுமி படுகொலை தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிரதான சந்தேக நபரின் சடலத்தை அவரது தாயார் அடையாளம் காட்டிய போதிலும் அதனைப் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்.

நித்தியபுரத்தைச் சேர்ந்த ஒப்ரின் மேர்வின் ரினோசன் (வயது 26) என்ற இந்நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைத்திய பரிசோதனைக்காகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வேளை, பொலிஸ் அதிகாரி ஒருவரின் கழுத்தை நெரித்துத் தப்பியோட முயன்றபோது, குறித்த பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்ற போது சாட்சியமளித்த சந்தேக நபரின்தாயார் “கடந்த 3 வருடங்களாக இவருக்கும் குடும்பத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கணவரை விட்டு பிரிந்து நான் வாழ்ந்து வருகின்றேன்.இவரது சடலத்தை பொறுப்பேற்பதற்கும் நான் விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டார்.

சடலத்தைப் பொறுப்பேற்கத் தாயார் மறுத்ததையடுத்து அரச செலவில் அடக்கம் செய்யுமாறு பொலிஸாருக்கு மரண விசாரணையின் பின்பு மஜிஸ்திரேட் ரி.எல்.ஏ.மனாப் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து அவரது சடலம் இன்று அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது.

இச் சிறுமியின் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருகோணமலை பொலிஸ் தகவல்களின்படி சந்தேகத்தின் பேரில் கைதானவர்களில் ஒருவர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மகன் என்றும் மற்றுமொருவர் தமிழ் அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடையவர் என்றும், மேலும் ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக சிறுமிக்குக் கணினி கற்பிப்பதற்காக வீட்டுக்கு சென்று வந்தவர் என்றும் தெரிய வருகின்றது. கணனி கற்பித்தவர் சிகரம் என்னும் இணைய வானொலி சேவையொன்றை நடத்தி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இச்சிறுமி உவர் மலையிலுள்ள தமிழ் அரசியல் கட்சியொன்றின் காரியாலயத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, மற்றும் இரண்டு சந்தேக நபர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை போன்ற தகவல்களும் தமது விசாரணைகளின் இருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவற்றைத் தவிர, இந்தச் சந்தேக நபர்கள் திருகோணமலை பிரதேசத்தில் இடம்பெற்ற சில கடத்தல் மற்றும் கப்பம் கோரும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அதே வேளை படுகொலை செய்யப்பட்ட சென்.மேரிஸ் மகளிர் பாடசாலையின் முதலாம் வகுப்பு மாணவியான ஜூட் ரெஜி வர்ஷாவின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள் உட்பட பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டனர்

மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு கண்ட அறிக்கையும் கண்ணீர் அஞ்சலியும் : சிறீ-ரெலோ

கடந்த புதன்கிழமை (மார். 12) திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தரம் ஒன்றில் கல்வி பயிலும் 6 வயதான யூட் றெஜி வர்சா என்ற சிறுமியின் கொலை குறித்து சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ஊடகப்பிரிவு) திருகோணமலையில் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு தமது வன்மை மிகுந்த கண்டனத்தை உறுதியுடன் வெளிப்படுத்தும் அதேவேளை அச்சிறுமியின் மறைவுக்கு தமது கண்ணீர் அஞ்சலியும் செலுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது. சிறீ-ரெலோ வெளியிட்ட துண்டுப்பிரசுரம் முழுமையாக; 

கண்டன அறிக்கையும் கண்ணீர் அஞ்சலியும்

செல்வி ஜுட் றெஜி வர்ஷா
( St.Mary’s College முதலாம் ஆண்டு மாணவி)
பிறப்பு 30.10.2003 இறப்பு 11.03.2009

எங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான இழப்புகளும், அழிவுகளும் போதாதா, சொந்த மண்ணில் மக்கள் படும் துயரம் தீராதா, என்று எந்நாளும் எதிர்பார்ப்பில் வாழும் மக்கள் சகல பிரச்சனைகளையும் தீர்த்து வாழுதல் வேண்டாமா? இந்த நிலையில் இங்கு நடப்பது என்ன? பள்ளிப் பிள்ளைகள் பணத்துக்காக கடத்தப்பட்டு கொல்லப்படுவது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யாரும் இதை அனுமதிக்க முடியாது.

எமது மக்களின் வாழ்வுக்கான தியாகத்தில் எமது இழப்புகளும் சாதாரணமானதல்ல. ஜனநாயக வழியில் எமது மக்களின் இருப்பையும் வாழ்வையும் நிர்ணயிக்கும் பாரிய மக்கள் கடமையில் எம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வந்திருக்கும் நாம் இந்தக் கொடுமைகளையும், அராஜகத்தையும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான மக்கள் விரோத செயலுக்கு எதிராக நாம் எப்போதும் விழிப்புடனும் எதனையும் முன்னெடுக்கவும் தயக்கம் காட்ட முடியாது. மக்களே இவ்வாறான மக்கள் விரோத செயலில் ஈடுபடுபவர்களுக்க்கெதிராக எம்முடன் சேர்ந்து ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.

இன்று இப்பள்ளிப் பிள்ளையின் இழப்பு நாம் அனைவரும் வேதனை சுமப்பது மட்டுமல்ல, வெட்கித் தலைகுனியும் செயலுமாகும். இப்பிள்ளையின் இழப்பு கல்விச் சமூகத்துக்கும் மட்டும் அல்ல முழு தமிழ்ச் சமூகத்துக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும்.இக்குழந்தையின் குடும்பத்தினர் தாங்கும் துன்பத்தில் நாமும் சேர்ந்த போதும் அது முழுமையான ஆறுதலாகுமா?

ஆயினும் எமது அனுதாபம், ஆறுதல் அவர்களுக்கு எப்போதும் பிணைவாகும்.

மீண்டும் அனைத்து சமூக சக்திகளுக்கு சிறீ ரெலோ அமைப்பினரான நாம் வேண்டுதலாக முன்வைப்பது, இவ்வாறான கொடூர செயலில் ஈடுபடுவோரை இனங்கண்டு பாதுகாப்பு தரப்புக்கும் ஊடகங்களுக்கும் ஏனையவர்களுக்கும் அறியத் தருவதை தவற விடாதீகள்.

மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு எமது வன்மை மிகுந்த கண்டனத்தை உறுதியுடன் வெளிப்படுத்தும் அதேவேளை அச்சிறுமியின் மறைவுக்கு எமது கண்ணீர் அஞ்சலியும் செலுத்திக் கொள்கிறோம்.

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ஊடகப்பிரிவு)

நிர்வாண ராகிங் செய்த நான்கு மாணவிகள் கைது

ஆந்திராவில் முதலாம் ஆண்டு மாணவியை நிர்வாண நடனம் ஆடச் சொல்லி அவரை தற்கொலைக்கு தூண்டியதற்காக நான்கு மாணவிகள் மற்றும் விடுதி வார்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மை பொறியியல் கல்லூரியில் திரிவேணி என்ற 20 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரை அந்த கல்லூரியை சேர்ந்த ஸ்ரீவந்தி, சவுஜன்யா, நஷ்மா, வனிதா, சாகிதி ஆகிய ஐந்து சீனியர்  ராகிங் செய்து துன்புறுத்தியுள்ளனர்.

அவரை நிர்வாணமாக நடனமாட சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த திரிவேணி தலைசாயபொடி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது.

இப்பிரச்சினையில் வழக்கு பதிவு செய்து வரும் ஆந்திர போலீசார் ராகிங் செய்த மாணவிகளில் நான்கு பேரையும், விடுதி வார்டனையும் கைது செய்தனர். மற்றொரு மாணவி விடுதியிலிருந்து வெளியேறிவிட்டதால், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுமாத்தளனில் புலிகளின் காவல் நிலையம் படையினரால் மீட்பு!

ltte_police.pngபுதுக் குடியிருப்பு பகுதியில் புலிகளுக்கெதிராக கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் படையினர் நேற்று புலிகளின் காவல் நிலையம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏ-39 வீதியில் புதுமாத்தளன் பிரதேசத்துக்கு அருகில் அமைந்திருந்த புலிகளின் இந்தக் காவல் நிலையத்தை நேற்றுக் காலை இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 8ஆவது கஜபா படையணியினர் பல மணிநேர கடும் தாக்குதல்களின் பின்னர் கைபற்றியுள்ளனர்.

இங்கு இடம்பெற்ற மோதல்களின்போது 9 எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். படை வீரர்கள் சிலரும் சிறு காயங்களுக்கு உட்பட்டனர்.

முள்ளியவெளி பகுதியில் புலிகள் நடாத்தி வந்த காவல் நிலையமே புதுமாத்தாளன் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்ததாக களமுனையிலுள்ள படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். காவல் நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பதவி நீக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதம நீதியரசர் மீண்டும் சேவையில் – பாகிஸ்தான் பிரதமர் தொலைக்காட்சியில் அறிவிப்பு

ifthikar_pakistan_justis.jpg பதவி நீக்கப்பட்ட பாகிஸ்தானின் பிரதம நீதியரசர் இப்திகார் சௌத்ரியை மீண்டும் அப்பதவியில் அமர்த்த அரசாங்கம் தீர்மாணித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.

இத்தீர்மாணத்தை இன்று பாகிஸ்தான் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றும்போது உத்தியோகபூர்வமாக அறிவித்த பிரதமர் கிலானி, பிரதம நீதியரசர் இம்மாத இறுதியில் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார் எனக் கூறினார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் ஆட்சியின்போது பிரதம நீதியரசர் இப்திகார் சௌத்ரி உட்பட 60 நீதிபதிகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தலைமையில் எதிர்க் கட்சிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக நாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கிச் செல்வதையடுத்தே பாகிஸ்தான் அரசாங்கம் இத்தீர்மாணத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. 

கொழும்பில் வாழும் வட-கிழக்கு மக்கள் பொலிஸில் பதிய வேண்டும் :ரஞ்சித் குணசேகர

ranjeth-gunasekara.jpgவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து கொழும்பில் தற்காலிகமாக வாழ்ந்து வரும் மக்கள் அனைவரையும் எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு முன் பொலிஸ் நிலையங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் .