செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வட மாகாணத்தில் 500 பொலிஸாரை ஆட்சேர்க்க 6500 பேர் விண்ணப்பம் – இன்றும் நாளையும் நேர்முகப் பரீட்சை

260909srilanka.jpgவடக்கில் 500 பொலிஸாரை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்றும் நாளையும் நடைபெறுமென யாழ்ப்பாணத்துக்கான பொலிஸ் சுப்ரின்டன்ட் ஜி. எச். மாரப்பன தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இந்நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

செப்டெம்பர் 19 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் 6 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 400 பெண்களினுடையதெனவும் யாழ். பொலிஸ் சுப்ரின்டன்ட் மாரப்பன கூறினார்.

கடந்த 03 தசாப்தங்களுக்குப் பின்னர் இப்போதே முதல் தடவையாக யாழ்ப் பாணத்தில் பொலிஸ் ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய அவர், அடுத்த கட்டமாக சப் இன்ஸ்பெக்டர் தெரிவுக்காக விரைவில் விண்ணப்பங்கள் கோரப்படுமெனவும் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸில் கடும் மழை வெள்ளம் – சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

280909.jpgபிலிப் பைன்ஸ் தலைநகரில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தை தொடர்ந்து சர்வதேச உதவியை பிலிப்பைன்ஸ் கோரியுள்ளது. கெட்சானா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் இரண்டரை லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சூறாவளியை தொடர்ந்த வெள்ளத்தால் குறைந்தது 70 பேர் பலியாகியுள்ளனர். கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் இதுவே மிக அதிக அளவு பெய்த மழையாகும். பருவகால சூறாவளியால் ஒரு மாத காலத்தில் பெய்ய கூடிய மழை, ஆறே மணி நேரத்தில் தலைநகர் மணிலாவில் கொட்டியுள்ளது. இன்னும் பல இடங்களில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் மக்களை காப்பாற்ற மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

தலைநகர் மணிலாவில் கூரைகள் மீது அமர்ந்துள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.உள்ளூர் தொலைக்காட்சிகளில், கூரை மேல் நின்று கொண்டிருந்த மக்கள் நீரில் அடித்து செல்லப்படுவது காண்பிக்கப்படுகிறது.

தலைநகர் மணிலா மற்றும் இருபத்து நான்கு மாகாணங்களில் அரசாங்கம் பேரிடர் காலநிலையை அறிவித்துள்ளது.

4வது மாடியிலிருந்து விழுந்து 80 வயது மூதாட்டி மரணம்

வயதுடைய மூதாட்டி ஒருவர் தொடர்மாடி வீட்டுத் திட்ட நான்காம் மாடியில் இருந்து வீழ்ந்து இறந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை கொழும்பு, வெள்ளவத்தை கல் கோர்ட் தொடர்மாடி வீட்டுத் திட்டத்தில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

இவர் கீழே தள்ளி விழுத்திக் கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது கால் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து வெள்ளவத்தை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தங்கேஸ்வரி மாணிக்கவாசகமென அடையாளங் காணப்பட்டுள்ளது.

திமுக முப்பெரும் விழாவில் முதல்வருக்கு அண்ணா விருது

karunanithi.jpg திமுக முப்பெரும் விழா சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதையொட்டி காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டது. முதல்வர் கருணாநிதிக்கு விழாவில் அண்ணா விருது வழங்கப்பட்டது.  அண்ணா நூற்றாண்டையொட்டி ஆண்டு முழுவதும் தி.மு.க. சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டன. நூற்றாண்டு நிறைவு விழாவை பிரமாண்டமாக கொண்டாடுவது எனவும், அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்திலேயே விழாவை கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. நிறுவன நாள் விழா ஆகிய முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் எல்லையில், பெங்களூர் நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள அண்ணா நினைவு தூணை காலை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்

யாழ். பயணிகள் பஸ் பதிவு அலுவலகம் மாற்றம்

யாழ். பயணிகள் பஸ் பதிவு அலுவலகம் வவுனியா தேக்கம்காடு மைதானத்திற்கு மாற்றப்படவுள்ளது. வவுனியா ரம்மியா ஹவுஸிலிருந்து இந்த அலுவலகம் ஈரப்பெரியகுளம் இராணுவ முகாமிற்கு அருகில் மாற்றப்பட்டிருந்தது அதன் காரணமாக வவுனியாவிலிருந்து ஈரப்பெரியகுளம் செல்ல ஒரு பயணிக்கு முச்சக்கரவண்டிக்கு 400 முதல் 500 ரூபா வரை செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

இது குறித்து த. தே. கூட்டமைப்பு எம்.பிக்கள் சிலர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் எம்.பியை சந்தித்து விளக்கியிருந்தனர்.

கைத்துப்பாக்கி விற்பனை செய்தவர் கைது

100909media-teaching.jpgஇத்தாலி நாட்டு தயாரிப்பு பிஸ்டலுடன் சந்தேக நபர் ஒருவரை கொழும்பு, கிரான்ட் பாஸில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆயுத விற்பனை நடைபெறுவதாக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

மொடல 85 ஒடோநெல் ரகத்தைச் சேர்ந்த இத்தாலி நாட்டு தயாரிப் பான 8 மி.மீ. பிஸ்டல் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கா உட்பட சில நாடுகள் இலங்கையை போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்த முயற்சி – விமல்

280909vimal.jpgசர்வதேச மட்டத்தில் இலங்கையை ஒரு போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்தி விட வேண்டும் என்பதில் புலிகளுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கட்சித் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவங்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்

புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர் என்ற வேதனையிலே இவ்வாறு இந்த நாடுகள் செயற்படுகின்றன. விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றத் துடிக்கும் சர்வதேச சக்திகளின் சதித் திட்டங்களை முறியடிப்பதற்கு அனைவரும் அணி திரள வேண்டும். அத்துடன் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு எமது கட்சி தயாராகி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜீ 20 மாநாட்டில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்

அமெரிக்காவின் பிட்ஸ்பார்க் நகரில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாடு நேற்று முடிவடைந்தது.

இம்மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாடு முடிவடைந்த பின்னர் பிட்ஸ் பார்க் பல்கலைக்கழகத்திற்கருகே ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலமாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இவர்களைக் கலைந்து செல்லுமாறு பொலிஸார் எச்சரித்தனர்.

எனினும் யாரும் அங்கிருந்து செல்லவில்லை. மாறாக அவர்கள், பொலிஸ¤டன் கைகலப்பில் இறங்கினர். கூட்டத்தை கலைக்க பொலிஸார் மிளகுவாயுவை பயன்படுத்தினார்கள். கார் எழுப்புவது போன்ற ஒலியையும் எழுப்பினார்கள். ரப்பர் குண்டு துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. அதன் பிறகு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொலிஸார் மிருகத்தனமாக நடந்து கொண்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பான் பசிபிக் டென்னிஸ்: சானியா தகுதி

sania3333.jpgஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள பான் பசிபிக் ஒபன் டென்னிஸ் போட்டியில் விளையாட இந்தியாவின் சானியா மிர்சா தகுதி பெற்றுள்ளார்.

2 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கொண்ட இப்போட்டியில் விளையாட நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் விக்டோரியா குட்டுசோவாவை 4-6, 6-3, 6-2 என்ற செட்கள் கணக்கில் வென்றுள்ளார்.

இஸ்ரேல் பலஸ்தீன் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு அமெரிக்கா வலியுறுத்து

இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அரபு நாடுகள் பலஸ்தீனைத் தூண்ட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா கேட்டுள்ளார்.  ஐ. நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹ¥வை ஒபாமா சந்தித்தார்.

இதன் போது மேற்குக் கரையில் யூத குடியேற்றங்கள் நிறுவும் வேலைகளை உடன் நிறுத்துவது பற்றியும் பேசினார். அரபு நாடுகளின் சமாதான அக்கறையைப் பொறுத்தே மேற்குக்கரை யூத குடியேற்ற விவகாரம் தங்கியுள்ளதாக பென்ஜிமின் நெதன்யாஹ¥ கூறினார்.

இதையடுத்து பலஸ்தீன ஜனாதிபதி அப்பாசையும் அமெரிக்க ஜனாதிபதி சந்தித்துள்ளார்.  அறுபது வருடகால மத்திய கிழக்கு முரண்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கான நேரம் வந்துவிட்டது.  புதிய தீர்வு யோசனைகளுக்காக நாங்கள் காத்திருக்கப் போவதில்லை. பேச்சுக்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.

எனவே அரபு நாடுகள் பலஸ்தீனை சமாதானத்தின் பக்கம் நகர்த்த வேண்டும் இவ்வாறு பராக் ஒபாமா தெரிவித்தார்.  ஐ. நா. உரையின் போதும் உலகத் தலைவர்கள் மத்திய கிழக்கு முரண்பாடுகள் பற்றி விசேட உரைகளை ஆற்றினார். அரபு நாடுகளின் தலைவர்களை ஹிலாரி கிளிங்டன் சந்தித்தார்.