செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அக்குரஸ்ஸ தாக்குதல் சம்பவம் 10 தமிழ் இளைஞர்கள் கைது

akkurassa-02.jpgஅக்கு ரஸ்ஸ கொடபிட்டியவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்ற குற்றப்புலனாய்வு பொலிஸார் (சி.ஐ.டி.) பத்து தமிழ் இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை கைது செய்துள்ளனர். இத்தகவலை தென்பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் டீ. டபிள்யூ. பிரதாப்சிங்க தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் அக்குரஸ்ஸ பகுதி தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பொலிஸார் பலரிடம் இருந்து வாக்கு மூலங்களைப்பெற்று வருகின்றனர். இந்த பத்து தமிழ் இளைஞர்களும் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

லாகூர் தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பாவை குற்றஞ்சாட்டும் அமெரிக்க செனட்டர்

crc-04032009.jpgலாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் மீது அமெரிக்க செனட்டர் கிளயர் மக் காஸ்சில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அத்துடன், மும்பையில் நவம்பர் 26 இல் இடம்பெற்ற தாக்குதலுக்கும் லண்டனில் இடம்பெற்ற கொலைகளுக்கும் இந்த அமைப்பின் மீதே குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை டோன் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. லஸ்கர் அமைப்பு இந்தப் பாரிய தாக்குதல் சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருக்கையில் அது தொடர்பாக அமெரிக்கா விசாரணை மேற்கொள்வதற்கு உதவ பாகிஸ்தான் மறுப்பதுடன் அக்குழுவை பாதுகாப்பதாகவும் மிஸோரியின் செனட்டர் கிளயர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஆனால், அவர் (கிளயர்) கூறுவது போன்று பாகிஸ்தானின் ஒத்துழைப்பு முழுமையாக இல்லையென தான் கருதவில்லையென்று அட்மிரல் பிளயர் கூறியுள்ளார்.

மும்பைத் தாக்குதலையடுத்து லஸ்கர் அமைப்பின் தலைவர்களை பாகிஸ்தான் கைதுசெய்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பிளயர் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பாகிஸ்தானியர் மத்தியில் லஸ்கர் அமைப்புக்கு ஆதரவாளர்கள் பலர் இருப்பதாகவும் அவர்களை தமது தாக்குதல்களுக்கு லஷ்கர் இ தொய்பா பயன்படுத்துவதாகவும் செனட்டர் கிளயர் மக் காஸ்சில் கூறியுள்ளார்.

இலங்கை முதலீட்டுச்சபையில் நிலவூம் 7000 வெற்றிடங்களை நிரப்ப உடன் நடவடிக்கை எடுக்கவும்!-ஜனாதிபதி பணிப்புரை

mahinda.jpgமுதலீட்டுச் சபையின் பலதரப்பட்ட திட்டங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடக தகவல்துறை ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக பெரேரா ஆகியோருக்கிடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இலங்கை முதலீட்டுச் சபையின் பல துறைகளில்  7,000 வெற்றிடங்கள் நிலவுவதாக இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதனையடுத்த அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் சிக்கியுள்ள தமிழர் நிலை: ஐரோப்பிய நாடுகளில் தவறான பிரசாரம் – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

mahinda_samarasinghe.jpgமுல்லைத் தீவில் புலிகளிடம் சிக்குண்டுள்ள தமிழ் மக்கள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களை இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க சந்தித்தபோது இந்த குற்றச்சாட்டுக்கள் நேரடியாக முன்வைக்கப்பட்டுள்ளன.

சனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இது குறித்து தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன்ன தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உள்ளிட்ட அமைச்சின் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்டக் குழுவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மகிந்த சமரசிங்க அண்மையில் ஜெனீவா சென்றிருந்த போது பல ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்து உரையாடினார். அவர்கள் வன்னி தமிழர்கள் குறித்து தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவிக்கையில் :-

தற்போது அனைத்து நாடுகளிலும் இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் புலிகளுக்கு சாதகமாகவும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் தவறான பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். லண்டனில் வாழும் இலங்கை இளைஞர் ஒருவர் அண்மையில் ஜெனீவாவிலுள்ள ஐ. நா. செயலகத்திற்கு முன்பாக தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்தார். இவருக்கு லண்டனில் விழா எடுத்துள்ளார்கள். அதுமட்டுமன்றி புலிகளின் விமானம் கொழும்பில் அண்மையில் நடத்திய தாக்குதலை பாராட்டி கனடா வாழ் தமிழர்கள் அதனை கொண்டாடியுள்ளார்கள். இது தொடர்பாக நான் இலங்கையில் உள்ள கனேடிய தூதுவரை தொடர்புகொண்டு எதற்காக பயங்கரவாதிகளுக்கு விழா எடுக்க வேண்டுமென வினவினேன்.

அதற்கு கனேடிய தூதுவர், அங்கு வாழ்வோருக்கு அதற்கான சுதந்திரம் இருப்பதாக கூறினார். அப்படியானால் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதற்காக விழா எடுப்பீர்களா? எந்தவொரு சுதந்திரத்துக்கும் வரையறை இருக்க வேண்டுமென நான் தெரிவித்தேன். இது எவ்வளவு உணர்வுபூர்வமான விஷயம் என்பதனை கனேடிய தூதுவர் ஒப்புக்கொண்டார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில், முல்லைத்தீவின் 35 சதுர கிலோ மீற்றர் நிலப் பரப்புக்குள் மூன்று இலட்சம் சிவிலியன்கள் முடங்கிக் கிடப்பதாக சர்வதேச நெருக்கடி தொடர்பாக ஆராயும் குழு வெளியிட்டுள்ள செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கலாநிதி பாலித கொஹன்ன பதிலளிக்கும் போது ‘அது முற்றிலும் தவறான கணிப்பீடு’ எனக் கூறினார்.

மேற்படி குழு ‘தமிழ் நெட்’ இணைய தளத்தினூடாகவே கருத்துக்களை பெற்றுள்ளதாகவும் அவர்கள் கூறும்படியிருக்குமேயானால் மூன்று இலட்சம் மக்களும் நின்று கொண்டேதான் இருக்கவேண்டும். ஆனால் அங்கு யாரும் அப்படி நின்றுகொண்டு இருக்கவில்லை என்பதனை எமது விமானப் படையின் உளவுப் பிரிவு ஊர்ஜிதம் செய்துள்ளது.

குறித்த 35 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் 70 ஆயிரம் சிவிலியன்களே இருக்கின்றனர். இதுவே உண்மை எனவும் கொஹன்ன தெரிவித்தார்.

பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி அதிகரிப்பு

karachci.jpgபாகிஸ்தானில் அரசியல் மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் இராணுவம் தலையிடுவதற்கான சாத்தியமும் அதிகரித்திருக்கிறது. தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி அரசின் தடை உத்தரவை மீறி எதிரணி ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமாபாத்திற்குச் சென்று பாராளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிடப் போவதாக எதிரணியினரும் சட்டத்தரணிகளும் சூளுரைத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பதவிநீக்கம் செய்த நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பாக ஜனாதிபதி சர்தாரி அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானின் வழக்கறிஞர்கள் சங்கமும் வலியுறுத்தி வருகின்றனர். பதவி வகிக்கமுடியாமல் தடுக்கும் தீர்ப்பொன்றைக் கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கும் அவரின் சகோதரருக்கும் வழங்கியிருந்தது. அத்துடன் இத்தீர்ப்பையடுத்து பஞ்சாப் மாகாண அரசை பாகிஸ்தான் மத்திய அரசு பதவிநீக்கியிருந்தது. இது ஜனாதிபதி சர்தாரி மீது நவாஸ் ஷெரீப்பின் ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை சகல நகரங்களிலுமிருந்தும் ஊர்வலமாகச் சென்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக நவாஸ் ஷெரீப்பும் சட்டத்தரணிகளும் அறிவித்ததன் பிரகாரம் நேற்று நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதனால் பல இடங்களில் சட்டத்தரணிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன.

இதேவேளை பாகிஸ்தானின் இராணுவத் தலையீடு தொடர்பான ஊகங்கள் அதிகரித்துவரும் நிலையில், இராணுவம் நிர்வாகத்தை கைப்பற்றும் சாத்தியம் அறவே இல்லையென நவாஸ் ஷரீப் தெரிவித்திருக்கிறார். 1999 இல் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஷெரீப் பதிவிநீக்கம் செய்யப்பட்டவராகும். நீதிபதிகள் மீண்டும் பணிக்கமர்த்தப்படும் வரை தமது நீண்ட யாத்திரை தொடரும் என்று ஷெரீப் அறிவித்திருக்கிறார். முன்னர் வாக்குறுதியளித்ததன் பிரகாரம் நீதிபதிகளை மீண்டும் பணிக்கு அமர்த்தியதன் பின்பே சர்தாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதி சர்தாரி செயற்படும் விதம் குறித்து அதிருப்தியடைந்துள்ள இராணுவத் தளபதி கயானி அரசியல் குழப்பத்துக்கு விரைவில் முடிவுகட்டுமாறு கேட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் நிழல் பாதுகாப்பு செயலர் இலங்கை விஜயம்

liam_fo_.jpg
பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்பு செயலர் லியம் பொக்ஸ் நேற்று இலங்கை வந்துள்ளார். அவரது விஜயத்தின் போது இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பல பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணின் இலங்கைக்கான தூதுவராக, பாதுகாப்பு செயலாளர் டெஸ் பிரவுணே இலங்கை அரசின் அனுமதி பெறாமல் நியமிக்கப்பட்டுள்ளதாக லியம் பொக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.நேற்று இலங்கை வந்துள்ள லியம் பொக்ஸ் நாளை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது

பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இறுதிக்கட்டத்திலும் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரம்

anura_priyadarshana_yapa.jpg
பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் இறுதிக்கட்ட நிலையிலும் இலங்கையின் பொருளாதாரம் பலமாகவேயுள்ளதென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இலங்கை கடன் பெறும் நாடுகளில் எத்தகைய நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் எத்தகைய நிபந்தனைகளுக்கும் அரசு அடிபணியவுமில்லையென அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிரான வீண் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். நாட்டிற்குப் பொருத்தமில்லாத நிபந்தனைகளுக்கு அடிபணிந்தே அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதாக அவர் குற்றம்சாட்டுகிறார். இக் கூற்றை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது எனவும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இங்கு ஊடகவியலாளர்களுக்கு இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. இதனால் அந்நாடுகளின் வங்கிகள், பாரிய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஒரு கோடி பேர் தொழில் இழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஒரு மாதகாலத்துக்குள் 81 பிரபல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வருடத்தில் மட்டும் ஆறரை இலட்சம் பேர் தொழில்வாய்ப்பை இழந்து நிற்கின்றனர். ஜப்பானிலும் இதேநிலைமைதான். பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் வாகனங்களுக்கான கேள்வி சர்வதேச ரீதியில் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் ‘டொயாட்டா’ போன்ற நிறுவனங்கள் பெரும் நஷ்டத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழலொன்றில் இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலமாகவுள்ளது. சாத்தியமானதொரு பொருளாதாரக் கொள்கையை அரசு கடைப்பிடிப்பதால் நாட்டின் பொருளாதாரத்தை நடுநிலையில் பேணுவதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவமளித்து ஊக்குவிப்புகள் வழங்கப்படும் அதேவேளை வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த வருடத்தில் 860 மில்லியன் டொலரில் முதலீடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

அரச நிறுவனங்கள் ஒரு போதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதேவேளை அரசதுறை மற்றும் தனியார் துறை இரண்டையுமே ஒரேநிலையில் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க தூக்கத்திலிருந்து கொண்டு பேசுகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 2002ம் ஆண்டில் அவர்களது ஆட்சிக்காலத்தில் அரச சேவையைச் சீரழித்து அரச நியமனங்களை நிறுத்தி தனியார் துறையை மேம்படுத்தும் நடவடிக்கை உட்பட ரணில் விக்கிரமசிங்கவின் நவீன லிபரல் பொருளாதாரம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று நாட்டின் நிலை சீரழிந்திருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார்

omakuchi.jpgநகைச் சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார். அவருக்கு வயது எழுபத்து மூன்று.

தமிழ் திரையுலகில் ஔவையார் படத்தின் மூலம்  பதிமூன்றாவது வயதில் அறிமுகமான இவர் எழுபத்து மூன்று வயதுவரை தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை சிரிக்கவைத்தார். திரைப்படங்களில் மட்டுமல்லாது தொடர்ந்து நாடகங்களிலும் நடித்து வந்தார். சூரியன்,முதல்வன் என சில படங்களில் தலைகாட்டிய இவர்  சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினார். திருவல்லிக்கேணியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு நிதி

batticaloa.jpgகிழக்கு மாகாணத்தின் வீதிகளை அபி விருத்தி செய்வதன் பொருட்டு 1500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதி அபிவிருத்திப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 500 மில்லியன் ரூபாவும், அம்பாறை மாவட்டத் திற்கென 500 மில்லியன் ரூபாவும், திருகோணமலை மாவட்டத்திற்கென 500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதாக கிழக்கு மாகாண வீதி, கிராமிய மின்சாரம், வீடமைப்பு, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம். எஸ். உதுமா லெவ்வை தெரிவித்தார்.

நீர்ப்பாசனத் துறை அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழும் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலுமுள்ள பல்வேறு குளங்களை புனரமைப்புச் செய்வதற் காகவும் 900 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கிழக்கு மாகாண அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் முரளிதரனின் அலுவலகம் மீது தாக்குதல் : நால்வர் பலி

karuna.jpgஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அலுவலகமொன்றின் மீது இன்று அதிகாலை ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர்.

சொறிக் கல்முனை 6ஆம் கட்டையிலுள்ள இவ்வலுவலகம் ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகமாக செயல்பட்டு வந்ததாகவும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்து கொண்ட பின்பு அவரது அலுவகமாக செயல்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இவ்வலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்ட நால்வருமே அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக அக்காரியாலயத்துடன் தொடர்புடைய பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.