செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அமைச்சர்களின் பாதுகாப்பு செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் : மங்கள சமரவீர

mangala2222.jpg“யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில்,  அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்காக 50 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அதிகமான குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறைக்கப்பட வேண்டும்” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் எம்.பியுமான மங்கள சமரவீர தெரிவித்தார். இலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பிலும் இதனால் நாட்டில் ஏற்படும் பாதுகாப்பு செலவினம் குறித்தும் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ராஜகிரிய ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்ல 2800 பேருக்கு அனுமதி – 5300 ஆக அதிகரிப்பது பற்றி பேச பெளஸி சவூதி விரைவு

இலங்கையில் இருந்து இம்முறை புனித மக்காவுக்கு யாத்திரை செல்வதற்காக 2800 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்தக் கோட்டா தொகையை 5300 ஆக அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பானவராகச் செயற்படும் அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி சவூதி அரேபியா சென்றுள்ளதாக முஸ்லிம் சமய விவகார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.

ஹஜ் ஏற்பாடு தொடர்பாக அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி கடந்த வெள்ளிக்கிழமை ஹஜ் முகவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன் போது ஹஜ் யாத்திரை தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகள் கோட்டா தொகை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

இம்முறை இலங்கையில் இருந்து சுமார் 5 ஆயிரம் யாத்திரிகர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா செல்வரென எதிர்பார்ப்பதாக பணிப்பாளர் தெரிவித்தார்.  இம்முறை இலங்கையில் இருந்து செல்ல 2800 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகை போதுமானது அல்ல எனவும் இதனால் மேலும் 2500 பேருக்கு மேலதிகமாக அனுமதி பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று தபால் மூல வாக்களிப்பு

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (29) நாளையும் (30) இடம்பெற உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. தென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 31,151 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குச் சீட்டுகள் யாவும் அரச நிறுவன அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

திறைசேரி செயலாளர் இன்று பதவியேற்பு

திறைசேரி செயலாளராக நியமிக்கப்பட்ட கலாநிதி பீ.பி. ஜயசுந்தர இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். நிதி அமைச்சில் இன்று காலை நடைபெற்ற சமயக் கிரியைகளையடுத்து அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கலாநிதி ஜயசுந்தரவுக்கு திறைசேரி செயலாளருக்கான நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்வி நிர்வாக சேவையில்; நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – கல்வி அமைச்சு தகவல்

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூன்றாம் வகுப்பில் நிலவும்; 284 வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட் தம்பி தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் சேவையின் முதலாம் வகுப்பிலுள்ள அதிபர்களே இலங்கை கல்வி நிர்வாக சேவையில் மூன்றாம் வகுப்புக்கு பதவி உயர்வு பெறவுள்ளனர். இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம்; கல்வி அமைச்சில் நடாத்தப்படவுள்ளதோடு ஒக்டோபர் மாத இறுதியில் நியமனக் கடிதங்களும் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிபர் சேவையின் முதலாம் வகுப்பிலுள்ள அதிபர்கள் எழுத்துப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற விபரங்களின் அடிப்படையில் கல்வியமைச்சினால் நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளார் மேலும் குறிப்பிட்டார். 

ஈரான் புதிய குறுந்தூர ஏவுகணை பரீட்சிப்பு

ஈரான் சென்ற ஞாயிற்றுக்கிழமை புதிய ஏவுகணை ஒன்றைப் பரீட் சித்தது. இந்த ஏவுகணை குறுந்தூர எல்லைகளைச் சென்றடைந்து குறித்த இலக்குகளைத் தாக்கும் திறனுடையது. ஈரான் தொலைக்காட்சிகள் ஏவுகணை பரீட்சிக்கப்படுவதை ஒளிபரப் பின.  சர்வதேச அறிவுரைகளை ஏற்கத் தயாரெனத் தெரிவித்துள்ள ஈரான் யுரேனியம் செறிவூட்டல்களை மின்சாரத் தேவைகளுக்காகச் செய்வதாக கூறுகின்றது.

அண்மையில் ஈரான் தனது இரண்டாவது அணு உலையைப் பார்வையிட சர்வதேச அணு முகவர் அமைப்பின் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது

வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் துரிதம்; 60 ஆயிரம் பேர் இதுவரை மீட்பு – வெளிநாட்டு உதவிகளை பிலிப்பைன்ஸ் எதிர்பார்ப்பு

280909.jpgபிலிப் பைன்ஸ் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தொடர்வதாகவும் பலியானோர் தொகை 73 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை மழை ஓய்ந்ததால் வெள்ளம் குறையத் தொங்கியது. இதனால் மீட்புப் பணிகள் தடையின்றித் தொடர்ந்தன.

மீட்கப்பட்டோரில் அறுபதாயிரம் பேர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் சிறுவர்களே அதிகமாகும். ஹெலிகொப்டர்கள், தோணிகளின் உதவியுடன் வெள்ளத்தில் தத்தளித்தோர் காப்பாற்றப்பட்டனர்.

வெள்ளம் முற்றாக வடிந்த பின்னரே சேத விபரங்களின் சரியான தகவல்களை அறிய முடியுமென மீட்புப் பணியாளர்கள் கூறினர். வெள்ளத்திலிருந்து தப்பும் பொருட்டு மக்கள் வீட்டுக் கூரைகளின் மேலும் உயரமான இடங்களிலும் ஏறிக் கொண்டனர்.

ஒன்பது மணித்தியாலங்களுக்கு இடைவிடாது மழை பெய்ததால் இருபது அடி உயரத்தில் வெள்ளம் நின்றது. பிலிப்பைன்ஸின் தலைநகர் மனிலா உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. நாற்பது வருடங்களின் பின்னர் இப்பெரு வெள்ளம் பிலிப்பைன்ஸைச் சேதப்படுத்தியது.

மக்களைப் பொறுமையாக இருக்கும்படி பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கோரியுள்ளதுடன், வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று இலட்சத்து முப்பதாயிரம் பேர் வரை வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளனர்.

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் இஸ்ரேல் இராணுவத்தால் முற்றுகை

இஸ்ரேலியப் படைகளுக்கும், பலஸ்தீனர்களுக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பில் நான்கு பலஸ்தீனர்கள் காயமடைந்ததுடன் இரண்டு இஸ்ரேல் இராணுவ வீரர்களும் காயத்துக்குள்ளாகினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு ஜெரூஸத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலடியில் இச் சம்பவம் இடம் பெற்றது.

முஸ்லிம்களின் புனிதத் தலங்களுள் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேலியர்களைத் தடுத்து நிறுத்த பலஸ்தீனர்கள் முயன்றபோதே இச் சம்பவம் ஏற்பட்டது.

இக் கலகத்தை அடக்க மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கி மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இறப்பர் குண்டுகளால் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம் கைக்குண்டுகளையும் வீசியது.

இஸ்ரேல் குடியேற்றங்களை நிறுவும் பொருட்டு கிழக்கு ஜெரூஸலத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டட வேலைகளைத் தடுத்து நிறுத்தவே பலஸ்தீனர்கள் திரண்டு வந்தனர். நான்கு பலஸ்தீனர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். நிலைமைகள் சீரடையும் வரை இப்பகுதியை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

பதில் பிரதம நீதியரசராக கலாநிதி சிராணி பண்டாரநாயக்க நியமனம் – ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதிபதியான கலாநிதி சிராணி பண்டாரநாயக்க பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தையடுத்து நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலளார் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டு. கொழும்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றம்

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவையின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக பிரதம புகையிரத நிலைய அதிபர் அ. சிவநேசராசா தெரிவித்தார்.

மீனகாயா கடுகதி ரயில் மாலை 7.15 க்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும். இந்த ரயில் இரவு 8.15 க்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 க்கு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும். உதயதேவி ரயில் காலை 8.45 க்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.40 க்கு மட்டக்களப்பை சென்றடையும். இப்புகையிரதம் காலை 7.45 க்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு மாலை 4.10 க்கு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும்.