செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் மழையால் பாதிப்பு

அமெரிக்காவில் நடந்து வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முக்கிய போட்டிகள் கனமழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் இப்போட்டிகள் மழை காரணமாக நேற்று முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நாளையும், இறுதிப்போட்டி 14ஆம் தேதியும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பெண்களுக்கான அரையிறுதிப் போட்டிகளும் ஒத்திவைக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம்: அமைச்சர் சமரசிங்க இன்று ஜெனீவா பயணம்

mahinda-samarasinha.jpgஐ. நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஜெனீவா செல்லவுள்ளார்.

நாளை திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு அமைச்சர் பேசவுள்ளார்.

ஜெனீவா செல்லும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் சட்ட மா அதிபரும் செல்லவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் பணிப்பாளர் நாயகம் நவநீதம்பிள்ளை, சட்டத்துக்குப் புறம்பான படு கொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட தூதுவர் பேராசிரியர் பிலிப் அலீஸ்டன், அகதிகளுக்கான ஐ. நா. பிரதிநிதி அண்டோனியோ குட்டேரஸ் ஆகியோரையும் அமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இவர்களுடனான சந்திப்பின்போது ஊடகவியலாளர் திஸநாயகம் தொடர்பாக கேள்விகள் எழும்பட்சத்தில் அமைச்சருடன் செல்லும் சட்ட மா அதிபர் விளக்கமளிப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார மேம்பாடு – ஜப்பான் ரூ. 36 மில். ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீளக் குடியமர்ந்துள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தின் கீழ் ஜப்பானிய அரசாங்கம் 36 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 40 விவசாயக் கிணறுகள் அமை க்கப்படவுள்ளதுடன், 40 தண்ணீர் பம்பிகளும் வழங்கப்படவிருக்கின்றன. அதேநேரம் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 8 கிராம சேவகர் பிரிவில் வாழும் மக்களை வாழ்வாதார ரீதியாக வலுப்படுத்த வென செயலமர்வுகளும் நடத்தப்படவிருக்கின்றன.

சனல் 4 – பிரிட்டன் ஊடக முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை முறையிடும்

mahinda-samarasinha.jpgஇலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்திலான வீடியோ காட்சியை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக் காட்சி நிறுவனத்திற்கு எதிராக பிரிட்டனிலுள்ள ஊடக முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை முறைப்பாடு செய்யவுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இனிமேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் மேற்படி தொலைக்கட்சி நிறுவனம் மட்டுமல்ல ஏனைய ஊடக நிறுவனங்களும் செயற்படக் கூடாது என்பதற்காக இலங்கை இந்த விடயத்தில் மிக கவனமாக செயற்படுகிறது என்றும் தெரிவித்தார்.

ஐ. நா. பாதுகாபபுசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி வீடியோ காட்சி பொய்யானது, சோடிக்கப்பட்ட கட்டுக்கதை என்பதை உறுதிபட நிரூபித்துவிட்டோம்.  இதன் அறிக்கை நேற்று ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கி மூன், நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹேய்ம், சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் என்பவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக சில தீய சக்திகள் இயங்கி வருகின்றன என்பதை உணர முடிகிறது – திட்டமிட்டு செயற்படும் இவர்கள் யார் என்பது பற்றி எமக்குத் தெரியும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறோம். மேற்படி வீடியோ காட்சி போன்று வவுனியா நிவாரணக் கிராமங்களைப் பற்றிய வீடியோ காட்சியொன்றையும் சனல் 4 ஒளிபரப்பியது. இதுபற்றி உங்களுக்குத் தெரியுமா என்று அமைச்சரிடம் வினவியபோது.

தெரியும், அந்த வீடியோ காட்சியை ஒளிபரப்புவதற்கு முன்னதாக சனல் 4 எம்முடன் தொடர்புகொண்டு வினவியதுடன் எமது அபிப்பிராயத்தையும் சேர்த்து ஒளிபரப்பினார்கள். அவர்களுக்கு இலங்கை தொடர்பாக செய்திகளோ, வீடியோ காட்சிகளோ கிடைக்கும் பட்சத்தில் எம்மிடம் கலந்து பேசவேண்டும். அதனை விடுத்து எழுந்தமானத்தில் ஒளிபரப்பக்கூடாது. இனிமேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்கப்படமாட்டாது என்று கூறினார்.

இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாக இது அமைந்துள்ளது. செனல் 4 நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் சட்டநடவடிக்கை எடுப்பது பற்றியும் இலங்கை ஆராய்ந்து வருகிறது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஒத்துழையாமை போராட்டம் உக்கிரம்: தோட்டங்களில் பணிகள் ஸ்தம்பிதம்

sri-lanka-upcountry.jpgமுதலாளிமார் சம்மேளனத்துடனான ஏழாவது சுற்றுப் பேச்சும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

பதினொரு தினங்களாக முன்னெடுக்கப்படும் இப்போராட்டம் நேற்று முதல் மாற்று வடிவம் பெற ஆரம்பித்துள்ளதாக தொழிற் சங்கங்கள் தெரிவித்தன. இதனால் தோட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

கறுப்புப் பட்டி அணிந்து தொழிலாளர்கள் தங்களது பணிகளில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதேவேளை, தங்களது 500 ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம் வெற்றி பெறவேண்டுமெனக் கோரி இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டதாக தோட்டங்களிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.

இதற்கிடையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள் நேற்று மாலை தங்களுக்குள் சந்தித்துப் பேசின.

கொழும்பில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, முதலாளிமார் சம்மேளனம் தங்களது நிலைப்பாட்டில் விடாப்பிடியக இருப்பதனால், அவர்களுடனான பேச்சைத் தவிர்த்து போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக இ. தொ. கா. தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் கூறினார்.

வெளிநாடுகளில் தங்கியுள்ள த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்: அரசாங்கம்

120909tnalogo.jpgவெளி நாடுகளில் தங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்க முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களது விடுமுறை தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலேசித்து விரைவில் தீர்iமானம் எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவத்துள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக லக்பிம பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
 
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
நீண்ட காலமாக விடுமுறை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அங்கத்துவத்தை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு செயலர் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் விஜயம்

gotabaya1.jpgபாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் முல்லைத்தீவு மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகளுக்கு விஜயம் செய்தனர். நேற்று முன்தினம் இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த இவர்களை முல்லைத்தீவு கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த வரவேற்றார்.

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தில் இந்த வரவேற்பு இடம்பெற்றது. இதன்பின்பு, அங்கு படைவீரர்களால் மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அங்கிருந்து புதுக்குடியிருப்பிலுள்ள விஜபாகு படைப்பிரிவின் தலைமையகம் சென்றனர். அங்கும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர்; படைவீரர்களின் அர்ப்பணிப்பும், தியாகங்களையும் பாராட்டிப் பேசினார்.

வாகரை மகாவித்தியாலயம் 300 மில்லியன் ரூபா செலவில் புனர்நிர்மாணம் – அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தகவல்

susil_premajayant000.jpgபயங் கரவாத நடவடிக்கைகள் மற்றும் சுனாமி அனர்த்தம் என்பவற்றால் பாதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு,  வாகரை மகாவித்தியாலயம் 300 மில்லியன் ரூபா செலவில் முழு வசதிகளையும் கொண்ட பாடசாலையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் மேற்கொண்டு வரும் கிழக்கின் உதயம்  திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள இப்பாடசாலை இன்னும் இரு வாரங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டக்களப்பு வாழ் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

வாகரைப் பிரதேசத்தில் க.பொ.த. உயர்தரம் படிப்பதற்கான வசதிகள் இப்பாடசாலையில் மட்டுமே காணப்படுகிறது. யுத்தம் மற்றும் சுனாமி என்பவை காரணமாக இப்பாடசாலை மிகவும் சேதமுற்றிருந்ததால் இப்பிரதேச மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே மேற்கொண்டு வந்தனர். எனினும் தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள இப்பாடசாலை இப்பிரதேசத்திலுள்ள ஏனைய பாடசாலைகளுக்கு முன்மாதிரி மிக்க பாடசாலையாக விளங்கும்.

இப்பாடசாலையைப் புனரமைக்கும் பணிகளுக்கு உதவிய ஐரோப்பிய யூனியன் உட்பட சர்வதேச நிறுவனங்களுக்கு அரசாங்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது என்றும் அமைச்சர் மேலும் கூறினார். 

கண்ணிகளை துரிதமாக அகற்ற மேலும் 5 நவீன இயந்திரங்கள் – குரேஷியாவிலிருந்து இறக்குமதி; வடக்கு ஆளுநர் பொறுப்பேற்பு

மக்களை மிக விரைவாக மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப் படுத்தும் நோக்கில் மேலும் ஐந்து தன்னியக்க இயந்திரங்கள் விமானம் மூலம் இலங்கைக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்ட ஐந்து இயந்திரங்களையும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி பொறுப் பேற்றார். மணிக்கு 2700 சதுர மீற்றர் நிலப்பரப்பில் மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் ஆற்றலைக் கொண்ட மேற்படி இயந்திரங்கள் ஒவ்வொன்றும் தலா ஐந்து தொன் எடை கொண்டவையென்றும் 270 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்தவை எனவும் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.

குரேஷியாவிலுள்ள டொன்கின் என்ற நிறுவனத்தில் கொள் முதல் செய்யப்பட்டுள்ளதுடன் எம்.வி-4 ரக இயந்திரங்கள் என்பதாலும், மிகவும் கடினமான இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாலும் எவ் வகையான மிதிவெடி, கண்டிவெடிகளாக இருப்பினும் தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய பசில் ராஜபக்ஷ எம்.பியின் வழிகாட்டலுடன் மிகவும் துரிதமாக மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக மிதிவெடிகள், கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4ம் திகதியும் ஸ்லோவேக்கியா நாட்டிலிருந்து பொய்கா ரக இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.

அவற்றை விட இவை சிறியவை என்பதால் மக்கள் குடியிருப்புகள், ஏரிக் கரைகள், கிணற்றடி, வயற்காணிகள் போன்ற பகுதிகளில் மிதிவெடிகளை மிக எளிதாக அகற்ற முடியும் என்றும் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். இந்த இயந்திரங்களுக்குரிய உதிரிப்பாகங்களும் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிலத்தில் சுமார் 30 சென்றி மீற்றர் ஆழம் வரை ஊடுருவி மிதிவெடிகளை அகற்றும் ஆற்றலும் இந்த இயந்திரத்துக்குள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

யூவான் அல்மெய்தா காலமானார்

130909.jpgகியூப புரட்சியின் முக்கியமான ஆரம்பகட்டத் தலைவர்களில் ஒருவரான யூவான் அல்மெய்தா இதய நோயால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 82.

கியூபாவின் துணை அதிபரான யூவான் அல்மெய்தா, ஃபிடல் மற்றும் ராவூல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியின் ஆரம்பகாலங்களின் போது போராடியிருந்தார்.

இந்த போராட்டத்தின் முடிவாக ஃபல்கேன்சியோ பாட்டிஸ்டாவின் அரசாங்கம் 1959 ஆம் ஆண்டு ஆட்சியில் தூக்கி எறியப்பட்டது.

ஹவானாவை சேர்ந்த கட்டிட தொழிலாளியான யூவன் அல்மெய்தா, புரட்சியாளர்கள் தலைமை பீடத்தில் இருந்த ஒரே கறுப்பினத்தவர் ஆவார்