செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கமு/ பெரியநீலாவணை விஷ்ணுவில் 4 ஆசிரியர், 29 மாணவர் திடீர் மயக்கம்

medicine-01.jpgகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய த்தின் 4 ஆசிரியர்கள் உட்பட 29 மாணவர்கள் திடீர் மயக்கம், மற்றும் உடல் அழற்சி காரணமாக மருதமுனை, கல்முனை ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இதனால் பெற்றோர் பாடசாலைக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் பதற்றத்துடன் ஓடித்திரிந்தனர்.

பாடசாலைக்கருகேயுள்ள தோட்டத்தில் காய்கறிகளுக்கு விசிறிய கிருமிநாசினி காற்றோடு கலந்து பாடசாலை மேல்மாடியில் நின்றுகொண்டிருந்த மாணவர்கள் மேல் பட்டதாலேயே இந்த நிலை ஏற்பட்டது என ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

மயக்கம், உடல் எரிவு, அழற்சி காரணமாக மருதமுனை வைத்தியசாலையில் 4 ஆசிரியர்களும் 23 மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் அனைவரும் வீடு திரும்பினர் என மருதமுனை ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது. மேலும், கல்முனை பெரியாஸ்பத்திரியில் இரண்டு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற சில வினாடிகளில் மாணவர்களின் பெற்றோர் ஆஸ்பத்திரியை நோக்கி அழுதவண்ணம் படையெடுத்தனர். சிலர் எங்கே எமது பிள்ளைகளை கொண்டு சென்றார்கள் எனத் தெரியாமல் கல்முனை அஷ்ரஃப் ஆஸ்பத்திரிக்கும் சென்று அழுது புலம்பினர்.

கல்முனை பெரியாஸ்பத்திரியிலுள்ள இரண்டு மாணவர்களைத் தவிர ஏனையோர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். மாணவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதும், வைத்திய சாலை பொறுப்பதிகாரி டாக்டர் ஏ. ஆர். எம். ஹாரிஸ், டாக்டர் மெளலானா, டாக்டர் உவைசுல் பாரி ஆகியோர் கொண்ட குழுவினர், உடனடி சிகிச்சைகளை வழங்கினர்.

உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையுடன் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவர் அனுமதி

eastern-university.jpgவடக்கு, கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறுவதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம், சிங்கள மாணவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு கல்வியைத் தொடர்ந்த அனைத்து சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இக்கொலைச் சம்பவத்தையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்வதற்கு அங்குள்ள முஸ்லிம், சிங்கள மாணவர்களும் தமது ஆட்சேபனையை தெரிவித்திருந்தனர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற முஸ்லிம், சிங்கள மாணவர்களும் ஏனைய பகுதி பல்கலைக்கழகங்களுக்கு கல்விக்காக இடமாற்றப்பட்டனர்.

பிந்தியதாக எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அனுமதிப்பது குறித்து, உயர்நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்

குஜராத்தில் திடீரென பரவிய ஹெபடைடிஸ்- பி

aep-hl-hepatitis.jpgஇந்தியா வின் குஜராத் மாநிலத்தில் மொடாஸா மாவட்டத்தில் ஹெபடைடிஸ் – பி ரக வைரஸ் திடீரென பரவியதால் பலர் பாதிக்கப்பட்டனர். அது, அஹமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது. அந்த வைரஸ் காரணமாக இதுவரை, 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மருத்துவமனைகளில் மருந்துகள் செலுத்தப் பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் எனப்படும் ஊசிக்குழல்களை மீண்டும் பயன்படுத்தியதே, ஹெபடைடிஸ் – பி வேகமாகப் பரவக் காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த ஊசிக்குழல்களை, தனியார் மருத்துவமனைகளில் இருந்து வாங்கி, மொத்தமாக விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதுபோன்ற ஊசிகளைப் பயன்படுத்திய தனியார் மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் நடத்திய சோதனையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான ஊசிக்குழல்கள் கைப்பற்றப்பட்டன.

அரிசிக்கு அதிக விலை அறவிட்டால் நடவடிக்கை வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு எச்சரிக்கை

bandula_gunawadana.jpgகட்டுப் பாட்டு விலையை விட அதிகமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, சம்பா வகை அரிசியை 70 ரூபாவுக்கு அதிகமாகவும், நாட்டு அரிசியை 65 ரூபாவுக்கு அதிகமாகவும், விற்பனை செய்யும் சில்லறை வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரிசியின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான இத்தீர்மானம், கடந்த செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுவின் வாராந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதை அடுத்து அங்கு ஒரு இலட்சத்து 31,176 ஏக்கர் புதிய வயல் நிலங்களில் நெற் செய்கை மேற்பட்டுள்ளதால், பெருமளவான நெல் அறுவடை செய்யப்படுமென எதிர்பார்ப்பதாக, அமைச்சர் தெரிவித்தார்.

திருகோணமலையில் 29,008 ஏக்கர் புதிய வயல் நிலத்திலும் மட்டக்களப்பில் 63,365 ஏக்கர் நிலத்திலும் அவ்வாறே அம்பாறையில் 38,803 ஏக்கர் நிலத்திலும் நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அறுவடை செய்யப்படும் நெல்லில் குறைந்தபட்சம் 60 வீதமான, 4 இலட்சத்து 80,260 மெற்றிக் தொன் நெல்லை சந்தைக்கு விற்பனைக்காக விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து 59 சிவிலியன்கள் கடல்வழியாக நேற்று வருகை

police_spokperson.jpgமுல்லைத் தீவு பழைய மாத்தலன் பகுதியிலிருந்து 59 பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை கடல் மார்க்கமாக வந்து கடற் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களைக் கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இவர்கள் 59 பேரும் 5 டிங்கி படகுகள் மூலம் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்துள்ளதாகவும் இவர்களில் 11 சிறுவர்களும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு நேற்று முன்தினம் 120 பேர் வருகைதந்துள்ளனர். இவர்களில் 47 பெண்களும், 23 சிறுவர்களும், 25 சிறுமிகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இவர்கள் 120 பேரும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலிருந்து ஓமந்தைக்கு வந்துசேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச பொருளாதார வீழ்ச்சியால் வறிய மக்கள் மேலும் அவலத்தில்

economics.jpgசர்வதேச பொருளாதார பின்னடைவால் செல்வந்த நாடுகள் தமது வரவு செலவுத்திட்டத்தில் உதவி வழங்கும் தொகையை பல பில்லியன் டொலர்களால் குறைத்து ஒதுக்கீடு செய்யவுள்ள நிலையில், உலகின் வறிய மக்கள் மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 50 இற்கும் அதிகமான குழுக்கள் உதவி வழங்கும் நடவடிக்கை கூட்டணியில் உள்ளன. இவற்றில் 175 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு வருடாந்தம் 9 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், தனிப்பட்டவர்கள், வர்த்தக நிறுவனங்கள், மன்றங்கள் என்பனவற்றிடமிருந்து இந்த வருடம் 1 பில்லியன் டொலர் குறைவாகவே கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலைமை (பொருளாதார வீழ்ச்சி) 2010 இற்கும் தொடருமானால் உலகின் வறிய மக்கள் வாழும் பகுதிகளுக்கான உதவிகள் கணிசமான அளவு குறைந்துவிடுமென எதிர்பார்க்கலாம் என்று செயற்பாட்டுக்குழு தலைவர் சாவ் வேர்த்திங் ரன் ராய்ட்டருக்கு கூறியுள்ளார். பிரிட்டனில் பவுண்ஸின் பெறுமதி வீழ்ச்சியால் அங்குள்ள தொண்டர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சிம்பாப்வே, இலங்கை, சூடான் போன்ற நாடுகளில் நெருக்கடியில் மக்கள் சிக்கியிருக்கும் நிலையில் பல சமூகங்களுக்கு உதவித் தேவைகள் அதிகரித்துள்ள தருணத்தில் இந்த உதவி முடக்கம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் 322 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வருமானம் அடுத்த வருடம் அரைவாசியாக வீழ்ச்சி கண்டுவிடுமென தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசிடம் எந்தத் தீர்வுத் திட்டமும் இல்லை -எஸ்.பி. திசாநாயக்க

sbdisanayakka.jpgதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மகிந்த ராஜபக்ஷ அரசிடம் எந்தத் தீர்வுத் திட்டமும் இல்லையெனத் தெரிவித்துள்ள ஐ.தே.க. வின் தேசிய அமைப்பாளரான எஸ்.பி. திசாநாயக்க, இனவாதம், பயங்கரவாதமென எத்தனை நாளைக்கு இவர்கள் கூறமுடியுமெனவும் கேள்வியெழுப்பினார். பலகொல்ல, கெங்கல்ல, பள்ளேகல பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில், மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய எஸ்.பி. திசாநாயக்க மேலும் தனது உரையில்;

“இந்த அரசாங்கம் இன்னும் சில காலத்திற்கு மட்டுமே. இவர்களிடம் எந்த அபிவிருத்தி திட்டமும் இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, புதிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எதுவும் இல்லை. விவசாயத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய கைத்தொழில்கள் எவையும் உருவாக்கப்படவில்லை. சம்பள உயர்வு இல்லை. வாழ்க்கைச் செலவு கூடிச் செல்கிறது. இனவாதம், பயங்கரவாதம் என்று எத்தனை நாளைக்கு இவர்கள் கூறமுடியும்? சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசிடம் உரிய தீர்வு கிடைக்காது. இந்த அரசு மீது சிறுபான்மையினர் நம்பிக்கை இழந்துள்ளனர்.

மலையகத்தில் தொண்டமான், சந்திரசேகரன், ஐ.ம.சு.மு. ஆகிய பிரபல அரசியல்வாதிகளையும் கட்சியினையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். அந்த மக்கள் ஐ.தே.க.வுக்கே வாக்களித்தனர். இந்த நன்றியை ஐ.தே.கட்சியோ, அதன் முதலமைச்சர் வேட்பாளராக அதிக தெரிவு வாக்குகளை பெற்ற நானோ மறக்கமாட்டோம். உங்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த நாட்டினை விடுதலைசெய்து மீண்டும் சுபீட்சமாக சகலரும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையை கொண்டு நடத்தக்கூடிய, சுமைகள் குறைந்த ஒரு நாடாக இலங்கையை உருவாக்குவோம்.

இந்த அரசாங்கத்தினை மாற்றி புதிய அரசாங்கத்தினை, ஐ.தே.க.யினை ஆட்சிபீடமேற்றும் முயற்சியில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றார்.

பிரான்ஸ் பெண் மீது காலியில் பாலியல் வல்லுறவு

2222.jpgஉல்லாசப் பயணம் மேற்கொண்டு காலிநகரில் தங்கியிருந்த பிரான்ஸைச்சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரைக் காலி பொலிஸார் தேடிவருகின்றனர். காலி நகரில் வீடு ஒன்றில் வாடகைக்கு அமர்ந்திருக்கும் இப்பெண் உல்லாசமாக வெளியே போய்வருபவர் என்றும் அந்த வீட்டுக்கு அருகில் உள்ள ஹோட்டலில் உணவை அருந்திவந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புதன்கிழமை இந்த வீட்டுக்கு வந்த ஒருவர் உட்புகுந்து ஆயுதத்தைக் காண்பித்து சத்தமிடக்கூடாது என்று கூறி அப்பெண்மீது குற்றம் புரிந்ததாக காலிப் பொலிஸ் நிலையத்தில் அவர் முறையிட்டுள்ளார். அத்துடன் வந்த நபர் அப்பெண்ணிடமிருந்து 1000 யூரோ நாணயத்தாள்களையும் எடுத்துசென்றுள்ளார். இப்பெண் சில மணி நேரங்களால் வீட்டுக்கு வெளியே வந்து அயலவர்களுக்கு நடந்த சம்பவத்தைக்கூறி காலி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார். தற்போது இப்பெண் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் பசுமை நகராக்கத்தை முன்னெடுக்க சுகாதார அமைச்சு திட்டம்

colombo-sri-lanka.jpgஉலக சுகாதார நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள “பசுமையான நகராக்க திட்டத்தை’ நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் படி எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

மேலும் உலகின் நகரங்கள் அல்லாத பகுதிகளில் சுகாதாரத்துக்கு கேடான வகையில் நிர்மாணிக்கப்படும் கட்டிடத் தொகுதிகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கவனம் செலுத்திவருகிறது.

இலங்கையில் இவ்வாறான கட்டிட நிர்மாணங்களுக்கு தடைகள் இல்லாத நிலைமை காணப்படுவதோடு இதற்கெதிராக மிகக் குறைவான தண்டனைகள் வழங்கப்படுவதால் இது குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லையென சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறு நிர்மாணிக்கப்படும் அலுவலகக் கட்டிடங்களில் போதிய காற்றோட்ட வசதிகளோ,சூரிய வெளிச்சமோ கிடைப்பதில்லை. அத்துடன் அலுவலக ஊழியர்கள் செயற்கையான வெளிச்சம் மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகளில் பணியாற்ற நிர்பந்திக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமைகளால் நீரிழிவு, இருதயநோய், டெங்கு, சிக்குன்குன்யா போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். நகர மற்றும் புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து பசுமை கருத்திட்டத்தை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போலி ஆவணங்களை தயாரித்து வாகனங்களை விற்பனை செய்து வந்த மூவர் பொலிஸாரால் கைது

police-arrest.jpgவாடகைக் கென அமர்த்தப்பட்டு பதுளை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட வாகனங்கள் சிலவற்றிற்கு போலியான உரிமைப்பத்திரங்களை தயாரித்து அவ்வாகனங்களை விற்பனை செய்துவந்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாரஹேன்பிட்டியவைச் சேர்ந்த உபுல் விஜயரட்ண, வஜிர கிசாந்த, எஸ்.லியனகே ஆகியோரையே பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.

எல்லைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.பண்டார தலைமையிலான குழுவினர் மேற்கண்ட மூவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து மேற்கொள்ளப்பட்ட புலன்விசாரணைகளின் போது திடுக்கிடும் பல விடயங்கள் தெரியவந்துள்ளன.

கொழும்புப் பகுதியிலிருந்து பதுளை மாவட்டத்திற்கு கொண்டுவரப்படும் வாகனங்களுக்கு போலி உரிமைப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பதும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவ்வகையில் விற்பனை செய்யப்பட்ட நான்கு வாகனங்களையும் போலி உரிமைப்பத்திரம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கணினி இயந்திரத் தொகுதியொன்றையும் கையடக்கத் தொலைபேசிகள் நான்கினையும் மற்றும் போலி உரிமைப்பத்திரங்கள் தொடர்பான பெருமளவிலான ஆவணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் இளைஞர், யுவதிகள் பலரை தொழில் வாய்ப்புகருதி ஜப்பான் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாக்களைப் பெற்று மோசடி செய்தவர்களென்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக ஊவா மாகாண பிரதி பொலிஸ் அதிபர் எச்.என்.பி.அம்பன்வெல கூறினார்.