செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட கடற்படை சிப்பாய், பெண் கான்ஸ்டபிள் கைது

பொது இடத்தில் மிகவும் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் ஒரு கடற்படை சிப்பாயும், ஒரு பெண் கான்ஸ்டபிளும் மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அனுராதபுரம் நீதிமன்ற மேலதிக நீதிவான் சிவன்த மங்சநாயக்க முன்னிலையில் இவ்விரு சந்தேக நபர்களையும் ஆஜர் செய்த பொலிஸார் மதவாச்சி நகர மத்தியில் பொது மக்களுக்கு அருவருப்பூட்டும் விதத்தில் இவ்விருவரும் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகத் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நீதிவான் அவ்விருவரையும் தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு அனுமதியளித்தார். புனாவை கடற்கரை முகாமைச் சேர்ந்த சமில் இந்திக்க ரணதுங்க என்ற சிப்பாயும் மதவாச்சி பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் பணியாற்றும் பி.நில்மினி என்ற பொலிஸ் கான்ஸ்டபிளுமே பிணையில் விடுவிக்கப்பட்டவர்களாவர்.

யுத்தத்தில் முனைப்புக்காட்டுமளவுக்கு அரசு அரசியல் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை -லியம் பொக்ஸிடம் ஹக்கீம் தெரிவிப்பு

rauff_hakeem.jpgயுத்தத்தில் முனைப்புக்காட்டுமளவுக்கு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் அக்கறை செலுத்தவில்லையென பிரிட்டிஷ் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸிடம் சுட்டிக்காட்டியிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இதன் காரணமாக சிறுபான்மைச் சமூகங்கள் அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் அழைப்பின் மீது இங்கு வந்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸ், நேற்று முன்தினம் மாலை ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவைச் சந்தித்தவேளையிலேயே ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

ரவூப் ஹக்கீமுடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சியின் தவிசாளரும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவருமான பஷீர் சேகுதாவூத், அரசியல் பீட உறுப்பினர்களான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தாம் இந்த விஜயத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்த லியம் பொக்ஸ், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் குழுவிடம் கேட்டறிந்து கொண்டார். நாட்டின் தற்போதைய அரசியல் கள நிலைமைகளை லியம் பொக்ஸிடம் விளக்கிக்கூறியதாக தெரிவித்த ரவூப் ஹக்கீம், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் இந்த அரசினால் கவனத்தில்கொள்ளப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியதாகவும் கூறினார்.

அரசாங்கம் யுத்தத்தின் மீதே கூடுதல் முனைப்புக்காட்டுவதாகவும் தென்னிலங்கையில் யுத்தவெற்றியை காட்டி பெரும்பான்மை சமூகத்தை தவறானபாதையில் இட்டுச்செல்ல முனைவதாகவும் குறிப்பிட்ட அவர், அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதில் எந்தவிதமான அக்கறையையும் காட்டமுற்படவில்லையெனவும் அரசுக்கு அரசியல் தீர்வில் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் உட்பட சிறுபான்மைச் சமூகங்கள் அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் ஹக்கீம் லியம் பொக்ஸிடம் எடுத்துக்கூறியுள்ளார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தாமல் மீளக் குடியமர்த்துவதில் அரசு கவனம் செலுத்துவதாகவும் இதன் பின்விளைவுகள் குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொண்டிருப்பதாகவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதாகவும் இதற்கு உரிய தீர்வைக் காண்பதில் அரசு கவனம் செலுத்தத் தவறிவருவதாகவும் ரவூப் ஹக்கீம் லியம் பொக்ஸிடம் எடுத்துக் கூறியுள்ளார். இச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

குவைத்தில் காலமான கனகநாயகத்தின் உறவினர்களை தொடர்புகொள்ள கோரிக்கை

வெளி விவகார அமைச்சு அறிவிப்பு குவைத்தில் காலமான இன்னாசிமுத்து சாமித்தம்பி கனகநாயகம் என்பவரின் உறவினர்களை தம்முடன் தொடர்புகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.  இன்னாசிமுத்து சாமித்தம்பி கனகநாயகம் என்பவர் குவைத் நகரில் இறந்துள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இவரின் கடவுச்சீட்டு இலக்கம் M 123850 (NEW) ICM 035568ஆகும்.

இறந்தவரின் வாரிசுகளைப் பற்றியோ அல்லது இறந்தவர் பற்றிய தகவல்களைக் கொடுக்க முடிந்தவர்களோ இல. 14 சேர் பாரொன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு01 இல் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் “கொன்சுலர்’ பிரிவுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். தொலைபேசி இலக்கம் 0112437635, தொலைநகல் 0112473899.

தமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாது : மலேசிய எதிர்க்கட்சி தலைவர்

karpal.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சிறிலங்கா அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது என்று மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் பினாங்கு மாநிலத்தில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையைக் கண்டிக்காத உலக நாடுகளைக் குறிப்பாக இந்தியாவை கர்ப்பால் கடுமையாக சாடினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் நடைபெறும் படுகொலையை தடுக்காத இந்த இருவரும் உலகத் தமிழர்களிடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்று வரும் இன வெறியாட்டத்தைக் கண்டிக்கக் கூடத் தயங்கும் இந்தியாவை நினைத்து வேதனையடைவதாக அவர் குறிப்பிட்டார்.
 
மேலும் சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்து விடலாம் என்று கனவு காணும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். பிரபாகரனை உங்களால் அசைக்கக்கூட  முடியாது. பிரபாகரன் ஓடிவிட மாட்டார். தமிழீழழ் மலரும் வரை அவர் போராடுவார். தமிழீழம் மலர்ந்தே தீரும்.
 
பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும் நாளைய சரித்திரம் போராட்டவாதி எனவும் தேசியவாதி எனவும் போற்றுமே தவிர தீவிரவாதி என்று ஒரு போதும் கூறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
நண்பர்களே, இன்று ஈழத் தமிழர் இன்னல் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம், அள்ளி கொடுக்கா விட்டாலும் கிள்ளியாவது கொடுப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மகா நாயக்க தேரர்களுடன் ஆனந்த சங்கரி சந்திப்பு – புத்தரின் புனித தந்தத்திற்கும் தரிசனம்

anada_sangari.jpgதமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்த சங்கரி கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் தற்போது பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள புத்த பெருமானின் புனித தந்தத்தை நேற்று (13) காலை தரிசித்ததுடன் கண்டியில் உள்ள அஸ்கிரிய மற்றும் மல்வத்த அதி வணக்கத்திற்குரிய மகா தேரர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

தற்போது அனைத்து வகையிலும் தமது அதிகாரத்தையும் ஆட்சியையும் பறிகொடுத்து தொடர்ச்சியான தோல்விகளை அனுபவித்து வரும் பயங்கரவாத புலிகளின் தலைவர் பிரபாகரன் மத வழிபாட்டுத் தலங்களையும் அதில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களையும் இலக்கு வைத்து மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சர்வதேச அரங்கில் இதனை தெளிவுபடுத்த வேண்டியது எமது அனைவருடைய பொறுப்பாகவுமாக உள்ளது.

தன் வசம் வைத்திருக்கும் அப்பாவி தமிழ் பொது மக்களை உடன் அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பும்படியும் மேலும் அது போன்று பயங்கரவாத குழுத் தலைவர் பிரபாகரனையும் ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து விட வேண்டுமெனவும் நான் பகிரங் கமாக தெரிவிக்கின்றேன் எனவும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் சங்கைக் குரிய உடுகம ஸ்ரீ புத்த ரக்கித்தக்கியை சந்தித்துப் பேசும் போது ஆனந்த சங்கரி சுட்டிக்காட்டினார்.

‘வணங்கா மண்’ கப்பல் – உலகமே கைவிட்ட எம் உறவுகளின் உயிர் காப்பதற்கான தாயகம் நோக்கி பயணமாகும்

vanangkaa-mann.jpgஈழத் தமிழ் உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துகளுடன் ‘வணங்கா மண்’ என்னும் கப்பல் தாயகம் நோக்கிய பயணத்தை தொடங்கவுள்ளதாக பிரித்தானியா வாழ் புலம்பெயர்ந்த உறவுகளால் உருவாக்கப்பட்டுள்ள ‘வணங்கா மண்’ ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது  என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. 

உலகமே கைவிட்ட எம் உறவுகளின் உயிர் காப்பதற்கான தாயகம் நோக்கிய பயணம் என இந்நடவடிக்கையை சிறப்பித்துக்கூறும் ‘வணங்கா மண்’ ஒருங்கிணைப்புக் குழு மேலும் தெரிவித்துள்ளதாவது. சிங்களப் பேரினவாத அரசால் மேற்கொள்ளப்படுகின்ற தமிழின சுத்திகரிப்பு நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது. இதற்கு ஜக்கிய நாடுகள் சபை முதல் உலக நாடுகள் அனைத்துமே எமது மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கின்றது.

இந்நிலையில் எமது உறவுகளுக்காக பிரித்தானிய தமிழர்களால் ‘வணங்கா மண்’ நடவடிக்கை பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. ஒருபுறம் குண்டு மழையில் சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டினியால் சாவு கொள்ள விடுவோமா?  வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம்பெயர்ந்து வாழும் நாம் எமது இனம் அழிய விடுவோமா?

அரசுகள் கைவிட்டால் என்ன?  மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து எமது துயரை சொல்வோம். அவர்கள் ஆதரவை பெற்றுக்கொள்வோம்.  எம் உறவுகளை காத்திடுவோம். தாயகம் நோக்கிய பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணைவோம்.  என்று வேண்டி நிற்கிறது ‘வணங்கா மண்’ ஒருங்கிணைப்புக் குழு  என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. 

போர்நிறுத்த உடன்படிக்கையை நியாயப்படுத்துகிறார் ரணில்

ranil.jpgபோர் நிறுத்த உடன்படிக்கையின் மூலமாக வடக்கையும் கிழக்கையும் பிரபாகரனுக்கு தாரைவார்த்துக் கொடுத்திருந்தால் 2005 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக நான்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி இருப்பேன் எனத் தெரிவித்திருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அன்று போர்நிறுத்த உடன்படிக்கையினூடாக நாட்டின் இறைமையை அரசாங்கத்தால் பாதுகாக்க முடிந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பிரபாகரனை தனிநாட்டுக்கோரிக்கையிலிருந்து கீழிறங்கச் செய்ய முடிந்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கெஸ்பாவையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்கிரமசிங்க கூறியதாவது;

நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் பொறுப்பு எமது படைத்தரப்பினருக்கு மட்டுமே உரித்தானது என்பதை அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் மூலம் ஏற்றுக் கொண்டார். அதனூடாக வடக்கு, கிழக்கு கடற் பிரதேசத்தையும் முழு நாட்டினதும் அதிகாரத்தை எமது அரசாங்கத்தால் பாதுகாத்து உறுதி செய்ய முடிந்தது.

போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் மூலம் ஒருநாடு ஒரு அரசாங்கம் என்பதை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டு அன்று முதல் தனிநாடு என்ற கோட்பாடு கைவிடப்பட்டது.

விடுதலைப்புலிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையானது உலகின் ஏனையநாடுகள் தீவிரவாத அமைப்புகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவே காணமுடிகிறது. உலகின் ஏனைய நாடுகள் தீவிரவாத அமைப்புகளுடன் செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் அரசுகளும்தீவிரவாத அமைப்புகளும் தத்தமது பிரதேசங்களை தற்காலிகமாக வேறுபடுத்திக் கொண்டன. இங்கு அவ்வாறு நடக்கவில்லை, முழு ஆட்புல ஒருமைப்பாட்டையும் அரசிடமே உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவுக் கடல் எல்லையின் உரிமை தமது அமைப்பிடமே இருப்பதாகக் கூறி வந்த விடுதலைப்புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் அந்த உரிமை அரசுக்கே உரியது என்பதை ஏற்றுக்கொண்டனர்.

வடக்கு, கிழக்கு கடல் எல்லையின் உரிமையை போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு நான் தாரை வார்த்துக் கொடுத்ததாகக் கூறி இன்றைய அரசிலுள்ளவர்களும் சில தீய சக்திகளும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றனர். அது உண்மையாக இருந்தால் விடுதலைப்புலிகள் 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களை வாக்களிக்க விட்டு என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் புலிகள் அதனைச் செய்யவில்லையே. என்னை எப்படியும் தோற்கடிக்கவேண்டு மென்பதற்காகவே அந்த தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுத்து நிறுத்தி என்னைத் தோற்கடித்து மகிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்தனர்.

அன்று நாம் போர்நிறுத்த உடன்படிக்கையை செய்ததன் காரணமாகவே நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடிந்தது எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கை தவறானது-மஹிந்த சமரசிங்க

mahinda-samara-sinha.jpgஇலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் நேற்று விடுக்கப்பட்ட அறிக்கை தவறானது என இலங்கை மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது..

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் அண்மைக்காலமாக 2800 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் மற்றும் 7000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை சுட்டிக்காட்டி இருந்தார். இந்த கூற்று தவறானது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் எமது நாட்டு தூதுவருடன் கலந்தாலோசித்து இருக்கலாம்.  கடந்த மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற கூட்டத்தொடருக்கு நான் கலந்து கொண்ட சென்ற வேளையில் ஐ. நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களை சந்தித்து இலங்கை நிலவரம் தொடர்பில் விளக்கமளித்தேன் அப்பொழுது கூட அவர் இது தொடர்பில் எவ்வித கலந்தாலோசனைகளையும் மேற்கொள்ளவில்லை. இது ஒரு தலைபட்சமாக விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கை ஆகும்.

இந்த அறிக்கையை வெளியிடமுன் இலங்கை மனித உரிமை தொடர்பான இலங்கைக்கான பிரதிநிதி ஒருவரும் உள்ளார் அவராவது இவ்விடயம் தொடர்பில் எம்முடன் கலந்தாலோசித்து தகவல்களை பெற்றிருக்கலாம். கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினூடாக 2224 நோயாளர்கள் வன்னியிலிருந்து திருகோணமலைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.அவர்களுக்கு திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது அவர்களுடன் 971 பொது மக்களும் அழைத்து செல்லப்பட்டார்கள். இதை அவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.சிறுவர்களை விடுதலைப்புலிகள் படையில் சேர்த்துள்ளனர் இது சர்வதேச யுனிசெப் நிறுவனமும் அண்மையில் சுட்டிக்காட்டி இருந்தது.

மேலும் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட வலையத்தினுள் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவ்வாறான சம்பவங்கள் ஏதேனும் நடைபெறவில்லை என சர்வதேசத்த்திற்கு இராணுவ தளபதி,பாதுகாப்பு செயலாளர் மற்றும் அரசினால் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பயங்கரவாதத்திலிருந்து சிலியன்களை பாதுக்காப்பதே எமது நோக்கம் அதற்காகவே நாம் பயங்கவாதத்திற்கு எதிராக படை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். சிலியன்களை கொல்வது எமது நோக்கம் அல்ல எனவே இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையை நாம் மறுக்கிறோம் என இலங்கைக்கான மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் தேயிலை மற்றும் இறப்பர் ஈரானுக்கு ஏற்றுமதி- அமைச்சர் டி.எம்.ஜயரத்ன தகவல்

dmjayarathna.jpgஇலங்கையின் தேயிலை மற்றும் இறப்பருக்கு ஈரானில் சந்தை வாய்ப்புக் கிட்டவுள்ளதாகவும் விரைவில் அதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப் படவுள்ளதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.

இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் மஹ்மூத் றஹீம் கோஜியை அண்மையில் அமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போதே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கையின் தேயிலை உற்பத்தி தெடர்பாக ஆராயவும் தேயிலை உற்பத்தியில் பங்கெடுத்துக்கொண்டு அவற்றை கொள்வனவு செய்யவும் ஈரான் விரும்புவதாகவும்  அந்நாட்டின் தூதுவர் இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இந்த இணக்கப்பாட்டுக்கு ஏற்ப ஈரானிய வர்த்தகப் பிரமுகர்கள் குழு ஒன்றுடன் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்றும் விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான விழுமியங்களுக்கு இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும்

navanethem.jpgவன்னியில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெறுகின்ற மோதல்களின் போது போர் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன என்பதுடன் மனிதாபிமான விழுமியங்களுக்கு இருதரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வன்னியில் இருதரப்பிற்கும் இடையிலான மோதல்களின் போது போர் குற்றச் செயல்கள் நடைபெற்று வருகின்றன என்பதனால் தொடர்புடைய தரப்பினர் போர்நிறுத்தமொன்றை அமுல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அப்பாவி பொதுமக்களை கருத்திற்கொண்டு போர்நிறுத்தமொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரதேசங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தாம் விரும்பிய இடத்திற்குச் செல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னி மக்களுக்கு அனுமதியளிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலமாக இடம்பெற்ற மோதல்களில் சுமார் 2700 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவுக்கு இலங்கை குறித்து நாளாந்தம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.