செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சிறுமி வர்ஷா கொலை தொடர்பாக முறையான விசாரணையை நடத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்தல்

Regie_Varsaமனித உரிமை மீறல் கலாசாரத்தை அரசாங்கம் தோற்றுவித்திருப்பதாக கடும் விசனத்தை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, திருமலையில் சிறுமி வர்ஷா கொலை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி கேட்டுள்ளது.

அரசாங்கம் சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதியுதவியை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், மனித உரிமை மீறல் குறித்து அவர்கள் பேசுகின்ற போது அதனை ஏற்க மறுப்பது எந்த வகையில் நியாயமானதெனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;  திருகோணமலையில் சில தினங்களுக்கு முன்னர் ஆறு வயது சிறுமியான வர்ஷா கப்பம் கோரப்பட்டு, கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பரிதாபமானதும் மிலேச்சத்தனமானதுமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் உடன்படிக்கை செய்துகொண்டு அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இக்கொலை தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டியது கடமையாகும். அரசாங்கம் உண்மையில் இக்கொலையுடன் தொடர்பு இல்லையாயின் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகின்றேன்.

இக்கொலை தொடர்பான விசாரணை உரிய முறையில் மேற்கொள்வதற்கு சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு இருக்க வேண்டும். இதன்மூலம் பொலிஸார் எந்தவித அழுத்தங்களுமின்றி செயற்பட முடியும். இந்த சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு முதல் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துகின்ற ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதற்கு அரசியலமைப்பு பேரவை அவசியமானதாகும். இதனை செய்யுமாறு நாம் அரசை வலியுறுத்தி வந்தபோதும் அதனை அரசு மேற்கொள்ளவில்லை.

2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் கோரல், தாக்குதல் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெறாததனாலேயே இன்று ஆறு வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

யுத்தத்துக்கு அப்பாற்பட்டு ஊடகவியலாளர்கள், வியாபாரிகளென பலதரப்பட்ட தரப்பினர் மீது தாக்குதல், கடத்தல், கப்பம் மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அரசாங்கம் நாட்டில் வேறு எதனையும் அல்ல கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் கோரல், படுகொலை கலாசாரத்தையே உருவாக்கியுள்ளது. கடந்த 21/2, 3 வருடங்களாக இச்சம்பவங்களின் பின்னால் ஆயுதக் கும்பலொன்று உள்ளதென்பதை பாராளுமன்றத்தில் நானும் எனது கட்சியும் தெரிவித்துள்ளோம். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமாயின் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றிருக்காது. எனவே, இதற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும். அவ்வமைப்பினர் ஆயுதத்தை கையளித்துள்ளதாக அரசு கூறிய போதிலும் இன்னும் ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளது.

இந்நிலையிலேயே நாட்டில் மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெறுவதாக சர்வதேச அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. அரசாங்கம் நிதிப் பற்றாக்குறை காரணமாக சர்வதேச அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்து நிதியை ஏற்கின்ற நிலையில் அவர்கள் மனித உரிமை மீறல் குறித்து பேசுகின்ற போது அரசு விமர்சிக்கின்றது. இது எந்த வகையில் நியாயமானதாகும்.

எனவே, நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும் ஜனநாயகத்தை நிலைபெறச் செய்யவும் அரசியலமைப்பு பேரவையை உருவாக்குமாறு கோருகின்றோம். இதன் மூலமே நாட்டை உரிய முறையில் கொண்டு செல்ல முடியுமெனவும் தெரிவித்தார்.

ருபெல்லா தடுப்பூசி ஏற்றியதால் வடக்கிலும் மாணவி பாதிப்பு

vaccina.jpgருபெல்லா தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்ட யாழ்ப்பாணப் பகுதி மாணவி ஒருவரும் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் மனோகரன் நிரோஜினி என்ற 13 வயது மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இக்கல்லூரி மாணவிகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது. மாலையில் இந்த மாணவிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து சங்கானை அரசினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் இம்மாணவி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த மருந்தை இனிமேல் மாணவிகளுக்கு ஏற்றவேண்டாம் என சுகாதார அமைச்சும், கல்வியமைச்சும் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் மகாராணியின் கௌரவ விருது இரு இலங்கையருக்கு

பிரிட்டிஷ் மகாராணியின் உயர்கௌரவ விருதினைப் பெற்றுக்கொள்வதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதுவராலயத்தில் கடமையாற்றிய இருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். பிரிட்டிஷ் தூதுவராலயத்திற்காக சிறந்த சேவையாற்றிய பிரான்சிஸ் ஞானப்பிரகாசம், மஹேந்திர ரணவீர ஆகிய இருவரே இந்த உயர் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களாவர்.

பிரான்சிஸ் ஞானப்பிரகாசம் , கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பிரிட்டிஷ் தூதுவராலயத்தில் பாதுகாப்புப் பிரிவில் சேவையாற்றியுள்ளார்.

அதேவேளை, மஹேந்திர ரணவீர, கடல்கோள் ஏற்பட்ட காலப்பகுதியில் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஆலோசனை உதவி வழங்கியவராவார். இதேவேளை, 1958 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வசித்து வரும் பிரிட்டிஷ்காரரான கிறிஸ்தோபர் வோர்திங்டனுக்கும் இவ்விருது வழங்கப்படுகின்றது.

இலங்கை தமிழ் மாஜிஸ்திரேட்டுக்கு அமெரிக்காவின் தீரப் பெண் விருது

இலங் கையைச் சேர்ந்த தமிழ் நீதிபதிக்கு, அமெரிக்காவின் தீரப் பெண்மணி (உமன் ஆப் கரேஜ்) விருது கிடைத்துள்ளது. அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சகம் இந்த விருதினை அளித்துள்ளது. இலங்கையில், துணிச்சலுடனும், திறமையுடனும், தைரியத்துடனும் செயல்பட்டு வருவதற்காக இந்த விருது அந்த பெண் தமிழ் நீதிபதிக்குக் கிடைத்துள்ளது.

விருது பெற்றுள்ள நீதிபதியின் பெயர் ஸ்ரீநிதி நந்தசேகரன். விருது பெற்ற ஸ்ரீநிதி குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் கூறுகையில்,  ஆண்டுதோறும் உலகெங்கும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் இணைந்து திறமையுடன் செயல்படும் பெண்மணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு உமன் ஆப் கரேஜ் விருதினை அளித்து வருகின்றன.

இந்த ஆண்டு பல உலக நாடுளைச் சேர்ந்த 80 பெண்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. மனித உரிமை முதல் பெண்களின் பிரச்சினைகள் வரை பல்வேறு பிரிவுகளில் திறமையுடன் செயல்படக் கூடிய பெண்கள் இவர்கள். இவர்களில் ஸ்ரீநிதி நந்தசேகரன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதும் சிறந்த வக்கீலாகவும், இப்போது நீதிபதியாகவும் திறம்பட, தைரியத்துடனும், துணிவுடனும் பணியாற்றி வருகிறார் ஸ்ரீநிதி. இலங்கையின் அனைத்து இனப் பிரிவினருக்கும் பாரபட்சம் பார்க்காமல் நீதி கிடைக்க வழி செய்துள்ளார். மேலும், நாட்டின் மிகவும் சிக்கலான பகுதிகளிலும் கூட அவர் திறமுடனும், தீரமுடனும் பணியாற்றியுள்ளார். அவரது பணிகளிலேயே மிகவும் சிறப்பானது, குழந்தைகள் நலனுக்காக அவர் மேற்கொண்டு வரும் சேவையாகும் என்று பிளாக் கூறியுள்ளார்.

சர்வதேச, உள்ளூர் அழுத்தங்களுக்கு நாம் ஒரு போதும் அடிபணியோம். – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgநாட்டுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. நாம் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபதியாகிய என்னையும், பாதுகாப்பு செயலாளரையும், இராணுவத் தளபதியையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக கொண்டு செல்வதற்குத் தேவையான தகவல்களைச் சிலர் திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளைகளினதும் சங்கங்களினதும் பிரதிநிதிகள் சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இச்சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிகளின் பணத்திற்கும், அவர்களின் கவனிப்புக்கும் மதிமயங்கிய சிலரே இவ்வாறான செயலில் ஈடுபடுகின்றனர். எமது நாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு சாராரும், வெளிநாட்டில் வாழுகின்ற வேறு சக்திகளும் தமக்குக் கிடைக்கின்ற பொருளாதார, அரசியல் இலாபங்களையும், பணத்தையும் மட்டுமே மனதில் கொண்டு இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.

சிலர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மட்டுமல்ல அமெரிக்காவிலும் இருந்து கொண்டு இவ்வாறான செயலில் ஈடுபடுகின்றனர். நாட்டுக்கு கெடுதல் செய்யும் இவ்வாறான சூழ்ச்சிக்காரர்கள் நாம் முன்னெடுக்கின்ற வேலைத் திட்டங்களை தோல்வி அடையச் செய்வதற்கு எமக்கு எதிராக சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

நாம் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கை இன்னொரு இனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கையாக அமையாது. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது என்பது இந்த நாட்டில் வாழுகின்ற சகல இனமக்களுக்கும் விமோசனத்தைப் பெற்றுக் கொடுக்கும் காரியமாகவே கருதுகிறேன்.

இந்த நிலைமையை சர்வதேச சமூகத்திற்கு நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த நாட்டை அழித்தாவது, புலிகளுக்கு நாட்டைத் தாரை வார்த்தாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் ஒரு சாரார் செயற்படுகின்றனர். அவர்கள் புலிகளுடன் சேர்ந்து செயற்படுகின்றனர். இலங்கை தொடர்பான தவறான அபிப்பிராயங்களை பல்வேறு வழிகளிலும் இவர்கள் உலகிற்கு வழங்கி வருகின்றனர். இவற்றைத் தோற்கடிப்பதற்காக நாம் செயற்படுகின்றோம்.

எமக்கு எதிராக அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த அழுத்தங்களின் நோக்கம் நாம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதே. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எந்தவிதமான உள்ளூர், வெளியூர் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நாம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம். அவற்றை ஒரு போதும் இடைநிறுத்த மாட்டோம்.

நாம் பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிப்போம். அதற்காக எம்மை ஏற்கனவே அர்ப்பணித்து விட்டோம். இந்நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் சகலரையும் ஒரே மக்களாக பார்க்கிறோம் என்றார்.

வருண் காந்தி இன்று பிலிபித்தில் கைதாகலாம்?

20-varun-ganthi.jpgவருண் காந்தியின் முன்ஜாமீன் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து இன்று பிலிபித் தொகுதிக்கு வருண் காந்தி செல்கிறார். அங்கு போலீஸாரிடம் கைதாக அவர் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. பிலிபித் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வருண் காந்தி, அங்கு நடந்த கூட்டத்தில், இஸ்லாமியர்களை தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் புகாரின் பேரில் பிலிபித் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் வருண் காந்தி மீது இரு மதப் பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் வருண் காந்தி. மேலும், முன்ஜாமீ்ன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்திலும் மனு செய்தார். இதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது. இந்த முன்ஜாமீன் இன்றுடன் முடிகிறது.

அதேசமயம், அலகாபாத் நீதிமன்றம், வருண் காந்தியின் கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது.  இந்தச் சூழ்நிலையில் தனது முன்ஜாமீனை நீட்டிக்க விரும்பாமல் கைதாக முடிவு செய்து விட்டாராம் வருண் காந்தி. அதன்படி இன்று பாஜகவினருடன் அவர் பிலிபித் செல்கிறார். அங்கு அவர் போலீஸாரிடம் கைதாவார் என்று கூறப்படுகிறது. மேலும் வருண் காந்தியின் முன்ஜாமீன் மனுவை இன்று அவரது வக்கீல்கள் உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்ஜாமீனை நீட்டிக்காமல், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யாமல் கைதாக வருண் காந்தி முடிவு செய்திருப்பது அரசியல் லாபம் கருதியே என்று கூறப்படுகிறது. தான் கைதானால் அதனால் அனுதாபம் ஏற்படும், அது தனக்கும், பாஜகவுக்கும் லாபமாக அமையும் என்பதால் இந்த முடிவை வருண் காந்தி எடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் தனது முடிவை இதுவரை வருண் காந்தி கட்சி மேலிடத்தில் சொல்லவில்லையாம். இருப்பினும் எது செய்தாலும், சட்டத்திற்கு உட்பட்டு செய்யுமாறு வருண் காந்திக்கு கட்சி மேலிடம் அறிவுரை கூறியுள்ளதாம்.

இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகும் ஆபத்து ஐ.நா. அதிகாரிகள் அச்சம்

un-logo.jpgஇலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின்போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படும் பயங்கர நிலை உருவாகி உள்ள தாக ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் மோதலில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண் டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையின் அனுசரணையாளராக விளங்கிய நோர்வே இரு தரப்பையும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு கேட்டுக்கொள்ளும் முயற்சியை மேற்கொள்கிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள்சபையை மையமாகக் கொண்ட செய்திச் சேவையொன்று இது தொடர்பாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலில் சிக்குண்டுள்ள மக்களைப்  பலவந்தமாக வெளியேற்ற வேண்டும் எனத் தெரிவித்த ஐ.நா. அதிகாரி, அதற்காக ஐக்கிய நாடுகள் என்ன செய்ய முயல்கிறது என்பதை விவரித்தார்.

மோதலை இடைநிறுத்தி சர்வதேச கண்காணிப்பாளர்கள் பொதுமக்களை
வெளியேற்ற உதவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இரு தரப்பும் ஏற்காத நிலையில் இரு தரப்பையும் இணங்கச் செய்வதற்கான திட்டமொன்று குறித்து அதிகாரி தெளிவுபடுத்தினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படும் அதி பயங்கரமான நிலை குறித்து நாங்கள் அச்சமடைந்துள்ளோம். நோர்வே சந்தடியற்ற விதத்தில் இரு தரப்புடனும் பேசி உடன்பாடொன்றை எட்ட முயல்கிறது எனத் தெரிவித்த அதிகாரி, எனினும் இதனை சாதிப்பதற்கு நோர்வேயிடம் போதிய தொடர்புகள் உள்ளனவா என்ற சந்தேகம் ஐக்கிய நாடுகளில் உருவாகி வருகின்றது என்றார். அமெரிக்கா தனது இராணுவத்தைப் பயன்படுத்தி மக்களை வெளியேற்ற உதவுவதற்கு முன்வந்தது. எனினும் அதுவும் நிராகரிக்கப்பட்டது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

“மக்கள் ஆணையுடன் விரைவில் ஆட்சிக்கு வருவேன்’ – ரணில்

ranil-wickramasinghe.jpgஜனநாயக வழியின் மூலம் மக்களாணையுடன் விரைவில் ஆட்சிக்கு வருவேன் என தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக அனைவரும் ஒன்று படவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

ஆசியாவின் சிறந்த நாடுகளில் ஒன்றாக விளங்கிய இலங்கையின் இன்றைய நிலைமை பெரும் கவலையளிப்பதாகவுள்ளதாகவும் அவர் வேதனையை வெளியிட்டிருக்கின்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது 60 ஆவது பிறந்த தினத்தையொட்டி கொழும்பு ஹீணுப்பிட்டிய கங்காராம விகாரையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் கங்காராம விகாராதிபதி கலபொட ஞானிஸ்ஸர தேரோ தலைமையில் இடம்பெற்ற இந்த பூஜை வழி பாட்டில் ரணில் விக்கிரம சிங்கவுடன், அவரது பாரியார் மைத்திரி விக்கிரம சிங்கவும் கலந்துகொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் உறுப்பினர்கள், மேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இதில் பங்கேற்றனர்.

கங்காராம விகாராதிபதியுடன் கோட்டே ரஜமகாவிகாராதிபதி கலாநிதி மாதுளுவாவே சோபித தேரோ, காணி மகாவிகாராதிபதி பேராசிரியர் மகிந்த சங்க ரக்கித்த தேரோ ஆகியோர் ரணிலுக்கு நல்லாசிகளை வழங்கியதோடு விஷேட பூஜை வழிபாடுகளை நடத்தினர்.

இறுதியில் கூடியிருந்தவர்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

60 வருடங்கள் என்பது வாழ்க்கைப் பயணத்தில் நீண்டதொரு தூரமாகும். இப்பயணத்தில் நிறையவே அனுபவங்களைப் பெற்றுக்கொண்டதோடு, பல சவால்களையும் எதிர் கொண்டுள்ளேன். அந்த அனுபவங்களும், சவால்களும் தான் தொடர்ந்து பயணிப்பதற்கு உதவியாக அமைந்துள்ளதாகவே உணர்கின்றேன். சுதந்திர இலங்கையில் பிறந்த நான் மாதுளுவாவே சோபித தேரோ குறிப்பிட்டது போன்று எனது கல்வியை “குமாரரொதய’, “நவமக’ ஆகிய பாடப்புத்தகங்களினூடாகவே ஆரம்பித்தேன். ஆரம்பத்திலேயே சவால்கள் நெருக்கடிகள் என்பன பற்றி புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

டட்லி சேனாநாயக்க, ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டீ.பி.விஜேதுங்க ஆகியோருடன் இணைந்து செயற்பட்டதால் எனது அரசியல் வாழ்க்கையில் நிறையவே அனுபவங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் வெற்றி தோல்வி இரண்டுக்கும் முகம்கொடுக்கக்கூடிய தைரியம் சுயமாகவே வந்தது. அவர்கள் காட்டிய பாதையிலிருந்து இன்று வரையில் நான் விலகிச் செயற்படவில்லை. எதிர்காலத்திலும் அந்த அடிச்சுவட்டிலேயே பயணிப்பேன்.

எனது இந்த வாழ்க்கைப் பயணத்தின் போது அந்த தலைவர்களிடமும் எனது தாய், தந்தையாரும், கட்சி ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்புகளை இன்று நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.

வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள், முரண்பாடுகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பதைப் பற்றி நான் தம்ம பதத்தை படித்து தெரிந்துகொண்டேன்.

நான் ஜனநாயகத்தின் மீது முழுமையான நம்பிக்கைகொண்டவன். ஜனநாயக வழிக்கு அப்பால் நின்று அரசியல் அதிகாரங்களைப் பெற ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன். எதிர்காலத்திலும் ஜனநாயக வழியிலேயே மக்களாணையைப் பெற்று ஆட்சிக்கு வந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவேன். இதற்கு ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து சக்திகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

ஆசியாவின் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக திகழ்ந்த எமது நாட்டின் இன்றைய நிலை கவலை தரக்கூடியதாக உள்ளது. இந்தச் சோதனையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டும். அதற்காக தேசத்தை நேசிக்கும் மக்கள் ஓரணியில் திரள வேண்டும். நான் பெற்ற அனுபவங்கள், சவால்களைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்து மக்களுக்கு நிவாரணங்களைத் தேடிக்கொடுத்து சுதந்திரமான ஜனநாயக நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது இலட்சியமாகும்.

‘ புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை அருகே ஷெல் வீச்சுக்களில் 20 பேர் பலி”

இலங்கையின் வடக்கே அரச படைகளுக்கும் வி்டுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஒரேயொரு தற்காலிக மருத்துவமனையாகிய புது மாத்தளன் மருத்துவமனையைச் சூழ்ந்த பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 140க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்கள் இந்த மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், சிகிச்சை பயனளிக்காத காரணத்தினால் அவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாலை வரையில் தொடர்ச்சியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்ததாகவும், ஷெல் தாக்குதல்களில் சம்பவ இடங்களில் இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும், டாக்டர் ரீ.வரதராஜா கூறினார்.

புதுமாத்தளன் மருத்துவமனையில் குழந்தைகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற விடுதி பக்கமாக உள்ள வேலியருகில் இன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஷெல் ஒன்று வந்து வீழ்ந்து வெடித்ததாகவும், இதனையடுத்து, அந்த குழந்தைகள் விடுதியில் தங்கியிருந்த நோயாளர்கள் அனைவரும் மருத்துவமனையைவிட்டு ஓடிவிட்டதாகவும், தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் காரணமாக மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் பதட்டத்தி்ற்கு உள்ளாகியிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவித்தார். அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், வலயர்மடம் ஆகிய பிரதேசங்களில் இன்று நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருக்கி்ன்றார்கள்.

முன்னதாக இன்று அதிகாலை புதுமாத்தளன் மருத்துவமனைமீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 நோயாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் காயமடைந்ததாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவிக்கின்றார்.

மேலும் 485 பொதுமக்கள் புல்மோட்டைக்கு அனுப்பப்பட்டனர்

navy_rescue_civil.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவடத்தில் போர் நடக்கும் பகுதிகளில் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அடங்கிய சுமார் 485 பொதுமக்கள் வியாழக்கிழமை செஞ்சிலுவை சங்கக் கப்பல் மூலம் திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை தற்காலிக மருத்துவ முகாமுக்கு கொண்டுவரப்பட்டனர்.

இவர்களில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் என்றும் பிறர் அவர்களுக்குத் துணையாக வந்த குடும்ப உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வந்தவர்கள் கடலிலிருந்து படகுகள் மூலம் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களில் பலருக்கு உடனடி மருத்துவ உதவி, புல்மோடையில் அமைந்துள்ள இந்திய மருத்துவ முகாமில் அளிக்கப்பட்டது.