செய்திகள்

செய்திகள்

செய்திகள்

புலிகள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை – நெசபி பிரபு

nasabi.jpgபுலிகள் எந்தவொரு பிரிவினரையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. குறிப்பாக அவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என பிரித்தானியாவின் சர்வகட்சி பாராளுமன்றக்குழுத் தலைவர் நெசபி பிரபு தெரிவித்துள்ளார்.

நெசபி பிரபு அவர்கள் இலங்கையின் நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது 10 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான ஏ 9 பாதை திறக்கப்பட்டுள்ளது. புலிகள் அப்பாவித் தமிழ் மக்களை பலவந்தமாக தடுத்து அவர்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு சுமார் 2,50,000 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என ஐ.நா. கணக்கிட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் பேர்வரையிலேயே அப்பிரதேசங்களில் இருப்பதாக வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர்வரை புலிகளது கட்டுப்பாடுகளையும் தாக்குதல்களையும் பொருட்படுத்தாது வெளியேறியுள்ளனர்.

இந்த மக்களை விடுவிக்குமாறு ஐ.நா. சபை இணைத்தலைமை நாடுகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்றன விடுத்துவரும் தொடர்ச்சியான வேண்டுகோள்களை எல்லாம் புலிகள் புறக்கணித்தே வந்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபோது புலிகள் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சனநாயக வழிமுறைக்கு திரும்ப வேண்டும் அல்லது அவர்கள் அழித்தொழிக்கப் படுவார்கள் எனத் தெரிவித்திருந்தார். எனினும் இந்தியத் தலைவர் ராஜீவ் காந்தி உட்பட பல கொலைகளுக்குக் காரணமான புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்ந்தும் தமது மூடக் கொள்கையிலேயே இருந்து வந்தார்.

இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தின் கட்டுப்பாட்டை தனக்குக்கீழ் வைத்திருந்த கருணா அம்மான் அவ்வமைப்பிலிருந்து வெளியேறினார். ஈழம் என்பது சாத்தியப்படாததொன்று என்பதை அறிந்த கருணா தனது போராளிகள் சகிதம் அரசாங்கத்தரப்பிற்கு மாறினார். அத்தோடு புலிகளது நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் முடிவுக்கு வந்தது.

புலிகள் சரணடைய வேண்டும் அல்லது அழித்தொழிக்கப்பட வேண்டும். புலிகள் ஒருபோதும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த வில்லை. அவர்கள் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே அங்கு உண்மையான சமாதானம் ஏற்படும் என்பதோடு அப்பிரதேசம் சர்வதேச சமூகத்தின் உதவிகளோடு மீளக்கட்டியெழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிகரெட், சாராயத்தின் விலைகள் அதிகரிப்பு

இரண்டு வகையான சிகரெட்டுகள் மற்றும் சாராயத்தின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்தது.

கோல்ட்லீஃப் சிகரட் 2 ரூபாவாலும் பிரிஸ்டல் ஒரு ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள் ளன. சாராயம் ஒரு லீற்றரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பல்கலைக் கழகம் ரத்மலானையில் – அமைச்சர் பியசேன தகவல்

piyasena_gamage.jpgரத்ம லானையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது தொழில்நுட்பவியல் பல்கலைக் கழகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 31ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாக வாழ்க்கைத் தொழில்சார் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சர் பியசேன கமகே தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பவியல் பல்கலைக் கழகம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

உயர்கல்வி வாய்ப்பை இழந்த நிலையில் பாடசாலையை விட்டு விலகிச் செல்லும் நாட்டின் இளம் சந்ததியினருக்கு முறையான பயிற்சிகளை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். நாடு பூராகவுமுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் தற்போது 70 ஆயிரம் பேர் வரை பயில்கின்றனர். இந்த எண்ணிக்கையை ஒரு இலட்சமாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ரத்மலானையிலுள்ள தேசிய கைத்தொழில் கற்கை நிறுவன வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராதனைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் கபில குணசேகரவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இலங்கையின் தொழில் பயிற்சிக் கல்வியை உயர்தரத்தில் பேனுவதற்கு தேசிய தொழில்சார் மதிப்பீட்டு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக சலக கற்கைநெறிகளும் சமகாலத்துக்குப் பொருத்தமானதாக வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மருதானை மற்றும் அம்பாறை உட்பட நாடு முழுவதிலுமுள்ள 9 தொழில்நுட்பக் கல்லூரிகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வன்னி மாவட்ட மாணவரை ஆற்றுப்படுத்த நடவடிக்கை

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆற்றுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உளப்பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் சீரான மனநிலையை மாணவர்கள் கொண்டிருப்பதை நோக்காகக்கொண்டு இந்த ஆற்றுப்படுத்தும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அண்மையில் இப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மூன்றாமாண்டு மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதை அடுத்து இம்மாணவர்களை ஆற்றுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.அதற்கு முதல் காவலாளியாக பணியாற்றும் ஒருவரும் அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

இறுதியாக தற்கொலை செய்துகொண்ட மாணவி தனக்குத்தானே தீமூட்டிக்கொண்டு தற்கொலைசெய்து கொண்டதாகவும் இவரது பெயர் ரவீந்திரன் சுதர்சினி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கே மோதல் நடைபெறும் பகுதிகளில் வாழும் தமது உறவுகளின் நிலை குறித்து சரியான தகவல்களை பெறமுடியாத நிலையில் மனப்பாதிப்புக்குள்ளானமை காரணமாக இவ்வாறான தற்கொலை முயற்சிக்கு மாணவர்கள் தள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாதிப்புக்குள்ளாகும் இம்மாணவர்களை கவனிப்பதற்கும் தேவையான உளவள ஆலோசனைகளை வழங்குவதற்மென வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களின் விபரங்களை திரட்டுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா அதிகாரிகளைக் கேட்டுகொண்டுள்ளார்.

இதேவேளை, வடமாகாணத்தில் இருந்து கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு வந்து கல்விகற்கும் 152 மாணவர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி கவனத்திற்குட்படுத்த வேண்டுமென கிழக்குப்பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் என். பத்மராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரும்பாலான மாணவர்கள் யாழ்ப்பாணக்குடா நாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்களிடம் எந்தப்பாதிப்பும் வெளிப்படவில்லை. எனினும் வன்னியின் நிலைமை மிகவும் மோசமானதை அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவர்கள் உளப்பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.

இதேவேளை, கலைப்பீட பரீட்சைகள் தவிர ஏனைய பரீட்சைகள் ஒத்திவைக்கப்படமாட்டாது எனவும் இவ்வாரத்தில் பரீட்சைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து ஒரு வாரத்தில் ஒன்பதாயிரம் பேர் வருகை

_mullai_1.jpg
வன்னியிலிருந்து கடந்த ஒரு வாரத்தில் சுமார் ஒன்பதினாயிரம் பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் செட்டிகுளம் நலன்புரிநிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  தற்போது வரும் மக்கள் எதுவித மாற்றும் உடைகளுமின்றி வருகின்றார்கள். அவர்கள் மாற்றுவதற்கு உடைகளும் வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நீண்ட நாட்களாக போசாக்கு உணவு உண்ணாதபடியால் சோர்வான நிலையில் காயங்களுடனும் பயங்கர கோலத்துடனும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இவர்கள் வருவதாக இராணுவ தரப்பினர் தெரிவித்தனர்.

தினமும் குறைந்தது ஆயிரம் பொது மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை வந்தடைவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி : பொதுக் குழுவில் முடிவு

26-ramsoss.jpgமக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று இன்று நடந்த பா.ம.க. பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படவுள்ளது. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர காங்கிரஸ் மேற்கொண்ட இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதையடுத்து பாமக இன்று இந்த முடிவை அறிவித்தது.

மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படை வீரர் தற்கொலை

மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் வீதிக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படைச் சிப்பாயொருவர் இன்று மாலை தனக்குத் தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ளார்

ஊறணி விசேட அதிரடிப் படை முகாமில் சேவையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் யு.எஸ்.பி. திசாநாயக்கா ( வயது 25) என்பவரே இவ்வாறு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தவர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

vithyathara-01.jpgசுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணி ஊடாகத் தாக்கல்செய்துள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பான முறையில் தம்மை கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக வித்தியாதரன் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பணிப்பாளர் அநுர சேனாநாயக்க , கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் எ.ஜி.ரி.பி. விஜெரட்ண, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்

இந்தியப் பிரதமரின் தலைமைச் செயலாளர் – ஜனாதிபதி இன்று சந்திப்பு

nayar.jpg இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமரின் கொள்கை அமுல்படுத்தலுக்கான தலைமைச் செயலாளர் ரி.கே.ஏ. நாயிர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் அழைப்பின்பேரில் ரி.கே.ஏ. நாயிர் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ரி.கே.ஏ. நாயிரின் பாரியார், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,  மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோருடன் வெளிவிவகாரம், நிதி, சுகாதாரம், கல்வி அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இப்பொது 21 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில்! அதில் 20 ச.கி.மீ. பாதுகாப்பு வலயம்!

khegeliya_rampukhala.jpgபுலிகள் இப்பொது 21 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அதில் 20 சதுர கிலோ மீற்றர் அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயமாகும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோத அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.

படையினரால் புலிகள் இப்போது ஒரு சதுர கிலோ மீற்றருக்குள் மட்டுப்படுத்தப்பட்டாலும் அவர்கள் பாதுகாப்பு வலயத்திலும் ஊடுறுவி அங்கிருந்தும் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நேற்று அவாகள் அங்கிருந்து இலங்கை விமானப்படையின் பெல்  212 ரக ஹெலிகொப்டர்கள் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் இதற்கான சான்றாகும்.

புலிகளின் செயற்பாடுகள் இப்பொது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. புலிகளின் கடுமையான எதிர்ப்புக்களை வெற்றிகரமாக சமளித்துக்கொண்டு படையினர் நிதானமாக முன்னேறுகின்றனர்.

புலிகளிடம் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களின் நலனில் அக்கரையுள்ள சர்வதேச நிறுவனங்கள் இன்று ஆற்றவேண்டிய முக்கியமான பணி என்னவென்றால். புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனித நேய மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு அரசுடன் இணைந்த ஆதரவு வழங்குவதாகும் என்றும் அமைச்சர் ;கூறினார்.