செய்திகள்

செய்திகள்

செய்திகள்

‘தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற பெரும்பாலான வன்னி மக்கள் விரும்பவில்லை’- வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம்

kanakaratnam.gifஇலங்கை யில் மோதல்கள் நடக்கும் பகுதிகளில் தொடர்ந்தும் தங்கியிருப்பவர் அந்தப் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம். தனக்கு வாக்களித்த மக்களை தனியே விட்டுவர மனம் இல்லாதாதால் தான் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரவில்லை என்று கூறுகிறார் அவர்.

அவலங்கள் ஏற்பட்ட போதிலும் மக்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் தொடர்ந்து நடத்தப்படும் ஷெல் தாக்குதல்களில் தினமும் சராசரி 30 முதல் 35 பேர் வரை கொல்லப்படுகின்றனர். அவ்வாறு மரணங்கள் ஏற்பட்ட போதிலும் அங்கு வாழும் மக்கள் வேறு இடங்களுக்கு வெளியேற விரும்பவில்லை.தொடர்ந்தும் அங்கேயே வசிக்க விரும்புகிறார்கள். முல்லைத்தீவில் தங்கியிருக்கும் அவர் அங்கிருந்து பி.பி.ஸி. தமிழோசைக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியிலேயே இப்படிக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் போன்ற பிரதேசங்களிலேயே மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வசிக்கின்றனர். அப்பகுதிகளில் உணவு இல்லை என்றே கூறலாம். ஒரு நாளுக்கு மூன்று லொறி களில் உணவுப்பொருள்கள் அனுப்பப்பட்ட போதிலும் அவை போதுமானவையல்ல. இதுவரை 5 லொறி உணவுப் பொருள்களே அனுப்பப்பட்டுள்ளன  என்றார் கனகரத்தினம்.

முல்லைத்தீவில் வாழும் மக்களின் நிலை தொடர்பாக  பி.பி.ஸி. செய்தியாளரின் கேள்விக்கு பதில் கூறுகையில்: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் போன்ற பல பகுதிகளையும் சேர்ந்த சுமார் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் முன்னர் வசித்தனர். இப்போது இறந்தவர்கள், வெளியேறியவர்களைத் தவிர்த்து 3லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் என்றார்.

விடுதலைப் புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுக்கின்றனர். வெளியேறுவோரை சுட்டுக் கொல்கின்றனர் எனக் கூறப்படுகிறதே எனக்கேட்ட போது அது தவறான தகவல் எனவும் வெளியேற முனைந்த மக்கள் இராணுவப் பகுதிக்கு செல்லும் போது போரின் இடையில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுவதை  90வீதம் தாம் நம்புவதாகவும்  என்றும் தெரிவித்தார்

நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் இன்று முதல் சுயமாக சமைக்க வழி

navy_rg.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமையல் உபகரணங்கள் மற்றும் சமையலுக்குத் தேவையான சகல உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் இன்று முதல் அவர்கள் சுயமாக சமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசம்பந்தர் தெரிவிக்கையில்;

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு இதுவரை சமைத்த உணவுகளே வழங்கப்பட்டு வந்தன. இன்று முதல் அவர்கள் சுயமாகவே சமைக்கத் தொடங்குவர் எனத் தெரிவித்தார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் 14 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சகல அடிப்படைத் தேவைகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதுடன் இதுவரை காலமும் சமைத்த உணவுகளே வழங்கப்பட்டு வந்தன.

இவர்கள் சுயமாக சமைப்பதற்கு வசதியாக உலக உணவுத் திட்டம் அரிசி உட்பட சமைப்பதற்கான உணவுப் பொருட்களையும் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதுவராலயம் ஆகியன சமையலுக்கான உபகரணங்களையும் வழங்கியுள்ளன.

இதனைத் தவிர ஏனைய பொருட்களை பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. தேவை ப்படுமளவுக்கு குடி தண்ணீர் நீர்த்தாங்கிகள் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் மேலும் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உணவுப் பொருட்கள் போதியளவில் உள்ளதால் தற்போது எந்த உணவுப் பொருள் தட்டுப்பாடுமில்லை யெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பாரிய முகாம், ஆயுத கிடங்கு புதுக்குடியிருப்பில் படையினர் வசம் -பிரிகேடியர்

uthaya_nanayakara_.jpgபுதுக் குடியிருப்பு நகருக்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் அங்குள்ள புலிகளின் பாரிய முகாம் மற்றும் ஆயுதக் கிடங்கு ஒன்றை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் நான்காவது அதிரடிப் படைப் பிரிவினருக்கும் புலிகளுக்கும் இடையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. புலிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். படையினரின் கடுமையான தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் அந்த பாரிய முகாமையும், பாரிய ஆயுதக் கிடங்கையும் கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னேறிச் சென்ற இராணுவத்தினர் இந்த முகாமையும், ஆயுதக் கிடங்கையும் கைப்பற்றியுள்ளனர். வன்னி மனிதாபிமான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளின் வசமிருந்த பாரிய முகாம்களையும், பெருந்தொகையான ஆயுதங்களை மீட்டெடுத்த போதிலும், இதுவரை காலம் கைப்பற்றப்பட்டதிலும் பார்க்கக் கூடுதலான கனரக ஆயுதங்களைக் கொண்ட பாரிய முகாம் இதுவாகும் என்றும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

பெரும் எண்ணிக்கையிலான கனரக ஆயுதங்கள் முதற் தடவையாக மீட்டெடுக்கப்பட்ட பிரதேசம் புதுக்குடியிருப்பு என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். 120 மி. மீ. ரக கனரக மோட்டார் – 03, 81 மி. மீ. ரக மோட்டார்கள் – 45, 60 மி. மீ. ரக மோட்டார்கள் – 43, கொமோண்டோ மோட்டார் – 25, 60 மி. மீ. ரக மோட்டார்களுக்கு பொருத்தப்படும் குழல்கள் – 14, தகடுகள் – 35, இலகுரக இயந்திர துப்பாக்கிகள் – 800, பெருந்தொகையான ரி – 56, ரி – 81 ரக துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான உபகரணங்களையும் இந்த முகாமிலிருந்து படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினர் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள புலிகளின் பாதுகாப்பு அரண்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

படையினரின் கடுமையான தாக்குதல்களில் கொல்லப்பட்ட எட்டு புலிகளின் சடலங்களையும், ரி – 56 ரக துப்பாக்கிகள் – 14, தொலைத் தொடர்பு கருவி – 01, ஆர். பி. ஜி. குண்டு – 02, கிளேமோர் குண்டுகளையும் மீட்டெடுத்துள்ளனர். இதுதவிர புதுக்குடியிருப்பு வடக்கு பகுதியில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பக்கோ இயந்திரங்கள் மூன்றையும் இராணுவத்தினர் தாக்கியழித்துள்ளனர்.

இதேவேளை, இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைக் குண்டுகள் – 300, உழவு இயந்திரம் – 01, ட்ரக் வண்டி – 01, மோட்டார் சைக்கிள் – 01, ஜெனரேட்டர்கள் – 02, தண்ணீர் பம்புகளையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

சீனாவிலும் தீக்குளிப்பு

china.jpgசீன தலைநகர் பீஜிங்கின் மையத்துக்கு அருகில் கார் ஒன்றுக்குள்ளே மூன்று பேர் தமக்கு தாமே தீ மூட்டிக்கொண்டனர். ஆயினும் அவர்கள் மூவரும் காப்பாற்றப்பட்டுவிட்டனர்.

ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்க இந்த மூன்று பேரும் தலைநகருக்கு வந்ததாகக் கூறும் சீன அதிகாரிகள், ஆனால், அந்தப் பிரச்சினை என்னவென்பதற்கான சமிக்ஞை எதுவும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இன்று திபெத்தியர்கள் தமது புது வருடத்தை அனுட்டிக்கின்றனர். சீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வருடாந்த தேசிய காங்கிரஸுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வேளையில் இந்த தீக்குளிப்பு இடம்பெற்றுள்ளது.

அண்மைக்காலங்களில் சிறு எண்ணிக்கையிலான மக்கள் பல் வேறு காரணங்கள் குறித்து பொதுக்கவனத்தை ஈர்ப்பதற்காக சீனாவில் தீக்குளிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம்

ar-ragman.jpgடெல்லி யிலுள்ள அலிகார் முஸ்லீம் பல்கலை கழகம், ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது. மார்ச் 25ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

ஏ.ஆர். ரகுமானுடன் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா, வேளாண் விஞ்ஞானி எம்,எஸ் சாமிநாதன் ஆகியோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

இலங்கை தமிழருக்காக 2 கோடி கையெழுத்து வேட்டை

united-people.jpgஇலங்கை யில் போரைநிறுத்த ஐ.நா.சபை தலையிட வலியுறுத்தி 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை பட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ச.ராமதாஸ் சென்னையில் திங்கட்கிழமை தொடக்கி வைத்தார். தமிழ் மக்கள் மீதான போரை நிறுத்த இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என ஐ.நா.செயலாளர் நாயகம் அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி ஆகியோரை வலியுறுத்தி 2 கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பும் இயக்கத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கியுள்ளது.

அதற்கான படிவங்களில் பா.ம.க.நிறுவுனர் ராமதாஸ் முதல் கையெழுத்திட்டு அந்த இயக்கத்தை தொடக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு,  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

இது குறித்து வைகோ கூறியதாவது; “தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கையெழுத்து படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இடம்பெற்றுள்ள அமைப்புகள் தமிழகம் முழுவதும் 2 கோடி மக்களை சந்தித்து, கையெழுத்து பெறும் பணியில் தீவிரமாக ஈடுபடும். பின்னர் அனைத்து படிவங்களும் தொகுக்கப்பட்டு ஐ.நா.செயலாளர் நாயகம் மற்றும் அமெரிக்க, ரஷ்ய நாட்டு ஜனாதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றார் வைகோ.

386 சிவிலியன் நோயாளர்கள் கப்பல் மூலம் திருமலை வருகை

trico-hospital.gifமுல்லை தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் காயமடைந்த நிலையிலுள்ள 386 சிவிலியன்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஐ. சி. ஆர். சி.யின் கப்பல் ஐந்தாவது தடவையாகவும் சிவிலியன்களை திருகோணமலைக்கு அழைத்து வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஐ. சி. ஆர். சியின் கொடியுடன் கூடிய ‘எம். வி. க்ரீன் ஓசன்’ எனும் கப்பலே கடற்படையினரின் பூரண ஒத்துழைப்புடன் சுகயீனம் மற்றும் காயங்களுக்குள்ளாகியுள்ள 386 சிவிலியன்களை நேற்று முன்தினம் (24) திருகோணமலைக்கு அழைத்து வந்திருந்தது.

திருகோணமலைக்கு வந்த சிவிலியன்களுக்கான உடனடி மருத்துவ சிகிச்சைகளை கடற்படையின் மருத்துவ குழுவினர் அளித்தனர். பின்னர் இவர்கள் உடனடியாக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியக் குழுவினர் இவர்களுக்கான சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர். மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான அனைத்து மருந்துப் பொருட்களும் அங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேநேரம் மருத்துவர்களும் போதியளவில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ. சி. ஆர். சி முதல் தடவையாக கடந்த 10ம் திகதி செவ்வாய்க்கிமை 356 சிவிலியன்களையும் இரண்டாவது தடவையாக கடந்த 12ம் திகதி 403 சிவிலியன்களையும் மூன்றாவது தடவையாக கடந்த 16ம் திகதி 440 சிவிலியன்களையும் நான்காவது தடவையாக கடந்த 20ம் திகதி 397 சிவிலியன்களையும் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

காஸாவைக் கட்டியெழுப்ப அமெரிக்கா 900 மில்லியன் டொலர் நிதியுதவி

hamas.jpgகாஸாவைப் புனரமைக்க 900 மில்லியன் அமெரிக்க டொலரை உதவியாக அமெரிக்கா வழங்கவுள்ளது.  மார்ச் மாதம் 2ம் திகதி எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்ப மாகவுள்ள காஸாவைப் புனரமைக்கும் மாநாட்டில் பங்கேற்கவுள்ள அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த நிதி உதவிபற்றி அறிவிப்பார். ஆனால் இது எப்போது வழங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. இதற்கான அனுமதி காங்கிரஸில் கிடைத்தவுடன் இந்நிதி பற்றிய ஏனைய விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.

காஸாவைப் புனரமைக்க வழங்கப்படவுள்ள இந்நிதி ஹமாஸிடம் கையளிக்கப்பட மாட்டாது. அமெரிக்காவுக்கும் ஹமாஸ¤க்குமிடையே உறவுகள் இல்லை. இதனால் அமெரிக்க சார்பு அமைப்பிடம் அல்லது அரசிடம் இது கையளிக்கப்படலாம். காஸா புனரமைப்பு மாநாட்டில் பங்கேற்கவரும் ஹிலாரி கிளிண்டன், இஸ்ரேல் மேற்குக் கரைக்கும் விஜயம் செய்யவுள்ளார். ஹிலாரி கிளிண்டனின் விஜயத்தை இஸ்ரேல் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. அங்கு புதிய அரசாங்கம் இதுவரை அமைக்கப்படாத போதும் பெரும்பாலும் பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்படும் பென்ஜமின் நெதன்யாஹு உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் ஹிலாரி கிளிண்டன் சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் புதிய அரசாங்கத்தில் வெளிநாட்டமைச்சரான ஹிலாரி கிளிண்டன் மத்திய கிழக்கிற்கு செய்யும் முதல் விஜயம் இதுவாகும். புஷ்ஷின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரபு அமைச்சர்கள் மாநாடு அனோபெலிஸ் மாநாடுகள் தோல்வியுற்ற பின்னர் மீண்டும் மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அமெரிக்காவின் இந் நிதியுதவி உள்ளது. காஸாவில் கட்டுமானப் பணிகள், மருத்துவ உதவிகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.  காஸா மீது 22 நாட்களாக இஸ்ரேல் தொடுத்த தாக்குதல்களை அமெரிக்கா கண்டுகொள்ளாமல் நடந்தது.

இதனால் அரபுலகின் அதிருப்தியை அமெரிக்கா ஈட்டிக்கொண்டமை தெரிந்ததே. யுத்தம் நடந்த காலப் பகுதியில் (2008 டிசம்பர்) ஒபாமா பதவி யேற்காதபோதும் காஸாவில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியானதைக் கண்டிக்க உடனடியாக முன்வரவில்லை. பின்னர் அரபுலகில் கொதிப்பும், ஆத்திரமும் அதிகரிக்கவே அப்பாவிகள் கொல்லப்படுவது கவலையளிப்பதாகச் சொன்னார். அரபுலகிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் நல்லெண்ணத்தை உருவாக்கும் முயற்சியாக இந்நிதியை அமெரிக்கா வழங்கவுள்ளபோதும் காஸாவை ஆளும் ஹமாஸ் அமைப்பிடம் இந்நிதி வழங்கப்படமாட்டாது. மேற்குக் கரைக்குச் செல்லவுள்ள ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி மஃமூத் அப்பாஸையும் சந்திப்பார். இஸ்ரேல் மேற்கு க்கரை மற்றும் அரபு நாடுகளின் மேற்பார்வையில் காஸா புனரமைக்கப்படலாம்.

நிவாரண கிராமங்களுக்கு மகப்பேற்று மருத்துவ நிபுணர் அனுப்பி வைப்பு

pregnant-lady.jpgவவுனியா வில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கிய நலன்களைக் கவனிக்கவென சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சு விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் மருத்துவ நிபுணரொருவரும் உடனடியாக கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இருவர் கடமையில் உள்ளனர்.

இதேநேரம், நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணிகளை பிரசவத்திற்கென வவுனியா போதனா வைத்தியசாலைக்கும் செட்டிகுளம், பூவரசங்குளம் ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இப்பெண்களின் பிரசவத்திற்கு ஏற்ப இந்த ஆஸ்பத்திரிகளின் வசதிகளை துரிதமாக மேம்படுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த சுமார் 750 கர்ப்பிணிப் பெண்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 14 நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவசேவை வழங்கவென வவுனியா ஆயுர்வேத ஆஸ்பத்திரியின் ஒரு பகுதி சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ மாதுகளின் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுக்கவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை விரைவில் குறையும். அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

bandula_gunawadana.jpgஅரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இன்னும் இரண்டொரு வாரங்களுக்குள் வெகுவாகக் குறைவடையும் என்று வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அதேநேரம் சமையல் எரிவாயுவின் விலையில் மார்ச் மாதமளவில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

பணவீக்கம் குறைவடைந்து வருவதால் நூற்றுக்கு 28 ஆக விருந்த வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் வெகுவாகக் குறைவடைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக இது குறைவடையுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.எதிர்வரும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கான எவ்வித தட்டுப்பாடும் இருக்கமாட்டாதென தெரிவித்த அமைச்சர், குறைந்த விலையில் சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நெல் அறுவடைக்காலம் என்பதால் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியின் விலையில் வீழ்ச்சி ஏற்படும். பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்ட பின் இம்முறை ஒரு இலட்சத்து இருபதினாயிரம் ஏக்கரில் புதிதாக நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது. இதனால் போதுமானளவு அரிசி கையிருப்பில் வருவதுடன் குறைந்த விலையிலும் அரிசியை விற்பனை செய்ய முடியும்.

அண்மைக்காலங்களில் சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல் உட்பட எரிபொருட்கள் மற்றும் பஸ், ரயில் கட்டணங்கள் குறைவடைந்துள்ளதால் வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் குறைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டொரு வாரங்களில் வீழ்ச்சியும் பணவீக்கத்திற்கமைய நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக வாழ்க்கைச் செலவு குறைவடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.