செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கலைஞர் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்: மருத்துவர்கள்

karunanithy.jpgமுதல்வர் கருணாநிதி அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் தற்போது உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்றும், அவரோடு சேர்ந்த அரசியல் தொண்டாற்றுகிற அவரது நெருங்கிய நண்பர்கள் தான் பொறுப்பேற்று அவரை நல்ல முடிவெடுக்கத் தூண்ட வேண்டும் என்றும் முதல்வரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் 26ஆம் தேதியன்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தாங்க முடியாத முதுகு வலியுடன் உள்நோயாளியாக சேர்ந்த முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு பரிசோதனைகளை செய்து பார்த்து, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற சோதனைகளை நடத்திப் பார்த்து, அவரது முதுகுத் தண்டில் எல்.2 – எல்.3 இவற்றுக்கிடையே தசைப் பிடிப்பு இருப்பதை அறிந்து அதற்கு அறுவை சிகிச்சை செய்வது ஒன்றுதான் சரியான வழி என்பதை மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர்.

டெல்லியில் இருந்து டாக்டர் அரவிந்த் ஜெயஸ்வால் அவர்களையும் வரவழைத்து கலைஞரைப் பரிசோதிக்கச் செய்தோம். ராமச்சந்திரா மருத்துவ மனையில் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மார்த்தாண்டம் அவர்களை தலைமையில் 14 மருத்துவர்களை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அனைவரும் இணைந்து எடுத்த முடிவின்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என்று முடிவு செய்தபோது, முதல்வர் கருணாநிதி அவர்களின் இந்த வயதில் இவ்வளவு அபாயகரமானதும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதுமான அறுவை சிகிச்சையை மேற்கொள்வது பற்றி அய்யப்பாடுகள் தோன்றிய போதிலும், வேறு வழியில்லாத நிலையில் அறுவை சிகிச்சையை கடந்த 11ஆம் தேதி மேற்கொண்டோம்.

சுமார் மூன்றரை மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்று அனைவரும் மகிழத் தக்க வண்ணம் முதல்வர் கலைஞரின் முதுகு வலி நீங்கியது. இதுபற்றி அன்றையதினமே செய்தியாளர்களைச் சந்தித்து விவரங்களைக் கூறினோம்.

அறுவை சிகிச்சைக்கு பின் செய்யப்பட வேண்டிய சிகிச்சைகள் அனைத்தும் முழுமையாக நடைபெற்று அவரது உடல்நிலை தேறி வந்தது. அறுவை சிகிச்சையின்போது போடப்பட்ட ஐந்து தையல்களில் (23.02.09) இரண்டு தையல்கள் பிரிக்கப்பட்டு விட்டன. இன்னும் மூன்று தையல்கள் பிரிக்கப்பட வேண்டும். (25.02.09) டெல்லியில் இருந்து டாக்டர் ஜெயஸ்வால் அவர்கள் மீண்டும் சென்னைக்கு வரவிருக்கிறார்.

அப்போது எஞ்சிய மூன்று தையல்களும் பிரிக்கப்பட உள்ளன. அதன் பின்னரே முதல்வர் இல்லம் திரும்புவது பற்றி முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையே வெளியே நடைபெறும் அரசியல் சூழ்நிலைகள் முதல்வர் கருணாநிதியை, மனோரீதியாகப் பெரிதும் பாதிப்பதும், அந்தப் பிரச்சினைகளிலே அவர் அதிக அக்கறை செலுத்துவதும், ஓய்வெடுக்காமல் அதைப்பற்றியே அதிகாரிகளையும், கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசுவதும, திடீரென்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருப்பதும் நன்றாக தேறி வருகின்ற அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தை எங்களிடையே தோற்றுவித்துள்ளது.

எனவே அவர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுத்துக்கொண்டு, உடல்நலம் முழுவதுமாக தேறிய பின்னர் உண்ணாவிரதம் பற்றி யோசித்து முடிவெடுப்பது உசிதமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இது அவருடைய உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முடிவெடுக்க வேண்டிய பிரச்சனை என்பதால், இதில் அவரோடு சேர்ந்த அரசியல் தொண்டாற்றுகிற அவரது நெருங்கிய நண்பர்கள் தான் பொறுப்பேற்று அவரை நல்ல முடிவெடுக்கத் தூண்ட வேண்டும். எங்களுக்கும் மேலாக, எங்களையும் கடந்து தரப்படக் கூடிய நல்ல மருந்தாக அதுதான் இருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய படகு கண்டுபிடிப்பு

ltte-ship.jpgபுதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து புலிகளின் மிகப்பெரிய படகு மற்றும் சித்திரவதை முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.  ராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் புதுக்குடியிருப்புக்கு வடமேற்கே உள்ள தேவபுரம் பிரதேசத்திலிருந்து புலிகளின் மிகப் பெரியபடகையும், புதுக்குடியிருப்புக்கு மேற்கு பகுதியிலிருந்து சித்திரவதை முகாமையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினரால் இதுவரை கைப்பற்றப்பட்ட புலிகளின் படகுகளில் இதுவே மிகப்பெரியதாகும். இந்தப் படகின் இயந்திரமும், ஏனைய உபகரணங்களும் அகற்றப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். 60 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட இந்த படகை புலிகள் இழுத்துச் செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி பயனளிக்காத நிலையில் படையினரின் பிரவேசத்தை அடுத்து கைவிட்ட நிலையில் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புதுக்குடியிருப்புக்கு மேற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் சித்திரவதை முகாம் ஒன்றையும் இராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளனர். இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த பல சித்திரவதை கூடங்களும் இங்கு அமைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சபேந்திர சில்வா தலைமையிலான படையினர் இந்த முகாமைக் கைப்பற்றியுள்ளனர்.

ஒஸ்கார் விருதுகள் ஒரே பார்வையில்…சிறந்த திரைப்படம்:ஸ்லம்டொக் மில்லியனர்

ar-ragman.jpgசிறந்த நடிகர்: சீன் பென் (மில்க்)
சிறந்த நடிகை: கேத் வின்ஸ்லெட் (தி ரீடர்)

சிறந்த இயக்குநர்: டோனி போயல் (ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த பிறமொழிப்படம்: டிபார்ச்சர்ஸ் (இயக்கியவர் யோகிரோ டகிடா ஜப்பான்)
சிறந்த பாடல்: ஜெய் ஹோ ஸ்லம்டொக் மில்லியனர்( இசை:ஏ.ஆர். ரஹ்மான்)
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்( ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த படத்தொகுப்பு: க்ரிஸ் டிக்கென்ஸ் (ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த ஒலிக்கலவை: (ரெசுல் பூக்குட்டி, இயான் தாப், ரிச்சர்ட் ரைகி (ஸ்லம்டொக் மில்லியனர்)

சிறந்த ஒலித்தொகுப்பு: ரிச்சர்ட் கிங் (தி டார்க் நைட்)

சிறந்த காட்சித்தொகுப்பு: எரிக் பார்பா, ஸ்டீவ் ப்ரீக்ல் பர்ட் டால்டன், க்ரெய்க் பார்ரன்(தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்)

சிறந்த ஆவணப்படம்: மேகன் மைலன் (ஸ்மைல் பின்கி)
சிறந்த ஆவணப்படம்:ஜேம்ஸ் மார்ஷ் சைமன் சின் (மென்ஒன்வயர்)
சிறந்த துணைநடிகர்: ஹீத் லெட்ஜர் (தி டார்க் நைட்)
சிறந்த துணை நடிகை: பெனால்ஃப் க்ரூஸ் (விக்கி கிறிஸ்டினா பார்ஸிலோனா)
சிறந்த குறும்படம்: ஜோசென் அலெக்சாண்டர் (டாய்லேண்ட்)
சிறந்த ஒளிப்பதிவு: அன்ரனி மென்டில் (ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த ஒப்பனை: கிரெக் கேன்னடம்( தி க்யூரியஸ்கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்)
சிறந்த உடை வடிவமைப்பு: மைக்கேல் ஓக்கானர் (தி டச்சஸ்)
சிறந்த கலை வடிவமைப்பு: டொனால்ட் க்ரஹாம் விக்டோர் ஜே. சோல்ஃபோ (தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்)

சிறந்த அனிமேட்டட் குறும்படம்: குனியோ கடோ(லா மேய்ஸன் என் பெடிட்ஸ் க்யூப்ஸ்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஆண்ட்ரூ ஸ்டான்டன் (வால் ஈ)
சிறந்த உண்மை திரைக்கதை: டஸ்டின் லான்ஸ் ப்ளாக்(மில்க்)
சிறந்த திரைக்கதை (தழுவல்): சைமன் பஃபாய் (ஸ்லம்டொக் மில்லியனர்)

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக அமெரிக்கா 50 மில்லியன் டொலர் உதவி

medicine.jpgவன்னி யிலிருந்து இடம் பெயர்ந்துள்ள மக்களின் வைத்திய சேவைகளை முன்னெடுக்கவென, சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் வைத்திய உபகரணங்களை அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளது. இந்த மருந்துகள் ஏற்கனவே, முல்லைத்தீவில் விடுவிக்கப்பட்ட பகுதிகள் உட்பட வடபகுதியில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் வைத்திய சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார், 10 ஆயிரம் மக்களுக்கு 3 மாதகாலத்துக்குத் தேவையான மருந்துகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வவுனியா மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கென 12 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அங்கு தேவையான வைத்தியர்கள், தாதியர், மருத்துவ ஊழியர்கள், தொழில்நுட்பவியலாளர்களை ஏற்கனவே அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்னியிலுள்ள இந்திய வம்சாவளி மக்களை மலையகத்தில் மீண்டும் குடியேற்ற வேண்டும்

up-cun.jpgவன்னியில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் அதிகளவான இந்திய வம்சாவளி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை மீண்டும் மலையகத்தில் குடியேற்ற அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி.வி.சென்னன் இதற்கான முன்னேற்பாடாக மலையகத்தில் நலன்புரி நிலையமொன்றை அமைக்குமாறு கோரியுள்ளார். பதுளையிலுள்ள கட்சி பணிமனையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

பிரித்தானிய விசேட தூதுவரை இலங்கை அரசு நிராகரித்திருப்பது முறையற்ற செயலாகும். இந் நாட்டில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இலங்கை நாட்டில் குடியேற்றியது பிரித்தானிய அரசுதான். அந்நிலையில், இலங்கையின் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு பிரித்தானிய அரசுக்கு இருக்கவே செய்கின்றது. ஆகையினால், தமிழ் மக்களின் துயரினைப் போக்கும் வகையில் பிரித்தானிய அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பின்னிற்கக் கூடாது. பிரித்தானிய விசேட தூதுவரை இந்நாட்டிற்குள் பிரவேசிக்க இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும்.

நாட்டின் வட பகுதியில் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் பெருமளவில் குடியேறியுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் அம்மக்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றனர். நடைபெற்று வரும் யுத்தத்தினால் இம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் விடயத்தில் அரசுகருணை காட்ட வேண்டும். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இனம் கண்டு, அவர்களை மீண்டும் மலையகத்தில் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். இதற்கான முன்னேற்பாடாக மலையகத்தில் நலன்புரி நிலைய மொன்றினை அமைத்து வடபகுதி இந்திய வம்சாவளி தமிழ் மக்களை அந்நிலையத்தில் குடியமர்த்த வேண்டும். அதனையடுத்து அம்மக்களின் ஜீவனோபாயத்திற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவும் வேண்டும்.

நாட்டின் தென்பகுதியில் இடம் பெற்ற சம்பவங்களையடுத்தே, தென்பகுதி தமிழ் மக்கள் வட, கிழக்குப் பகுதிகளில் குடியேறினர். அங்கும் யுத்த சூழலினால் வாழ முடியாத அவலம் ஏற்பட்டிருக்கின்றது. இதனால், அம்மக்கள் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கே அகதிகளாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே அரசு இம்மக்கள் விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி செயல்படவேண்டும். அத்துடன் அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை அரசும் புலிகளும் கைவிடவும் வேண்டும்’ என்று கூறினார்.

குடாநாட்டில் இடம்பெயர்ந்தோரின் விபரங்கள் பிரதேச செயலக ரீதியாக மீண்டும் திரட்டப்படுகிறது

united-people.jpgஅகதிக ளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயமும் தேச நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இதனை மேற்கொள்கின்றன. பிரதேச செயலகங்களின் வழிகாட்டல்களின் கீழ் கிராம சேவையாளர்கள் இவ் விபரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியாக வினாக்கொத்து வழங்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அந்த வினாக் கொத்தில் குடும்பத்தினர் தொடர்பான வழமையான விபரங்களுடன் இடம்பெயர்ந்து வாழுமிடம் தொடர்பான தகவல்கள், சொந்த இடம் தொடர்பான தகவல்கள், நீடித்த தீர்வுக்கான விருப்பங்கள், நீடித்த தீர்வுக்குத் தேவைப்படும் உதவிகள், விரும்பிய நீடித்த தீர்வுக்கான முக்கிய தடைகள், நீடித்த மாற்றுத் தீர்வு,மாற்றுத் தீர்வுக்குத் தேவைப்படும் உதவிகள், மாற்றுத் தீர்வுக்கான முக்கிய தடைகள் போன்றன உட்பட பல கேள்விகளுக்கும் விடையளிக்குமாறு குடும்பத்தினர் கேட்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவல்களை உள்ளடக்கிய கேள்விக் கொத்தில் பல உப வினாக்களும் கேட்கப்பட்டுள்ளன. தகவல்களைப் பூரணப்படுத்திய பின்னர் “இவ் விபரங்களை அரசாங்கமும் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயமும் ஏனைய நிறுவனங்களும் நிலையான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக உபயோகிப்பதற்கு இணங்குகிறேன்’ என்ற வாசகத்தின் கீழ் குடும்பப் பிரதிநிதியின் ஒப்பமும் பெறப்படுகின்றது. இதேவேளை, தமது சொந்த இடங்களில் தங்களை மீளக் குடியமர அனுமதி வழங்குமாறு கோரி யாழ். மாவட்ட மக்கள் சார்பாக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதும் நீதிமன்றம் அதற்குச் சாதகமான முறையில் தீர்ப்பு வழங்கியதோடு பகுதி பகுதியாக மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவரெனவும் தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் மேற்படி வினாக்கொத்து வழங்கப்பட்ட விபரங்கள் சேகரிக்கின்ற செயற்பாடானது மக்கள் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் விடயத்தில் அரசியல்வாதிகள் உட்பட எவருமே அக்கறை காட்டாதது குறித்து விசனமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்கள், அடிக்கடி இவ்வாறான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றதேயன்றி ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமையால் தாங்கள் நம்பிக்கை இழந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர

ஏப்ரலில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூலையில் பொதுத் தேர்தல் இடம்பெறும்?

srilanka-parliament.jpgபாராளு மன்றம் ஏப்ரலில் கலைக்கப்பட்டு ஜூலையில் பொதுத் தேர்தலொன்று நடத்தப்படக் கூடுமென அரசியல் வட்டாரங்களிலிருந்து ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. படை நடவடிக்கைகளின் பெறுபேறுகளினால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தற்போது நிலைமைகள் சாதகமாக இருப்பதனால் இது பெரும்பாலும் நடைபெறக் கூடுமென்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அத்துடன், அண்மையில் நடைபெற்று முடிந்த சப்ரகமுவ, வடமத்திய, மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகளும் அதேபோல் ஏற்கனவே நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவும் அரசாங்கத்துக்கே சாதகமாக அமைந்தமையானது இவ்வாறானதொரு நகர்வுக்கு காரணமாக இருக்கலாமென்றும் தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாது, மேல் மாகாண சபையும் கலைக்கப்பட்டு தற்போது அதற்கான வேட்புமனு கோரல் நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் மத்திய கொழும்பு பிரதேசத்தை தவிர களுத்துறை, கம்பஹா மாவட்டங்களென மேல் மாகாணத்தின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கைகளே ஓங்கியிருப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது. பெரும்பாலும் மார்ச் மாத இறுதியில் மேல் மாகாண சபை தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேநேரம், எஞ்சியிருக்கும் ஊவா மற்றும் தென்மாகாண சபைகளை கலைப்பது பற்றி சித்திரை புத்தாண்டின் பின்னரே முடிவாகுமென அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறினார். எனினும் யுத்த வெற்றிகளால் தற்போது ஏற்பட்டிருக்கும் சாதகமான நிலையைப் பயன்படுத்தி பொதுத் தேர்தலொன்றை நடத்தினால் பெறுபேறுகளும் சாதகமாக இருக்குமென்பது அரசாங்கத்தின் கணிப்பீடாக இருக்கலாமென்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலைமையிலேயே பாராளுமன்றம் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தில் கலைக்கப்பட்டு ஜூலை மாதத்தில் பொதுத் தேர்லொன்று நடத்தப்படலாமென்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடனேயே முடிவுக்கு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஜனாதிபதியொருவரது பதவிக் காலத்தில் 4 வருடங்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமென்பதற்கு அமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்படுகிறது. இருப்பினும் அதற்கு முன்னதாக நடத்தப்படும் பொதுத் தேர்தல் முடிவுகளது சாதக பாதக நிலைமைகளைக் கொண்டே உரிய காலத்திற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவது பற்றி தீர்மானமாமென்று சுட்டிக்காட்டப்பட்டது.

வன்னியிலிருந்து காயமடைந்து வந்தவர்களை பொலனறுவை ஆஸ்பத்திரிக்கு மாற்றுவது நல்லதல்ல-ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

batticolo1.jpgமுல்லைத் தீவில் யுத்த சூழ்நிலை காரணமாக காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை பொலனறுவை வைத்தியசாலைக்கு மாற்றுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமற்றதென மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக அழைத்து வரப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் 178 பேர் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக பொலனறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை;

திருகோணமலை வைத்தியசாலையில் இட நெருக்கடி ஏற்பட்டிருப்பதைத் தவிர்க்கும் வகையில் இவர்கள் மாற்றப்பட்டிருந்தாலும் மட்டக்களப்பு போன்ற தமிழ் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு இவர்களை மாற்றுவது தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமானது என்றும் குறிப்பிட்டார். பொலனறுவை வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட சகலரும் பெரும்பான்மை இனத்தவரின் மொழியான சிங்களம் பேசுபவர்கள். சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளவர்களைப் பொறுத்தவரை தமிழ் மொழி பேசுபவர்கள் இதனால் மொழி ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் சென்று பார்வையிடுவது என்றால் பாதுகாப்புக் கெடுபிடிகள், போக்குவரத்து கெடுபிடிகள் அங்கு தங்கியிருப்பவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல அங்கு சேவையாற்றுபவர்கள் சேவை மனப்பான்மையுடன் இவர்களுக்கு சேவையாற்றினாலும் மக்களையும் விடுதலைப் புலிகளாக கருதுபவர்களும் உண்டு.

ஏற்கனவே உறவினர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இவர்கள் அங்கிருந்து அறிமுகமில்லாத இடமொன்றிற்கு மாற்றப்பட்டிருப்பதானது அவர்களிடையே தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்துமென்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடையே ஒருவித அச்சமும் பீதியும் இருப்பதை அறியக் கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார

பொருளாதார நெருக்கடியால் இனத்துவேசம் அதிகரிக்கும் – யூ.என்.எச்.சி.ஆர். ஆணையாளர் எச்சரிக்கை

economics.jpgசர்வதேச பொருளாதார நெருக்கடியானது அகதிகளின் தொகையை அதிகரிக்கும் என்றும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கச்செய்யும் எனவும் ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்ரனியோ கட்டரஸ் எச்சரித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் திங்கட்கிழமை நிருபர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனைக்கூறிய அவர் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் குற்றம் சாட்டும் நிலைமையை எதிர்பார்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். சில நாடுகளில் பொருளாதார நெருக்கடியானது அந்நியர்கள் தொடர்பான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் “பிறப்பாக்கியாக’ இருக்கும் என்று அவர் குறிப்பிட்டதுடன் எந்தநாடு என்று எதனையும் அவர் பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டவில்லை.

அரசியல்வாதி என்ற முறையில் நான் பெற்ற அனுபவத்தின் பிரகாரம் நாடொன்றில் நிலைமை மோசமாக இருக்கும்போது இரு விடயங்கள் இலக்குவைக்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது. ஒன்று அரசு மற்றையது வெளிநாட்டவர்கள் என்று முன்னாள் போர்த்துக்கல் பிரதமரான அன்ரனியோ கூறியுள்ளார். பொருளாதார நிலைமை மோசமடையும் போது உலகின் பல பகுதிகளில் வெளிநாட்டவர் மீது வெறுப்புக்கொள்ளும் போக்கு தவிர்க்க முடியாதது என்று கட்டரஸ் கூறியுள்ளார். உலக பொருளாதார நெருக்கடியான மோதல்கள் மற்றும் இடம்பெயர்ந்த அகதிகள் தொடர்பான நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்றும் கட்டரஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கங்கத்துடன் அகதிகள் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக அங்கு சென்றுள்ள அன்ரனியோ கட்டரஸ் ஆசிய பசுபிக்பிராந்தியத்தில் புகலிடம் தேடுவோரை அழைத்துச்செல்லும் நடவடிக்கைகளை இந்தோனேஸியா போதிய அளவுக்கு தடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் இழந்தன

sri-lanka-election.jpgமத்திய மாகாண சபைக்கு நுவரெலியா மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த பத்து சுயேச்சைக் குழுக்களும் கட்டுப் பணத்தை இழந்துள்ளன. மேற்படி சுயேச்சைக் குழுக்கள் ஒவ்வொன்றும் 30 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தியிருந்தன. மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 வீத வாக்குகளை எந்தவொரு சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொள்ள முடியாமையினாலேயே இந்நிலையேற்பட்டுள்ளது.

இம்முறை மாகாண சபையில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் ஐ.ம.சு.மு., ஐ.தே.க. தவிர்ந்த எந்தவொரு அரசியல் கட்சியும் ஒரு ஆசனத்தையும் பெற முடியவில்லை. இம்முறை மக்கள் விடுதலை முன்னணிக்கு நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்த மொத்த வாக்குகள் 3,039 ஆகும். இது மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 1.07 சதவீதமாகும்.