செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை- ரஜினி

13-rajini.jpgஅரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று மீண்டும் அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கவிஞர் வாலி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றிய இந்த கருத்தரங்குக்கு சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்த் அண்ணா அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்குள்ள கலைஞர் கருவூலத்தை சுற்றிப் பார்த்த ரஜினி, “கலைஞர் கருவூலத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. இதன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளவும் ஒரு நாள் போதாது’ என்றார்.

காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு “அவரது அழைப்புக்கு நன்றி. அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போது இல்லை. அரசியல் வாழ்க்கை பற்றி முடிவெடுத்தால் அது பற்றி யோசிப்பேன்’ என்றார் ரஜினிகாந்த்.

பின்னர் முதல்வர் கருணாநிதிக்குப் பக்கத்தில் அமர்ந்தபடி இரண்டரை மணிநேரம் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தார். திமுகவை உரசும் விதத்தில் ராகுலின் சமீபத்திய சென்னை விசிட் அமைந்திருந்தது. ரஜினியை காங்கிரசில் சேர அழைத்திருந்த ராகுல், அடுத்து தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கும் என்றார்.

ராகுலுக்கு சரியான பதிலடி தரவே ரஜினியை அறிவாலயத்துக்கு அழைத்து, அவர் வாயாலேயே காங்கிரஸ்காரர்களுக்கு பதிலும் சொல்ல வைத்தார் கலைஞர் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் யோசனையை பரிசீலிக்க ஐசிசி முடிவு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதுள்ள நடைமுறையை முறையை மாற்றி இரு அணிகளுக்கும் தலா ஒரு இன்னிங்ஸ் என்பதற்கு பதிலாக, 25 ஓவர்களாக பிரித்து 2 இன்னிங்ஸ் வழங்க வேண்டும் என்ற சச்சின் டெண்டுல்கரின் யோசனை பரிசீலனை செய்ய உள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் அதிரடியான பிரபலத்தால் 50 ஓவர் (ஒருநாள்) போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற கருத்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இதனால் 50 ஓவர் போட்டியை மேலும் விறுவிறுப்பு ஏற்படுத்தும் வகையில் இரண்டு 25 ஓவர்களாக பிரித்து விளையாட வேண்டும் என்று ஒரு சில நாட்களுக்கு முன் டெண்டுல்கர் யோசனை தெரிவித்திருந்தார். இந்த யோசனைக்கு ஒரு சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவும், கபில்தேவ் உள்ளிட்ட ஒரு சிலர் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில் சச்சினின் யோசனை குறித்து சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐ.சி.சி) மேலாளர் (கிரிக்கெட்) ரிச்சர்ட்சன் கூறுகையில், சச்சினின் யோசனை நல்லது தான். இந்த யோசனையை தென்ஆப்ரிக்கா பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும். பகலிரவு போட்டியை பொறுத்தமட்டில் ஒரு அணிக்கு பகலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பும், மற்றொரு அணிக்கு இரவில் பேட்டிங் செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இதனால் ஒரு அணிக்கு சாதமாக சூழலும், எதிரணிக்கு சாதகமற்ற சூழலும் ஏற்படுகிறது. பூவா-தலையா ஜெயித்து முதலில் ஆடும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதை முன்கூட்டியே கணித்து விட முடிகிறது.

சச்சினின் யோசனை குறித்து ஐ.சி.சி. கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். 20 ஓவர் போட்டி பிரபலத்தால் 50 ஓவர் போட்டிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும். அதே நேரத்தில் 25 ஓவர்களாக பிரித்து ஆடுவதால் பேட்ஸ்மேன்கள் அதிக ரன் குவிக்க முடியாத நிலையும் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

பல்கலைக்கழக அனுமதியில் அநீதி இல்லை’ – அமைச்சர் விஷ்வ வர்ணபால

viswa-999.jpgபல்கலைக் கழக அனுமதியில் எவருக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாதென உயர் கல்வியமைச்சர் விஷ்வ வர்ணபால தெரிவித்தார். கொழும்பு-ஸ்ரீஜயவர்தன புர பல்கலைக் கழகங்களுக்கிடையில் மாணவர் அனுமதி தொடர்பில் நிலவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், கிழக்குப் பல்கலையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எம்.பி. முன்வைத்த கவனயீர்ப்புப் பிரேரணைக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, 2008, 2009ம் ஆண்டுகளுக்கு கொழும்பு பல்கலைக்கழகத் தில் இருந்த வெற்றிடங்களை கருத்திற் கொண்டு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இம்முறை 25 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதும் இன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களுக்கான பதிவுகள் இடம்பெற்றதாக பல்கலைக்கழக உபவேந்தர் என்னுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தார். பகிடிவதையைப் பல்கலைக்கழகங்களிலிருந்து இல்லா தொழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போன்று பல் கலைக்கழக மாணவர்கள் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சேர்த்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக அமைச்சர் பி. தயாரத்னவுடன் பேச்சு நடத்தி உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. இன, மதம் என மாணவர்களைப் பிரிக்காது சகலரும் கற்கும் பல்கலைக்கழகங்களாக சகல பல்கலைக்கழங்களையும் உருவாக்குவதே எமது நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

‘ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் போராட்டம் முடிந்தது

13-jet-airways.jpgஐந்து நாட்களாக நடந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் போராட்டம் நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் விமானங்கள் இயங்கத் துவங்கியுள்ளனர். சில மூத்த பைலட்டுகளை ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பைலட்டுகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஸ்டிரைக் என்று அறிவிககாமல் அவர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றதால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை முடங்கியது.

இதனால் நாடு முழுவதும் விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். செத்த வீட்டில் புடுங்குவது மாதிரி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜய் மல்லையாவின் கிங்பிஷ்ஷர் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தங்கள் ஐந்து மடங்காக உயர்த்தி தங்கள் குறுகிய புத்தியைக் காட்டின. இந் நிலையில் ஜெட் நிர்வாகம், மத்திய விமானத்துறை அதிகாரிகள், பைலட்டுகள் இடையே நேற்று இரவு இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை துவங்கியது. சுமார் 7 மணி நேரம் நடந்து பேச்சுவார்த்தையில் சுமூகமான நிலை எட்டப்பட்டது.

இதையடுத்து இன்று அதிகாலை முதல் விமான சேவைகள் மெல்ல மெல்ல மீண்டும் துவங்கியுள்ளன. இதில் சர்வதேச விமான சேவைகளும் அடக்கம்.

பேச்சுவார்தையில் எந்த வகையான சமரசம் ஏற்பட்டது என்பதை இரு தரப்பும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களை ஜெட் நிர்வாகம் மீண்டும் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டதாகவும், அதே போல ஜெட் விமானிகள் சங்கம் அமைப்பதை தவி்ர்க்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

வடக்கு கிழக்கில் முப்படை முகாம்கள் அகற்றப்பட மாட்டா : ஜனாதிபதி

வடக்கு கிழக்கில் தற்போது அமைக்கப்பட்டுள்ள முப்படை முகாம்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முப்படையினரை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக் குடியேற்ற வேண்டும் எனவும், இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு தாம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், இதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதும் இந்த விடயம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது

யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் மழையால் பாதிப்பு

அமெரிக்காவில் நடந்து வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முக்கிய போட்டிகள் கனமழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் இப்போட்டிகள் மழை காரணமாக நேற்று முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நாளையும், இறுதிப்போட்டி 14ஆம் தேதியும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பெண்களுக்கான அரையிறுதிப் போட்டிகளும் ஒத்திவைக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம்: அமைச்சர் சமரசிங்க இன்று ஜெனீவா பயணம்

mahinda-samarasinha.jpgஐ. நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஜெனீவா செல்லவுள்ளார்.

நாளை திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு அமைச்சர் பேசவுள்ளார்.

ஜெனீவா செல்லும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் சட்ட மா அதிபரும் செல்லவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் பணிப்பாளர் நாயகம் நவநீதம்பிள்ளை, சட்டத்துக்குப் புறம்பான படு கொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட தூதுவர் பேராசிரியர் பிலிப் அலீஸ்டன், அகதிகளுக்கான ஐ. நா. பிரதிநிதி அண்டோனியோ குட்டேரஸ் ஆகியோரையும் அமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இவர்களுடனான சந்திப்பின்போது ஊடகவியலாளர் திஸநாயகம் தொடர்பாக கேள்விகள் எழும்பட்சத்தில் அமைச்சருடன் செல்லும் சட்ட மா அதிபர் விளக்கமளிப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார மேம்பாடு – ஜப்பான் ரூ. 36 மில். ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீளக் குடியமர்ந்துள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தின் கீழ் ஜப்பானிய அரசாங்கம் 36 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 40 விவசாயக் கிணறுகள் அமை க்கப்படவுள்ளதுடன், 40 தண்ணீர் பம்பிகளும் வழங்கப்படவிருக்கின்றன. அதேநேரம் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 8 கிராம சேவகர் பிரிவில் வாழும் மக்களை வாழ்வாதார ரீதியாக வலுப்படுத்த வென செயலமர்வுகளும் நடத்தப்படவிருக்கின்றன.

சனல் 4 – பிரிட்டன் ஊடக முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை முறையிடும்

mahinda-samarasinha.jpgஇலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்திலான வீடியோ காட்சியை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக் காட்சி நிறுவனத்திற்கு எதிராக பிரிட்டனிலுள்ள ஊடக முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை முறைப்பாடு செய்யவுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இனிமேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் மேற்படி தொலைக்கட்சி நிறுவனம் மட்டுமல்ல ஏனைய ஊடக நிறுவனங்களும் செயற்படக் கூடாது என்பதற்காக இலங்கை இந்த விடயத்தில் மிக கவனமாக செயற்படுகிறது என்றும் தெரிவித்தார்.

ஐ. நா. பாதுகாபபுசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி வீடியோ காட்சி பொய்யானது, சோடிக்கப்பட்ட கட்டுக்கதை என்பதை உறுதிபட நிரூபித்துவிட்டோம்.  இதன் அறிக்கை நேற்று ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கி மூன், நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹேய்ம், சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் என்பவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக சில தீய சக்திகள் இயங்கி வருகின்றன என்பதை உணர முடிகிறது – திட்டமிட்டு செயற்படும் இவர்கள் யார் என்பது பற்றி எமக்குத் தெரியும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறோம். மேற்படி வீடியோ காட்சி போன்று வவுனியா நிவாரணக் கிராமங்களைப் பற்றிய வீடியோ காட்சியொன்றையும் சனல் 4 ஒளிபரப்பியது. இதுபற்றி உங்களுக்குத் தெரியுமா என்று அமைச்சரிடம் வினவியபோது.

தெரியும், அந்த வீடியோ காட்சியை ஒளிபரப்புவதற்கு முன்னதாக சனல் 4 எம்முடன் தொடர்புகொண்டு வினவியதுடன் எமது அபிப்பிராயத்தையும் சேர்த்து ஒளிபரப்பினார்கள். அவர்களுக்கு இலங்கை தொடர்பாக செய்திகளோ, வீடியோ காட்சிகளோ கிடைக்கும் பட்சத்தில் எம்மிடம் கலந்து பேசவேண்டும். அதனை விடுத்து எழுந்தமானத்தில் ஒளிபரப்பக்கூடாது. இனிமேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்கப்படமாட்டாது என்று கூறினார்.

இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாக இது அமைந்துள்ளது. செனல் 4 நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் சட்டநடவடிக்கை எடுப்பது பற்றியும் இலங்கை ஆராய்ந்து வருகிறது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஒத்துழையாமை போராட்டம் உக்கிரம்: தோட்டங்களில் பணிகள் ஸ்தம்பிதம்

sri-lanka-upcountry.jpgமுதலாளிமார் சம்மேளனத்துடனான ஏழாவது சுற்றுப் பேச்சும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

பதினொரு தினங்களாக முன்னெடுக்கப்படும் இப்போராட்டம் நேற்று முதல் மாற்று வடிவம் பெற ஆரம்பித்துள்ளதாக தொழிற் சங்கங்கள் தெரிவித்தன. இதனால் தோட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

கறுப்புப் பட்டி அணிந்து தொழிலாளர்கள் தங்களது பணிகளில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதேவேளை, தங்களது 500 ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம் வெற்றி பெறவேண்டுமெனக் கோரி இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டதாக தோட்டங்களிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.

இதற்கிடையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள் நேற்று மாலை தங்களுக்குள் சந்தித்துப் பேசின.

கொழும்பில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, முதலாளிமார் சம்மேளனம் தங்களது நிலைப்பாட்டில் விடாப்பிடியக இருப்பதனால், அவர்களுடனான பேச்சைத் தவிர்த்து போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக இ. தொ. கா. தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் கூறினார்.