மக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையிலான நீர்க் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறும் அது தொடர்பாக அரசினால் வெளியிடப் பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் ஜே.வி.பி. அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிமை சபாநாயகரின் அனுமதியுடன் விஷேட கூற்றொன்றை வெளியிட்டு உரை நிகழ்த்துகையிலேயே இதனை வலியுறுத்திய ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியதாவது;
பெப்ரவரி 15 ஆம் திகதியிலிருந்து நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படப் போவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நீர் வழங்கல் வடிகால் மற்றும் வடிகாலமைப்புச் சபையிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இது சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் அவர்களது தொழிற்துறையையும் அநாவசியமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
இதற்கு முன்னர் வீட்டுப் பாவனைக்கான நீரைப் பெற்றுக் கொள்ளும் போது மாதாந்தம் 50 ரூபா நிலையான கட்டணம் அறவிடப்பட்டது. என்றாலும் மேற்படி நிலையான கட்டணத்துக்குப் பதிலாக 50 ரூபாவிலிருந்து 1,600 ரூபா வரையிலான மாதாந்தச் சேவைக் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கைச் செலவைத் தாக்குப் பிடிக்க முடியாத மக்கள் தலையில் மேலும் சுமையேற்றுவதாகவே இது இருக்கும்.
எமது நாட்டிலுள்ள பெரும்பாலான வீடுகளில் மாதாந்தம் 15 க்கும் 25க்கும் இடைப்பட்ட அலகு நீரையே பயன்படுத்துகின்றனர். அவர்களது நீர்க் கட்டணம் 23 மடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக 20 அலகுகள் நீரைப் பயன்படுத்தும் வீட்டுக்கான கட்டணம் 131 ரூபாவிலிருந்து 397.60 ரூபா வரை 203.51% அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. ஆகக் குறைந்தளவு நீரைப் பயன்படுத்துவதற்காக கணிக்கப்படும் வீடுகளுக்கான நீர்க் கட்டணம் 84 ரூபாவிலிருந்து 218.40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் 40 அலகுகள் வரை நீரைப் பயன்படுத்துகின்றனர். அவர்களது மாதாந்த நீர்க் கட்டணம் 2,464 ரூபாவாக அதிகரிக்கப்படப் போகின்றது. இவ்வாறு நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்படுவது மக்கள் மீது அதிக சுமையை ஏற்றுவதாகவே இருக்கும்.
சமுர்த்தி குடும்பங்களுக்காக விஷேட நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தாலும் 15 அலகுகளுக்கும் குறைவாக நீரைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கே இந்த நிவாரணம் வழங்கப்படும். 16 அலகுகளுக்கு மேல் அதிகரிக்கும் போது ஏனைய பாவனையாளர்களைப் போன்று அவர்களும் நீர்ப் பாவனை கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பெரும்பான்மையான வீடுகளில் நீர்ப் பாவனை 15 அலகுகளுக்கு மேல் இருப்பதால் இந்த நிவாரணம் வெறும் கண் துடைப்பு மாத்திரமே.
மத ஸ்தாபனங்களுக்காக இதுவரை வழங்கப்பட்டு வந்த 50 ரூபா கட்டணம் 50 ரூபாவுக்கும் 1,600 ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகை வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தேநீர் கடைகளைப் போன்ற சிறு கடைகளுக்கான நீர்ப் பாவனை கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது தேநீர் கடைகளும் சிறு ஹோட்டல்களும் ஆகக் குறைந்தது 50 அலகுகள் நீரைப் பயன்படுத்துகின்றன. இதுவரை அவர்களிடமிருந்து 70 ரூபா நிலையான கட்டணமாக அறவிடப்பட்டது. புதிய கட்டணத்துக்கேற்ப நிலையான கட்டணம் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தேநீர் கோப்பையிலிருந்து அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்படும். இது சாதாரண பொதுமக்களைப் பாதிக்கக் கூடியதாகும்.
அதேபோன்று, கைத்தொழில் துறையின் நீர்ப் பாவனை கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் மாதமொன்றுக்கு 20,000 அலகுகளுக்கும் மேலாக நீர்ப் பாவனை செய்யப்படுகிறது. பதிய கட்டணத்தின் படி மாதாந்த நீர்வழங்கலுக்கான கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் பொதுவாக 1,000 அலகுகள் நீர்ப் பாவனை செய்யப்படுகிறது. அவ்வாறான தொழிற்சாலைகள் மாதாந்தக் கட்டணமாக 4,000 ரூபா செலுத்த வேண்டி ஏற்படும். பொருளாதார நெருக்கடியின் காரணமாக துன்பத்துக்குள்ளாகியிருக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு இந்த விலை அதிகரிப்பு மேலும் சுமையாக இருக்கும். நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் உலகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு அந்தந்த நாடுகள் நிவாரணம் வழங்கும் நிலையில் எமது நாட்டுத் தொழிற்சாலைகளுக்கு மேலும் சுமையேற்றுவது தொடர்பாக எமது எதிர்ப்பை அரசாங்கத்துக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.
சாதாரண பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கும் நாட்டின் தொழிற்சாலைகளை வீழ்ச்சியடையச் செய்யக்கூடிய நீர்க் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகின்றோம். பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.