செய்திகள்

செய்திகள்

செய்திகள்

முதலீட்டாளாகளே கிழக்கை நோக்கி வாருங்கள்!- முரளீதரன் எம். பி.

karuna-mp.jpgமுதலீட்டா ளர்கள் அச்சமின்றி கிழக்குக்கு விஜயம் செய்து தொழிற்துறைகளில் முதலீடுகளை  மேற்கொள்ளலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணாஅம்மான்) அழைப்பு விடுத்தார். கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கமவின் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்ற  கிழக்கு மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புக்கள் என்ற தொணிப்பொருளிலான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக பல பகுதிகளிலம் முதலீடுகளை மேற்கொண்டு வரும் முதலீட்டாளர்களே கிழக்கை நோக்கி வாருங்கள். அங்கு உங்கள் முதலீடுகளைச் செய்து கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக ஒத்துழைப்பு வழங்குங்கள். நீங்கள் எவ்வித அச்சமும்கொள்ளத் தேவையில்லை அங்கு பூரண அமைதி நிலவுகின்றது என்பதற்கு நாம் உத்தரவாதம் அளிக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படாமைக்கு சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் இருந்த பிரதிநிதிகளே காரணமே அன்றி அரசாங்கம் அல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிழக்கையும் கிழக்கு மக்களையும் நன்கு கவனிப்பார்; என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது.

பல தசாப்தங்களின் பின்னர் ஜனாதிபதியின் ஆலோசணைக்கு இணங்க வடக்கிலும் கிழக்கிலும் பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இப்பிரதேசங்களில் உங்களுக்கும் முதலீடுகளைச் செய்வதற்கு வாய்ப்பக்கிட்டியுள்ளது. கிழக்குக்கு ஒரு முறை வந்து பாருங்கள். அங்கு நீங்கள் விரும்பிய உங்களுக்குத் தகுதியான துறைகளில் உங்கள் முதலீடுகளைச் செய்யுங்கள். உங்களுக்குத் தேவையான வசதிகள் அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்படும். பயிர்ச்செய்கைக்கு ஏற்ற மண்வளத்தை கிழக்கு மாகாணம் கொண்டுள்ளது.

சுற்றுலா ஹோட்டல்கள், தொழிற்சாலைகள்,  மீன்பிடித்துறை சார் தொழிற் துறைகள், விவசாயத்துறை  என எந்தத் துறையிலும் உங்கள் முதலீடுகளைச் செய்யலாம் அவற்றுக்கு வேண்டிய காணிகள் மற்றும் உதவிகளை வழங்க நாம் காத்திருக்கிறோம் என விநாயகமூர்த்தி முரளீதரன் மேலும் தெரிவித்தார்.

புத்தளம் தொகுதி நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலயத்தில் இன்று மீள் வாக்குபதிவு

sri-lanka-election.jpgபுத்தளம் தொகுதி கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட நாயக்கர்சேனை கிராமத்திலுள்ள தமிழ் வித்தியாலயத்தில் இன்று தேர்தல் மீள்வாக்குப்பதிவு இடம்பெறுகிறது. குறிப்பிட்ட பாடசாலையில் இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனையிட்டு அனைவரது கவனமும் இந்தக் கிராமத்தின் மீது திரும்பியுள்ளது. நாயக்கர்சேனை பாடசாலையில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் நேரகாலத்தோடு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 14ம் திகதி வடமேல் மாகாண சபைக்கான தேர்தல் நடந்தது. இதன்போது புத்தளம் மாவட்டத்தில் மேற்படி தமிழ் வித்தியாலய வாக்குச் சாவடியில் மோசடிகள் இடம்பெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்தச் சாவடியின் வாக்குகளை தேர்தல்கள் ஆணையாளர் ரத்துச் செய்திருந்தார். இதனையொட்டியே இவ்வாக்குச் சாவடியில் இன்று வாக்குப்பதிவு இடம்பெறுகிறது.

இன்று நடைபெறும் இந்தகுட்டித் தேர்தலையிட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயக் கிராமமான நாயக்கர் சேனையில் 1195 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குகள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் இதுவரையும் வெளியிடப்படவில்லை. இரத்துச் செய்யப்பட்ட நாயக்கர்சேனை சாவடியைத் தவிர்த்து கிடைக்கப்பெற்ற உத்தியோகப் பற்றற்ற முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 5 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. நாயக்கர் சேனை முடிவுகள் அறிவிக்கப்பட்டால் இந்த முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவுக்கு முன்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களின் விபரங்களும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துவகைகளுக்கான தேசிய கொள்கைத்திட்டம் இல்லாமையால் பெருமளவு நிதி துஷ்பிரயோகம் – சுகாதார சேவைகள் சங்கம் குற்றச்சாட்டு

medicine.jpgமருந்து வகைகளுக்கான தேசிய கொள்கைத் திட்டத்தை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நிதியை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்தமைக்கு சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேரடியாக பதிலளிக்க வேண்டுமென்று அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார். இக்கொள்கைத் திட்டத்தை அமுல்படுத்த முடியாமற் போனமை காரணமாக பெதடீன் கைய்ட்றோசோல் ஹட் மற்றும் மோர்ப்பின் போன்ற வலிநிவாரண மருந்துவகைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும் சுகாதார சேவைகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான அறுவைச் சிகிச்சையின் போது வலி நிவாரண மாத்திரைகளாக பெதடீன் உபயோகிக்கப்படுகிறது. இந்த மருந்துகள், அரசாங்க வைத்திய சாலைக்கு விநியோகிக்கப்படாமையால் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சைகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், வைத்திய சாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவைச்சிகிச்சைப் பிரிவு மற்றும் அனைத்து மருத்துவப் பிரிவின் சிகிச்சைப் பணிகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குமாரசிங்க தெரிவித்தார். சுகாதார அமைச்சு ஒரு மாதத்துக்கு முன்னர் கொள்வனவு செய்த ஒருதொகுதி பெதடீன் மருந்துகள் காலாவதியானவை என தெரிய வந்ததையடுத்து பாவனையில் இருந்து அவை அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காலாவதியான இம்மருந்துகளை அப்புறப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமாக சுகாதார அமைச்சுக்கு பெருமளவு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வைத்தியசாலைகளில் மோர்ப்பின் மருந்தை பாவிக்குமாறு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மருந்தின் கையிருப்பு முடிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் பால்மா தொழிற்சாலை உருவாக்க திட்டம் – அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க

cp-ratnayaka.jpgமட்டக் களப்பில் சேகரிக்கப்படுகின்ற பசும்பாலை அம்பேவல தொழிற்சாலைக்குக் கொண்டு சென்று பால்மாவாக மாற்றி மீண்டும் மட்டக்களப்புக்கு கொண்டு செல்வதை விடுத்து அங்கேயே பால்மா தொழிற்சாலையை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 

பாலின் பாவனையை அதிகரிப்பதற்காக கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் பசுவதை அதிகரித்து வருகிறது. இதனை உடனடியாக கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்து, பெளத்த, இஸ்லாம், கிறிஸ்தவ மதகுருமார் மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர் சங்கத்தினர், இறைச்சி வகை உண்பவர்களின் சங்கத்தினர் போன்றவர்களின் ஆலோசனைகளுடனேயே விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. தேசிய மட்டத்தில் பசும்பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதே இதன் பிரதான நோக்கம் எனவும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க தெரிவித்தார். விலங்குகள் திருத்தச் சட்டத்தை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசும் போதே அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க திருத்தச் சட்டத்தை சமர்ப்பித்து பேசினார்.

பசுவை ஒரு தாயாகவே கருதுகிறோம். நல்ல ஆரோக்கியமான நபராக உருவாவதற்கு தாயின் பால் போன்றே பசுவின் பால் எமக்கு கிடைக்கிறது. தாயாக புனிதமாக போற்றப்பட வேண்டிய பசுவை மிகவும் கொடூரமாக கொல்லும் இழிவு நிலைக்கு மனிதர்கள் ஆளாகிவிட்டார்கள். எமது சமூகம் அந்தளவுக்கு முரட்டுத்தனமும், தன்னலமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்திற்குத் தேவையான பாலை வழங்கும் பசுவை பலாத்காரமாக கடத்துகிறார்கள். அல்லது களவாடுகிறார்கள். இதனால் இக் குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல அக் குழந்தைகளின் தாய் களவாடப்படுகிறார். கொல்லப்படுகிறார். சட்ட ரீதியாக இதற்கு கிடைக்கும் தண்டனை என்ன? வெறும் 500 ரூபா அல்லது 50 ரூபா மட்டும் தான். இந்த நிலை மாற வேண்டும். குறிப்பாக பொலிஸ் மா அதிபருடனும், இது தொடர்பாக பேசி இருக்கிறோம். லொறிகளில் சட்ட விரோதமாக அளவுக்கதிகமான மாடுகளை ஏற்றி வருவதை தடை செய்தல் அவ்வாறு ஏற்றி வரும் நபர்களை கைது செய்தல் மாடுகளை கைப்பற்றுதல், போன்ற நடவடிக்கைகளுடன் அதி கூடிய தண்டனைகள் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பசுக்களை வளர்ப்பவர்களுக்கு காப்புறுதித் திட்டமும் அமுல் படுத்தப்படல் வேண்டும். இலங்கையில் பால்மா இறக்குமதிக்காக 60,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எனினும் பாலின் பாவனையை அதிகரிக்கச் செய்ததன் பின்னர் 45,000 மில்லியன் ரூபாவுக்கு குறைந்துள்ளது என்றும் அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க கூறினார்.

புலிகள் இயக்கம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு இலங்கை வரவேற்பு

anura-piriyadarshana-yappa.jpgபுலிகள் இயக்கம் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் தெளிவு படுத்தியுள்ளமையை அரசாங்கம் வரவேற்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான தகவல் ஊடக்கத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

“இந்தியாவின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தியபோது அமளி துமளி ஏற்பட்டதாக அறிகிறோம். என்றாலும் புலிகள் இயக்கம் தொடர்பில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு பாராட்டுக்குரியது” என்று அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார முன்னெடுப்பு செயற்திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

glperisss.jpgஇது தொடர்பான யோசனைகள் அடங்கிய பிரேரணையொன்றை, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பொருளாதார முன்னெடுப்பு யோசனைகள் தொடர்பில் அமைச்சரவை இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் தீர்மானமொன்று மேற்கொள்ளப் படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். நிதி நிறுவனங்களில் (பினான்ஸ், லீசிங்) தவணைக் கட்டண முறையில் வாகனங்களைக் கொள்வனவு செய்து, செலுத்த முடியாத நிலையில் உள்ள சாதாரண மக்களுக்கு நிவாரணமளிக்கும் திட்டமொன்றையும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளதாக பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை மேல் மாகாணத்தில் பொருளாதாரம் 14% வளர்ச்சிப் பாதையை எட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். முழு நாட்டினதும் பொருளாதாரம் 6.4% வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றவேளையில் மேல் மாகாணத்தில் சகல துறைகளிலும் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சியைக் கண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வளர்ச்சியானது இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகத்துக்கு நெருக்கமானது என்று தெரிவித்த அமைச்சர் பீரிஸ், நாட்டில் நிரந்தர சமாதானம் நிலைநாட்டப்பட்டதன் பின்னர், பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும்.

ஏ-9 பாதை திறக்கப்படுவதாலும், கிழக்கு மாகாணத்தில் இது வரை செய்கை பண்ணப்படாதிருந்த ஆயிரக்கணக்கான காணிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படுவதாலும், இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. உதாரணமாக “எயார்ரெல்” நிறுவனத்தைக் குறிப்பிடலாம்.” என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், “உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலையில் பேணுவதற்கு முடிந்துள்ளது.

வங்கிக் கூட்டமைப்பை வலுவாக்குவதற்குத் தக்கதருணத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம், வங்கி முறைமையில் மக்கள் நம்பிக்கைகொள்ளும் நிலை மேம்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதித் துறையினருக்குப் பாரிய ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

சர்வதேச பிரதிநிதிகள் பாராளுமன்றம் வருகை

sri-lanka-parliment.jpgசர்வதேச அபிவிருத்தி மதிப்பீடு பயிற்சி கருத்திட்ட அங்கத்தவர்கள் வியாழக்கிழமை பாராளுமன்றம் வந்திருந்தனர்.

சபாநாயகர் கலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்த இவர்களை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார சபைக்கு அறிமுகப்படுத்தி நல்வரவு கூறி வரவேற்றதுடன், சபையிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மேசையைத் தட்டி அவர்களை வரவேற்கும் முகமாக ஆதரவு வெளியிட்டனர்.

பல்கலைக்கழகம் செல்லமுடியாதவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிக்கல்லூரிகள் அமைக்கப்படும் -உயர்கல்வி அமைச்சர்

உயர் கல்விக்கு பிரவேசிக்க முடியாத மாணவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சிக்கல்லூரிகளை அமைத்து தொழில் நுட்பப் பயிற்சிகளை அளிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ணபால தெரிவித்துள்ளார்.  கேகாலையில் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியை திறந்து வைத்துப் பேசுகையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், இன்று உலக நாடுகளில் தொழில்நுட்பத்துறை நவீன முறையில் வளர்ச்சி பெற்று வருகின்றது. கணினி மற்றும் ஆங்கில மொழி அறிவு இன்று மாணவர்களுக்கு அவசியம் தேவை. எந்தத் துறையிலும் கணினி முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவேதான் பாடசாலைகளில் உயர் கல்வி கற்றுவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளிப்பது காலத்தின் தேவையாகும்.

வருடாந்தம் க.பொ.த.உயர்தர கல்வி கற்று பரீட்சையில் திறமையாக சித்தி பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களில் சிறு தொகையினரே பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலைமையால்தான் அரசு பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு இவ்வாறான தொழில் நுட்பப் பயிற்சிக்கல்லூரிகளை நாடு முழுவதும் நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் பிள்ளைகள் நாட்டின் அபிவிருத்திக்கு பங்கு பற்றுவதற்கேற்ற கல்வி முறையே நாட்டுக்குத் தேவையாகும்.

பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள் தொழில் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர். அவர்கள் தமக்கு வேலைதருமாறு வீதிகளில் ஊர்வலம் செய்கின்றனர். ஆனால் வெளிநாடுகளில் பட்டதாரிகள் எவருமே இவ்வாறு ஊர்வலங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடத்துவதில்லை என்றார்.

வக்கீல்கள் ஆவேசம்:போலீஸ் ஓய்வறையை எரித்தனர்

court-tamilnadu.jpgசென்னை ஐகோர்ட்டில் நேற்று போலீசாருக்கும் வக்கீல்களுக்கு பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.தாம்பரம் கோர்ட்டில் வக்கீல்கள் சங்க தலைவர் ஸ்ரீராம் தலைமையில் வக்கீல்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஓய்வறையை அடித்து நொறுக்கினர். அங்கிருந்து மேஜை, நாற்காலிகளை வெளியில் கொண்டுவந்துபோட்டு தீ வைத்து கொளுத்தினர். கோர்ட் முன்பு ஜிஎஸ்டி சாலையில் மறியல் செய்து வாகனங்களை தடுத்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையில் இயக்குநர் சீமான் கைது

seeman-1302.jpg
திருநெல்வேலி  காவல் ஆணையர் முன் சரண்ணடைய வந்த இயக்குநர் சீமானை  போலீசார்  கைது செய்தனர். கடந்த 12ம் தேதி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தனர். டைரக்டர் சீமான், அவர்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளை தாக்கி பேசியதாகவும் புதுச்சேரி போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் சீமானை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி போலீசார் செயல்பட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கில் புதுச்சேரி போலீசார் கைது செய்தால், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.  இந்நிலையில் 19ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று (19.02.09) அல்லது நாளைக்குள் (20.02.09) கைது செய்துவிடுவோம் என்றார். மேலும் சீமானை கைது செய்வதற்காக 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதையடுத்து இன்று நெல்லையில் இயக்குநர் சீமான் கைது  செய்யப்பட்டுள்ளார்.