செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஆபாசப்படங்கள் பார்ப்பதை தவிர்க்குமாறு கணினி நிலையங்களில் அறிவித்தல்கள்

இணையத்தளங்கள் மூலம் ஆபாசப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் எச்சரித்துள்ளனர். தனியார் தொலைத்தொடர்பு நிலையங்களில் இணையத்தளங்களை பயன்படுத்துவது குறித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தனியார் தொலைத்தொடர்பு நிலையங்கள் இணையத்தளங்களைப் பயன்படுத்தும் நிலையங்களிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எவராவது ஆபாசப்படங்களைப் பார்ப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அந்த நிலையங்கள் மூடப்படும் எனவும் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள இந்த நிலையங்களின் உரிமையாளர்களுடன் பொலிஸார் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

அரசு அண்மையில் ஆபாசப்படங்கள் தொடர்பான சில இணையத்தளங்களை தடை செய்துள்ளதையடுத்து பொலிஸார் இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.  இதேவேளை, சில தனியார் தொலைத்தொடர்பு நிலையங்கள், கணினி பயிற்சி நிலையங்கள், கணினி நிலையங்கள் என்பவற்றில் “ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும் பொலிஸார் அறிவித்தல்’ என்ற விளம்பரங்களும் காணப்படுகின்றன.

இலங்கைத் தமிழருக்கு மாகாண சுயாட்சி கோருகிறார் சுவாமி

இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளை ஒத்ததாக மாகாண சுயாட்சியுடனான அதிகாரப் பகிர்வு இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.

வாஷிங்டனில் தெற்காசியா, மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கைச் சந்தித்திருந்த சுப்பிரமணியன் சுவாமி அதிகாரப்பகிர்வை அமுல்படுத்த தனது அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளவும் பாதுகாப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு ஆராய வேண்டும் என்று கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை ஆரம்பிப்பதில் தீர்வு தங்கியுள்ளது என்று நான் நினைக்கிறேன். பின்னர் சில மேலதிக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். சில ஏற்பாடுகளுக்கு அத்திவாரமாக இவற்றை மேற்கொண்டு சாத்தியமான அளவு பரந்துபட்ட கருத்தொருமைப்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் இந்தியா அதிகளவுக்குச் செயற்பட வேண்டும்.

அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன் வைக்குமாறு அமெரிக்காவும் இலங்கை அரசை வலியுறுத்துகிறது. இந்த அதிகாரப்பகிர்வானது தமிழ் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதாகவும் அரசியல் பொதுக் கூட்டத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதாகவும் இருப்பதற்கு துணை நிற்பதாக இருக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

“ஆயுதப் பொதிகளை சுமந்து வந்து சேர்த்ததால்’ கே.பி.க்கு பிரபாகரன் வைத்த செல்லப் பெயர் கழுதை

kp_vp_bala.jpgகைது செய்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி.அல்லது குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் கே.பி. என்ற பெயராலேயே பரவலாக அறியப்பட்டிருந்த போதிலும் அவருக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வைத்திருந்த பெயர் “கழுதை’ என்பதாகும். செல்லமாக இந்தப் பெயரை பிரபாகரன் கே.பி.க்குச் சூட்டியிருந்தார்.  இத்தகவலை பற்றி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் தமது இணையத்தளத்தில் எழுதியுள்ளார். கே.பி.யின் கைது தொடர்பாக ஜெயராஜ் மேலும் எழுதியிருப்பதாவது;

கழுதையானது தனது முதுகில் பொதிகளை சுமந்துவரும். தனது முயற்சியால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத மூடைகளை விநியோகித்தவர் கே.பி. அதனால், அவருக்கு இப்பெயர் வழங்கப்பட்டிருந்தது.

பெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார்

09-thiruvalluvar.jpgபெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார். விழா மேடையில் இருந்தபடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிலையை கருணாநிதி திறந்து வைத்தார். விழாவுக்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா தலைமை தாங்கினார்.

முதல்வர் கருணாநிதியுடன் அவரது மனைவி தயாளு அம்மாளும் விழாவில் பங்கேற்றார். அவருக்கு விநாயகர் சிலையை முதல்வர் எதியூரப்பா பரிசளித்தார். சில கன்னட அமைப்புகள் விடுத்த பந்த் அழைப்புக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இதனால் பெங்களூரில் இயல்பு நிலை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 45 உதவி போலீஸ் கமிஷனர்கள், 200 இன்ஸ்பெக்டர்கள், 500 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையி்ல் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு இருக்கும் பூங்காவை சுற்றியும், விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த விழாவையொட்டி எம்.ஜி.ரோடு, அல்சூர், சிவாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் தமிழர்கள், திமுகவினர் குவிந்தனர். இவர்களது வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ரோட்டைத் தாண்டிச் செல்ல முடியாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே சிலை திறப்பை எதிர்த்து நகரின் சில இடங்களில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் மல்லேஸ்வரம், மூடுல்பாளையா உள்ளிட்ட சில பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர். மத்திகரே பகுதியில் சிலர் கைகளை பிளேடால் அறுத்து ரத்தத்தை எடுத்து சிலை திறப்புக்கு எதிராக பேப்பரில் எழுதி போராட்டம் நடத்தினர்.

முன்னதாக நிகழ்ச்சி நடக்கும் இடத்தையும் ஏற்பாடுகளையும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா நேற்றிரவு நேரில் வந்து பார்வையிட்டார். சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்த கன்னட ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கெளடா, கன்னட சளுவளி தலைவர் வாட்டாள் நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகனை தமிழிலும் பாட வைப்பேன்- ரகுமான்

09-rahman.jpgஎன் மகன் ஆலிம் நிச்சயம் தமிழ்ப் படத்திலும் பாடுவான், என்று இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் கூறினார்.  சரிகம ஆடியோ நிறுவனம், ‘ஊலலலா’ எனும் இசை ஆல்பத்தை தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆல்பத்தின் முதல் பிரதியை வெளியிட, இயக்குநர் கவுதம் மேனன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, இந்த ஆல்பத்தில் பாடியவர்களுக்கும், இசையமைத்தவர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஒற்றுமையாக இருங்கள். சந்தோஷமாக இருங்கள், என்றார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: உங்கள் மகன் ஒரு ‘ஹாலிவுட்’ படத்தில் பாடியிருக்கிறான். அவனை தமிழ் படத்திலும் பாட வைக்கும் எண்ணம் இருக்கிறதா?

என் மகன் ஆலிம் ரஹ்மானுக்கு ஆறரை வயது ஆகிறது. இப்போதுதான் இசை கற்று வருகிறான். ஹாலிவுட் படத்தில், ஒரு பாட்டு பாடியிருப்பது உண்மைதான். அடுத்து தமிழ் படத்திலும் அவனை பாட வைக்கும் எண்ணம் இருக்கிறது. நிச்சயமாக தமிழ் படத்தில் பாடுவான், என்றார் ரஹ்மான்.

நிகழ்ச்சியில் சரிகம நிறுவனத்தின் பிஆர் விஜயலட்சுமி, கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை நிகில் முருகன் செய்திருந்தார்

சென்னையில் தமிழர் பிரகடன பேரணி

0-pazha-nedumaran.jpgஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க உலகத் தமிழர் பிரகடனப் பேரணி சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழர் பிரகடனத்தை அறிவிக்கும் பேரணி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் வருகிற 20-ந்தேதி நடத்தப்படுகிறது. எனது தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இலங்கை அரசின், வடக்கின் வசந்தம் திட்டத்தை செயல்படுத்த வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் தலைமையிலான குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதித்திருந்தது. நாங்கள் சுவாமிநாதனைச் சந்தித்து இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களை எடுத்துக் கூறியபின்னர் அவர் இலங்கை செல்வதை தவிர்த்து விட்டார்.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஒழுங்காக வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பவேண்டும் என்றார் நெடுமாறன்.

மலையகத்தில் காற்றுடன் கூடிய மழை

rain-1.jpgமலை யகத்தில் கடந்த சில தினங்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் இரவு வேளைகளிலும் மழை பெய்து வருவதோடு காற்றும் வீசுவதால் கடும் குளிரும் காணப்படுகின்றது.

கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக மலையகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மவுசாகலை, காசல்ரீ, கெனியன், நோட்டன் பிரிட்ஜ், விமல சுரேந்திரா உட்பட விக்டோரியா, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

எனினும் இந்த ஆண்டின் ஆடி மாதத்தில் அதிக மழை பெய்து வருவதும் ஆடிக் காற்று பலமாக வீசுவதும் குறிப்பிடத்தக்கது.

கல்குவாரி வெடி விபத்தில் மூவர் பலி

ranjith-gunasekara.jpgதிவுல பிட்டிய, கோப்புவத்த பகுதியிலமைந்துள்ள கல்குவாரியொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் மற்றுமொருவர் கம்பஹா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

நேற்றுக் காலை சுமார் 10.30 மணிக்கும் 11.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

மேற்படி கல்குவாரியில் கல் உடைப்பதற்காக வைத்த பொறி வெடி வெடித்துச் சிதறிய போது பாரிய கற்களும் வெடித்துச் சிதறி அங்கு கடமையிலீடுபட்டிருந்தவர்கள் மீது விழுந்த போதே இவர்கள் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

”வடக்கின் வசந்தத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்

இலங்கை அரசின் வடக்கின் வசந்தம் திட்டத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலங்கையில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். அங்கு சகஜ நிலை திரும்பும் வரை நான் இலங்கைக்குப் போக மாட்டேன் என்று விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் கீழ் விவசாயப் பணிகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளில் உதவுவதற்காக எம்.எஸ். சுவாமிநாதனை அழைத்திருந்தார் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. இதற்காக சுவாமிநாதனும் கொழும்பு சென்று ராஜபக்ஷவுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழர்கள் அனைவரையும் முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளிச் சிறைச்சாலையில் இலங்கை அரசு அடைத்து வைத்துள்ளது. இந்த நிலையில், நிலங்களைச் சீரமைத்து அங்கு யார் விவசாயம் பார்க்கப் போகிறார்கள். சிங்களவர்களுக்கு ஆதரவான திட்டம் இது. இதற்கு சுவாமிநாதன் உதவக்கூடாது. மீறினால் சுவாமிநாதன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இயக்குநர் சீமான் கடுமையாக எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார் சுவாமிநாதன். அப்போது அவர் கூறுகையில்;

இலங்கையில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் தன்மானம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் பல இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 3 இலட்சம் பேர் வவுனியாவில் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் மீண்டும் தங்களது இடங்களுக்குச் சென்றால் தான் விவசாயம் மற்றும் மீன்பிடிப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபட முடியும். இலங்கைத் தமிழர்கள் நல்ல விவசாயிகள்.

இதற்கிடையே இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு புனரமைப்பு ஏற்படுத்த இந்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது. உடனடித் தேவைக்கும் மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்தவும் இந்த நிதி பயன்படும். இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கையில் வேளாண்மையையும் மீன்பிடிப்புத் தொழிலையும் மீண்டும் கொண்டு வரவும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் கண்ணியத்துடன் வாழவும் வேளாண்மையில் சிறந்து விளங்கவும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட எண்ணியுள்ளது.

இது தொடர்பாக இந்த 2 தொழில்களையும் வளப்படுத்துவதற்காக உரிய பயிற்சியும் தொழில்நுட்ப உதவியும் செய்வதற்கு இந்திய அரசு உறுதியாக உள்ளது. அந்த வகையில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்காக இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொழில்நுட்ப உதவிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் மத்திய வேளாண் அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பெங்களூர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், மதுரை டான் நிறுவனம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

அக்டோபர் மாதம் இலங்கையில் தொடங்கவிருக்கும் மகா பருவத்தில் இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் மீண்டும் வேளாண்மையில் ஈடுபடுவதற்குத் தேவையான வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளை இந்தக் குழு திரட்டித் தருவதுதான் இந்தக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். தற்போது இலங்கையில் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகள் மீண்டும் துரிதமாக மலருவதற்கு அங்குள்ள அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லை. எனவே, இலங்கையில் இணக்கமான சூழ்நிலை உருவாகும் வரை இந்தக் குழுவில் நான் கலந்துகொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கடந்த மாதம் சர்வதேச நீர் மேலாண்மை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகவே இலங்கைக்குச் சென்றேன். வேறு எதற்காகவும் அங்கு செல்லவில்லை. இலங்கை அரசு அறிவித்திருக்கும் வடக்கின் வசந்தம் திட்டத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை.

பாதாள உலகத்தாரை பாதுகாக்கும் கடப்பாடு பொலிஸாருக்கு இல்லை – ரஞ்சித் குணசேகர

ranjith-gunasekara.jpgபாதாள உலகத்தினரையும் குற்றவாளிகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்குக் கிடையாதென தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர மரணம் தான் சட்ட ரீதியான தண்டனை என்றால் அதை அவர்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டுமெனவும் கூறினார்.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே ரஞ்சித் குணசேகர இவ்வாறு கூறினார்.

“பாதாள உலகத்தினர் பொலிஸாரினால் சட்ட ரீதியாகவே கொல்லப்படுகின்றனர். அதாவது பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும் போது பொலிஸார் தற்பாதுகாப்புக் கருதி பதில் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. அதில் மாற்று வழிக்கு இடமில்லை. தற்பாதுகாப்புக் கருதி தாக்குதல் நடத்த சட்ட ரீதியான அங்கீகாரம் இருக்கிறது.

அது மட்டுமல்லாது பாதாள உலகத்தினரையும் குற்றவாளிகளையும் பாதுகாக்கப் பொலிஸார் கட்டுப்படவில்லை. மரணம் தான் சட்ட ரீதியான தண்டனை என்றால் அதை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். பாதாள உலகத்தினரைப் பாதுகாத்து பொது மக்களை ஆபத்தில் தள்ள நாம் தயாரில்லை’ என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.