செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ். கொழும்பு விசேட விமான சேவை ஆகஸ்ட் 03 இல் ஆரம்பம்

flight_domestic.jpgயாழ்ப் பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு கொழும்புக்கும்  யாழ்ப்பாணத்துக்கும் இடையில் விசேட  விமானப் போக்குவரத்து சேவைகள் நடத்தப்படவுள்ளன. தனியார்; மற்றும் விமானப் படையினருடன் இணைந்து இந்த விமான சேவையை வழங்குவதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு முன்வந்துள்ளது.

இதன்படி ஆகஸ்ட்  03 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை தினமும் ஐந்து சேவைகளை நடத்தவிருப்பதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.  தற்போது இருவழிக் கட்டணமாக அறவிடப்படும் 19.000 ரூபா தொகையானது திருவிழாவை முன்னிட்டு 17.000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்தவருடம் நல்லூர் ஆலய திருவிழாவுக்கு 60 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்வருடம் 1லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வரென எதிர்பார்ப்பதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

யாழ்ப்பாண ஊரடங்கு ஒருமணி நேரத்தால் குறைப்பு

jaffna1.jpgயாழ்ப் பாணத்தில் அமுலில் இருந்து வரும் ஊரடங்குச் சட்டம் நேற்று நள்ளிரவு முதல் ஒரு மணித்தியாலத்தால் குறைக்கப்பட்டுள்ளது. வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இராணுவம் ஊரடங்குச் சட்டத்தை ஒரு மணித்தியாலத்தால் குறைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை இதுவரை அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் புதிய நடைமுறைக்கமைய நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என்று தெரிவித்த பிரிகேடியர், கோவில் உற்சவம் முடியும் வரை இந்த நடை முறை அமுலில் இருக்கும் என்றார்.

இந்தப் பிரதேசத்திலுள்ள பாதுகாப்பு போதியளவு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஊரடங்கு அமுலில் இருக்கும் புதிய நேரத்திற்கு அமைய மக்களுக்குத் தேவையான போக்குவரத்து நேரங்களிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

தோட்ட தொழிலாளர்களின் நலன்களுக்காக பேரம் பேசக்கூடிய சக்தி எம்மிடமே உள்ளது – அமைச்சர் ஆறுமுகன்

arumugam-thondaman.jpg“இந்திய அரசிடமிருந்து இ.தொ.கா. வினால் பெறப்பட்ட பஸ்களில் ஏழு பஸ்களை, பதுளை மாவட்ட தோட்டத் தொழிலாளர் நன்மை கருதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன். அடுத்த மாதம் மேலும் 35 பஸ்களை இந்திய அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளேன்’. இவ்வாறு இ.தொ.கா. பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், பதுளை வௌஸ்சை, மேமலை, தெல்பத்தை, கோட்டகொடை ஆகிய பெருந்தோட்டங்களில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். தொண்டமான் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

தோட்டத் தொழிலாளர்களுக்கு தினச் சம்பளமாக 500 ரூபா என்றடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படல் வேண்டுமென்ற கோரிக்கையை நான் முன்வைத்தேன். ஆனால், தோட்ட கம்பனி நிர்வாகமோ தினச் சம்பளத்தில் 37 ரூபாவினை மட்டுமே அதிகரிக்க முடியுமென்று உறுதியாகக் கூறினார். இதனையடுத்து, நாம் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறினோம். யார் என்ன கூறியபோதிலும் தொழிலாளர்களினது சம்பள உயர்வினை, எம்மால் மட்டுமே பெற்றுக்கொடுக்க முடியும். அரசுடனோ, தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினுடனோ, தமிழக மற்றும் இந்திய அரசுடனோ, பேச்சுவார்த்தை நடத்தவோ, பேரம்பேசி விடயங்களை சாதிக்கவோ, இ.தொ.கா. வினால் மட்டுமே முடியும். அதற்கான சக்தியும், பலமும் இ.தொ.கா.விற்கே இருந்து வருகின்றது.

சிங்களக் கட்சிகள் மற்றும் சிங்கள மக்களின் பெரும்பாலானோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கட்சியையே ஆதரிக்கின்றனர். அக்கட்சியே அமோகப் பெரும்பான்மை வாக்குகளில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெறும். யதார்த்தத்தை புரிந்துகொண்டு நாமும் செயல்பட வேண்டும்.

எனவே, நாமும் அரசுடன் இணைந்து ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடுகின்றோம். அரசுடன் இணைந்து இருப்பதினால் மட்டுமே சமூக மேம்பாடுகள் கருதிய விடயங்களை சாதிக்க முடியும். அரசிலிருந்து பிரிந்து நின்று எதனையும் சாதிக்க முடியாது. சமூகத்திற்கான பாதுகாப்பும் இவ் அரசுடன் இணைந்து இருப்பதினால் மட்டுமே தங்கியிருக்கின்றது.

எமது சமூகப் பிரதிநிதிகளென்று பலரை இ.தொ.கா.உருவாக்கி, அவர்களுக்கான விலாசத்தினையும் பெற்றுக் கொடுத்தது. பட்டம், பதவிகள் கிடைத்ததும் அவர்கள் பணத்திற்காக விலை போய் இ.தொ.கா.வை காட்டிக் கொடுக்கும் செயலில் துரிதமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கட்டுப்பாடுகளுடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். தொழிற்சங்க ரீதியிலும் அரசியல் ரீதியிலும் எமது சமூகம் பலமடைய வேண்டும். பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றம் என்ற ரீதியில் சமூகப் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவும் வேண்டும். இதனை எமது சமூகம் நன்கு புரிந்துகொள்ளல் வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை அணி 36 ஓட்டங்களால் வெற்றி – முரளி ஆட்ட நாயகன்

murali.jpgபாகிஸ் தானுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் தடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றது. மத்திய வரிசையில் வந்த அன்ஜலோ மத்தியூஸ் 50 பந்துகளுக்கு 3 பௌண்டரிகளுடன் 43 ஓட்டங்களை பெற்றார்.

கடைசி வரிசையில் முரளி 15 பந்துகளுக்குள் 4 பௌண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கலாக 32 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இலங்கை வலுவான நிலையை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்களில் 196 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக உமர் குல் 21 பந்துகளுக்கு 6 பௌண்டரிகளுடன் 33 ஓட்டங்களை பெற்றார்.

சிறப்பாக பந்துவீசிய திலின துஷார 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் சகலதுறை ஆட்டத்தை வெளிக்காட்டிய முரளிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

SRI LANKA
U. Tharanga c Akmal b Razzaq 17
S. Jayasuriya c Aamer b Gul 15
K. Sangakkara c Afridi b Ajmal 36
M. Jayawardene run out 33
C. Kapugedera c Akmal b Afridi 8
T. Samaraweera c Younus b Razzaq 10
A. Mathews c and b Aamer 43
N. Kulasekera c Razzaq b Aamer 16
M. Muralitharan b Aamer 32
T. Thushara not out 8
L. Malinga not out 4
EXTRAS: (b1, lb4, w4, nb1) 10
TOTAL (for 9 wkts) 232

FALL OF WICKETS: 1-31 (Jayasuriya), 2-45 (Tharanga), 3-93 (Sangakkara), 4-105 (Kapugedera),
5-125 (Samaraweera), 6-131 (Jayawardene), 7-173 (Kulasekera), 8-204 (Mathews), 9-223 (Muralitharan).

BOWLING: Aamer 10-0-45-3 (w1, nb1), Razzaq 10-0-33-2 (w1), Gul 8-0-46-1 (w1),
Ajmal 10-0-40-1, Younus 2-0-13-0 (w1), Afridi 10-1-50-1

PAKISTAN
KAMRAN AKMAL b Thushara 20
Shoaib Malik b Kulasekera 9
Shahid Afridi c Sangakkara b Thushara 27
Mohammad Yousuf c Sangakkara b Kulasekera 4
Younus Khan c Mathews b Thushara 12
Misbah-ul Haq c and b Muralitharan 9
Fawad Alam c Sangakkara b Jayasuriya 31
Abdul Razzaq lbw b Muralitharan 17
Umar Gul b Malinga 33
Mohammad Aamer run out 23
Saeed Ajmal not out 0
EXTRAS: (lb5, w5, nb1) 11
TOTAL (all out, 44.4 overs) 196

FALL OF WICKETS: 1-29 (Malik), 2-41 (Akmal), 3-48 (Yousuf), 4-73 (Afridi),
5-78 (Younus), 6-95 (Misbah), 7-134 (Alam), 8-134 (Razzaq), 9-196 (Aamer), 10-196 (Gul).

BOWLING: Kulasekera 7-1-30-2, Malinga 8.4-0-50-1 (w2, nb1), Thushara 8-0-29-3 (w2),
Muralitharan 10-0-46-2, Mathews 5-0-22-0 (w1), Jayasuriya 6-0-14-1

கொழும்பு-வவுனியா இரவு ரயில் சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பம்

dallus_allahapperuma.jpgகொழும்பு – வவுனியா இரவு தபால் ரயில் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் 30ஆம் திகதி இரவு முதல் (நேற்று முதல்) சேவையிலீடுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று வவுனியாவில் தெரிவித்தார்.

1993 பெப்ரவரி மாதம் 03ஆம் திகதிக்கு பின்னர் சரியாக 11 வருடங்களாக இந்த இரவு நேர தபால் ரயில் சேவை இயங்கவில்லை. 2007ல் சில நாட்கள் சேவை நடத்தப்பட்டபோதும், பின்பு அது நிறுத்தப்பட்டது.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளையடுத்து உடனடியாக ரயில் சேவையை ஆரம்பிக்க முடிவு செய்ததாக அமைச்சர் டலஸ் தெரிவித்தார். இரவு நேர தபால் ரயில் சேவை ஆரம்பிக்கும் அதேவேளை, வவுனியா நகரிலும் இரவு 10.00 மணி வரை போக்குவரத்து சேவை பஸ்களும் சேவையிலீடுபடும் என அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது வவுனியாவில் இரவு 7.00 மணி வரை மட்டுமே பஸ் போக்குவரத்துகள் உள்ளன. வவுனியா மாவட்ட மக்களின் விசேட வேண்டுகோளையடுத்து நகர் மத்தியிலும் சுற்றுப் புறங்களிலும் வீதித் தடைகள், சோதனைச் சாவடிகள் என்பவையும் கட்டம் கட்டமாக அகற்றப்படும் என்றும் அமைச்சர் டலஸ் தெரிவித்தார்.

வவுனியா உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செய்தியாளர் மாநாடொன்றை அமைச்சர் டலஸ் அழகப்பெரும வவுனியாவில் நடத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா ரோயல் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மத விவகாரங்களுக்கான அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க, வவுனியா மாவட்ட ஸ்ரீ ல. சு. க. அமைப்பாளர் பி. சுமதிபால ஆகியோரும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் மாநாடு முடிவடைந்ததன் பின்னர் வவுனியா ரயில் நிலையத்திற்கு வந்த அமைச்சர், மாத்தறையிலிருந்து நேரடியாக வரும் ரஜரட்ட புகையிரதம் இன்று முதல் மதவாச்சியிலிருந்து வவுனியா ரயில் நிலையத்திற்கு வரும் என்றும் அறிவித்தார்.

வவுனியா மன்னார் மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடியாக அரிசி

jaffna1.jpgயாழ்ப் பாணத்தில் அரிசி விலையை மேலும் குறைக்கும் நோக்கில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உற்பத்தியாகும் அரிசியைää வவுனியாவிலிருந்து நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த இரண்டு மாவட்டங்களிலும் உற்பத்தியாகும் அரிசி கொழும்புக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரே யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப் படுகின்றது.

இதனைத் தவிர்த்து வவுனியாவில் ஓர் இடத்திலிருந்து நேரடியாக யாழ்ப்பாணம் அனுப்பிவைத்தால், யாழில் குறைந்த விலையில் அரிசியைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு வவுனியாவிலிருந்து வாரத்திற்கு ஒரு தடவை 10 லொறிகளை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்க உத்தேசித்துள்ளதாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார். இத்திட்டம் தொடர்பாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறியிடமும் விளக்கிக் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுவாசச் சிக்கல், தொடர் இருமல்: பொலன்னறுவை முஸ்லிம் ம.வி 12 மாணவர் ஆஸ்பத்திரியில்

சுவாசிப்பதில் சிரமமும், தொடர்ச்சியான இருமல் காரணமாகவும் பொலன் னறுவை திவுலான முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் 12 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வகுப்பறையில் அமர்ந்திருந்த வேளையில் மாணவர்கள் திடீரென சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியதுடன் நிறுத்த முடியாதபடி தொடர்ச்சியான இருமலும் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட 11 மாணவர்கள் உடினடியாக பொலன்னறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் நேற்றும் மற்றுமொரு மாணவரும் பொலன்னறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இம்மாணவர்கள் திடீர் சுகவீனமுறுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் இரத்த மாதிரிகள் உடனடியாக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

நோய்வாய்ப்பட்ட மாணவர்கள் தொடர்ந்தும் பொலன்னறுவை ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாணவர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் பொலன்னறுவை ஆஸ்பத்திரி டொக்டர் எம். ஈ. ஆர். பெல்லன தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

யாழ்.மா.ந தேர்தல்: புத்தளத்தில் வாக்களிக்க 4388 பேர் தகுதி

election_cast_ballots.jpgயாழ்.  மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க அங்கிருந்து இடம்பெயர்ந்து தற்சமயம் புத்தளம் மாவட்டத்தில் வதியும் இடம்பெயர்ந்த மக்களில் 4388 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஏ. ஏ. எம். நபீல் தெரிவித்தார். இவர்கள் வாக்களிப்பதற்காக ஆறு வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ‘ஏ’, ‘பீ’ என்ற இரு வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மற்றும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி, பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம், கற்பிட்டி அல்-அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச் சாவடியும் அமைக்கப்படும்.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இந்திய சீன பிரதமர்களுக்கிடையில் நேரடித் தொலைபேசி!

சீனா மற்றும் இந்தியப் பிரதமர்களுக்கிடையில் நேரடித் தொலைபேசி இணைப்பு (ஹொட்லைன்) இருக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எழுத்து மூலம் பதிலளிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளின் பிரதமர்களிடையே தொடர்ச்சியான தொடர்பிற்கு நேரடித் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தத் தேவையான தொழில்நுட்பம்,  மற்ற வசதிகள் குறித்து இருநாடுகளும் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்தார். இந்தியா மற்றும் ரஷியாவுக்கிடையே இதுபோன்ற நேரடித்தொலைபேசி இணைப்பு செயல்பட்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

பரீட்சை அனுமதிப் பத்திரம் – பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பு

school-children.jpgஅடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதிப் பத்தரங்கள் தற்போது பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். அனுமதிப் பத்திரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அது குறித்து ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் குறிப்பிட்ட பிரதேசத்துக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளருக்குத் தெரிவிக்குமாறு அவர் அதிபர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதேவேளை அடுத்த மாதம்  23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரிட்;சைக்கான  அனுமதிப் பத்திரங்களையும் விரைவில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்