செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளுக்கு அமெரிக்கா வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

sri-lankan-doctors.jpgஅமெரிக் காவிடமிருந்து 1.6 மில்லியன் டொலர் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் வடக்கு,  கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு அன்பளிப்பாகக் கிடைத்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயும் 2009 யூலை மாதம் 10 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையினைத் தொடர்ந்து இந்த வைத்திய உபகரணங்கள் சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ளது.

வடபகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் வகையில் வடக்கு கிழக்கு மாகாண வைத்தியசாலைக்கு  26 கொள்கலன்களில்  இந்த  வைத்திய உபகரணங்கள் மிகவிரைவில் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ரியாத்தில் இலங்கை பிரஜை மரணம்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத் தில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரியாத்தில் காலமானார்.

மபாஸ் மொஹமட் சலீம் (31) என்பவரே அவரது விடுதியில் வைத்து உயிரிழந்துள்ளார். அவரை சோதனைக்குட்படுத்திய வைத்தியர்கள் மாரடைப்பின் காரணமாகவே அவர் மரணித்திருப்பதனை உறுதி செய்திருப்பதாக அந்நாட்டின் இலங்கைத் தூதரகத்தின் விவகாரங்களுக்குப் பொறுப்பான சபருல்லாகான் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரது உறவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மரணச் சடங்குகளை ரியாத்திலேயே மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கைத் தூதரகம் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடன் நடத்தி வருவதாகவும் கான் கூறினார்.

துபாயிலிருந்து கொழும்பு வந்துள்ள உயிரிழந்தவருடைய மனைவி சாஸ்னா, அவரது இறுதிக் கிரியைகளை ரியாத்திலேயே நடத்துவதற்கு கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் சம்மதம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரும் அவரது மனைவியும், கொழும்பு 10 ஐச் சேர்ந்தவர்கள், சலீம், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் துணை நிறுவனமான அல் ஹொக் எயர் குறூப் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். உயிரிழந்தவர் சில காலங்களாக தொடர்ச்சியான இருமல் மற்றும் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு இன்று திருநிலைப்படுத்தல் திருப்பலி

m-r1111.jpgகொழும்பு மறை மாவட்ட புதிய பேராயராக பேரருட் திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் திருப்பலி கொழும்பில் இன்று நடைபெறுகிறது. கொழும்பு கொட்டாஞ்சேனை சென்லூசியாஸ் பேராலயத்தில் இது தொடர்பான நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு இடம்பெறும்.

1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி பொல்கஹவெலவில் பிறந்தவ ராவார்uஎன்பது குறிப்பிடத்தக்கது.

புனரமைக்கப்பட்ட இரு வைத்தியசாலைகள் திறப்பு

sri-lankan-doctors.jpgமட்டக் களப்பில் கடற்கோள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெரியகல்லாறு, பழுகாமம் ஆகிய வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
பல இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இவ்விரு வைத்தியசாலைகளின் திறப்பு விழா நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன், யுனிசெப் அதிகாரி, வைத்திய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேக்கம்காடு மைதான சோதனைச் சாவடி மூடப்பட்டது

police-traffic-stop00.jpgவவுனியா தேக்கம்காடு பொது விளையாட்டு மைதானத்திலிருந்த வாகனச் சோதனை நிலையம் அகற்றப்பட்டுள்ளது. இதேநேரம், வவுனியாவிலிருந்து மதவாச்சி செல்லும் வாகனங்கள் ஈரற்பெரியகுளத்திலுள்ள சோதனைச் சாவடியில் வழமையான சோதனை நடவடிக்கையின் பின்னர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஒரு வருட காலம் இந்த வாகனச் சோதனை நிலையம் செயல்பட்டது. கொழும்பிற்கு வாகனங்கள் மூலம் வெடிபொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாகக் கூறியே வாகனங்களைச் சோதனையிடுவதற்காக பிரத்தியேக வாகனச் சோதனை நிலையம் அமைக்கப்பட்டது.

யுத்தம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்தச் சோதனை நிலையம் அகற்றப்பட்டுள்ளது.

தமிழ் தொழில் அலுவலர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் நிலவும் தமிழ் தொழில் அலுவலர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தொழில் திணைக்களம் புதிதாக தமிழ் தொழில் அலுவலர்களை இணைத்துக்கொள்வதற்காக இந்த விண்ணப்பங்களை கோரியுள்ளது என தொழில் அமைச்சர் அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான போட்டிப் பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 20 தமிழ் தொழில் அலுவலர்களை சேர்த்துக்கொள்வதற் கான போட்டிப் பரீட்சைகள் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தப்படவுள்ளது.

போட்டிப் பரீட்சைகளில் தெரிவாகும் தொழில் அலுவ லர் வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகங்களிலும், நுவரெலியா, ஹட்டன், பதுளை, அப்பு த்தளை, கம்பளை, நாவலபிட்டி, கண்டி (வடக்கு) கண்டி (தெற்கு), மத்துகம, மாத்தளை, கேகாலை, அவிசாவளை, இரத்தினபுரி, பெல்மடுல்ல ஆகிய பகுதிகளில் ஆகக் குறைந்தது 10 வருடங்கள் கடமையாற்றவேண்டும். எக்காரணம் கொண்டும், இவர்களுக்கு உள்ளக மாற்றங்கள் பெற்றுக் கொடுக்கப்படமாட்டாது.

பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் இப்போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதியுடை யோர் ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி போட்டிப் பரீட்சை தொடர்பான விபரங்கள் கடந்த ஜுலை 31ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பார்க்கலாம்.

21 ஆவது தேசிய விளையாட்டு விழா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரு தங்கப்பதக்கம்

basketball.jpg21 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் சுவட்டு மைதான நிகழ்ச்சியில் இரண்டு தங்கப்பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் இரண்டு வெண்கலப்பதக்கங்களையும் பெற்றுக் கொண்டதுடன், குழுப் போட்டியில் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளது.  இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் 21 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்று நிறைவு பெற்றது.

கடந்த 31 ஆம் திகதி முதல் நேற்றுவரை பதுளை வின்சன் டைஸ் விளையாட்டு மைதானத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பாஸ்வர சேனரங்க குணரத்ன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பில் இருந்து கலந்துகொண்ட போட்டியாளர்களில் 21 கிலோமீற்றர் மற்றும் 20 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் போன்றவற்றில் வவுணதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த அ.யசோதா முதலிடம் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டார்.

20 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ச.ஜனகீரன் இரண்டாம் இடம்பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் 20 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண்களுக்கான பரிதி வீசுதல் போட்டியில் கலந்துகொண்ட களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஆ.கோகுலதாஸ் மூன்றாம் இடத்தினைப் பெற்று ஒரு வெண்கலப்பதக்கத்தினையும் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் ஏறாவூர் பிரதேசத்திலிருந்து கலந்துகொண்ட ஆர்.எஸ்.எம்.கிர்ஷான் மூன்றாம் இடம்பெற்று ஒரு வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், ஆண்களுக்கான கபடி போட்டியில் மண்முனை வடக்கு பிரதேசத்தில் இருந்து கலந்துகொண்ட அணியினர் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் ஏறாவூர் பற்று பிரதேசத்திலிருந்து கலந்துகொண்ட அணியினர் மூன்றாம் இடத்தினையும் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கரு ஜயசூரிய இன்று வவுனியா விஜயம்

karu.jpgவவுனியா நகர சபை தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரசார நடவடிக்கையினை முன்னெடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். வவுனியா செல்லும் அவர் சிவன் கோயிலில் விசேட வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் வவுனியா ரயில் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள எல்மெரல் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளதாக ஐ.தே.க. யின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வவுனியா விஜயம் தொடர்பாக ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூய கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைத் தான் சந்திக்க உள்ளதுடன் பொதுமக்களையும் சந்தித்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார். 

வணங்கா மண் நிவாரணப் பொருட்களை இவ்வாரத்திற்குள் இறக்க ஏற்பாடு – இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு

ship121212.jpgயுத்தத் தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களால் வணங்கா மண் கப்பலின் ஊடாக அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களை, இவ்வாரத்திற்குள் இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

பொருட்களை இறக்கி, அதனை விநியோகிப்பதற்கு கொழும்புத் துறைமுகம் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும், இவ்வாரத்திற்குள் பொருட்களை இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கு பாரியளவில் நிதி உதவி தேவைப்படுகிறது – கோத்தபாய

gothabaya.jpgயுத்தத் தினால் இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவ இலங்கைக்கு பாரிய அளவில் சர்வதேச நிதியுதவி தேவைப்படுகிறது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பி.பி.சி.க்கு அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அமெரிக்கா, ஜப்பான் போன்றவை உட்பட நன்கொடை நாடுகளினால் உறுதியளிக்கப்பட்ட தொகையிலும் பார்க்க மிக அதிக தொகையை நாம் எதிர்பார்க்கிறோம். வடபகுதியில் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் முகாம்களில் சுமார் மூன்று இலட்சம் மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக இந்த உதவி தேவைப்படுகிறது.