செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்த கண்ணிவெடி அகற்றும் பணி துரிதம் – பல்வேறு வெளிநாடுகளும் அரசின் திட்டத்துக்குதவி

இடம் பெயர்ந்த வட பகுதி மக்களை துரிதமாக மீள்குடியேற்றுவதற்காக வடக்கில் புதைக்கப்பட்டு ள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் செயலாளர் டபிள்யு. கே. குமாரசிறி தெரிவித்தார். தற்பொழுது இந்தியா உட்பட 8 உள்நாட்டு வெளிநாட்டுக் குழுக்கள் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை 180 நாள் திட்டத்தின் கீழ் துரிதமாக மீள்குடியேற்ற அர சாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மீள் குடியேற்றம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ். மாவட்டங்களில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தேர்ச்சி பெற்ற குழுக்கள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக செயலாளர் கூறினார்.

கண்ணி அகற்றும் பணிகள் பூர்த்தியடைவதற்கு அமைய மீள்குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதோடு வவுனியா மாவட்டத்தில் இந்த மாத முடிவுக்குள் மீள்குடியேற்றப்பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு பல நாடுகள் நிதி உதவி அளித்து வருகின்றன.

உலக ரெபிட் செஸ் சம்பியன் ஷிப் போட்டி: ஆனந்த் பின்னடைவு

viswanathananand.jpgஜெர் மனியில் நடக்கும் உலக ரெபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஜெர்மனியில் உள்ள மெயின்ஸ் நகரில் உலக ரெபிட் செஸ் சம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் ஆனந்த் (இந்தியா), அரோனியன் (அர்மேனியா), நெபோனியாட்சி (ரஷ்யா), நெய்டிட்ச் (ஜெர்மனி) உள்ளிட்ட நான்கு வீரர்கள் விளையாடுகின்றனர்.

நடத்த முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் ஆனந்த், அரோனியன் மற்றும் நெபோனியாட்சியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் நெய்டிட்சை வீழ்த்தினார். இதன் மூலம் ஆனந்த் ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அரோனியன் மற்றும் நெபோனியாட்சி 2.5 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இத் தொடரில் பத்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆனந்த், இம்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேற கடுமையாக போராட வேண்டிய கட்டா யத்தில் உள்ளார்.

‘த.ம.வி.பு கட்சியின் பெயர் மாற்றப்படும்’ முதலமைச்சர் சந்திரகாந்தன் கூறுகிறார்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலை வரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தமது கட்சியின் பெயர் மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மட்டு. வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் விளையாட்டுப் பயிற்சி பாடசாலையினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தமது கட்சியின் பெயர் மாற்றுவது தொடர்பாக தாம் ஆரம்பகாலத்தில் இருந்து சிந்தித்ததாகவும் இது தொடர்பில் மத்திய குழு கூடி பரிசீலித்ததாகவும் தெரிவித்த அவர், புதிய பெயர் ஒன்றினை தமது கட்சிக்கு வைப்பது தொடர்பாக புத்திஜீவிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில் தமது கட்சியில் இருக்கின்ற புலி என்கின்ற சொல் அகற்றப்பட வேண்டும். அதேநேரம் தனித்துவமான இனங்களுக்கான அடையாளங்களைக் குறித்த கொள்கைகளை மாற்றுவதாகவும் தமது உயர் மட்டக் குழு தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.  நடக்கவிருக்கின்ற பேராளர் மாநாட்டில் தமது புதிய பெயரை அறிவிப்பதாகவும் தலைவர் தெரிவித்தார்

உலக நீச்சல் போட்டி முடிவில் 43 உலக சாதனைகள் முறியடிப்பு

pelps2.jpgஇத்தா லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி 43 உலக சாதனைகளோடு முடிவடைந்தது.இத்தாலியின் ரோம் நகரில் நேற்று முடிவடைந்த இந்த போட்டிகளுள் 8 நாட்கள் நடந்த நீச்சல் போட்டிகளில் 43 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இதில் பெரும்பாலான உலக சாதனைகள் சர்ச்சைக்குரிய உயர் தொழில்நுட்பத்திலான நீச்சல் உடையை பயன்படுத்தி முறியடிக்கப்பட்ட உலக சாதனைகளாகும். இந்த நீச்சல் உடைக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் தடைவிதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியின் 200 மீற்றர் பிரீ ஸ்டைல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஒலிம்பிக் சாம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் போட்டி முடிவில் 5 தங்கப்பதக்கங்களை தட்டிச்சென்றார். அவர் 100, 200 மீற்றர் பட்டர்பிளை, ரீலே போட்டிகளில் அமெரிக்காவுக்கு தங்கப்பதக்கங்களை வென்று கொடுத்தார்.

இறுதியில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் அமெரிக்கா மற்றும் சீனா 11 தங்கப்பதக்கங்களை வென்று முதலாம் இடத்தை பகிர்ந்துகொண்டன. அடுத்ததாக ரஷ்யா 8 தங்கப் பதக்கங்களை வென்று 2 ஆவது இடத்தை பிடித்ததோடு ஜெர்மனி 7 தங்கப்பதக்கங்களுடன் 3 ஆவது இடத்தை பிடித்தது.

தமிழரின் சுயமரியாதைக்கு அச்சுறுத்தலான தருணத்தில் தேர்தலை எதிர்கொள்கிறோம்

தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு அச்சுறுத்தலான தருணத்தில் எதிர்நோக்கியுள்ள தேர்தல் குறித்து சிந்தித்து வாக்களிக்குமாறு தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. என். ஸ்ரீகாந்தா அழைப்பு விடுத்துள்ளார்.  வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழரசு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை மாலை பண்டாரிக்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இந்த கூட்டத்தில் சிறிகாந்தா எம்.பி. மேலும் கூறியதாவது;

தமிழ் மக்களுடைய சுயகௌரவத்திற்கும் மரியாதைக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலின் மத்தியில் இந்த தேர்தலை ஜனநாயக ரீதியாக நாம் சந்திக்கின்றோம்.  யாழ். மாநகர சபை, வவுனியா நகர சபைகளில் சிறந்ததொரு நிர்வாகத்தை ஏற்படுத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விரும்புகின்றது.

மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பிகளுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்றி யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ள ஆட்சியாளரை ஜனநாயக ரீதியிலும் வடபகுதி தமிழ்மககள் ஆதரித்துவிட்டார்கள் என ஆட்சியாளர்கள் சர்வதேச சமூகத்திற்கு பிரசாரம் செய்து தமிழர்களுக்கு இங்கு பிரச்சினை இல்லை என தெரிவிக்கும் நிலை ஏற்படும்.

எனவேதான், தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டும். தேசிய இனப்பிரச்சினையான தமிழ் மக்களுடைய நியாயமான அரசியல் அபிலாசைகள் சரியாக சமாதானமாக தீர்க்கப்படாததனால் தான் போராட்டம் உருவானது. இந்த போராட்டம் பின்னர் நீண்டதொரு ஆயுதப் போராட்டமாக மாறியது, யுத்தம் நடைபெற்றது.

அரசியல் தீர்வாக நாம் எதிர்பார்க்கும் அமைப்புமுறை வட, கிழக்குத் தமிழர்களுக்கு அவசியமானதாகும்.

நாட்டின் வரையறைக்குள் இதனை பெற்றுக்கொள்ள தமிழ்மக்களுடைய பிரதிநிதிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் போராடும். ஆட்சியாளர்களுடன் இணைந்து தேர்தலில் குதித்துள்ளவர்கள் ஒரு ஆர்ப்பாட்ட அட்டகாச அரசியல் தேர்தலில் குதித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் அகதி குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கல்

vaccine.jpgவவுனி யாவில் அகதி முகாம்களிலுள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ, சொறி, சிரங்கு தடுப்பூசி மருந்தேற்றும் 3 நாள் வேலைத்திட்டம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி இருப்பதாக 40  சுகாதார அமைச்சு தெரிவித்தது. முகாமிலுள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கே இந்தத் தடுப்பூசி மருந்துகள் ஏற்றப்படவிருப்பதுடன் நோய்தடுப்பு வில்லைகளும் வழங்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி.வன்னிநாயக்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சிறுவர்களுக்கான ஐ.நா.பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்) ஆகியன ஒன்றிணைந்தே இந்த வேலைத் திட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதாக வன்னிநாயக்க கூறினார். தொண்டர் அடிப்படையில் 1,200 பேரும் குடும்ப சுகாதார மருத்துவச்சிகள் 140 பேரும் இதற்கான நடவடிக்கைகளில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசுடன் இணைந்து மக்களுக்குப் பணிபுரிய வருமாறு – கிழக்கு முதலமைச்சருக்கு அமைச்சர் முரளி அழைப்பு

தமிழ் மக்களுக்கு தேசிய அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள் ளுமாறு அழைப்புவிடுகின் றேன் என தேசிய நல்லி ணக்க ஒருமைப்பாட்டு அமை ச்சர் விநாயகமூர்த்தி முரளி தரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வந்தாறு மூலை சித்தாண்டி மகா வித்தியாலயத்தில் விளையாட்டுப் பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் முரளிதரன், ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி ஜனாதிபதி எடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவேண்டும். அதற்கான அழைப்பை இம் மேடையில் வைத்து கிழக்கு மாகாண முலமைச்சருக்கு விடுக்கின்றேன்.

தமிழ் மக்களை தேசிய அரசியலில் இணைத்து இப்பிராந்தியத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது. அந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்ற வேண்டும்.

இம்மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஒவ்வொரு சிங்கள அமைச்சர்களையும் மட்டக்களப்புக்கு அழைத்து வருகின்றோம். அமைச்சர்கள் இம்மாவட்டத்தின் அபிவிருத்திக்காக முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றனர்.

இம்மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக விளையாட்டு அமைச்சரை அழைத்து வந்து இங்குள்ள விளையாட்டு வீரர்களை அபிவிருத்தி செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் யாழ். விஜயம்

0309susil-premajayantha_.jpgகல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ். சென்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்குக் பாடசாலைகளின் குறைப்படுகள் தொடர்பாக நேற்று  யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார்.

அதிபர், ஆசிரியர் தொடர்பான வெற்றிடம் மற்றும் நிர்வாக பிரிவுகளில் நிலவும் குறைபாடுகளை நிறைவு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.

கல்வி நிர்வாக சேவையுடன் இணந்த பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர்கள் கூட்டத்தில் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இதனையடுத்தே அமைச்சர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கினார்.

கல்வி அமைச்சு செயலாளருடன் கோப்பாய் கல்விப் பீடத்தையும் அமைச்சர் குழுவினர் பார்வையிட்டனர்.

வவுனியாவில் கிராமம் கிராமமாக வீதிப் பிரச்சாரத்தில் ஈடுபடும் புளொட் அமைப்பினர்

வவுனியா நகரசபைக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகளில் புளொட் அமைப்பினரும், ஆதரவாளர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) நங்கூரம் சின்னத்தில் தனித்துவமாக போட்டியிடுகின்றது. முன்னாள் வவுனியா நகரபிதா ஜி.ரி.லிங்கநாதன் இதில் தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்றார். ஜனநாயக மக்கள் முன்னணி முன்னர் வவுனியா நகரசபையைப் பொறுப்பேற்றிருந்த போது மேற்கொண்ட பணிகளும், சாதனைகளும் ஏராளம் என்பதை மக்களுக்கு ஞாபகமூட்டும் வகையிலும்இ இனி மேற்கொள்ளப் போகும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் எடுத்துக் கூறியே இந்தப் பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வீடுவீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரப் பணிகளை புளொட் அமைப்பு மக்களோடு மக்களாக இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

கொழும்புச் சந்தையில் யாழ் மீன் விற்பனை – அமைச்சர் பீலிக்ஸ் நடவடிக்கை

filix_perera.jpgவடபகுதி கடற் பிரதேசத்தில் பிடிக்கப்படும் மீன்களை கெழும்பு நகரில் விற்பனை செய்யும் நிலையங்கள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். வடபகுதி கடற்பிரதேசங்களில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து வடபகுதியில் பெருமளவில் மீன் கிடைத்து வருகிறது.

அங்கு பிடிக்கப்படும் மீன்களை கொழும்பு மாநகரில் வாழும் மக்களுக்கும் பெற்றுக்கொள்வதற்கான விசேட திட்டமொன்றை மீன்பிடித்துறை அமைச்சர் வகுத்துள்ளார். அதன்படி வட பகுதியில் கூடுதலாக உள்ள மீன்களை குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மூலம் கொழும்புக்க கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வடபகுதி மீனவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.