செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ்.அவசரகால வைத்திய நிலையம் அமெரிக்க தூதரால் இன்று திறப்பு

யாழ். மாவட்டத்திற்கான அவசரகால வைத்தியசேவை நிலையமொன்று இன்று புதன் கிழமை காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிலையம் யாழ்ப்பாணம் பண்ணை, சுகாதாரக் கிராமத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக் திறந்து வைப்பார். இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ், சர்வதேச மருத்துவ கழக வதிவிடப் பணிப்பாளர் டொனி வூட்யாட் ஆகியோர் பங்கு கொள்ளவுள்ளனர்.

இந்நிலையத்தை அமைப்பதற்கும், சகல வைத்திய உபகரணங்கள், வாகனங்களை ஐ.நா.திட்டப் பிரிவு, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச மருத்துவக் கழகம் ஆகியன வழங்கியுள்ளன.

இந்நிலைய திறப்பு விழாவுக்கு யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தலைமைதாங்குவார்.

தர்மரபுரம் தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு நஷ்டஈடு! -அமைச்சர் றிஷாத் தகவல்

vishwamadu_bomb-01.jpgமுல்லைத் தீவு தர்மரபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கும் காயமடைந்தோருக்கும் அரசாங்கம் நஷ்டஈடு வழங்கவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியான குடும்பஸ்தர் ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதமும் குடும்பஸ்தர் அல்லாத ஒருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதமும் 18 வயதுக்குக் குறைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபா வீதமும் நஷ்டஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. இந்த சம்பவத்தில் பலியானோரின் இறுதிக் கிரியைகளுக்காக ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை  இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக காயமடைந்தோருக்கு முதற்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. காயமடைந்தோரின் வைத்திய அறிக்கையின்படி இத்தொகை மேலும் அதிகரிக்கப்படுமென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

மக்களின் வாக்கு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்! – ஜனாதிபதி

mahinda20-01.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றதொன்றாக அமையுமெனவும் நாட்டில் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என்றும் எந்த நிலையிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கண்டி கெட்டம்பே பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து தெரிவித்ததாவது:

மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களை முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கும் நோக்கில் அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியினை ஒதுக்கியுள்ளது. குறிப்பாக வரலாற்றுப் புகழ் மிக்க கண்டி மாநகரை நவீன நகராக்கவும் திட்டமிட்டுள்ளது.
தலதா மாளிகை, ஸ்ரீமஹாபோதி போன்று புனிதத் தலங்களைத் தாக்கிய சாபத்திற்குப் பிரபாகரன் நட்டஈடு செலுத்தும்; காலம் நெருங்கியுள்ளது. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் புலிகள் இதற்கான தண்டனையை அனுபவித்தே தீருவர். இது நாட்டுக்கு கிடைத்த பெரு வெற்றியாகும்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் பெருவெற்றிபெறுவது உறுதி. இப்பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கும் ஆதரவு இதனை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துள்ளது. இது எமது படையினர் நாட்டுக்கு வழங்கிய வெற்றிக்குப் பிரதி பலனாக மக்கள் அரசாங்கத்துக்கு வழங்கும் வெற்றியாகும். மத்திய மாகாண சபைத் தேர்தலில் நாம் தோல்வியுற்றால் நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக இல்லை என வெளியுலகுக்கு காட்ட பல சக்திகள் முயற்சிக்கின்றன. பல்வேறு சுழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

மரணத்தின் விளிம்பில் இருக்கும் புலிகளைப் பலப்படுத்துவதே இதன் நோக்கமாகிறது. இத்தகைய தருணத்தில் மக்கள் வழங்கும் வாக்குகள் நாட்டினதும் எதிர்காலச் சந்ததியினரினதும் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற அதிமுக்கியமான வாக்குகளாகும் என்பதை சகலரும் உணர வேண்டும். துர்ப்பாக்கிய யுகமொன்றைத் தவிர்த்து புதிய நவீன யுகமொன்றை உருவாக்க பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் எதிர்வரும் 14ம் திகதி நீங்கள் வழங்கும் தீர்ப்பு மிக முக்கியமானதொன்றாக அமையும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மட்டு. நிவாரணம் வவுனியாவில் கையளிப்பு

aid-bati.jpgவன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட ஏழுமில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த நிவாரணப் பொருட்கள் நேற்று வவுனியா அரச களஞ்சியத்தில் வைத்து மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ். திரு ஞானசம்பந்தரிடம் கையளிக்கப்பட்டது.

 மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் ஏ. ஜோர்ச்பிள்ளை உத்தியோகபூர்வமாக பொருட்களை கையளித்தார். ஏழு லொறிகளில் இந்தப் பொருட்கள் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டன.

பத்து நாட்களுக்குள் 30 ஆயிரம் சிவிலியன்கள் அரச பகுதிக்கு வருகை! – இராணுவப் பேச்சாளர் தகவல்

wanni.jpgஅரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலிகளின் பிடியிலிருந்து தப்பி கடந்த பத்து நாட்களுக்குள் மாத்திரம் சுமார் 30 ஆயிரம் சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை 33,131 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளததோடு, கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 3848 பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். இத்தொகை கடந்த பத்து நாட்களுக்குள் மாத்திரம் 29, 283 ஆக அதிகரித்துள்ளது.

கடந் வருடத்தில் மாத்திரம் மொத்தமாக 1704 சிவிலியன்களே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருகை தந்திருந்தனர். தங்களது பிடியிலிருந்து பொதுமக்கள் தப்பிச் செல்வதை பல்வேறு முறைகளில் தடுத்த புலிகள், தற்பொழுது தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு அந்த மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி தடுக்க முயற்சித்து வருகின்றனர். எனினும் புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி மக்கள் தொடர்ந்தும் வந்த வண்ணமுள்ளதாக பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். 

முல்லை. குருவிக்குளம் சந்தி நேற்று படையினர் வசம்

mi24_2601.jpgமுல்லைத் தீவு, குருவிக்குளம் சந்தியை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

முல்லைத்தீவு முழுவதையும் புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது படைப்பிரிவினர் இந்தப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்த குருவிக்குளம் பிரதேசம் அமையப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்களையும் படையினர் மீட்டெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரி – 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள் மற்றும் பல்குழல் இயந்திர துப்பாக்கி ரவைகள் முழுமையாக நிரப்பப்பட்ட கொள்கலன் ஒன்றையும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர்.

குருவிக்குளம் மேற்கு பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றிய இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான படைப்பிரிவினர் இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் பாரிய தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவில் எஞ்சியுள்ள புலிகளின் பிரதேசங்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் முன்னேறி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்த இராணுவப் பேச்சாளர் அங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடமேல், மத்தி தேர்தல்: பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவு; 18000 பொலிஸார் கடமையில்

election_.jpgவடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ள அதே வேளை சகல தேர்தல் பிரசாரப் பணிகளும் இன்று  நள்ளிரவு (11) 12.00 மணியுடன் முடிவடைவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

18 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் 18 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதோடு அவர்கள் நேற்று (10) முதல் தேர்தல் நடைபெறும் 5 மாவட்டங்களுக்கும் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தவிர இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் இருந்து மட்டுமன்றி அண்டிய மாவட்டங்களில் இருந்தும் பொலிஸார் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். இவர்கள் வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வீதிகள் என்பவற்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள் 15 ஆம் திகதி வரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அரச ஊழியர்கள்

தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் 12ஆம் திகதி முதல் கடமையைப் பொறுப்பேற்க உள்ளனர். இவர்கள் 13ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும் பாடசாலைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் கண்காணிப்பு

தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் பெப்ரல், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் அடங்கலான ஐந்து கண்காணிப்பு அமைப்புகள் ஈடுபடவுள்ளன. பெப்ரல் அமைப்பு 12ஆம் திகதி முதல் அப்பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவித்தார். இம்முறை 3 ஆயிரம் பேர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதோடு இதில் 600 பேர் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.

2247 பேர் போட்டி

இம்முறை தேர்தலில் மத்திய மாகாணத்தில் இருந்து 56 பேரும், வடமேல் மாகாணத்தில் இருந்து 50 பேருமாக 106 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர். 17 கட்சிகளும் 43 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட உள்ளன. 2247 பேர் களத்தில் குதித்துள்ளனர்.

மத்திய மாகாணத்தில் 15 கட்சிகளும் 26 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு இம்மாகாணத்தில் 17 இலட்சத்து 46,449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 1389 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணத்தில் 15 கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன. இங்கு 16 இலட்சத்து 61 ஆயிரத்து 733 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 1209 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வெளிநாட்டு உறவுகளில் புதிய கொள்கையை பின்பற்றப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

hillary.jpgஉலக நாடுகளுடனான உறவில் புதிய கொள்கையொன்றைக் கடைப்பிடிக்க அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தீர்மானித்திருப்பதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அண்மைய வருடங்களாக விரிசலடைந்திருந்த ரஷ்யாவுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள பைடன் ஈரானுடன் பேச்சுகளை ஆரம்பிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல விவகாரங்களை சாதகமான அணுகுமுறையினூடாக கையாள்வதற்கு அமெரிக்கா தயாராகவுள்ள அதேவேளை நட்பு நாடுகளும் இவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானை தவிர்த்து ஆப்கானிஸ்தானில் எந்தவொரு தந்திரோபாய வெற்றியையும் அடைய முடியாதென எச்சரித்துள்ள பைடன் இப்பிராந்தியத்தின் நிலைமை மோசமடைந்து வருவது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்குமே பாதுகாப்பு அச்சுறுத்தலை தோற்றுவிக்குமென தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் சர்வதேச தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய பைடனின் உரையில் ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை, காலநிலை மாற்றம் மற்றும் உலக பொருளாதார நெருக்கடி போன்ற முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

உலக நாடுகளுடனான உறவில் புதிய அணுகுமுறையொன்றைக் கடைப்பிடிப்பதென்ற புதிய நிர்வாகத்தின் தீர்மானத்துடன் நான் ஐரோப்பாவுக்கு வந்துள்ளேன். உலக நாடுகளின் விவகாரங்களை உள்வாங்கி அதனை அவதானித்து இது தொடர்பில் ஆலோசனை நடத்துவோம். அமெரிக்காவுக்கு உலகம் தேவை. உலகத்திற்கு அமெரிக்கா தேவையென கருதுகிறேன். எமது அரசாங்கம் மிக உயர்ந்த இலக்குகளைக் கொண்டுள்ளது. எமது நாட்டுக்கு வெளியில் படைப்பலத்தை பிரயோகிக்காமல் ஜனநாயக ரீதியில் விவகாரங்களைக் கையாள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தொடர்பில் அதனுடனான உறவை மீள சீரமைக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார். பல விவகாரங்கள் தொடர்பில் எம்மால் இணைந்து பணியாற்ற முடியும். ஆனால், ஒவ்வொரு விடயத்திலும் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து செயற்படுவது சாத்தியமற்றது. சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால், பொதுவாக எமக்கிடையில் இணக்கம் ஏற்படும் விடயங்களில் நாம் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும்.

மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்பு கவசத்தை அமைக்கும் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும். இதேவேளை, ஈரானின் நடவடிக்கைகளுக்கேற்ப அந்நாட்டுடனான தொடர்புகள் பேணப்படும். நேட்டோ கூட்டமைப்பு மற்றும் ரஷ்யாவுடன் நாம் அதிகளவான ஆலோசனைகளை நடத்தும் அதேவேளை எமது நட்பு நாடுகளிடமிருந்து அமெரிக்கா உதவிகளை எதிர்பார்க்கும். உதாரணத்திற்கு குவாண்டனாமோ தடுப்பு முகாம் மூடப்படும்போது அங்கிருக்கும் கைதிகளை ஏனைய நாடுகள் ஏற்றுக்கொள்வது போன்ற விடயங்களில் நாம் ஏனைய நாடுகளுடன் தீவிர ஆலோசனைகளை நடத்துவதுடன் அவற்றிடமிருந்து உதவிகளையும் எதிர்பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இன்று புதன்கிழமை அறுவை சிகிச்சை

0302-karunanidhi.jpgமுதுகுவலி குறையாத காரணத்தினால் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இன்று (புதன்கிழமை) அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என டாக்டர்கள் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காணப்படுவதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் முதுகில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக 15 நாட்களுக்கு மேலாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வலி குறையாத காரணத்தினால் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டு, அவரது தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள வலியை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளார்கள்.

இதுகுறித்து 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து வந்த டாக்டர் ஏ.ஜெய்ஸ்வாலும், மற்ற டாக்டர்களும் கலந்து பேசி அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இந்த அறுவை சிகிச்சை இன்று (11.2.2009) புதன்கிழமை  நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் கருணாநிதியின் நலனை கவனிக்க விசேட டாக்டர்களைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதி விரைவில் நலம் பெற்றிடும் வகையில் பார்வையாளர்கள் கண்டிப்பாக ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காயமடைந்த நோயாளர்கள் கப்பல் மூலம் திருமலைக்கு கொண்டு வருகை

ship-10022009.jpgவன்னியில் இருந்து நேற்று ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாத்தளன் கடற்பரப்பில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் கப்பல் தரித்துநின்று நோயாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது.

நோயாளர்கள் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர்.  ‘ஓசின்’ எனும் கப்பலே மாத்தளன் கடற்பரப்புக்கு வந்து நோயாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது. நோயாளர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் வெளியேறியுள்ளனர்.கப்பலில் நோயாளர்கள் ஏற்றப்படுகின்றனர்.

கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்ட நோயாளர்கள் திருமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தஸநாயக்க கூறினார்.