அமெ ரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா வருகிற 20-ந்தேதி அதிகாரபூர்வமாக பதவி ஏற்கிறார். இப்போது அதிபராக இருக்கும் ஜார்ஜ்புஷ் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஓய்வு பெறுகிறார்.ஒபாமா பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அமரிக்காவில் அதிபர் பயணம் செய்வதற்கு என்றே தனி விமானம் உள்ளது. “ஏர் போர்ஸ்-1” என்று இந்த விமானம் அழைக்கப்படுகிறது. ஜார்ஜ் புஷ் “ஏர் போர்ஸ்-1” விமானத்தில் அதிபர் என்ற முறையில் நேற்று கடைசி பயணத்தை மேற்கொண்டார்.
நார்வோக் பகுதிக்கு சென்ற புஷ் ஏர் போர்ஸ்-1 விமானத்தில் நேற்று வாஷிங்டன் திரும்பினார்.40-நிமிட நேரம் பயணம் செய்து விட்டு கீழே இறங்கிய புஷ் அந்த விமானம் ஊழியர்களுடன் கை குலுக்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
20-ந்தேதி ஓய்வு பெறுவதையொட்டி புஷ் வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு டெலிவிஷன் மூலம் உரை நிகழ்த்தினார். உணர்ச்சிபூர்வமான அந்த உரையில் புஷ் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இருக்கிறேன்.அமெரிக்காவில் மீண்டும் அல்கொய்தா தாக்குதல் நடப்பதையும் தடுத்திருக்கிறேன் என்று தனது சாதனைகளை விளக்கி கூறினார்.
அமெரிக்காவுக்கு ஆபத்து இன்னும் முழுமையாக அகலவில்லை.மீண்டும் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த அதிபராக வரும் ஒபாமா அமெரிக்க மக்களுக்கு நிச்சயம் நம்பிக்கையூட்டும் வகையில் செயல்படுவார். அவருக்கும் அவரது மனைவி,2-மகள்கள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் புஷ் அப்போது தெரிவித்தார்.