செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கருணாநிதி வாக்குறுதி: உண்ணாவிரதத்தை திருமா. கைவிட வேண்டும்-ராமதாஸ்

thirumavalavan-1601.jpgமுதல்வர் கருணாநிதி அளித்துள்ள உறுதிமொழியை ஏற்று திருமாவளவன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நல்லதோர் தீர்வு காண்பதற்கு 50 ஆண்டுக் காலமாக என்னால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டேன். இன்னும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். கருணாநிதியை நம்புவோம். பலமுறை வாக்குறுதி அளித்து வந்துள்ள இந்திய பேரரசு மீது முதல்-அமைச்சர் நம்பிக்கை வைத்திருக்கிறார். நாமும் நம்புவோம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பிரச்சினையில் நாம் விரும்புகின்ற முடிவை மேற்கொள்வார் என்று முதல்வரை நாம் நம்புவோம்.

முதல்வர் பெரிதும் நம்பியிருக்கிற இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளரின் கொழும்பு பயணத்தினால் என்ன விளைவுகள் ஏற்படப் போகிறது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். அங்கே நாம் விரும்புகின்ற போர் நிறுத்தம் ஏற்படுமா என்பது முக்கியமாகத் தெரிந்துவிடும். அப்படிப் போர் நிறுத்தம் ஏற்பட வழி பிறக்காவிட்டால் அதன்பிறகு, தமிழக மக்களின் சார்பில், தமிழக அரசின் சார்பில் முதல்வர் என்ற முறையில் கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்து அவரிடம் தெரிவிப்போம்.

எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் கருதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவரது உடல்நிலை குறித்து அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி புதிதாக அறிவித்திருக்கும் வாக்குறுதியையும், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் கவலையையும் மனதில் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது உண்ணாவிரதத்தை இன்றோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு 59 லொறிகளில் உணவுப் பொருள்

aid-loryes1712.jpg
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேற்று 59 லொறிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. உலக உணவுத் திட்டத்தின் கீழ் இந்த உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரியொருவர் கூறினார். வவுனியா தேக்கங்காடு களஞ்சியத்திலிருந்து ஓமந்தை வரை இராணுவப் பாதுகாப்புடன் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

ஓமந்தையிலிருந்து சர்வதேச செஞ்சிலு வைச் சங்கத்தின் வழித்துணையுடன் இந்த லொறிகள் புதுக்குடியிருப்பு களஞ்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென வவுனியா மாவட்ட செயலாளர் கூறினார். இதற்கிடையில், வன்னியிலிருந்து வந்து பாதை மூடப்பட்டதனால் திரும்பி செல்ல முடியாது கடந்த ஒரு வார காலம் வவுனியாவில் தரித்து நின்ற சுமார் 300 பொது மக்களும் நேற்று நெடுங்கேணி வரை பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியின் அபிவிருத்தியை துரிதமாக முன்னெடுக்க அரசு திட்டமிட்டுள்ளது -லக்ஷ்மன் அபேவர்த்தன

laksman-yaappa.jpg
கிழக்கை விட கிளிநொச்சியை மிக துரிதமாக அபிவிருத்தி செய்ய அரசு உத்தேசித்துள்ளதாகவும் இது தொடர்பில் வடக்கு அரசியல் தலைவர்களுடன் அரசாங்கம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து இந்தியா தலையிட வேண்டுமென வலியுறுத்த வேண்டிய அவசியம் மலேசியாவுக்கு இல்லை. எனவே, இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தேவையில்லை. இலங்கையில் நடப்பது பிரிவினை வாதம். காஸாவில் நடப்பது இன அழிப்பே. எனவே இரண்டும் வேறுபட்டது என்றும் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தேவையில்லையென மலேசிய வீடமைப்பு அமைச்சர் செய்யித் ஹமீட் அஸ்வர் மலேசிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் உலகம் நன்கு தெரிந்துகொண்டுள்ளது என்பதையே இது காட்டுகின்றது. கிழக்கிலும் பார்க்க கிளிநொச்சி அரசாங்கத்தினால் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும். அதற்கான சந்தர்ப்பம் படையினர் ஈட்டிய வெற்றியின் மூலம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் வடக்கிலுள்ள அரசியல் தலைவர்களுடன் அரசாங்கம் முதல் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் கலந்துகொண்டு இவ்விடயத்தைப் பாராட்டியதுடன் இந்திய நிவாரண உதவிப் பொருட்களை சரியாக விநியோகிப்பதற்காக நன்றி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வெற்றிக்குப் பின்னர் அரசாங்கம் படிப்படியாக வெற்றியை ஈட்டிவருகின்ற நிலையில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டிய எந்த அவசியமுமில்லை. எதிர்க்கட்சியினர் தமது அரசியல் லாபம் கருதி அரசு மீது பொய்க் குற்றம் சுமத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தர்மபுரத்தில் புலிகளின் முக்கிய நிலகீழ் முகாம் படையினரால் கண்டுபிடிப்பு

_army.jpgபடையினரால் விடுவிக்கப்பட்ட தர்மபுரம் பிரதேசத்திலுள்ள புலிகளின் பல முக்கிய முகாம்களை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தர்மபுரத்தை நேற்று முன்தினம் கைப்பற்றிய இராணுவத்தின் 58 வது படைப் பிரிவினர் அங்கிருந்து முன்னேறி மேற்கொண்ட தேடுதல்கள் மற்றும் படை நடவடிக்கைகளின் போதே இங்குள்ள முக்கிய முகாம்களைக் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 12 மணி நேரம் தர்மபுரம் பிரதேசம் முழுவதையும் சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் பாரிய தேடுதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பெருந்தொகையான குண்டுகளை தயாரிக்கும் பிரதேசம் ஒன்றை கைப்பற்றிய படையினர் அதற்கு அருகிலுள்ள பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலக்கீழ் முகாமிற்கு அடியில் மூன்று மாடிகள் நிர்மாணிக்கப் பட்டிருப்பதாகவும பிரிகேடியர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் தேடுதல் நடத்திய படையினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புலிகளின் மற்றுமொரு பாரிய பயிற்சி முகாம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அந்த முகாமுக்கு அருகிலிருந்து துப்பாக்கி ரவைகள் பெருந்தொகையானவற்றை புதைத்து வைத்திருந்த கிடங்கு ஒன்றையும் பிடித்துள்ளனர்.

ட்ரக் வண்டி-01, மோட்டார் சைக்கிள்-01, உழவு இயந்திரம் –01, முச்சக்கரவண்டி –01 மற்றும் வாகனங்களையும் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். தற்பொழுது தர்மபுரத்திலிருந்து முல்லைத்தீவை நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்

கொழும்பில் மேனன் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பு

sivashankar.jpg
இலங்கைக்கு இருநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இன்று சனிக்கிழமை கண்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் அதேசமயம், நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் இருதரப்பு நலன்கள் சம்பந்தப்பட்ட விடயங்களுடன் வடக்கு போர் நிலவரம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா பிரிவு) ஆகிய கட்சி பிரமுகர்களுடன் மேனன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேசமயம், நேற்று இரவு எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் மேனன் சந்திக்கவிருந்தார்.

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போது, வன்னிப்போர் நிலpவரம் குறித்து அறிந்து கொள்வதில் மேனன் அதிக ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. மக்கள் வெளியேற்றம் குறித்தும் வெளியேறும் மக்கள் கூறுவது என்ன என்பது பற்றியும் அறிந்துகொள்வதில் மேனன் அதிகம் கரிசனை காட்டியதாக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் கட்சிகளின் பிரதி நிதிகள் தெரிவித்தனர் சிவ்சங்கர் மேனனின் வருகை வழமையான இராஜதந்திர தொடர்பாடலின் ஓரங்கம் என்று கூறப்பட்டாலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறும் இலங்கை மோதலை முடிவுக்கு கொண்டுவர அழுத்தம் கொடுக்குமாறும் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி உட்பட தமிழக கட்சிகள் பல வலியுறுத்தி வருவதன் பின்னணியாகவே மேனனின் வருகை அமைந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இது இவ்வறிருக்க எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் ஜே.வி.பி. மேனனின் வருகையில் “உள்நோக்கம்’ இருப்பதாக சாடியுள்ளது.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்றதான அதிகாரப் பகிர்வுக்கு இலங்கை அரசாங்கம் செல்ல வேண்டுமென்ற அழுத்தத்தை சிவ்சங்கர் மேனன் கொடுக்கக் கூடுமென ஜே.வி.பி. எம்.பி. பிமல் இரட்நாயக்க கூறியுள்ளார்

வன்னியிலிருந்து வருபவர்களுக்கென விசேட பஸ் சேவை

ahathi.jpgவன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களை கொண்டு வருவதற்கென ஆறு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வன்னியில் இருந்து பெருந்திரளான மக்கள் வரத்தொடங்கியுள்ளதையடுத்தே இவ்வாறு பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் வவுனியா அரச அதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு இ.போ.ச பிராந்திய முகாமையாளர் கணேசபிள்ளை கூறினார்.

வன்னியிலிருந்து வரும் மக்களை வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களுக்கு அழைத்து வருவதற்காக இந்த பஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருவதோடு தேவை ஏற்பட்டால் மேலும் பஸ்கள் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார். வன்னியில் இருந்து வரும் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அங்கிருந்து வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களுக்கு கொண்டு வரப்படுகின்றனர்.

எம்.ரி.வி. ஊடகவியலாளரை கைதுசெய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

ranil-2912.jpgஎம்.ரி.வி. ஊடகவியலாளர் செவோன் டானியலை கைது செய்ய பொலிஸார் முயற்சித்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஒரு அதிகாரியின் பேட்டியை மையமாக வைத்து ஒரு நபரைக் கைது செய்ய முயற்சிப்பது வரலாற்றில் இதுவே முதற்தடவையெனவும் சுட்டிக்காட்டினார். ஊடக சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லையென ஊடகநிறுவனங்களின் தலைவர்களிடம் ஜனாதிபதி உறுதியளித்து நான்கு மணிநேரம் கடப்பதற்குள் ஊடகங்கள்மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.                     

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகமான கேம்பிரிட்ஜ் ரெரஸில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;

சிரச, எம்.ரி.வி.தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளரான செவோன் டானியலை பொலிஸார் வியாழக்கிழமை விசாரணைக்காக அழைப்பு விடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த செவ்வாய்க்கிழமை சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்று தொடர்பாகவே விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் செவோன் டானியல் பொலிஸாரின் கண்களுக்குப்படாமல் தற்போது மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அழைத்து ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக செயற்பட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் பாதுகாப்புச் செயலாளரின் பேட்டியை வைத்து செவோன் டானியலை விசாரணைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

இத்தகவல் வெளியானதையடுத்து ஜனாதிபதி செவோன் டானியலை கைது செய்யவோ விசாரணைக்குட்படுத்தவோ அவசியமில்லை என அறிவித்திருக்கின்றார். ஆனால், பொலிஸார் அதுபற்றி செவோனுக்கோ, அவரது ஊடக நிறுவனத்துக்கோ, குடும்பத்தினருக்கோ இதுவரையில் அறிவிக்கவில்லை. இதனால், அச்சம் கொண்ட நிலையில் செவோன் டானியல் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கின்றார். ஜனாதிபதியின் உத்தரவுக்குக் கூட பொலிஸார் அடிபணியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.

சிரச, எம்.ரி.வி.நிறுவனத்தை புலிகளின் குரல் என வர்ணிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் எவ்வாறு அதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது எனக்கேட்க விரும்புகின்றேன். சிரச நிறுவனம் தீ வைக்கப்பட்ட பின்னர் பொலிஸ் மா அதிபரும், ஊடக அமைச்சர்களிருவரும் அந்த இடத்துக்குச் சென்று செவோன் டானியலுடன் நிலைமைகளை கலந்துரையாடிய போது எதுவும் கூறாமலிருந்து விட்டு இப்போது செவோனை புலியெனக் கூறமுட்பட்டுள்ளனர். ஊடகங்கங்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும். அரசாங்கம் தொடர்ந்தும் ஊடகங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்க முற்பட்டால் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். இன்று தம்மை விமர்சிக்கும் ஊடகங்கள் மீது ஆளும் தரப்பினர் புலி முத்திரை குத்தும் ஒரு புதுக் கலாசாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

புதுவருடம் பிறந்தகையோடு ஊடக அடக்குமுறைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சிரச தீ வைப்பையடுத்து லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டுள்ளார். தற்போது செவோனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாளை என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை. பொலிஸ் தரப்பினர் சட்டத்தை தமது காலடியில் போட்டு மிதித்துச் செயற்படத் தொடங்கியுள்ளனர். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக தொலைக்காட்சிப் பேட்டியொன்றை மையமாக வைத்து ஒரு நபரை கைது செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி எதிர்காலம் குறித்து ஊடகத்துறையினர் பெரும் சந்தேகமும், அச்சமும் கொண்டுள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்த தாமதமின்றி அனைத்துச் சக்திகளும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை ரணில் விக்கிரமசிங்க இங்கு வலியுறுத்தினார்.

திருமா உண்ணாவிரதம்: பல இடங்களில் வன்முறை, பஸ்கள் எரிப்பு-உடைப்பு

thirumavalavan-1601.jpgவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தி்ல் பல்வேறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர் உண்ணாவிரம் இருந்து வருகிறார்.

சென்னை மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவனுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர். இதற்கிடையே மதுரை, கடலூர், சேலம், புதுச்சேரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

மதுரை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டது. மதுரையில் இருந்து மாத்தூர் சென்ற அரசு டவுன் பஸ் மீது குருத்தூர்பட்டி என்ற இடத்தில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பஸ் தீ பிடித்துக் கொண்டது. பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். அலங்காநல்லூரில் இருந்து அழகர்கோவில் சென்ற பஸ்சை சத்திரப்பட்டி அருகே சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். இதில் பஸ் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. கும்பல் பஸ்சை மறித்ததுமே பயணிகள் இறங்கிவிட்டதால் உயி்ர்ச் சேதம் ஏற்படவில்லை.

மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து அலங்காநல்லூருக்கு நேற்று இரவு டவுன் பஸ் போய்க்கொண்டிருந்தது. அப்போது, மாலப்பட்டி என்ற இடத்தில் பஸ்சை மறித்த ஒரு கோஷ்டியினர், பயணிகளை கட்டாயப்படுத்தி கீழே இறக்கினர். பின்னர் பஸ்சுக்கு தீவைத்து விட்டு தப்பினர். அதே போல மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு ஆங்காங்கே அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. அண்ணாநகர், செல்லூர், ஒத்தக்கடை, கோரிப்பாளையம், செக்கானூரணி, கே.புளியங்குளம், அவனியாபுரம் ஆகிய இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன.

பழனியில் இருந்து மதுரைவந்த அரசு பஸ்சை சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே நேற்றிரவு ஒரு கும்பல் வழிமறித்து கல்வீசி தாக்கியது. பின்னர் பயணிகளை இறங்கச் சொல்லிவிட்டு அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ்சின் இருக்கைகள் எரிந்து நாசமாயின. இதனால் மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று காலையில் மீண்டும் பஸ்கள் ஓடத் தொடங்கின.

இந் நிலையில் இன்று காலையும் சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதிகளில் 18 பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன. காராமணி குப்பம் அருகே பஸ் மீது கல்வீசப்பட்டதில் அந்த பஸ்சில் பயணம் செய்த சுகுணா என்ற கர்ப்பிணி காயமடைந்தார்.

பண்ருட்டியில் இருந்து கடலூர் சென்ற அரசு டவுன் பஸ், கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே வந்தபோது ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பஸ்சின் பின் பக்க டயர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து டிரைவரும், கண்டக்டரும் பயணிகளை கீழே இறங்குமாறு கூறி இறக்கி விட்னர்.

இதையடுத்து அக்கும்பல் பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது.  இந்த சம்பவங்களையடுத்து கடலூரில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் பெருமபாலான பஸ்கள் நிறுத்தப்பட்டன. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் 2வது நாளாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் உடைப்பு தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதே போல மேட்டூரை அடுத்த கொளத்தூரில் நேற்று மாலை அரசு பஸ் உடைத்து நொறுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. அரூரில் இருந்து ஊத்தங்கரை சென்ற தனியார் பஸ் மீது தீர்த்தமலை அருகே சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
புதுவையில் இருந்து சென்னை புறப்பட்ட தமிழக அரசு பஸ்சை புதுவையில் அண்ணாசிலை அருகே சிலர் மறித்தனர். இதையடுத்து டிரைவர் மாற்றுப்பாதையில் பஸ்சை ஓட்டினார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் பஸ் மீது கல்வீசியும், இரும்பு பைப்களாலும் தாக்கி உடைத்தனர்.

சென்னையில் பெரியார் நகரில் இருந்து பிராட்வேக்கு நேற்று இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் நடராஜ் தியேட்டர் எதிரே பஸ்ஸை வழி மறித்து சிலர் தாக்கினர். இதில் பஸ்சின் பின் புற கண்ணாடி உடைந்தது. இதற்கிடையே கடலூர் மாவட்ட பஸ்களில் ”உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவனை காப்பாற்று” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நன்றி: தட்ஸ்  இந்தியா (17.01.2009)

1069 பேர் படையினரிடம் நேற்று தஞ்சம்

displace.jpg
முல்லைத்தீவிலுள்ள புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 1069 சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருகை தரும் சிவிலியன்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக பெருமளவில் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை நோக்கியே 1069 சிவிலியன்களும் வருகை தந்துள்ளனர். இவர்களில் 260 சிறுவர்கள், 204 சிறுமிகள், 354 ஆண்கள் மற்றும் 291 பெண்கள் அடங்குவர். யாழ். கொக்கிளாய் பிரதேசத்தை நோக்கி 234 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 80 சிறுவர்கள், 44 சிறுமிகள், 80 பெண்கள் மற்றும் 70 ஆண்கள் அடங்குவர்.

படையினர் அண்மையில் விடுவித்த கெவில் பிரதேசத்தை நோக்கி 190 சிவிலியன்கள் காலை 8.30 மணியளவில் வருகை தந்துள்ளனர். இவர்களில் 53 சிறுவர்கள், 39 சிறுமிகள், 51 பெண்கள் மற்றும் 47 ஆண்கள் அடங்குவர். வவுனியாவின் ஓமந்தைச் சோதனைச் சாவடியை நோக்கி மாலை 3.30 மணியளவில் 483 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 92 சிறுமிகள், 89 சிறுவர்கள், 178 ஆண்கள் மற்றும் 124 பெண்கள் அடங்குவர்.

கிளிநொச்சியின் புலியன் பொக்கரை பிரதேசத்தை நோக்கி 26 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 18 ஆண்கள், 04 பெண்கள், 03 சிறுவர்கள் மற்றும் சிறுமி ஒருவரும் அடங்குவர். இராமநாதபுரத்தை நோக்கி மேலும் 46 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். 15 சிறுவர்கள், 13 சிறுமிகள், 11 ஆண்கள் மற்றும் 10 சிறுமிகள் இவர்களில் அடங்குவர். புலியன்பொக்கரை பிரதேசத்தை நோக்கி மேலும் 87 சிவிலியன்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர். 20 சிறுவர்கள், 15 சிறுமிகள், 24 ஆண்கள் மற்றும் 19 பெண்களும் இவர்களில் அடங்குவர்.

புலிகளால் தமக்கு நாளுக்கு நாள் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதாகவும் இதனை அடுத்தே தாங்கள் வரத் தொடங்கியதாகவும் இந்த மக்கள் தெரிவித்ததாக குறிப்பிட்ட பிரிகேடியர், எதிர்வரும் நாட்களில் மேலும் பெருந்தொகையான சிவிலியன்கள் வருவதற்குத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரணைமடு குளமும் அண்மித்த பகுதியும் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில்- 6 வது விமான ஓடுபாதையும் நேற்று கண்டுபிடிப்பு:

_army.jpgபுலிகளின் மற்றுமொரு முக்கிய பிரதேசமான இரணைமடு குளக்கட்டையும் அதனை அண்மித்த பிரதேசம் முழுவதையும் பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை, இரணைமடு குளத்திற்கு தென்கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள மற்றுமொரு விமான ஓடுபாதை ஒன்றையும் இராணுவத்தினர் நேற்றுக்காலை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் ஆறாவது விமான ஓடுபாதை இதுவென தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர், முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினரே இரணைமடு குளக்கட்டு பிரதேசம் முழுவதையும், அதற்கு அண்மித்த பிரதேசத்தில் அமைந்துள்ள விமான ஓடுபாதையையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமும், 200 மீற்றர் அகலமும் கொண்ட விமான ஓடுபாதையை படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இரணைமடு குளக்கட்டு அதன்வான் கதவுகளுடன் மூன்று கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதென தெரிவித்த பிரிகேடியர், இங்கிருந்து இருமுனைகள் ஊடாக இராணுவத்தினர் தமது முன்னேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரணைமடு குளமும் அதன் சுற்றுப்புறங்களும் நீண்டகாலமாக புலிகள் வசம் இருந்துள்ளதுடன் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இந்தப் பகுதி விளங்கியுள்ளது. தற்பொழுது இந்த குளம் முற்றாக நீர் நிரம்பிக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரணைமடு குளத்திலிருந்து மேற்கு புறத்தை நோக்கி புலிகள் பாரிய மண் அரண்களை நிர்மாணித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். புலிகளின் ஆலோசகரான (காலஞ்சென்ற) அன்டன் பாலசிங்கம் வன்னிக்கு விஜயம் செய்தபோது இந்த குளத்தில்தான் அவர் பயணம் செய்த கடல் விமானம் தரையிறக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி- முல்லைத்தீவு மாவட்ட எல்லைகளை இணைக்கும் பிரதேசமாக இரணைமடு குளம் விளங்குவதாக தெரிவித்த பிரிகேடியர், இந்தப் பிரதேசத்தில் புலிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்களுக்கு பின்னரே இரணைமடு குளத்தை பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு, விசுவமடு, ராமநாதபுரம் பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் 6 சடலங்கள், பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வாகனங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.