செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கட்சத் தீவு-அனைத்து கட்சிகளும் ஆதரித்தால் தீர்மானம்: கருணாநிதி

karunanithi.jpgஅனைத்துக் கட்சிகளும் ஆதரி்த்தால் கட்சத் தீவை மீட்பது குறித்து சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றத் தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறினார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரியும் கட்சத் தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் கச்சத் தீவில் இலங்கை ராணுவத் தளம் அமைப்பதை தடுக்கக் கோரியும் இன்று சட்டசபையில் எதிர் கட்சிகள் சிறப்பு ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தன.

இந்த விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, அதிக மீனுக்கு ஆசைப்பட்டு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதாக 1992ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இப்போதும் அதே நிலை தான் நீடிக்கிறது. கட்சத் தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததை திமுக ஆதரிக்கவில்லை.

கச்சத் தீவை மீட்கக் கோரி சட்டப் பேரவையில் பலமுறை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டபோதும் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவு இல்லாததால் அதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இப்போது அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் இது தொடர்பாக தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது என்றார்.

30 கிலோ கிளேமோர்கள், குண்டுகள், ஆயுதங்கள் மீட்பு – முல்லைத்தீவில் தொடர்ந்தும் தேடுதல்

udaya_nanayakkara_brigediars.jpgமுப்பது கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த கிளேமோர், பல்வேறு ரக மோட்டார் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

வெள்ளைமுள்ளி வாய்க்கால், சாலை, புதுக்குடியிருப்பு, குப்பிலான்குளம், பட்டிக்கரை மற்றும் புளியம்பொக்கனை ஆகிய பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் தேடுதல் களை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித் தார்.

120 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் – 02, 80 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள்-02, 81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள்-03, 60 மி.மீ ரக மோட்டார் குண்டுகள்-03, மிதிவெடிகள்-100, ரி-56 ரக துப்பாக்கிகள்-04, கைக்குண் டுகள்-05 மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பான் கீ மூனுக்கு எதிராக நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்

06bankimoon.jpgஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நேற்று நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பான் கீ மூனுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் ‘உலக மனிதாபிமான விருது’ கிடைக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தின்போது, வவுனியா மெனிக்பார்மில் உள்ள தடுப்பு முகாம்களை மூட வேண்டும் எனவும் அதில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர்.இதன் காரணமாக மாலை 6.30க்கு நடைபெறவிருந்த பான் கீ மூனின் ஊடக சந்திப்பு, இரவு 8.35 வரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குளவி கொட்டிய ஆசிரியை மரணம்

19062009.jpgபாட சாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் குளவி கொட்டியதால் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (17) பூண்டுலோயா பகுதியில் இடம்பெற்றுள்ளது. பூண்டுலோயா – ஃபர்ண்ட்லண்ட் வித்தியாலயத்தைச் சேர்ந்த இராணி அன்ஸார் என்ற 41 வயது ஆசிரியையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த ஆசிரியை பாடசாலையிலிருந்து தேயிலை மலைக்காடு ஊடாக வீடு சென்றுகொண்டிருந்தபோது ஆலமரத்தில் கட்டியிருந்த குளவிகள் கொட்டியுள்ளன. இதனால் பதறியடித்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை ஓடிய அவர், தேயிலை மலையில் வீழ்ந்துள்ளார். அப்போது கடமையிலிருந்த தோட்ட உத்தியோகத்தர் ஒருவர் ஆசிரியையை பூண்டுலோயா வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்த்துள்ளார்.

ஆனால் அங்கு ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த ஆசிரியையுடன் மேலும் ஐவருக்குக் குளவி கொட்டியபோதும் அவர்கள் ஓடிச்சென்று பாதுகாப்புத் தேடிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதுளை அரசினர் மருத்துவமனையில் சேலைனுக்கு தட்டுப்பாடு; நோயாளர் சிரமம்

பதுளை பிரதான அரசினர் மருத்துவமனையில் “சேலைன்’ தட்டுப்பாடு பெருமளவில் நிலவி வருவதினால் நோயாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். “சேலைன்’ செலுத்த வேண்டிய நோயாளர்களுக்கு, வெளியில் மருந்தகங்களிலிருந்தே கூடிய விலை கொடுத்து “சேலைன்’ போத்தல்களைப் பெற வேண்டியுள்ளது. இதனால், பதுளை நகர் மருந்தகங்களிலும் “சேலைன்’ தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதுகுறித்து பதுளை அரசினர் மருத்துவமனை பிரதிப்பணிப்பாளர் மதுபாசினி புல்ளேபெருமவிடம் தொடர்புகொண்டு வினவிய போது; “சேலைன்’ போர்த்தல்களை தனியார் மருந்தகங்களில் பெற்று நோயாளர்களுக்கு வழங்கி வருவதாக மட்டுமே கூறினார். “சேலைன்’ தட்டுப்பாடு குறித்து மருத்துவமனை பிரதிப்பணிப்பாளர் எதுவும் கூற மறுத்துவிட்டார்.

இதையடுத்து, சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகம் அஜித் மென்டிஸிடம் தொடர்பு கொண்டு வினவியபோது; “சேலைன்’ வகைகளுக்கு எதுவித தட்டுப்பாடும் இல்லை. பதுளை அரசினர் மருத்துவமனை உத்தியோகத்தர்களின் கவனயீனமே இந்தநிலைக்கு காரணம்.

சுகாதார சேவைக் களஞ்சிய அறையில் போதியளவு “சேலைன்’ போத்தல்கள் உள்ளன. மேலும் இத்தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரணையொன்றினை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றார்.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் பலர் தனியார் மருந்தகங்களிலிருந்து கூடுதல் விலை கொடுத்து “சேலைன்’ பெற்று வருவதை உறுதிப்படுத்தினர். அதேநேரம், டாக்டர்களின் கடிதத்துடன் தனியார் மருந்தகங்களுக்குச் சென்று சேலைன் வாங்கிக் கொண்டு வரும் நோயாளர்களின் உறவினர்களையும் காணமுடிந்தது.

பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 2வது நபரும் அடையாளம் காணப்பட்டார்

19swine-flu.jpgஇலங் கையில் பன்றிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ள இரண்டாவது நோயாளியும் நேற்று அடையாளம் காணப்பட்டார். முதன் முதலில் இந்நோய் தாக்கத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் ஆறு வயதுடைய சகோதரனே நொவல் இன்புளுவன்சா ஏ/எச்1 என்1 எனும் பன்றிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் பீரிஸ் தெரிவித்தார்.

வத்தளையில் நடைபெறும் திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூரினூடாக குடும்பமொன்று கடந்த 14ம் திகதி இலங்கை வந்துள்ளது.  சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையின் போது அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியொருவர் பன்றிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்ததையடுத்து அச்சிறுமியும் அவருடைய தாயாரும் சிக்கப்பூரிலேயே தடுத்து வைக்கப்பட்டனர். ஏனையோர் மாத்திரம் இலங்கை வர அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கை வந்திருக்கும் அக்குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய சிறுவன் கடும் காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பாக சிறுவனின் தந்தை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்ததையடுத்து தொற்று நோய் அவசர சிகிச்சைப் பிரிவில் மேற்படி சிறுவன் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போது அச்சிறுவன் பன்றிக் காச்சலினால் பீடிக்கப்பட்டது ஊர்ஜிதமானது. இச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாக் கிழமை இடம்பெற்றது.

இதனையடுத்து இச் சிறுவனின் குடும்பத்தார் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் அனைவரும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவினரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டனர்.

ஏற்கனவே நோய்த் தாக்கத்துக்குள்ளான சிறுவனுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ள அவனது ஆறு வயதுடைய சகோதரனும் கடும் காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

இவரை அம்பியூலன்ஸ் மூலம் தொற்று நோய் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரவ ழைத்து பரிசோதித்ததில் இச்சிறுவனும் நொவல் இன்புளுவன்சா ஏ/எச்1என்1 எனும் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

பன்றிக் காய்ச்சலினால் உயிராபத்து ஏற்படும் என்பது தவறான கருத்து எனக் கூறிய விசேட வைத்திய நிபுணர் சுதத் பீரிஸ் அதனை உடனடியாக குணப்படுத்தாவிட்டால் உடலில் பல சிக்கல்கள் தோன் றலாமென கூறினார். இலங்கையில் இந் நோய்க்கான தடுப்பு மருந்து போதியளவு கையிருப்பிலுள்ளதுடன், 20 பிராந்தியங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் இந்நோய் குறித்து வீணாக அச்சப்படத் தேவை இல்லை என்றும் கூறினார். அதேசமயம் நோய் அறி குறிகளை அலட்சியம் செய்யாமல் அவதானமாக இருப்பது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார்

ஊடக அடக்குமுறையினால் இலங்கை சிறந்த ஊடகவியலாளர்களை இழந்துள்ளது -ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு

இலங்கைஊடக அடக்குமுறை காரணமாக சிறந்த ஊடகவியலாளர்களை இழந்துள்ளதென அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக விமர்சனப் பாங்கான செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்களே இவ்வாறு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் எனவும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பவது குறித்து உரிய கவனம் செலுத்தப்படாதமை மிகவும் வேதனையளிப்பதாக ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பான சீ.பி.ஜே.யின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜோல் சிமோன் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தற்காலிக அரசை அமைப்பது வெறும் கற்பனை – கே.பி.விரைவில் கைதாவார்; அமைச்சர் போகொல்லாகம

rohithaogollagama.bmpநாடு கடந்த தற்காலிக தமிழீழ அரசாங்கத்தை அமைப்பது கே.பி.யின் (குமரன் பத்மநாதன்) கற்பனையே என்றும் அதனை கற்பனை மட்டத்திலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம, கே. பத்மநாதன் என்பவர் சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் ஒருவராகும். அவரை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்குமாறு நாம் கோரியுள்ளோம். வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் இது தொடர்பாக சர்வதேச அரசாங்கங்களிடம் கடிதம் மூலம் கேட்டுள்ளோம்.

கே.பி. கைது செய்யப்பட்டு இலங்கையிடம் கையளிக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாட்டின் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும். நாடு கடந்த தற்காலிக அரசாங்கம் அமைப்பது என்பது அவரின் கற்பனையாகும். அந்தக் கற்பனை மட்டத்திலேயே அதனை நாம் கட்டுப்படுத்துவோம். கே.பி. விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடத்தப்பட்ட நியூஸிலாந்து கம்பனியின் கப்பல் தற்போது சோமாலிய கடற்பரப்பில் உள்ளது. இதிலுள்ள 7 இலங்கையரை விடுவிப்பது தொடர்பில் நாம் நியூஸிலாந்து கம்பனியிடமும் நைரோப்பியுடனும் தொடர்பு கொண்டுள்ளோம்.

சங்காய் ஒத்துழைப்பு அமையமானது இலங்கைக்கு பேச்சுவார்த்தைக்கான பங்காளி என்ற அந்தஸ்த்தை வழங்கியுள்ளது. பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையிட்டு இதன் போது பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையிலுள்ள சகல இனக் குழுக்களுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்படுமென நம்பிக்கை வெளியிடப்பட்டிருப்பதுடன் அதன் மூலம் நாட்டில் இறுதிச் சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென்று தெரிவித்திருக்கின்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கான பங்களிப்பானது மகிந்த ராஜபக்ஷவின் அரசுக்குக் கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும். இதில் பாகிஸ்தான், இந்தியா பார்வையாளராகவுள்ளன. இந்த அமைப்பில் சீனா, கிர்கிஸ்தான், கசகஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் உள்ளன. இதன் நோக்கம் பொருளாதாரம் மற்றும் அரசியல் உட்பட ஏனைய விடயங்களில் இணைந்து செயற்படுவதாகும் என்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர விசேட திட்டங்கள்

dammika_perera_boi.jpgஇலங் கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரக்கூடிய வகையில் விசேட வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக நேற்று  இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புலிகளைத் தோற்கடித்ததன் மூலம்; வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வருவதில் காணப்பட்ட சிக்கல் நிலைமை தற்போது நீங்கியுள்ளது. இலங்கையில் பல்வேறு துறைகளில் தொழில்வாய்ப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தி, அதன்மூலம் பெறப்படும் வருமானத்தை 6 சத விகிதத்தால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.  கிழக்கு மாகாணத்தில் மேலதிக ஏற்றுமதிப் பயிர்களை செய்கை பன்னுவதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா பாடசாலைகளிலிருந்து மக்கள் மனிக்பாம் பகுதிக்குப் படிப்படியாக இடம் மாற்றம்

civiling_fleeng3.jpgவன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைப் படிப்படியாக மனிக்பாம் பகுதியில் உள்ள நிவாரண கிராமங்களுக்கு இடம் மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காமினி மகாவித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு, கோவில்குளம் இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இருந்து படிப்படியாக இடம்பெயர்ந்த மக்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், காமினி மகாவித்தியாலயத்தில் இருந்தவர்கள் முழுமையாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதுடன், பாடசாலைகளில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோருக்கான நிலையங்களில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியைப் போக்குவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.