செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கடன்களை மீள செலுத்துவதை 2028ம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளில் இலங்கை!

இலங்கை அதன் கடன்களை மீள செலுத்துவதை 2028ம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த இறுதிபேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுப்பதற்காக ஜப்பான் உட்பட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது.

 

கடன்வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டன அடுத்த சில வாரங்களில் முழுமையான அறிவிப்பு வெளியாகும் என இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயங்களிற்கான ஆலோசகர் சாகலரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

இலங்கை கடன்களை 15 வருடங்களிற்குள் மீள செலுத்தவேண்டியிருக்கும் 2028 முதல் 2043ம் ஆண்டிக்குள் என தெரிவித்துள்ள அவர் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் கடன்கள் குறைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்

 

இலங்கை 2022 ஏப்பிரலில் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது.இதன் மூலம் இலங்கை தன்னை வங்குரோத்து நிலைக்குஉட்படுத்தியது.

 

2023 ஏப்பிரலில் கூட்டத்தில் இலங்கைக்கு கடன்வழங்கும் நாடுகள் குழு ஏற்படுத்தப்பட்டது சீனாவிற்கு பின்னர் இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய நாடான ஜப்பான் இந்தியா பிரான்சுடன் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளது.

 

இலங்கை கடன்களை மீள செலுத்துவதை இடைநிறுத்திவைப்பது தொடர்பிலும் வட்டியை செலுத்துவது தொடர்பிலும் கடன்வழங்கிய நாடுகளிற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது

 

சீனா இந்த கூட்டத்தில் பார்வையாளராக மாத்திரம் கலந்துகொண்டுள்ளது

 

எனினும் சீனாவுடனான கடன்மறுசீரமைப்பு நாடுகள் ஏனைய நாடுகளுடனான கடன்மறுசீரமைப்பை ஒத்ததாகவே காணப்படும் என தெரிவித்துள்ள இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

 

2023ம் ஆண்டின் இறுதியில் இலங்கை செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடன் 37.3 பில்லியன் டொலராக காணப்பட்டது இதில் சீனாவிற்கு 4.7 பில்லியன் டொலர்களை செலுத்தவேண்டும்.

 

2017 இல் இலங்கை தனது தென்பகுதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியது .

 

இது கடன்களை வழங்குவது தாமதமானால் உட்கட்டமைப்பு திட்டங்களை கைப்பற்றும் கடன்பொறிக்கான உதாரணமாக கருதப்பட்டது.

 

இலங்கையை தளமாக கொண்டு இந்தோ பசுபிக்கில் சீனா அகலக்கால்பதிப்பது குறித்து இந்தியா ஜப்பான் உட்பட இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் சில கவலை கொண்டுள்ளன.

 

எனினும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை முற்றிலும் வர்த்தக நோக்கங்களை கொண்டது என தெரிவித்த சாகலரத்நாயக்க இதில் இராணுவ நோக்கம் எதுவுமில்லை இலங்கை வெளிநாட்டு முதலீட்டுக்கு தயாராக உள்ளது நாங்கள் எந்த நாடு என்ற அடிப்படையில் முதலீட்டாளர்களை தெரிவு செய்வதில்லை தேசிய பாதுகாப்பிற்கு பாதுகாப்பு ஏற்படுத்தினால் மாத்திரம் அது குறித்து கரிசனை கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

 

எனினும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுதக்கூடிய நாட்டின் வடபகுதி குறித்து நாங்கள் கவனத்துடன் இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் நானோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் அரசாங்க வேலைதிட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தினால் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சியில் குறித்த இரு இடங்களிலும் நீர் வழங்கல் சமூக அடிப்படை நிலையத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள நனோ நீர் சுத்திகரிப்பு மையம் வைபக ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

 

நிகழ்வில் வீடமைப்பு நகரபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க, கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இஸ்ரேலுக்கான அனைத்து ஆயுத விற்பனையையும் நிறுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தல் !

இஸ்ரேலுக்கான அனைத்து ஆயுத விற்பனையையும் நிறுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

 

இதற்கான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் இப்பேரவையில் 28 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 6 நாடுகள் எதிராக வாக்களித்தன. 13 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.

 

காஸா யுத்தத்தினால் 33,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இனப்படுகொலை அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் சார்பில் பாகிஸ்தான் இப்பிரேரணையை முன்வைத்திருந்தது.

வருடத்தின் முதல் மூன்று வருடங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறிய 74,499 இலங்கையர்கள் !

2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்று (04) தெரிவித்துள்ளது.

 

வெளிநாடுகளுக்கு வேலை பெற்று சென்றவர்கள் தொடர்பில் பணியகம் மேலும் கூறியதாவது :

 

வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடுகளுக்கு சென்ற 74,499 இலங்கையர்களில் 46 வீதமானோர் பெண்கள் ஆவர்.

 

கடந்த 2023இல் இதே காலகட்டத்தில் 76,025 இலங்கை பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றனர். அந்த எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

இலங்கையர்கள் பெரும்பாலும் தென்கொரியா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு பெற விரும்புகின்றனர்.

 

அதனடிப்படையில், 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 17,793 பேர் குவைத்துக்கும், 2,374 பேர் தென் கொரியாவுக்கும், 2,114 பேர் இஸ்ரேலுக்கும், 1,899 பேர் ருமேனியாவுக்கும், 1,947 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளனர்.

 

அத்துடன், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் 963.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

 

மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்கள் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் அதிக அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுத்துள்ளனர்.

 

அத்துடன், ஆடை உற்பத்தித்துறை மூலம் 803.4 மில்லியன் டொலர், சுற்றுலாத்துறை மூலம் 687.5 மில்லியன் டொலர், தேயிலை உற்பத்தித்துறை மூலம் 229.9 மில்லியன் டொலர், பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதியில் 177.3 மில்லியன் டொலர், இறப்பர் தயாரிப்பு ஏற்றுமதியில் 166.4 மில்லியன் டொலர், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதியில் 102 மில்லியன் டொலர் என அந்நிய செலாவணி வருவாய்களும் சிறந்த முறையில் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கித் தரவுகளினூடாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலுக்கு ஆதரவாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரவு வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று நான்கு வீடுகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்று இருந்தது.

 

அந்நிலையில் மறுநாளும் குறித்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட முனைந்தவேளை ஊரவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை நால்வர் பிடிபட்டனர், ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர்.

 

பிடிபட்டவர்களிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் எமக்கு ஆதரவாக செயற்படுபவர் என கூறியுள்ளனர்.

 

அதேவேளை பிடிபட்டவர்களின் கைபேசிகளை ஊரவர்கள் சோதனை செய்த போது, அவற்றில் வன்முறை கும்பலை சேர்ந்த சிலர் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ள புகைப்படங்கள் காணப்பட்டன.

 

தம்மால் பிடிக்கப்பட்ட நால்வரையும் ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஊரவர்கள் கையளித்ததை அடுத்து, பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் மன்றில் முற்படுத்தினர்.

 

அதேவேளை , தமக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆதரவு உண்டு என வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் ஊரவர்களுக்கு கூறியமை தொடர்பிலான வீடியோ பதிவு மற்றும் ஆயுதங்களுடன் காணப்பட்ட புகைப்படங்கள் என்பன சட்டத்தரணி ஊடாக நீதவானின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.

 

அதனை அடுத்து புகைப்படத்தில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும், வன்முறை கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு சான்று பொருட்களாக மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு உதவுவதாக கூறிய பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து மன்றில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பொன்னாவெளி மக்கள் – இரத்து செய்யப்பட்டது நிகழ்வு !

கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (05) பகல் இடம்பெற்றுள்ளது.

 

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

 

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், இன்றைய தினம் அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

 

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் கட்டுப்படுத்தியிருந்தனர்.

 

தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்றதுடன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றது.

 

ஆயினும், மக்களின் தொடர் எதிர்ப்பினால் குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டு அமைச்சர் திரும்பியுள்ளார்.

நாடு கடத்துவதை போலவே மூவரும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர் – தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன்

இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.

 

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களின் பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈழ தமிழர்கள் நால்வரும் ,திருச்சி சிறப்பு முகாமில் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

 

அவர்களில் சாந்தன் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து இருந்தார். ஏனைய நால்வரும் இலங்கைக்கு செல்வது தமக்கு பாதுகாப்பு இல்லை என கூறி தாம் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரி வந்திருந்தனர். அதற்கு இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை துணை தூதரகமும் அனைத்து நாடுகளுக்குமான கடவுசீட்டை வழங்க மறுத்தது.

 

இந்நிலையில் கடந்த மாதம் சாந்தன் உயிரிழந்தமையால் , சிறப்பு முகாமில் இருந்த ஏனைய மூவரின் மனநிலை பாதிக்கப்பட்டது. அதனால் அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. சிறப்பு முகாமில் தொடர்ந்து இருந்தால் நாமும் உயிரிழந்து விடுவோம் என பயம் அவர்களிடம் ஏற்பட்டமையால் , இலங்கை திரும்ப சம்மதித்தனர்.

 

இலங்கை திரும்ப யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு விமான சீட்டு எடுக்க முயன்ற வேளை ” ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்” விமானம் மூலமே பயணிக்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. குறித்த விமானம் சென்னையில் இருந்து , கொழும்புக்கே இருந்தமையால் அதில் பயணிக்க வேண்டி ஏற்பட்டது.

 

அதேபோன்று சென்னை விமான நிலையில் வரையில் மூவருக்கும் பாதுகாப்பு வழங்கும் முகமாக அதிகாரிகள் செயற்பட்டனர். அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறங்கிய பின்னரே இறங்க வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.

 

ஒருவரை நாடு கடத்தும் போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

 

இலங்கை வந்து இறங்கியதும் , அதிகாரிகள் , இவர்கள் மூவரின் கடவுசீட்டையும் மூவரையும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சுமார் 02 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 

எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினீர்கள் ? எதற்காக சென்ற நீங்கள் ? எப்ப சென்ற நீங்க ? போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு அவற்றை பதிவு செய்தனர்.

 

பின்னர் இவர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியமையால் இவர்களுக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் தாம் வழக்கு தாக்கல் செய்ய போகிறோம். என தெரிவித்தனர்.

 

பிறகு உயர் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி , இவர்களுக்கு எதிராக இலங்கையில் எந்த குற்றச்சாட்டு இல்லை என்பதாலும் 33 வருடங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வெளியேறியமை தொடர்பில் வழக்கு தொடர்வதில் உள்ள சிக்கல் காரணமாகவும் வழக்கு தொடராது விட்டனர்.

 

சுங்க அதிகாரிகளின் விசாரணைகளின் போது மூவருடன் நானும் அருகில் இருந்தேன். அவர்களின் விசாரணை முடிவடைந்த பின்னர், புலனாய்வு பிரிவினர் அவர்களை பொறுப்பெடுத்து தமது விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 

அதன் போது , அவர்கள் மூவரையும் தாம் தனித்தனியாக விசாரணை செய்ய வேண்டும் என கூறி மூவரையும் தனித்தனியே அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் விடுவித்தனர் என மேலும் தெரிவித்தார்.

கிழக்கில் பிச்சமல் விகாரை அருங்காட்சியகம் அமைக்க 3.5 மில்லியன் நிதியும் ஒதுக்கீடு செய்தார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், இடம்பெற்றுவரும் விகாரை புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கு 1.5 மில்லியன் நிதியும், தொல்பொருள் அருங்காட்சியகத்தை ஆரம்பிப்பதற்கு 3.5 மில்லியன் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளார்.

 

உள்ளூராட்சி சபைகளால் பராமரிக்கப்படாத விகாரையை சுற்றியுள்ள கடற்கரையை ஆய்வு செய்து, 24 மணிநேரத்துக்குள் கடற்கரையை சுத்தம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்தார்.

பாரிஸ் கவர்ச்சிச் ‘செல்லம்’ சுஜியின் அரசியல் அதிரடி! வீறுகொண்ட லாச்சப்பல் ‘புளி’ முரளி!!!

பாரிஸில் முப்பதினாயிரம் வரையான பெரும்பாலும் ஆண்களைத் தன் ரிக்ரொக் வலைப்பக்கத்தில் வீழ்த்தி தன்னைப் பின்தொடரச் செய்து, ஈழத்தமிழர் மத்தியில் அரசியல் அதிர்வொன்றை ஏற்படுத்தி உள்ளார் சுஜி கூல் என்ற பெயரில் உலாவரும் பெண். மாலை மயக்கம் தரும் தமிழ் சினிமாப் பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் இட்டு ரிக்ரொக் பதிவிடும் சுஜி இடைக்கிடை அரசியல் பதிவுகளும் இட்டுவருகின்றார். இவருடைய பதிவுகளில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனைப் பற்றியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் ஈழத் தமிழர்கள் பற்றியும் மிகத் தரக்குறைவாக பதிவுகளை இட்டுவருகின்றார். அவ்வாறு கடைசியாக அவரால் இடப்பட்ட பதிவில் சுஜி தமிழ் தூஷண வார்த்தைகளை தாராளமாகவே வீசி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனை வசைபாடியுள்ளார்.

இதனைக் கண்டு வீறுகொண்டெழுந்த ரிக்ரொக் ‘புளி’கள், இவர்களும் கவர்ச்சிச் செல்லத்தை பின்தொடரும் முப்பதினாயிரத்தில் அடங்குவர். இவ்வாறு வீறுகொண்டெழுந்த கச்சா சிவம் என்ற கனடாப் ‘புளி’, இவளுக்கு (சுஜி க்கு) ஏன் இன்னும் சம்பவம் நிகழ்த்தப்படவில்லை என்ற தொணியில் பொங்கியெழுந்து ரிக்ரொக் பதிவொன்றை வெளிட்டுள்ளார். அந்தப் பதிவைப் பார்த்து உசுப்பேறிய கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு கடைக்காரரான, லாச்சப்பல் அக்கா கடை உரிமையாளர் முரளி என்று அறியப்பட்ட பாலசிங்கம் பாலமுரளி செல்லத் தங்கச்சி சுஜீயை பத்து வரையான ஆண்கள் சகிதம் சேர்ந்து தாக்கியுள்ளார். சுஜியின் கையை உரிமையோடு பிடித்து கன்னத்தில் சில தடவைகள் அறைந்தததுடன் அவருடைய சட்டையையும் இழுத்து சேட்டைகள் செய்துள்ளனர். அத்தோடு சுஜியின் மீது முட்டைகளையும் வீசி அடித்துள்ளனர். சுஜி தன்னுடைய ரிக்ரொக்கில் என்னென்ன வசை பாடினாரோ அவ்வளவு வசையையும் பாலசிங்கம் பாலமுரளியும் அவருடன் வந்த கும்பலும் படியது. சுஜி தனக்கு மாதவிடாய் வந்துவிட்டதாக தெரிவித்த போதும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தின் போது தன்னை அணுகியவர்களை அண்ணா, அண்ணா என்றழைத்த சுஜி, ஒரு கட்டத்திலும் முரளி கும்பலின் வன்முறைக்குப் பணியவில்லை. “நீங்கள் செய்வது பிழை என்பதை உணருவீர்கள்” என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு வந்தார். பத்து வரையான வெறி கொண்ட சருகு புலிக் கும்பலிடம் மாட்டிய இளம் பெண்ணாக அந்த விடியோவில் சுஜி காணப்பட்டார். ராஜபக்சவை தீவிரமாக ஆதரிக்கும் சுஜி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு எதிராகவும் அவ்வமைப்புக்கு எதிராகவும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் தூஷண வசை பாடியுள்ளார் என்றால் அதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது. சொல்லப் போனால் அது சிறுமைப்படுத்திச் சொல்வதாகத் தான் அமையும். ரிக்ரொக்கில் காட்டும் ஆக்ரோஷம் பத்து வீறுகொண்ட ரிக்ரொக் புலிப் போராளிகளைக் கண்டதும் அடங்கிப் போனது. முரளி கும்பலும் ஆனையிறவு முகாமை தகர்த்த கணக்கில் புலிப்பாடலோடு அப்பெண்ணைத் தாக்குவதை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். அதற்கு ஈழத்தமிழ் சமூக வலைத்தள போராளிகள் பலர் உணர்ச்சி பொங்க ‘இவளுக்கு இது தேவைதான்’ என்ற கணக்கில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்க்குத் கருத்துத் தெரிவித்த தாயகத்தைச் சேர்ந்த மனித உரிமைவாதியும் பெண்ணிய வாதியுமான நளினி ரட்ணராஜா, சுஜி வெளியிட்டது அரசியல்பதிவேயல்ல அவை வெறுப்புப் பேச்சுக்கள் மட்டுமே என்கின்றார். “சுஜி ஒரு அமைப்பு கிடையாது, அறியப்பட்ட ஒரு புள்ளி கிடையாது. சட்டத்தை உங்கள் கையில் எடுக்கின்ற அதிகாரத்தை யார் தந்தது? வீட்டில் உள்ள மனைவி, பிள்ளைகள், தாயார் போன்றவர்களையும் இந்த ஆண்கள் இவ்வாறு தானே நடத்துகின்றனர்?” என்று கேள்வி எழுப்பினார் பெண்ணியவாதி நளினி ரட்ணராஜா.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் இவ்வாறான விமர்சனங்கள் அதுவும் பச்சைத் தூஷணத்தில் சமூக வலைத்தளங்களில் தினமும் பதிவு செய்யப்படுகின்றது. குறிப்பாக ஹிளப் ஹவுஸ் என்கின்ற மேடையில் இவ்வாறான பச்சைத் தூசணப் பேச்சுப் போட்டிகள் நாளாந்தம் மாலையில் அரங்கேறி அதிகாலை வரை நடைபெறும். அதில் பாலியல் வக்கிரம் மடை திறந்த வெள்ளம் போல் பாயும். அரசியலில் தங்களது பெயரும் அறியப்பட வேண்டும் என விரும்பும் முகவரியற்ற பலர் இத்தளங்களைப் பயன்படுத்தி வருவது ஒன்றும் இரகசியமல்ல. இவ்வாறு இயக்கங்களின் மோதல்களால் சமூக வலைத்தளங்கள் நாற்றமெடுப்பது ஒன்றும் புதிதல்ல. கோட்டும் சூட்டும் போட்டு நுனி நாக்கில் அந்நிய மொழி பேசி நடித்தாலும் கீபோட்டும் மைக்கும் கிடைத்தால் இந்தக் கனவான்களின் பேச்சு கூவத்தையும் மிஞ்சும் நாத்தம் அடிக்கும்.

இவ்வாறான தூஷண மாலைகளைத் தாங்கிய பலர் இன்றும் எம்முன் உயிருடன் உள்ளனர். இந்த முரளி போன்ற ‘புளி’கள் ஆய்வாளர் வி சிவலிங்கம், ரிபிசி ராம்ராஜ், பெண்ணியவாதி ராஜேஸ் பாலா என ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மாற்றுக் கருத்தாளர்களை பச்சைத் தூஷணத்தில் வசைபாடி அவர்களது குடும்பங்களையும் குடும்பப் பெண்களையும் வலைத்தளங்களில் இழுத்து வம்பு செய்து வந்தனர். மனித உரிமைவாதி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பாரிஸில் வாழும் எல்லாளன் என்ற ‘புளி’யும் இவ்வாறான தூஷண மன்னன். மகனுக்கு பிரபாகரன் என்று தான் பெயரும் வைத்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தியதில் இந்தப் புலம்பெயர்ந்த ‘புளி’க்கும்பலுக்கு முக்கிய பங்குண்டு.

இப்போது எழுந்துள்ள அலை ஒரு பெண் எப்படித் தூஷணத்தில் தங்களைக் கேட்கலாம் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே. தங்களுக்கு நிகராக தூஷணத்தில் வசைபாடுகிறாள் என்ற ஆதங்கம் அவர்களுடைய மொழியில் தெரிகின்றது. ஆண்களுக்கு மட்டும் தான் தூஷணம் சொந்தம் அல்ல என்பதை தலைவரை வைத்து சுஜி கட்டுடைத்து விட்டாள் என்ற ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே சுஜி தாக்கப்பட்டுள்ளாள். சுஜி ஒரு உதிரிப் பெண். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகின்றது. தனக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் கூறுகின்றாள். ஆனால் அது உண்மையா என்பது தெரியவில்லை. பிரான்ஸில் வாழும் இப்பெண் வே பிரபாகரன் பற்றியும் அவ்வமைப்பு பற்றியும் வெளியிட்டுள்ள பதிவுகள் சாதாரண மனநிலையுடைய ஒருவர் செய்யக்கூடிய பதிவல்ல. அப்படியிருந்தும் சுஜியின் வலையில் வீழ்ந்து முப்பதினாயிரம் வரையானோர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். ஏன்?

இவர்கள் பற்றி நகைச்சுவையாகத் தேசம்நெற்க்குத் தெரிவித்த முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர், “கச்சா சிவமும் முரளியும் மட்டும் கட்டையரோடு நின்றிருந்தால், தமிழீழம் எப்பவோ கிடைத்திருக்கும்” என்றார். மற்றுமொரு போராளி இது பற்றிக் குறிப்பிடுகையில் அப்துல்லா கஸ்டப்பட்டு மீட்டுக்கொண்டு வந்த தலைவர் இவங்கள் செய்யிறதப் பார்த்து சயனைட் கடித்துவிடப்போகிறாராம்” என்றார்.

ஒரு உதிரிப் பெண்ணான, எதிலிப் பெண்ணான சுஜியைத் தாக்க, பாரிஸ் லாச்சப்பல் தமிழர் வர்த்தக சங்கத்தின் செயலாளர் பாலசிங்கம் பாலமுரளி பொங்க என்ன காரணம். இவர்கள் போன்ற நூற்றுக்கணக்காணோர் இப்பெண்ணுடன் தொடர்பிலும் இருந்துள்ளனர். ஏன்? அவரிடம் அப்படியென்ன அரசியல் கலந்துரையாடல்களை இவர்கள் செய்துள்ளனர்? இவர்களுடைய உடல்மொழியும் வாய்மொழியும் இவர்கள் சமூகத்தின் முன் பொதுத் தளங்களுக்கே வரத்தகுதியற்றவர்கள் என்பதையே காட்டுகிறது. ஆனால் துரதிஸ்டவசமாக யாழ் பல்கலைக்கழகமாக இருந்தாலென்ன லாச்சப்பல் வர்த்தக சங்கமாக இருந்தாலென்ன இவ்வாறான பொறுப்பற்ற தகுதியற்ற நபர்கள் தான் பொறுப்பான பதவிகளில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது அயோக்கியத்தனங்களை மறைக்க சுஜி போன்ற எதிலிகளிடம் வீரத்தைக் காட்டி தங்கள் தமிழ் தேசியப்பற்றை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றனர். தற்போது தமிழ் தேசியக் கூடாரத்திற்குள் தங்கிருக்கின்ற பெரும்பாலானவர்கள் அயோக்கியர்களாக இருப்பது தமிழ் தேசியவாதத்தின் மிகப் பெரிய பலவீனம் என்றால் மிகையல்ல.

லாச்சப்பலில் உள்ள அத்தனை கடைகளில் தமிழர் வர்த்தக சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு பண்பாளன் இல்லாமல் போனது லாச்சப்பலில் கடை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் அவமானம். பாலசிங்கம் பாலமுரளி தூஷண பூஷணம் செய்வது இதுவொன்றும் முதற்தடவையல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் லாச்சப்பல் உணவகமொன்றில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி, தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஜெனாவை தாக்க முயற்சித்து இருந்தார். மேலும் பாரிஸில் இடம்பெற்ற தமிழர் எழுச்சி மாநாட்டிலும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி மாவை சேனாதிராஜாவைத் தாக்க முயன்றார்.

பணபலத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகள் தாங்கள் தான் என்ற கோஷத்தையும் வைத்துக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் உள்ள ‘புளி’ கும்பல் செய்யும் அலப்பறை தாங்கமுடியாத அளவுக்கு கேவலமாகிக் கொண்டுள்ளது. இத்தோடு லாச்சப்பல் வர்த்தகர்களுக்கு பெரும்பாலும் இலங்கைத் தூதரகத்தோடும் நல்ல உறவு நிலையுள்ளது. பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் பெரும்தொகையான நிதிவசூலிப்பும் நடைபெறுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட போராளிகளின் வாழ்வில் மாற்றம் இல்லை என்ற வீடியோப் பதிவுகளே தினமும் வெளிவருகின்றது. எல்லாம் இவர்களுடைய வங்கிக் கணக்கிற்குத் தான் வெளிச்சம். தம்மன்னா, சுஜி … இனியொரு ரஜி இவர்களுக்கு கிடைக்காமலா போகும்.

ஈழத் தமிழ் சமூகம் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இன்னமும் அரசியல் ரீதியாக அறிவற்றவர்களாக ஒடுக்குமுறையாளர்களுக்கும் பணத்தையும் அதிகாரத்தையும் வைத்திருப்பவர்களுக்கும் பின்னால் ஓடுபவர்களாகவும் அவர்களுக்கு சேவகம் செய்பவர்களாகவுமே உள்ளனர். ஒடுக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைக் கருத்துக்களுக்கும் எதிராகவும் இவர்கள் மூச்சுவிடுவதில்லை. சுஜி போன்ற உதிரிகளும், எதிலிகளும் அகப்பட்டால் இவர்களுக்கு ‘ஜெயசுக்குரு’தான்.

சமூக வலைத்தளங்களை இயக்கும் பெரும் கோப்ரேட் நிறுவனங்கள் அதனை இயக்குவதற்குக் காரணம் மக்களை வளப்படுத்தவோ அரசியல் தெளிவு பெறச்செய்யவோ அல்ல. இந்த சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி கோப்பிரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை உங்களுக்கு மிக அவசியமானதாக்கி அதனை விற்பனை செய்வதற்கே. அதற்கு சுஜி மற்றும் முரளி கும்பலின் ஏட்டிக்குப் போட்டியான பதிவுகள் உணர்வுகளைத் தூண்டி பலரை இதனைப் பார்க்க வைக்கும். அதனால் சமூக வலைத்தளங்களில் இவ்வாறான குப்பை கூளங்கள் தினமும் குவியும். சமூகவலைத்தளங்களை நடத்தும் கோப்பிரேட் நிறுவனங்கள் இந்தத் தரம்தாழ்ந்த பதிவுகளால் இன்னும் இன்னும் மில்லியன் கணக்கில் லாபத்தையீட்டுவார்கள்.

மாறாக இவ்வாறான பதிவு வெளியிடுபவர்களின் நட்பை முறியுங்கள். அவர்களைப் பின்தொடராதீர்கள். மக்களுக்கு அரசியல் தெளிவைக் கொடுக்கும் வகையில் கருத்துக்களை வையுங்கள். அதைவிட்டு தமிழ் சமூகத்தை, நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை பொதுவெளியில் அவமானப்படுத்தும் வகையில் கொச்சைப்படுத்தும் வகையில் பதிவிடாதீர்கள்.

உன்னுடைய கருத்தோடு எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது. ஆனால் உனக்கு அக்கருத்தைச் சொல்வதற்கான உரிமைக்காக உயிரையும் கொடுப்பேன். (பிரென்ஞ் அறிஞர் வோல்ரயர்)

சுஜியின் அரசியல் பதிவுகள் கருத்துக்கள் அல்ல அவை வெறுப்புப் பேச்சுக்கள் மட்டுமே என்பதன் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமைவாதி நளினி ரட்ணராஜா தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணல் நாளை வெளியிடப்படும்.

கிளிநொச்சியில் குழு மோதல் – இளம்குடும்பஸ்தர் பலி !

கிளிநொச்சி -பிரமந்தனாறு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நடுவீதியில் வைத்து ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் .

இச்சம்பவமானது இன்று பிற்பகல் (4) இடம்பெற்றுள்ளது.

பிரமந்தனாறு பகுதியில் உள்ள பாடசாலையில் இன்று(4) பிற்பகல் விளையாட்டு போட்டி நடைபெறுவதற்கு ஏற்பாடாக இருந்த நிலையில் பாடசாலையில் வைத்து இரு குழுக்களிடையே ஏற்பட்ட பிரச்சனை ஒன்றின் விளைவாக இரண்டு தரப்புகளுக்கு இடையில் பாடசாலை வளாகத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் இருதரப்புக்களையும் சமரசம் செய்து பாடசாலை வளாகத்தை விட்டு அனுப்பியிருந்தனர்.

 

தொடர்ந்தும் குறித்த இரண்டு தரப்பினரும் புன்னை நீராவி பிள்ளையார் ஆலய சந்தி பகுதியில் மீளவும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் பிரதேச மக்களால் ஏற்கனவே காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தரும்புரம் காவல்துறையினர் இருவரை கைது செய்து பின்னர் அவர்களை மீளவும் இறக்கி விட்டு சிறிது தூரம் சென்ற பின்னரே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியவர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

 

இதேவேளை பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிக்கு தருமபுரம் காவல்துறையினரை அழைத்திருந்தபோதும் பாடசாலைக்கு காவல்துறையினர் சமூகம் அளித்திருக்கவில்லை.

 

காவல்துறையினரின் பக்க சார்பான செயற்பாடும் தூண்டுதலுமே இக்கொலைக்கான காரணம் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

பல தடவை கத்திக்குத்துக்கு இலக்கான 32 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிக் என்ற குடும்பஸ்தரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலை நடத்திய சந்தேகத்தில் தர்மபுரம் காவல்துறையினரால் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.