வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

“பென்சில்வேனியாவில் நாம் வெல்லப் போகிறோம். மொத்தம் 300க்கும் மேற்பட்ட தேர்தல் சபை வாக்குகள் நமக்கு கிடைக்கும்” – பைடன் நம்பிக்கை !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் ஜனாதிபதி ஆக முடியும் என்ற நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகளுடன் வெற்றியை நெருங்கி உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்.
கடும் போட்டி உள்ள பென்சில்வேனியாவில் 20 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன, தற்போதைய நிலவரப்படி  ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். இது டொனால்டு டிரம்பிற்கு பெரிய தோல்வியாக அமையும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கடுமையான அழுத்தத்தை அடுத்து, உடனடியாக எண்ணுவதை நிறுத்த மறுத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் பென்சில்வேனியாவில் உள்ள தேர்தல் அதிகாரிகளை தேர்தல் நாளில் (நவம்பர் 3) இரவு 8 மணிக்கு காலக்கெடுவுக்குப் பிறகு வந்த அனைத்து அஞ்சல் வாக்குகளையும் பிரித்துப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தேவைப்பட்டால், அந்த வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி சாமுவேல் ஏ அலிட்டோ ஜூனியர் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து ஜோபிடன் கூறியதாவது:-
இன்னும் இறுதி அறிவிப்பு வரவில்லை, வெற்றி அறிவிக்கப்படவில்லை, ஆனால் நமது எண்ணிக்கை நமக்கு தெளிவான மற்றும் உறுதியான தகவலை சொல்கின்றன. பென்சில்வேனியாவில் நாம் வெல்லப் போகிறோம். மொத்தம் 300க்கும் மேற்பட்ட தேர்தல் சபை வாக்குகள் நமக்கு கிடைக்கும்.
நமக்கு 7.4 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. டொனால்ட் டிரம்பை விட 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கிறோம். நாம் பென்சில்வேனியாவை வெல்லப் போகிறோம். நாம் 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரிசோனாவில் முதல் ஜனநாயகவாதிகளாக இருக்கப் போகிறோம்.
நாம் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஜார்ஜியாவில் முதல் ஜனநாயகவாதிகளாக இருக்கப் போகிறோம். நீல சுவரை நம் நாட்டின் நடுவே மீண்டும் கட்டியுள்ளோம். அமெரிக்கர்களின் வாக்களிப்பு ஒரு நள்ள மாற்றத்தைத் தேர்ந்தெடுத்தது. இவ்வாறு பைடன் தனது உரையில் கூறினார்.

டொனால்ட் ட்ரம்பை பழிக்குப்பழி வாங்கிய 17 வயதுச்சிறுமி !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருவதால் டிரம்ப் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என அவர் டுவீட் செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான 17 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க், டிரம்பிற்கு பதிலளித்து பதிவிட்டுள்ள கருத்து அனைவராலும் பேசப்படுகிறது.
கிரேட்டா வெளியிட்டு உள்ள டுவிட்டில், ‘இது அபத்தமானது. டிரம்ப் தனது கோபத்தை எப்படி கையாள்வது என கற்றுக் கொள்ள வேண்டும். அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றை பார்க்க வேண்டும். பொறுமையாக இருங்கள் டொனால்ட்’ என பதிவிட்டுள்ளார்.
இதே வார்த்தைகளை கடந்த 11 மாதங்களுக்கு முன்பு டிரம்ப், கிரேட்டாவுக்கு எதிராக பயன்படுத்தி இருந்தார். டைம்ஸ் இதழின் 2019ம் ஆண்டுக்கான சிறந்த நபராக கிரேட்டா தன்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு விமர்சனம் செய்திருந்தார். தற்போது தேர்தல் பரபரப்பு சூழலில், டிரம்ப்பை பழிவாங்கும் வகையில் அவரது வார்த்தைகளையே அவருக்கு எதிராக கிரேட்டா பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க்  தொடங்கிய “பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம் (School strike for the climate) என்ற இயக்கம் உலக பிரசித்தி பெற்றுள்ளது. இதன் மூலம் உலகில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பலர் இவருடன் சேர்ந்து போராடிவருகிறார்கள். ஆகஸ்டு 2018இல், ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அவருடைய தனிப்பட்ட ஈடுபாடு தொடங்கியது. ஸ்வீடன் பாராளுமன்றத்திற்கு எதிரில் சுற்றுச்சூழல் பாதிப்பினை எதிர்த்து, தன் பள்ளி நாள்களை, போராட்டம் மூலம் தொடங்கினார். பருவநிலையைக்காக்க பள்ளிப்போராட்டம் (School strike for the climate) என்ற பதாகையுடன், எதிர்காலத்திற்கான வெள்ளி என்ற பெயருடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது நாளடைவில் உலகம் முழுவதும் பரவலடைய ஆரம்பித்த பின்னணியில் மிகப்பிரபலமானார்.
உலகளவில் பிரபலமான நிலையில் அனைவருடைய கவனமும் அவரை நோக்கித் திரும்பியது.மே 2019 இல் டைம் இதழின் அட்டைப்படத்தில், அடுத்த தலைமுறைக்கான தலைவர் என்ற குறிப்போடு இடம்பெற்றார். அவரை பலர் முன்மாதிரியாகக் கொள்கின்றனர்அவ்விதழ் அவரை “உலகின் நபர் 2019” என தேர்ந்தெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கடுகதியில் பரவும் கொரோனாவைரஸ் – தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

அமெரிக்காவில் கொரோனாவைரஸ் பாதிப்பு ஏறக்குறைய ஒரு கோடியை எட்ட உள்ளது. அங்கு தொடர்ந்து 3-வது நாளாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனாவைரஸ், சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியதைவிட, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தையும், பீதியையும் உருவாக்கியுள்ளது. மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருப்பதாலும், முகக்கவசம் அணியாமல் சுற்றுவதாலும் கொரோனாவைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதால், அவர்களைச் சமாளிக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 20 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இல்லினாய்ஸ், டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டது. இது தவிர நெப்ரஸ்கா, இன்டியானா, ஐயோவா, மின்னசோட்டோ, மிசவுரி, நார்த் டகோடா, ஒஹியோ, விஸ்கான்சின், அர்கானோஸ், கொலராடோ, மைனி, கென்டகி, ஓரிகன், நியூ ஹெமிஸ்பயர், ஒக்லஹோமா, ஹோட் ஐலாந்து, உத்தா, வெஸ்ட் விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த திடீர் அதிகரிப்பு காரணமாக பல்வேறு மாகாண அரசுகள் மக்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடும் எண்ணிக்கையையும் குறைத்துள்ளன. அமெரிக்க மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் புதிதாக ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 204 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,125 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக உயிரிழப்பு ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பு 99 லட்சத்து 19 ஆயிரத்து 522 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 2 லட்சத்து 40 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி: ஜோ பைடன் இன்னும் சில மணி நேரங்களில்!!!

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் அறிவிக்கப்பட உள்ளது. 270 எலக்ரோரல் கொலிஜ் வாக்குகளை வெல்லப்பட வேண்டிய சிலையில் ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டு 264யையும் டொனால்ட் ட்ரம் – மைக் பென்ஸ் கூட்டு 214யையும் வென்றுள்ளனர். ஆனால் இன்னும் பென்சில்வேனியா, ஜோர்ஜியா, அரிசோநா, நோர்த் கரலினா, நவாடா ஆகிய ஐந்து மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. அதில் குறிப்பாக பென்சில்வேனியா ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்துகொண்டுள்ளது. இங்கு எண்ணப்பட்டு வரும் வாக்குகள் பெரும்பாலும் ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டுக்கு சாதகமாகவே அமைந்து வருகின்றது.

அமெரிக்காவில் மிக இறுக்கமான போட்டியாக அமைந்துள்ள 2020 தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவுகின்ற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை சில ஆயிரத்திலேயே வேறுபடுகின்றது. அதனால் மீள எண்ணப்பட வேண்டும் என்ற சட்ட நடவடிக்கைகள் இரு தரப்பிலும் முடக்கி விடப்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது தபால் மூலமான வாக்கள் சட்டப்படியானவையல்ல என்று டொனால்ட் ட்ரம் சட்ட நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டுள்ளார். ஆனால் இதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் நீதிமன்றங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளன. டொனால்ட் ட்ரம் இன் குடியரசுக் கட்சி – ரிப்பப்பிளிக்கன் பார்ட்டி தேர்தல் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற டொனால்ட் ட்ரம் இன் குற்றச்சாட்டில் இருந்து தம்மை ஓரம்கட்டி உள்ளனர்.

டொனால்ட் ட்ரம் தபால் மூலமான வாக்குகளுக்கு பயப்படுவதற்கும் அவை எண்ணப்படக் கூடபது என்று கோருவதற்கும் காரணம் பெரும்பாலும் தபால் மூலமான வாக்குகள் டெமோகிரட் கட்சிக்கு சாதகமாக அமைவதே வழமை. அதனால் தபால் மூலமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டால் தான் இலகுவாக வெற்றி பெறலாம் என்பது அவரது சரியான கணிப்பே. வழமைக்கு மாறாக கோவி-19 போன்ற காரணங்களினாலும் தபால் மூலமான வாக்குகள் பத்து மடங்கிற்கும் அதிகமாக எகிறி இருந்தது. மேலும் 68 வீதமானவர்கள் தேர்தல் நாளுக்கு முன்னரே தபால் மூலமாகவும் நேரடியாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றும் வாக்களித்து இருந்தனர். அதற்கு முந்திய தேர்தலில் 2016இல் 34 வீதமானவர்களே அவ்வாறு வாக்களித்து இருந்தனர்.

ஜோ பைடன் இன்னும் சில மணி நேரங்களில் தேர்தலில் தெரிவான ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாலும் ஜனவரி 21ம் திகதியே அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக கடமைகளையாற்ற ஆரம்பிப்பிப்பார். இந்த இடைவெளியில் டொனால்ட் ட்ரம் இன் வெள்ளை மாளிகை நாடகம் மிக சுவாரஸ்யமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“தேர்தலில் ஊழல் நடந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை – அதற்கான ஆதராங்கள் எவையுமே இல்லை” – ட்ரம்புக்கு எதிராக திரும்பிய அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் !

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கடும் போட்டியளிக்கக் கூடிய மாகாணங்களில் குறிப்பிடத்தகுந்த வாக்குகள் முன்னிலையுடன் வெற்றியை நெருங்கியுள்ளார். ஆனால், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி ட்ரம்ப், இந்தத் தேர்தல் வெற்றியை ஏற்காமல் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தத் தேர்தலில் ஜனநாயகத்தை ஜனநாயகக் கட்சியினர் திருடிவிட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. இதில் ஜனநாயககட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு சார்பில் ஜனாதிபதி ட்ரம்ப்பும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர்.

அமெரிக்க வரலாற்றில் 120 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் 66.9 சதவீத வாக்குகள் பதிவாயின. கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக 11 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்தினர்.

மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கி தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டன. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகள் வாக்குகளில் 270 பிரதிநிதி வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, ஜனாதிபதியாக முடியும்.

அந்த வகையில் ஜோ பைடன் இதுவரை வெற்றிக்கு அருகே 264 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றுள்ளார். இன்னும் ஜோ பைடன் வெற்றிக்கு 7 பிரிதிநிதிகள் வாக்குகள் தேவைப்படுகின்றன. அதேசமயம், ஜனாதிபதி ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 50.5 சதவீத வாக்குகள் அதாவது 7 கோடியே 31 லட்சத்து 47ஆயிரத்து 934 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 47.9 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

மிகவும் இழுபறியாக இருந்து வரும் அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின், நியூ ஹெமிஸ்ஃபயர் ஆகியவற்றில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். ஃப்ளோரிடா, ஐயோவா, ஒஹியோ, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலையுடன் உள்ளார்.

ஆனால், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை ஏற்காத ஜனாதிபதி ட்ரம்ப்  பல்வேறு மாகாணங்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். குறிப்பாக பென்சில்வேனியா, மிச்சிகன், ஜார்சியா, நிவேடா ஆகிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ள ட்ரம்ப் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். பல்வேறு மாகாணங்களில் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் கோரியுள்ளார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன், டெலாவேர் நகரில் நிருபர்களிடம் கூறுகையில், “வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்பதில் சந்தேகமில்லை. நானும், கமலா ஹாரிஸ் இருவரும்தான் வெற்றியாளர்கள். மக்கள் அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது, இன்னும் முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து ஜனாதிபதி ட்ரம்ப்  வெள்ளை மாளிகையில் கூறுகையில், “ஜனநாயகக் கட்சியினர் ஜனநாயகத்தைத் திருடிவிட்டனர். தேர்தலின் நேர்மையைப் பாதுகாப்பதுதான் எங்கள் குறிக்கோள். இந்த முக்கியமான தேர்தலில் ஊழலையும், திருட்டுத்தனத்தையும் அனுமதிக்கமாட்டோம். வாக்காளர்களை மௌனமாக்கி தேர்தல் வெற்றியைத் திருடுவதையும் அனுமதிக்கமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

ஆனால், தேர்தலில் ஊழல் நடந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு, புகழ்பெற்ற செய்தி சேனல்களான ஏபிசி, சிபிஎஸ், என்பிசி ஆகியவை தெரிவித்துள்ளன. ஊழல், திருட்டு நடந்திருப்தற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போராட்டக்களமாக மாறும் அமெரிக்கா – ட்ரம்பின் ஆதரவாளர்கள் தெருவில் இறங்கி போராட்டம் !

அமெரிக்காவில் பல மாகாணங்களில் ஜனாதிபதி  டிரம்ப்பின் ஆதரவாளர்கள் சாலையில் இறங்கி பேரணிகளை நடத்தி வருகிறார்கள். அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியிலும் இவர்கள் பேரணிகளை நடத்தி வருகிறார்கள். தபால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இவர்கள் பேரணிகளை நடத்தி வருகிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக 160 மில்லியன் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவரை செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கையின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 72,062,575 மக்கள் வாக்குகளை பெற்றுள்ளார். 50.4% மக்கள் வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 68,595,653 மக்கள் வாக்குகளை பெற்றுள்ளார். 48% மக்கள் வாக்குகளுடன் டிரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஜோ பிடன் 264 வாக்குகளுடன் வெற்றியை நெருங்கி உள்ளார். பிடன் வெற்றிபெறுவதற்கு இன்னும் 6 வாக்குகளே தேவை. அதே சமயம் டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். டிரம்ப் இந்த தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு குறைந்துள்ளது.

அமெரிக்காவில் பதிவான 160 மில்லியன் வாக்குகளில் 101 மில்லியன் தபாலை வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. பென்சில்வேனியா, நெவாடா, ஜார்ஜியா, நார்த் கரோலினா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இங்கு வெளியாகும் முடிவுகள்தான் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை தீர்மானிக்கும்.

இதில் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெகு சில வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இந்த நிலையில் டிரம்ப் முன்னிலை வகிக்கும் போதே வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று டிரம்பின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது மீதம் இருக்கும் தபால் வாக்குகளை எண்ண கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.“அது முறைகேடாக பதிவான வாக்குகள், உடனே இந்த மாகாணங்களில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்” என்று டிரம்பின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு டிரம்ப் முன்னிலை வகித்து வரும் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் இவர்களை பேரணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன் கூடி  வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்  என்று கோஷம் எழுப்பி வருகிறார்கள். முக்கியமாக பென்சில்வேனியாவில் 20 எலக்ட்ரல் வாக்குகள் இருப்பதால் அங்கு கூடி அதிக அளவில் கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டம் சில இடங்களில் இதனால் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெவாடா உள்ளிட்ட சில மாகாணங்களில் தேர்தல் முடிவுகளை மொத்தமாக வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் அறிவிக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். கவுண்டி விவரங்களை உடனுக்குடன் அறிவிக்காமல், மொத்தமாக வாக்கு எண்ணப்பட்ட பின் முடிவுகளை அறிவிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

“ஒவ்வொரு வாக்கும் கண்டிப்பாக எண்ணப்பட வேண்டும்” – ஜோபைடன் ஆதரவாளர்கள் போராட்டம் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் பின்தங்கி உள்ளார். கடும் போட்டி உள்ள மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, வாக்குஎண்ணிக்கையை நிறுத்தும்படி வலியுறுத்தி உள்ளார். 3 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், வெற்றியை நெருங்கி உள்ள ஜோ பைடன் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். சில மாநிலங்களில் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை ஏற்படுத்தும் முயற்சியை ஜோ பைடன் ஆதரவாளர்கள் கண்டித்துள்ளனர். ஒவ்வொரு வாக்கையும் கண்டிப்பாக எண்ண வேண்டும் என்று வலியுறுத்தி நியூயார்க்கில் நேற்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். 5-வது அவென்யூவில் இருந்து வாஷிங்டன் சதுக்கம் வரை அமைதியாக முறையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதேபோல் மிச்சிகனில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வலியுறுத்தி டிரம்ப் ஆதரவாளர்கள் டெட்ராய்ட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை, இந்தியா, சீனா பைடனுக்கு ஆதரவு என சுட்டிக்காட்டியுள்ள டிரம்பின் மூத்த மகன் !

அமெரிக்க ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவது யார் என்பதில் ஜோ பைடன், டிரம்ப் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை வென்றெடுத்தால்தான், அமெரிக்க ஜனாதிபதி நாற்காலியில் ஜோ பைடன் அல்லது டொனால்டு டிரம்ப் அமர முடியும்.

இந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டம் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு சாதகமாக அமைந்தது. அவர் அதிக எண்ணிக்கையிலான தேர்தல் சபை வாக்குகளை பெற்று முன்னேறினார்.

சர்ச்சை கருத்தை பதிவிட்ட டிரம்பின் மூத்த மகன்

இதன்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகளையும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு  டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார்.

இந்நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகள் கணிப்பு குறித்து, டிரம்பின் மூத்த மகனான, டொனால்டு டிரம்ப் ஜூனியர், சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  அதில் உலக வரைபடத்தை வெளியிட்டு, அதில் எந்தெந்த நாடுகளில், ஆதரவு உள்ளது என்பதை குறிக்கும் வகையில் டிரம்பின் குடியரசு கட்சியின் நிறமான சிவப்பு நிறத்தால் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் ஜோ பிடனுக்கு ஆதரவான நாடுகளில் அந்தக் கட்சியின் நிறமான, நீல நிறத்தில் குறிப்பிட்டார்.

இதில் இந்தியா, இலங்கை , சீனா,  நீல நிறத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தானை சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.

அமெரிக்கா தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் வெற்றி !

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக் பிரைட் (வயது 31) வெற்றி பெற்று உள்ளார். ஜோ பிடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரான இவர் டெலாவேரில் வெற்றி பெற்றுள்ளார். வழக்கறிஞரான திருநங்கை சாரா மெக் பிரைட் ஒரின சேர்க்கையாளர் விவகாரத்தில் ஆதரவாக செயலாற்றியுள்ளார்.
இந்த தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்துள்ள சாரா மெக் பிரைட், “நாம் செய்து முடித்து விட்டோம். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். வாக்களித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான டாக்டர்.அமி பெரா, பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

“நாங்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள்” – ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.  இந்நிலையில் தேர்தல் நிலவரம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நாம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். டெக்சாஸ், ஜார்ஜியா மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளோம். டெக்சாஸில் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இருக்கிறோம். பென்சில்வேனியாவில் மிகப்பெரிய வெற்றி பெற உள்ளோம்.ஒப்பிட்டு பார்க்க முடியாத வெற்றியை நாம் பெற்று இருக்கிறோம். மீண்டும் ஆட்சி மீண்டும் ஆட்சியை அமைக்கவும், கொண்டாடவும் நாங்கள் தயாராகி வருகிறோம்.

தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு- வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் திட்டம்

இது புதிய சாதனை. என் மனைவிக்கும், குடும்பத்திற்கும் நன்றி. நாங்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.

இந்த தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பென்சில்வேனியா உள்ளிட்ட 3 முக்கியமான மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இழுபறியில் உள்ள இந்த மாநிலங்களில் முடிவுகள் வெளியாகவில்லை.