வெளிநாட்டுச் செய்திகள்

Wednesday, June 23, 2021

வெளிநாட்டுச் செய்திகள்

“பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும் வரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும், ஐ.நா. அங்கீகரிக்காது” – உலக சுகாதார அமைப்பு.

சீனாவும், ரஷ்யாவும் தங்களது கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும், பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும் வரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும், ஐ.நா. அங்கீகரிக்காது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், தடுப்பூசிகளுக்கு எதிராக போராடுபவர்களின் கருத்துகளைக் கேட்டு மக்கள் குழப்பமடையக் கூடாது என தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக தடுப்பூசிகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பெரியம்மை மற்றும் போலியோவை கட்டுப்படுத்தியதில், தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு உண்டு எனவும் தெரிவித்தார். முழுவதும் பாதுகாப்பானது என உறுதியாகும் வரை எந்த ஒரு தடுப்பூசியையும் அங்கீகரிக்க மாட்டோமெனவும் டெட்ரோஸ் அதனோம் உறுதியளித்தார்.

விரிவான ஆய்வுகளுக்கு முன்னரே ரஷ்யா மற்றும் சீனா தங்களது தடுப்பூசியை பயன்படுத்தி வருவதாக விஞ்ஞானிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரிட்டனும் கொரோனா தடுப்பூசியை முன்னரே பயன்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரவுள்ளதாக, கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் ! – மலேசிய முன்னாள் பிரதமர்.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு வலியுறுத்தியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் மொகிதின் யாசினுக்கு கடிதமொன்றை அனுப்பி வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மகாதீர் மொகமட் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும் தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து அந்த இயக்கத்தை நீக்குவது மலேசியாவுக்கு நல்லது.

மேலும், ஏனைய நாடுகளைப் போல மலேசியாவும் எந்தவொரு குழுவையும் ‘தீவிரவாதிகள்’ என சுலபமாக முத்திரை குத்திவிடக் கூடாது.

நான் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை. அவர்களுடைய பிரச்சினை இலங்கையில் இடம்பெற்ற ஒன்று. மலேசியாவுக்கு அதில் தொடர்பில்லை.

அத்துடன், மலேசியாவில் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாதபோது அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை இலங்கை அரசே தீவிரவாத இயக்கம் என்று பட்டியலிடாத போது, மலேசியா ஏன் அந்த இயக்கத்தைத் தீவிரவாத பட்டியலில் வைத்திருக்க வேண்டும்.

இன்றைய மலேசிய பிரதமரும் அண்மையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவரை உள்துறை அமைச்சராக இருந்தவருமான மொகிதீன் யாசினுக்கு எழுதிய கடிதத்தில், புலிகள் இயக்கத்தை இன்னமும் தீவிரவாத பட்டியலில் வைத்திருப்பதற்கான காரணம் ஏதும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தேன்.

ஆகவே, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குவது மலேசியாவுக்கு நல்லது என கடிதத்தில் வலியுறுத்தி  இருந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்புடன் தொடரும் அமெரிக்காவின் பகை – கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்துக்கான நிதியிலும் அமெரிக்கா பங்கேற்காது என ட்ரம்ப் அறிவிப்பு !

உலக சுகாதார அமைப்புக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையில் 62 மில்லியன் டாலருக்கு மேல் செலுத்த முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “2020 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்புக்குத் தர வேண்டிய 120 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையில், 62 மில்லியன் டாலருக்கு மேல் வழங்க முடியாது. கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்துக்கான நிதியிலும் அமெரிக்கா பங்கேற்காது” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மையான தகவல்களை உலக சுகாதார அமைப்பு மறைத்துவிட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ், சீனாவுடன் கூட்டு சேர்ந்து, சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை உலக சுகாதார அமைப்பு கடுமையாக விமர்சித்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்புக்கு அளித்துவரும் நிதியையும் நிறுத்தினார். மேலும், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 63 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகள் விடயத்தில் தன்னை சமாதானவானாகவும் சீன தொடர்பான விடயத்தில் தன்னை சண்டைக்காரனாகவும் காட்டி வருகின்ற ஒரு போக்கு தொடர்வதை காணலாம்.

”இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையை சாதகமாக்கி கொண்டு பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் “ – முப்படை தளபதி ஜென்ரல் பிபின் ராவத் எச்சரிக்கை!

இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக, இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் கூட நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் எதையும் எதிர்கொள்ளும் திறனுடன் இந்தியா இருப்பதாகவும் முப்படை தளபதி ஜென்ரல் பிபின் ராவத் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த அமெரிக்க-இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு மாநாட்டில் காணொலிக்‍ காட்சி மூலம் உரையாற்றிய முப்படை தலைமை தளபதி திரு. பிபின் ராவத், சீனாவின் அத்துமீறலை இந்தியா தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையை சாதகமாக்கி கொண்டு பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும், ஒருவேளை இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் கூட நடத்தப்படக் கூடும் என்றும், ஆனால், அதனையும் எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக இருப்பதாகவும் திரு. பிபின் ராவத் கூறினார்.

கொரோனா வைரஸ் உயிரிழப்பு மத்தியக் கிழக்கு நாடுகளில் 50,000-த்தை தாண்டியது !

மத்தியக் கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 50,000-ஐத் தாண்டியுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து அல்ஜசிரா கூறும்போது, “மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 50,000-ஐக் கடந்துள்ளது. மேலும், போர் நடைபெறும் பகுதிகளான லிபியா, ஏமன், சிரியா நாடுகளில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் குறைவாகவே இருப்பதால், இறப்பு எண்ணிக்கை இன்னும் கூடுதலாகக் கூட இருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லிபியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதால், அங்கு மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானில் அதிகபட்சமாக 22,044 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். அடுத்ததாக இராக்கில் 7,356 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

உலகம் முழுவதும் சுமார் 2.6 கோடிக்கு அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 1.8 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

சசிகலா சிறையில் இருந்து இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு ! – சட்டத்தரணி ராஜா செந்தூர்பாண்டியன்

சசிகலா சிறையில் இருந்து இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாக அவரது சட்டத்தரணி ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. அதனடிப்படையில் சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே 8 கிரவுண்டு இடத்தை சசிகலா பினாமி பெயரில் வாங்கி இருப்பதாக கூறி, அந்த இடத்தை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.

அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வேளையில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை சார்பில், ‘பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த இடம் முடக்கப்பட்டு உள்ளது’ என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்த இடம் மட்டுமின்றி சசிகலாவின் பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் சொத்துகளை பதிவு செய்த சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சசிகலா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சசிகலாவின் சட்டத்தரணி ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

வருமான வரித்துறையினர் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறாகும். இப்பிரச்சினையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டை சசிகலாவின் பினாமி சொத்து என்று வருமான வரித்துறையினர் எப்படி சொல்கிறார்கள்? என்று தெரியவில்லை.

ஏனென்றால் அந்த இடம் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இந்த இடம் 2013-2014-ம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சசிகலா பங்குதாரராக இருக்கிறார். ஒருவர் பங்குதாரராக சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்து, அவரது சொத்தாக எப்படி மாறும்?

இந்தியாவில் எத்தனையோ கம்பெனிகள் உள்ளன. அந்த கம்பெனியில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக சேருவார்கள். அப்படி சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்தை அவரது சொத்து என்று எப்படி கூற முடியும்?

ஒருவர் தான் செலவு செய்த பணத்திற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றால்தான் வருமான வரித்துறையினர் நுழைய முடியும். இதில் பங்குதாரர் மீது தவறு என்றால் ‘ரிஜிஸ்திரார் ஆப் கம்பெனி’ என்ற துறைதான் நடவடிக்கை எடுக்க முடியும். வருமான வரித்துறை அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கு சட்டம் இடம் கொடுக்காது. எங்களது பதிலை 90 நாட்களுக்குள் உரிய அதிகாரியிடம் சமர்ப்பிப்போம். அந்த பதிலை ஏற்காத பட்சத்தில் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம்.

நான் சசிகலாவின் வக்கீலாக சொல்ல விரும்புவது அவருக்கோ அல்லது எங்களுக்கோ இதுவரை வருமான வரித்துறை நோட்டீஸ் நகல் கிடைக்கவில்லை. சசிகலா இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சசிகலா கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தண்டனை குறைப்பு பெற்று விடுதலை நிலையை அடைந்துவிட்டார். அதற்கான சட்டப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம்.

கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின் படி ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று கர்நாடக சிறை விதியில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே 43 மாத காலம் சிறைவாசம் முடிவடைந்து உள்ள சசிகலா, 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகை பெற தகுதி உடையவர் ஆகிறார். எனவே இந்த மாதம்(செப்டம்பர்) இறுதியில் அவர் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்” – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

சவுதி அரேபியா எப்போதும் பாகிஸ்தானின் நண்பன்தான் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி) சர்வதேச அளவில் குரல் கொடுப்பதில்லையே? என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு இம்ரான்கான் பதிலளித்துள்ளார்.

அதில், “ஆம். காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும் ஒன்றை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்” என்று இம்ரான்கான் தெரிவித்தார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் குரல் எழுப்பத் தவறும் ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி விமர்சித்திருந்தார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை அவசரமாகக் கூட்டுமாறு சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை சில மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.

இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி காஷ்மீர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்ற இம்ரான் கானின் கோரிக்கைக்கு 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு செவி சாய்க்கவில்லை. இதனால் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் ஆதரவு கிடைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழர் மரபை பறைசாற்றி தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டு காவல் துறை பெண் அதிகாரிகள் !

பிரான்ஸ் நாட்டு காவல் துறை பெண் அதிகாரிகள் தமிழர் மரபை பறைசாற்றி தலையில் பூ அணிந்து பிரான்ஸ் மாணிக்க விநாயகர் திருவிழாவில் பங்குபற்றியுள்ளனர். இது தமிழர்கள் பலரையும் கவர்ந்துள்ளமையால் சமூக வலைதளங்களில் இதனை வேகமாக பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் சுமார் 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்தது கொரோனா மனித உயிர் பலியெடுப்பு !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகடத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,043 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,082 பேரும் பிரேசிலில் 830 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 64 லட்சத்து 56 ஆயிரத்து 806 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 69 லட்சத்து 38 ஆயிரத்து 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 961 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 1 கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 72 ஆயிரத்து 492 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 1,91,046
பிரேசில் – 1,24,729
இந்தியா – 67,376
மெக்சிகோ – 65,816
இங்கிலாந்து – 41,527
இத்தாலி – 35,507
பிரான்ஸ் – 30,706
பெரு – 29,405
ஸ்பெயின் – 29,234
ஈரான் – 21,926
கொலம்பியா – 20,618

உலகம் முழுவதும் சுமார் 7,000 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்! – ஆம்னெஸ்டி அறிக்கை.

உலகம் முழுவதும் சுமார் 7,000 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆம்னெஸ்டி வெளியிட்ட அறிக்கையில், “கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 7,000 சுகாதாரப் பணியாளர்கள் பலியாகி உள்ளனர். அனைத்து அரசாங்கங்களும் சுகாதாரப் பணியாளர்களைக் கதாநாயகர்கள் என்று பாராட்டியுள்ளன. ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டன” என்று தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால்,கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். ஐரோப்பிய நாடுகளில் மாணவர்களுக்குப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.