வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

பெலாரஸ் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கடத்தல் ! – பெலாரஸில் தொடரும் பதற்றம்.

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.  அந்த தேர்தலில் அலெக்சாண்டர் லூகாஷென்கோ (66 வயது) வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை எனவும், அதிபர் அலெக்சாண்டர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடனும் எதிர்கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஜனாதிபதி அலெக்சாண்டர் தனது பதவியில் இருந்து விலகி அதிகாரத்தை எதிர்க்கட்சியிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு ஒன்று எதிர்க்கட்சி சார்பில் அமைக்கப்பட்டது.
இந்த ஒருங்கிணைப்பு குழுவில் பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா, வெரோனிகா டிசிப்கலோ மற்றும் மரியா கொலிஸ்னிகோவா என்ற மூன்று பெண்கள் முக்கிய நபர்களாக இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள், தேர்தல் முடிவுக்கு வந்த சில நாட்களில் ஸ்வியாட்லானா மற்றும் டிசிப்கலோ ஆகிய இருவரும் பெலாரசை விட்டு தப்பிச்சென்று அண்டை நாட்டில் தஞ்சம் அடைந்தனர்.
ஆனால், மரியா கொலிஸ்னிகோவா மட்டும் பெலாரசிலேயே இருந்து எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்று வந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மின்ஸ்க்கில் மரியா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான மரியா கொலிஸ்னிகோவாவை மர்ம நபர்கள் நேற்று காலை கடத்திச்சென்றுள்ளனர். முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள்
மரியா மற்றும் அவரது உதவியாளர்கள் சிலரை மினி வேனில் கடத்தி சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த சிலரும் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவங்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கருத்து தெரிவித்துள்ள பெலாரஸ் பாதுகாப்புத்துறை மரியாவை நாங்கள் கைது செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களின் முக்கிய தலைவர்கள் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெலாரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவங்களால் மக்களின் போராட்டம் தொடர்ந்து அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

100நாட்களை தாண்டியும் தொடரும் பிளாய்ட்டின் மரணத்துக்கான நீதிகோரிய போராட்டம் ! அமெரிக்கப் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் குண்டுமழை !

அமெரிக்க கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளாய்ட் என்பவர் அந்நாட்டு காவல் துறையினரால் கொலைசெய்யப்பட்டதை கண்டித்து அமெரிக்காவிலும் உலகெங்கிலும் அதனை கண்டித்து பாரியளவிலான போராட்டங்களும் எதிர்ப்புக்களும் அமெரிக்காவை நோக்கி வீசப்பட்ட நிலையில் பிளாய்ட் கொலை செய்யப்பட்டு 100 நாட்களை தாண்டியும் அதற்கான நீதி வேண்டி அமெரிக்காவில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளன.
இந்நிலையில் அமெரிக்கப் பொலிஸாரால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் பிளாய்ட்டுக்கு நீதி கோரி போர்ட்லாண்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் 100நாட்களைக் கடந்துள்ளன. இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற 100ஆவது நாள் போராட்டத்தில் போராட்டக்கார்கள் பொலிஸார் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதற்காக உள்ளூர்ப் பொருள்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட குண்டுகள், கற்கள், மோட்டார் பற்றிகள் என்பவற்றை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இதன்போது 59 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைத் தாக்குதலை நடத்தப்பட்டது எனவும் போர்ட்லாண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்தவார இறுதியில் போர்ட்லாண்டில் இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்படமையும் குறிப்பிடத்தக்கது.

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் (Julian Assange), அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கொரோனா நெருக்கடி காரணமாக இந்த வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெறாத நிலையில், மீண்டும் ஆரம்பமாகும் வழக்கின் தீர்ப்பு ஜூலியன் அசாஞ்சின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வழக்கு என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட 49 வயதாகும் ஜூலியன் அசாஞ், உலக நாடுகளின் இரகசிய ஆவணங்கள், மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், முறைகேடுகள், ஊழல் மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற இரகசிய ஆவணங்களை ஹக் செய்து விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக, ஈராக்கில் அமெரிக்க இராணுவம் நடத்திய வன்முறைகள், அரசியல் கைதிகளை அடைக்கும் குவாண்டனமோ சிறைச்சாலை உள்ளிட்ட தகவல்கள் உலகையே அதிர்ச்சியுறச் செய்தன.

இது அமெரிக்காவை பெரியளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அசாஞ்சே மீது அமெரிக்கா வழக்குத் தொடர்ந்ததுடன் அமெரிக்காவுக்கு எதிராக செயற்படும் ரஷ்ய உளவாளி என அசாஞ் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன், சுவீடனில் அவர் மீது பாலியல் வழக்கும் பதிவானது.

இந்நிலையில் ஜூலியன் அசாஞ்சுக்கு ஈக்குவாடோர் ஆதரவு வழங்கிய நிலையில் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதாரகத்தில் அவர் தஞ்சமடைந்தபோதும் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஈக்குவடோர் அவரைக் கைவிட்டது.

இதைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் ஈக்குவடோர் தூதரகத்துக்குள் வைத்து பிரித்தானிய பொலிஸார் அவரைக் கைதுசெய்த நிலையில் தென்கிழக்கு லண்டனில் உள்ள HMP பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ் சிறைவைக்கப்பட்டுள்ளார்.

ஜூலியன் அசாஞ்சை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி அமெரிக்கா பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என லண்டன் நீதிமன்றத்தில் அசாஞ் வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெலாரஸ் ஜனாதிபதிலூகாஷென்கோ பதவி விலக வலியுறுத்தி தலைநகர் மின்ஸ்கில் ஆயிரக்கணக்கானோர் பேரணி!!!

பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி லூகாஷென்கோ பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் மேற்கொண்டுவரும்  போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. பெலாரஸ் நாட்டில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ 80.3 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் அலெக்ஸ்சாண்டர் 6வது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்க்கட்சிகள் மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது லூகாஷென்கோ பதவி விலகக்கோரி தலைநகர் மின்ஸ்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இணைந்து தொடர் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர், ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து இழுத்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

ஒருங்கிணைந்து சோவியத் ரஷ்யாவிலிருந்து 1991ம் ஆண்டு பிரிக்கப்பட்ட ‘பெலாரஸ்’ தனி ஐரோப்பிய நாடாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு 1994ம் ஆண்டு முதன் முறையாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ, அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடினார். இந்நிலையில்தான் பொதுத்தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதாக அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அதிபரை பதவிலகக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா நோய்தொற்று உறுதியான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் சாரதி!

இந்தியாவின் கேரளாவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், ஆம்புலன்சில் பலாத்காரம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், ஆரம்முளாவை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால்,அடூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக பந்தளம் மருத்துவமனைக்கு நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் கோழஞ்சேரி மருத்துவமனைக்கு மற்றொரு நோயாளியும் சென்றார்.

ஆம்புலன்சை காயங்குளத்தை சேர்ந்த நவுபல் ஓட்டினார். கோழஞ்சேரியில் அந்த நோயாளியை இறக்கிவிட்டு, இளம்பெண்ணுடன் பந்தளம் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது. அப்போது, வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த இளம்பெண்ணை நவுபல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், பந்தளம் மருத்துவமனையில் விட்டுவிட்டு நழுவிவிட்டார். இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில், நவுபலை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நவுபலுக்கு கொலை உள்பட பல கிரிமினல் வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. நவுபல் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்த பலாத்காரம் பற்றி விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தினர். பத்தனம்திட்டா மாவட்ட மருத்துவ அலுவலர் அலுவலகம் முன்பு பாஜ நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இந்த பலாத்கார சம்பவம் பற்றி மாநில மகளிர் ஆணையமும், மனித உரிமை ஆணையமும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி.க்கு இந்த இரு ஆணையங்களும் உத்தரவிட்டுள்ளன.

அடுத்த ஆண்டு தொடக்‍கத்தில் விண்ணில் செலுத்தப்படவுள்ள சந்திரயான்-3 விண்கலம் !

நிலவில் பல மர்மங்கள் அடங்கியுள்ளதாகக்‍ கூறப்படும் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான்-3 விண்கலம், அடுத்த ஆண்டு தொடக்‍கத்தில் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங், அடுத்த ஆண்டு தொடக்‍கத்தில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

சந்திரயான்-3ல், ஆர்பிட்டர் கருவி இருக்‍காது என்றும், லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் இடம்பெற்றிருக்‍கும் என்றும் தெரிவித்தார். முதன்முதலில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் அனுப்பிய புகைப்படங்களில், நிலவின் மேற்பரப்பு துருப்பிடித்திருப்பதை போன்று காட்சியளிப்பதாக கூறினார். மேலும், நிலவில் இரும்புச்சத்து நிறைந்த பாறைகள் இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா ! – பலியானவர்கள் எண்ணிக்கை 8,80,000 -ஐ கடந்தது.

உலக முழுவதும் கொரோனாவைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 8,80,000 -ஐ கடந்துள்ளது.

இதுகுறித்து வேர்ல்டோ மீட்டர் இணையதளம் வெளியிட்ட தகவலில், “ உலகம் முழுவதும் கொரோனாவைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 8,80,779 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2, 72, 90,137 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவைரஸ் பாதிப்பு மற்றும் இறப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 62, 62,989 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,88,535 பேர் கொரோனாவைரஸால் பலியாகி உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா 42, 02,562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71,687 பேர் கொரோனாவைரஸால் பலியாகி உள்ளனர்.

மூன்றாவது இடத்தில் பிரேஸில் உள்ளது. பிரேசிலில் .41, 37,606 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.126,686 பேர்கொரோனாவைரஸால் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவைரஸ்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன. கொரோனாவைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மட்டுமே உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில், கொரோனாவைரஸ்க்கான தடுப்பு மருந்தை தற்போதைக்கு எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டின் இடைப்பகுதியில்தான் எதிர்பார்க்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனாவைரஸ் பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

ஜப்பானின் தெற்கு பகுதி நோக்கி நெருங்கும் பாரிய சூறாவளி ! – 8.1 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்.

ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில் 8.1 லட்சம் மக்களை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது.

ஜப்பான் நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதி மாகாணங்களை நோக்கி ஹாய்ஷென் என பெயரிடப்பட்ட சூறாவளி நெருங்கி வருகிறது. இந்த சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகருகிறது என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனினும் இந்த சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 162 கிலோ மீட்டர் இருக்க கூடும் என்றும் மணிக்கு 216 கி.மீட்டர் வரை வேகமெடுக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

இன்று இரவு ஜப்பானின் கியூசூ தீவை சூறாவளி தாக்கும் என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு அங்கிருந்து 8.1 லட்சம் மக்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது. இதேபோன்று ஜப்பானிலுள்ள பிற 10 மாகாணங்களிலுள்ள 55 லட்சம் மக்களையும் வேறு பகுதிகளுக்கு வெளியேறி செல்லும்படி பரிந்துரைத்து உள்ளது.

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் மர்ம நபர் சரமாரி கத்திக்‍குத்து – ஒருவர் உயிரிழப்பு !

இங்கிலாந்து நாட்டின் Birmingham நகரில் மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக 8 பேரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

Birmingham நகரின் மதுக்குடிப்பகங்கள் நிறைந்த பகுதியில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் பலரை கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். ஒருபெண் மற்றும் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கத்திக்குத்துக்கு ஆளான மேலும் 5 பேரின் உயிருக்கு ஆபத்தில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலோ அல்லது குழுக்கள் இடையிலான முன்விரோத தாக்குதலாகவோ தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

ஒரே நாளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று: பாதிப்பு 41 லட்சத்தைக் கடந்தது!

கடந்த ஆகஸ்ட் 7-ம்தேதி 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் கொரோனா பாதிப்பு எட்டியுள்ளது. ஏறக்குறைய 13 நாட்களில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 41 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 70 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒருநாளில் 90,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டமையானது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்பும் நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகம் பாதிக்‍கப்பட்ட மகாராஷ்டிராவில் மேலும் 20 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 83 ஆயிரத்தை தாண்டியதோடு, பலியானோர் எண்ணிக்கையும் 26 ஆயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் மேலும் 10 ஆயிரத்து 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 4 லட்சத்து 87 ஆயிரத்தை கடந்துள்ளது.

டெல்லியில் ஒரே நாளில் 2,973 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் 1,566 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 3,042 பேருக்கும், கேரளாவில் 2,655 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 41 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 31 லட்சத்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.