வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

2014க்கு பின்பு மிகப்பெரும் போர் – காசாவில் 35பேரும் இஸ்ரேலில் 05 பேரும் பலி !

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இன்றும் தாக்குதல் நீடித்தது. குறிப்பாக இன்று அதிகாலையில் இஸ்ரேல் இராணுவம் நூற்றுக்கணக்கான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி  நடத்திய தாக்குதல்களில் பெரும் உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் தரப்பில் 5 பேரும், காசா பகுதியில் 35 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 2014ல் நடந்த போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மோதல் இதுவாகும்.
காசா மற்றும் ஜெருசலேம் பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் – பாலஸ்தீனியர் இடையே மோதல் – கண்டனம் தெரிவித்து லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறை – அவசரநிலை பிரகடனம் !

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது  நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில் காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டிடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. காசா டவர் என்று அழைக்கப்படும் அந்த கட்டிடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக அந்த கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

காசா டவர் கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு 130 ராக்கெட்டுகளை ஏவியது. இந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவை இஸ்ரேலிய ஏவுகணை தடுப்பு அமைப்பால் தடுக்கப்பட்டது. ஆனால், சில ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற நகங்களில் விழுந்தன. இதில் பேருந்து, வாகனங்கள், கட்டிடங்கள் தீக்கிரையானது. ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலில் கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், இஸ்ரேலின் லோட் நகரில் வன்முறை வெடித்துள்ளது. லோட் நகரில் இஸ்ரேலிய யூதர்களும், அரேபியர்களும் வசித்து வருகின்றனர்.

காசா மற்றும் ஜெருசலேம் பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேலிய யூதர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் மீது லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல்வேறு வீடுகள், கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய யூதர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த சம்பவங்களால் லோட் நகரில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்தும் விதமாக லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அவசரநிலை பிரகடனத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இன்று அறிவித்தார்.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் லோட் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட உள்ளனர். பாதுகாப்பு படையினர் உள்ளூர் போலீசாருக்கு வன்முறையை கட்டுப்படுத்துவதிலும் அமைதியை நிலைநாட்டுவதிலும் உதவிகரமாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் லோட் நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவின் குஜராத்தில் கொரோனாவிலிருந்து விடுபட வாரத்திற்கு ஒரு முறை மாட்டு சாணம் மற்றும் மாட்டின் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு பிரார்த்தனை !

இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கி தவித்துவருகிறது. இந்தியாவில்  இதுவரை 2,29,92,517 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பலியானர்வகளின் எண்ணிக்கை 2,46,116 உள்ளது. இதன் விளைவாக மக்கள் மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத்தில் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் சிலர் வாரத்திற்கு ஒரு முறை மாட்டு சாணம் மற்றும் மாட்டின் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு பிரார்த்தனை செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் கொரோனாவை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.

காலம் காலமாக ஹிந்துக்கள் மாடுகளை தெய்வமாகவும் மாட்டின் சாணத்தை மற்றும் கோமியத்தை கிருமி நாசினியாக தங்கள் வீடுகளை சுத்தம் செய்ய பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் குஜராத்தில் மக்கள் கொரோனாவிற்கு மருந்தாக மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்திய சம்பவம் குறித்து மருத்துவர் மக்களை எச்சரித்துள்ளார்.

“மாட்டு சாணத்திலோ அல்லது கோமியத்திலோ கொரோனாவை முறியடிக்கக்கூடிய எந்த விதமான மருத்துவ தன்மையும் இல்லை மேலும் இவை மருத்துவ ரீதியாகவோ அல்லது அறிவியல் ரீதியாகவோ நிரூபிக்கப்படவில்லை என்றும், இவ்வாறாக செய்வதால் மேலும் வேறு நோய்கள் உருவாகக்கூடிய அபாயமும் உள்ளதாக” என இந்திய மருத்துவர்கள் மற்றும்   விஞ்ஞானிகள் பலர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த கவுதம் மணிலால் என்பர் கூறுகையில் “இங்கு மருத்துவர்கள் கூட வந்து இந்த முறையைச் செய்து செல்கின்றனர். இவ்வாறாக அவர்கள் செய்வதால் மருத்துவமனையில் அவர்கள் சந்திக்கும் நோயாளிகளிடம் இருந்து அவர்களுக்கு தொற்று ஏற்படாது என்பது அவர்களின் நம்பிக்கை” என்று கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு கொரோனா தொற்றிலிருந்து மாட்டின் சாணத்தை உடலில் பூசி பிரார்த்தனை செய்ததால் மட்டுமே அவர் நோயிலிருந்து காப்பாற்றப்பட்டார் என்றும் கூறியுள்ளார். இவர் ஸ்ரீ சுவாமிநாராயண் குருகுல் விஸ்வவித்யா பிரதிஷ்டானம் என்ற இந்து துறவிகள் நடத்தி வரும் பள்ளியில் பல ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் இந்திய மருத்துவ கழகத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் குறிப்பிடும் போது “COVID-19 க்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக பசு அல்லது சிறுநீர் செயல்படுகிறது என்பதற்கு உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை, இது முற்றிலும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது” என்று கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் எதிரொலி – இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் !

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவமும் எதிர்த்தாக்குதல் செய்து வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துவந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள அல் அச்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

முதலில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலை தொடங்கினர். அதன் பின்னர் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். பாலஸ்தீனர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் பலர் காயமடைந்தனர். அதேபோல், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர். இந்த மோதலை தொடர்ந்து ஷைக் ஜாராவில் இருந்து பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கை சிறிது நாட்களுக்கு தள்ளிவைப்பதாக இஸ்ரேல் நீதித்துறை தெரிவித்துள்ளது.

வழக்கு தள்ளிவைக்கப்பட்டபோதும் மோதல் அரங்கேறி வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த மோதல் மிகப்பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் - அதிகரிக்கும் பதற்றம்முதலில் 7 ராக்கெட்டுகள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஏவப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இஸ்ரேலை குறிவைத்து மொத்தம் 45 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான ராக்கெட்டுகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விழுந்ததாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலால் ஜெருசலேம் மற்றும் இஸ்ரேலின் பிற நகரங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் அந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை பதிலடி கொடுத்துள்ளது. காசா முனையில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி மற்றும் குழந்தைகள் உள்பட மொத்தம் 20 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால் ஜெருசலேம், ஹமாஸ் பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம் மகளிர் பள்ளிக்கூடத்தை குறிவைத்து பயங்கரவாதத்தாக்குதல் – பலியான மாணவிகள் எண்ணிக்கை 60ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் டாஷ்தே  பார்ச்சி நகரில் மகளிர் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இரு தினங்களுக்கு முன் மாலை வகுப்புகள் முடிந்து மாணவிகள் பள்ளியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.

அப்போது பள்ளிக்கூடத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி மாணவிகள் மரண ஓலம் விட்டனர். என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த தொடர் குண்டுவெடிப்பு ஒட்டுமொத்த நகரையும் அதிர வைத்தது.‌ முதல் கட்டமாக 25 மாணவிகள் பலியானதாக தகவல் வெளியானது.

ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே நடந்த தொடர் குண்டு வெடிப்பு! பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!இந்நிலையில், குண்டு வெடிப்பில் பலியான மாணவிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.‌

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த காலங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனவே இந்த கொடூர தாக்குதலையும் அவர்களே நடத்தி இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

முந்தைய அரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்தது மியன்மார் இராணுவம் !

மியன்மாரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் சூழலில் முந்தைய அரசைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது சிறை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியன்மார் ராணுவம்.

ஆனால் மியான்மர் மக்கள் இராணுவ ஆட்‌சியை ஏற்க மறுத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தினமும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை மியான்மர் இராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

இராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் 700-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மியான்மரில் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. அதேபோல் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும் தொடர்கிறது.

இதனிடையே இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆளும் கட்சி தலைவர்கள் பலரையும் ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ள அதேவேளையில் துணை அதிபர் மான் வின் கைங் தான் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இராணுவத்திடம் இருந்து தப்பி தலைமறைவாகினர்.

அதனை தொடர்ந்து இராணுவத்திடம் இருந்து தப்பிய ஆளும் கட்சி எம்.பி.க்கள் பைடாங்சு ஹுலுட்டாவ் (மியான்மர் நாடாளுமன்றம்) பிரதிநிதிகள் குழு (சி.ஆர்.பி.எச்) என்கிற குழுவை தொடங்கினர். இந்தக் குழுவின் தலைவராக (பொறுப்பு) மான் வின் கைங் தான் உள்ளார். மியான்மரின் நிழல் அரசாக செயல்பட்டு வரும் இந்த சி.ஆர்.பி.எச்., நாட்டின் மக்களாட்சி அரசாக செயல்பட சர்வதேச அங்கீகாரத்தை நாடுகிறது.

ஆனால் மியான்மர் இராணுவம் சி.ஆர்.பி.எச்-சை சட்ட விரோத குழுவாக கருதுகிறது.
அந்த குழுவுடன் ஒத்துழைக்கும் எவரும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடும் என இராணுவம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இந்தநிலையில் சி.ஆர்.பி.எச்-சை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ள மியான்மர் இராணுவம், முந்தைய அரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததோடு அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் முந்தைய அரசின்நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

அதுமட்டுமன்றி மியான்மரின் நிழல் அரசாக இயங்கும் சி.ஆர்.பி.எச்-சால் கடந்த வாரம் அமைக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு படையும் பயங்கரவாத இயக்கமாக மியன்மார் இராணுவம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை இன குழுக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த மக்கள் பாதுகாப்பு படை மத்திய ஒற்றுமை இராணுவத்தின் முன்னோடியாக செயல்படும் என சி.ஆர்.பி.எச். கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

உயிரி ஆயுதமாக கொரோனா வைரஸை பயன்படுத்த திட்டமிட்டதா சீனா..? – அரெிக்காவுக்கு கிடைத்த இரகசிய ஆவணங்களால் பரபரப்பு !

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவ ஆமர்பித்ததாக கருதப்படும் கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பரவியது. அதன் தாக்கம் தற்போதும் குறையவில்லை. உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை தற்போது வேகமாக உள்ளது.
சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகவும், இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாக தயாரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்தது.
 இந்நிலையில், சார்ஸ் கொரோனா வைரஸ் என்ற வைரசை செயற்கையாக உருவாக்கி, அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான சீன ராணுவத்தின் ரகசிய ஆவணங்கள், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு கிடைத்துள்ளதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு 5 ஆண்டுக்கு முன் 2015-ம் ஆண்டில் சீன இராணுவத்தின் விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் இணைந்து சார்ஸ் கொரோனா என்ற வைரசை உருவாக்கும் திட்டத்தை தயாரித்தனர். தேவைப்படும்போது இந்த வைரசை உயிரி ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டனர். போர்க்காலத்தில் மட்டுமின்றி, தன்னை எதிர்க்கும் நாடுகள் மீதும் பயன்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டது.
வைரஸ் இயற்கையாக உருவானதாக தோன்றும் அளவுக்கு ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் உலக நாடுகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கும், குற்றம் சாட்டினால் மறுக்கும் அளவுக்கு இயற்கையாகவும் இருக்க வேண்டும் என உத்தரவு இடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்கு கிடைத்த இந்த இரகசிய ஆவணங்களால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெருசலேமில் பாலஸ்தீனர்களுக்‍கும், இஸ்ரேல் போலீசாருக்‍கும் இடையே மோதல் – 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் !

ஜெருசலேமில் உள்ள அல் அக்‍சா பள்ளி வாசலில் பாலஸ்தீனர்களுக்‍கும், இஸ்ரேல் போலீசாருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் 150க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

பழைய ஜெருசலேம் நகரில் உள்ள அல்- அக்‍சா பள்ளி வாசல், யூதம், இஸ்லாம் உள்ளிட்ட நான்கு மதங்களின் புனித இடமாகக்‍ கருதப்படுகிறது. இந்த பள்ளிவாசலுக்‍கு வரும் பாலஸ்தீனர்களுக்‍கு இஸ்ரேலியர்களும், இஸ்ரேல் போலீசாரும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துவதாக எழும் குற்றச்சாட்டின் பேரில் அடிக்‍கடி மோதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன.

Israeli police fired rubber bullets and stun grenades to disperse the crowds

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள யூதர்களுக்‍குச் சொந்தமான குடியிருப்புப் பகுதியிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு முயன்றது. இது தொடர்பாக ஏற்கெனவே மோதல் போக்‍கு அதிகரித்த நிலையில், ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்‍கிழமையன்று வழக்‍கம் போல் ஏராளமான பாலஸ்தீனர்கள் அல்- அக்‍சா பள்ளிவாசலுக்‍குச் சென்றனர். அப்போது அவர்கள் இஸ்ரேல் போலீசார் மீது கற்களை வீசித்தாக்‍குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பாலஸ்தீனர்கள் 160 பேரும், போலீசார் 6 பேரும் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

நியூயோர்க் , புளோரிடாவை அடுத்து மேரிலாண்டிலும் துப்பாக்கிச்சூடு – அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூட்டுச்சம்பவங்கள் !

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில் மேரிலாண்டில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேரிலாண்டில் உள்ள புறநகர் பகுதியான கால்டிமோரில் வசிக்கும் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியுடன் சாலைக்கு வந்து சரமாரியாக சுட்டார்.

இதில் 2 ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். மற்றொருவர் காயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்திய வால்பரை போலீசார் சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறும் போது, ‘அந்த வாலிபர் நீண்ட நாட்களாக சித்த பிரம்மை பிடித்தவர் போல் இருப்பார். அடிக்கடி அண்டை வீட்டாரிடம் ஆக்ரோசமாக நடந்து கொள்வார்’ என்று தெரிவித்தார்.

நியூயோர்க்கில் உள்ள புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று இரவு சிலரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால் பொது மக்கள் அலறியடுத்து ஓடினர். பின்னர் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

இதேபோல் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர்.

இதனால் பொது மக்கள் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கிசூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

இந்திய பெருங்கடலில் விழுந்தது உலகையே அச்சத்துக்குள்ளாக்கிய 21 டொன் எடை கொண்ட சீனாவின் லோங் மார்ச் – 5பி ரொக்கெட் !

சீனா விண்வெளிக்கு அனுப்பிய விண்கலத்தின் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக விண்வெளி குறித்து ஆய்வு செய்து வரும் ஸ்பேஸ் டிராக் முகமை உறுதிசெய்துள்ளது.

சீனா விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்காக கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி லோங் மார்ச் – 5பி ரொக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது.

அந்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்தி ரொக்கெட், மீண்டும் பூமிக்கு திரும்பியது. அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ரொக்கெட் இழந்தது.

Gallery

எனவே எந்த நேரமும் அந்த ரொக்கெட் பாகம் பூமியில் விழும் சூழல் ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பூமியை நோக்கி வேகமாக வரத் தொடங்கியது.

21 டொன் எடை கொண்ட ரொக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா கூறியிருந்தது.

அதன்படி, ரொக்கெட்டின் எஞ்சிய பாகம் இன்று மாலைதிவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( international space station ) இல் ஆய்வுகளை நடத்த அமெரிக்கா சீனாவை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் சீனா தாம் ஒரு விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.