வெளிநாட்டுச் செய்திகள்

Friday, October 22, 2021

வெளிநாட்டுச் செய்திகள்

24 கொரோனா நோயாளிகள் ஓக்‍ஸிஜன் கிடைக்‍காததால் பரிதாபமாக உயிரிழப்பு – கர்நாடகாவில் சோகம் !

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 கொரோனா நோயாளிகள் உட்பட 24 பேர்,ஓக்‍ஸிஜன் கிடைக்‍காததால், பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்‍ஸிஜன் பற்றாக்‍குறை மரணங்கள் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து நிகழ்வது, மக்‍களிடையே அச்சத்தையும் பீதியையும் அதிகரித்துள்ளது.

டெல்லி மருத்துவமனைகளுக்‍குத் தேவையான மருத்துவ ஆக்‍ஸிஜன் கிடைக்‍காததால், கங்காராம் மருத்துவமனை, Jaipur Golden மருத்துவமனை, Batra மருத்துவமனை ஆகிய 3 மருத்துவமனைகளில் 57 கொரோனா நோயாளிகள் கடந்த சில தினங்களில் உயிரிழந்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கொரோனா நோயாளிகள் 23 பேர் உட்பட, 24 பேர், சிகிச்சைக்‍குத் தேவையான ஆக்‍ஸிஜன் கிடைக்‍காததால் இன்று உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்‍களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினரும், உறவினரும் கதறி அழுதபடி மருத்துவமனை வளாகத்தில் கூடியுள்ளனர். அரசு மருத்துவமனையின் அவல நிலையைக்‍ கண்டித்து, பொதுமக்‍களும் உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மைசூரிலிருந்து வரவேண்டிய ஆக்‍ஸிஜன் சிலிண்டர்கள் உரிய நேரத்தில் கிடைக்‍காததால், ஆக்‍ஸிஜன் பற்றாக்‍குறை ஏற்பட்டு, 24 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.

மியன்மாரில் தொடரும் இராணுவத்தின் சர்வாதிகாரம் – போராட்டத்தில் ஈடுபட்ட 07பேர் சுட்டுக்கொலை !

தென்கிழக்கு நாடான மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் திகதி இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அந்நாட்டின் அரசு தலைவர் ஆங் சான் சுகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சாலையில் இறங்கி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இரு நாட்களாக இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தாமல் இருந்த நிலையில் நேற்று நடந்த போராட்டத்தில் மீண்டும் துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தது.

யான்கூன், மண்டேலே உள்ளிட்ட நகரங்களில் தீவிரமாக போர் நடந்தது. இதில் இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

மியன்மாரில் இடம்பெற்றுவரும் இந்தக்கொடூர இராணுவ ஆட்சிக்கு எதிராக உலகின் பல நாட்டுத்தலைவர்களும் கண்டனங்களை வெளியிட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தனியார் ஆடைதொழிற்சாலையில் தொழில் புரிந்த 22 வயதுப்பெண் !

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அந்தோனியார் வீதி களுவஞ்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நடராசா-விதுசாஜினி என்பவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு வருடகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஆடைதொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த நிலையில் சம்பவ தினமான நேற்று முன்தினம் மே தின விடுமுறை என்பதனால் தனது வீட்டில் மதிய உணவினை உண்டு விட்டு தனது படுக்கை அறைக்கு சென்று உறங்கியிருக்கின்றார்.

பின்னர் அவரின் தாயார் தேனீர் கொடுப்பதற்காக அவரின் படுக்கை அறையினை தட்டிய போது எவ்விதமான சத்தமும் வராத நிலையில் கதவினை கத்தியால் உடைத்து திறந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இவரின் தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரமே என விசாரணைகளின் போது அறிய முடிந்துள்ளது.

ஏறாவூர் நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்.” – மு.க.ஸ்டாலின்

நேற்றையதினம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.

சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார். அ.தி.மு.க சார்பில் ஆதிராஜாராம், அ.ம.மு.க சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில்  கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

நேற்று நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு சென்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலின் கூறியதாவது:

திமுகவின் வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். 10 ஆண்டுகள் அடிப்படையில் வெளியிடப்பட்ட 7 அறிவிப்புகள் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி தலைவரை முறையாக தேர்ந்தெடுப்போம். கொரோனா பரவல் என்பதால் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும்.
ஷவாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் ஆட்சி நாற்காலியில் தி.மு.க – தமிழகத்தின் முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின் !

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் திகதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அந்ததேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானது.
இன்று (02.04.2021) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியது. திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. அதிமுக பின்தங்கியது.
தமிழக தேர்தல் 2021: திமுக அணி 142 இடங்களில் முன்னிலை!
மதிய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரமும் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, பெரும்பாண்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.திமுக கூட்டணி 143 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 90 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. தி.மு.க மட்டும் 116 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது.
அதன்பின்னர் மேலும் சில தொகுதிகளில் அ.தி.மு.க பின்தங்கியது. தி.மு.க பெரும்பாண்மைக்கு தேவையான 118 இடங்களில் முன்னிலை பெற்றது. மாலை 4 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 157 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 76 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் (கோவை தெற்கு-கமல்) தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி நிலவரங்களும் வெளியாகின.
தற்போதுள்ள முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை பார்க்கையில், திமுக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. அக்கட்சியின்  தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர்கிறது. 53 வருட அரசியல் பயணத்தை கடந்துள்ள மு.க.ஸ்டாலின் 2009-ல் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது முதல் முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – தி.மு.க 139 தொகுதிகளில் முன்னிலை !

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது.
தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 139 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 94 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. திமுக மட்டும் 114 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் வெற்றியை நோக்கி பயணிக்கின்றனர். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதேபோல் அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் பல்வேறு அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர்.

“கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயார்.” – சீனா

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடும் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. இதனால்  இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவி பொருட்கள் பல நாடுகளில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீன அரசு தொலைக்காட்சி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சீன அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளதாவது:

“கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா தயாராக உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க சீனா தயாராக உள்ளது என ஜி ஜின்பிங் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 15.11 கோடியை கடந்தது !

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை இன்று வரை  உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாடுகளிலும் அடுத்த கொரோனா அலை ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.11 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.84 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.89 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இஸ்ரேலில் மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் – 40க்கும் அதிகமானோர் இறப்பு !

இஸ்ரேல் நாட்டின் மவுண்ட் மெரான் பகுதியில் நேற்று இரவு யூதர்களின் பாரம்பரிய மத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் ஆடல், பாடல் என விழா களைகட்டியது.
அப்போது, நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். சிலர் தடுப்புக்காக அமைக்கப்பட்டிருந்த ஷீட்களை பிரித்து, இடைப்பட்ட பகுதி வழியாக வெளியேற முயன்றதால் நெரிசல் மேலும் அதிகரித்தது. நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏராளமான ஆம்புலன்ஸ்கள் அப்பகுதிக்கு விரைந்தன. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

“கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு 10 மில்லியன் அமெரிக்க  டொலர்களை வழங்கவுள்ளோம்.” – கனடா பிரதமர்

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு 10 மில்லியன் அமெரிக்க  டொலர்களை வழங்க உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “தற்போது இந்திய மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை வாங்குவதற்கு 10 மில்லியன் டாலரை இந்தியன் ரெட் கிராஸ் அமைப்புக்கு வழங்கியுள்ளோம். மேலும் கூடுதல் மருத்துவ உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களால் முடிந்த எந்த வகையிலும் இந்தியாவுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.