விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

ஓய்வை அறிவித்தார் மேற்கிந்தியதீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மர்லோன் சாமுவேல்ஸ் !

மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான மர்லோன் சாமுவேல்ஸ் கடைசியாக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடினார். அதன் பிறகு அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை.

2012 மற்றும் 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய அவர் இரண்டு இறுதிப்போட்டியிலும் அதிக ரன் குவித்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார்.

ஓய்வு முடிவை அறிவித்த வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர்

ஐ.பி.எல்., பிக்பாஷ் மற்றும் பாகிஸ்தான் லீக் போட்டிகளில் ஆடிய சாமுவேல்ஸ் எல்லா வகையிலான போட்டிகளில் இருந்தும் விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

39 வயதான சாமுவேல்ஸ் 71 டெஸ்ட் போட்டியில் விளையாடி 7 சதம், 24 அரைசதத்துடன் 3,917 ரன்னும், 41 விக்கெட்டும் எடுத்துள்ளார். 207 ஒருநாள் போட்டியில் ஆடி 10 சதம், 30 அரைசதத்துடன் 5,606 ரன்னும், 89 விக்கெட்டும், 67 இருபது ஓவர் போட்டியில் ஆடி 10 அரைசதம் உள்பட 1,611 ரன்னும், 22 விக்கெட்டும் எடுத்து இருக்கிறார்.

10இலக்குகள் வித்தியாசத்தில் மும்பையை பந்தாடி வாழ்வா? சாவா? போட்டியில் வென்றது சன்ரைசரஸ் !

ஐ.பி.எல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசரஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்று என்ற வாழ்வா? சாவா? நிலையுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது.
அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இருப்பது போல் வார்னர் நாணயச்சுழற்சியில்  வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கினார். மறுமுனையில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்த நிலையில் சந்தீப் சர்மாவின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார் டி காக். வெர்  13 பந்தில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
3-வது இலக்குக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் 11.1 பந்துப்பரிமாற்றங்களில்  81 ரன்கள் எடுத்திருந்தபோது சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 36 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் வந்த குருணால் பாண்ட்யா (0), சவுரப் திவாரி (1) அடுத்தடுத்து ஆட்டமிக்க மும்பை இந்தியன்ஸ் 12.1 பந்துப்பரிமாற்றங்களில் 82 ஓட்டங்களுக்குள் ஐந்து இலக்குகளை இழந்து திணறியது. இஷான் கிஷன் 30 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். பொல்லார்ட் அதிரடி காட்ட மும்பை அணி மீண்டும் வேகமெடுத்து 150 ரன்னை தொடும் வாய்ப்பை பெற்றது.
150 ரன்கள் வெற்றி இலக்கு: மும்பையை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா ஐதராபாத்?19-வது பந்துப்பரிமாற்றங்களில் தொடர்ந்து மூன்று சிக்ஸ் அடித்த பொல்லார்ட் கடைசி பந்துப்பரிமாற்றத்தில் ஒரு சிக்ஸ் அடித்து அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். பொல்லார்ட் 25 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 41ஓட்டங்கள் அடித்தார். கடைசி 3 பந்தில் 3 ஓட்டங்கள் கிடைக்க மும்பை இந்தியன்ஸ் 20 பந்துப்பரிமாற்றங்களில் 8 இலக்குகள் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் அடித்தது.
பின்னர் 150 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணயின்  டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சாளர்களால் இவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. பவர்பிளேயில் 56 ஓட்டங்கள் விளாசிய ஐதராபாத், 10 பந்துப்பரிமாற்றங்களில்  89 ஓட்டங்கள் எடுத்தது.
டேவிட்  வார்னர் 35 பந்தில் அரைசதம் அடித்தார். சகா 34 பந்தில் அரைசதம் அடித்தார்.
ஐதராபாத் 15 பந்துப்பரிமாற்றங்களில் 137 ஓட்டங்களைத் தொட்டது. 18-வது பந்துப்பரிமாற்றத்தின் முதல் பந்தை வார்னர் பவுண்டரிக்கு விரட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17 பந்துகள் மீதமுள்ள நிலையில் 10 இலக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. வார்னர் 58 பந்தில் 85 ஓட்டங்களும்,  சகா 45 பந்தில் 58 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

“என் கனவுடன் நான் நிஜத்தில் வாழ்ந்தது அதிர்ஷ்டம். முடிவுக்கு வரும் இந்த சகாப்தம் கடினமாக இருக்கும்“ – அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறார் வோட்ஸன் !

“என் கனவுடன் நான் நிஜத்தில் வாழ்ந்தது அதிர்ஷ்டம். முடிவுக்கு வரும் இந்த சகாப்தம் கடினமாக இருக்கும். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்” என  அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன்வோட்ஸன் இன்று அறிவித்துள்ளார்.

முன்னதாகவே அவுஸ்ரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த போதிலும் கூட இந்தியாவின் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இவ்வருட ஐ.பி.எல் தொடரில் சென்னை  அணி பெரிய அளவில் சோபிக்கத்தவறியதுடன் லீக் ஆட்டங்களுடன் வெளியேறிய நிலையில் அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் வாட்ஸன் ஓய்வு அறிவிக்க இருப்பதாக நேற்று தகவல் வெளியானது.

அவுஸ்திரேலியாவுக்கு வாட்ஸன் சென்ற பின் இது பற்றி அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வீடியோ மூலம் தனது ஓய்வை வாட்ஸன் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வாட்ஸன் லீக் போட்டிகளில் மட்டும் பல்வேறு நாடுகளில் விளையாடி வந்தார். இந்த அறிவிப்பின் மூலம் ஐ.பி.எல் மட்டுமின்றி ஆஸி.யில் நடக்கும் பிக் பாஷ் லீக்கிலும் வாட்ஸனின் ஆட்டத்தைக் காண முடியாது.

டி20 ஸ்டார்ஸ் எனும் யூடியூப் சேனலில் வாட்ஸன் அளித்த பேட்டியில், “நான் 5 வயதில் டெஸ்ட் போட்டியைக் காணும்போது, என் அம்மாவிடம் நான் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என்று கூறினேன். அது என் கனவாக இருந்தது. ஆனால், இப்போது அதிகாரபூர்வமாக அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் நான் விடைபெறுகிறேன். என்னுடைய கனவுகளுடன் வாழ்ந்ததால் நான் மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரன்.

கடந்த மாதம் 29-ம் தேதி கொல்கத்தா, சி.எஸ்.கே அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் முடிந்தவுடனே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டேன்.

இப்போதுதான் சரியான நேரம் என உணர்கிறேன். நான் மிகவும் நேசிக்கும் சி.எஸ்.கே அணியுடன் கடைசியாக கிரிக்கெட் விளையாடினேன். கடந்த 3 ஆண்டுகளாக என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தனர்.
பல காயங்கள், ஓய்வுகள் பின்னடைவுகளுக்குப் பின், 39 வயதில் என்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடிக்கிறேன். இந்த சகாப்தம் அடுத்துவரும் காலங்களில் மிகவும் கடினமாக இருக்கும். ஆனாலும் முயல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்துசி.எஸ்.கே அணியில் இடம் பெற்று வரும் வாட்ஸன் அந்த ஆண்டு கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார்.

2018 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து கோப்பையை வென்று கொடுத்தார். 2019 ஆம் ஆண்டில் மும்பை அணிக்கு எதிராக இறுதிப்போட்டி வரைசி.எஸ்.கே அணி நகர வாட்ஸன் பங்களிப்பு முக்கியக் காரணமாக அமைந்தது.

2018 ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்காக 555 ரன்களும், 2019இல் 398 ரன்களும் வாட்ஸன் சேர்த்தார். ஆனால், 2020 ஆம் ஆண்டு சீஸன் சிஎஸ்கே அணிக்கே சோகமாக முடிந்த நிலையில் அதில் 11 இன்னிங்ஸில் 299 ரன்கள் மட்டுமே வாட்ஸனால் சேர்க்க முடிந்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐ.பி.எல் தொடரில் சிறந்த ஆல்ரவுண்டராக வாட்ஸன் வலம் வந்துள்ளார். இதுவரை 145 போட்டிகளில் 3,874 ரன்கள் சேர்த்துள்ள வாட்ஸன் பந்துவீச்சில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சி.எஸ்.கே அணிக்கு வருவதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்.சி.பி அணிகளில் விளையாடியுள்ளார். இதில் சி.எஸ்.கே அணிக்காக மட்டும் 43 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் ஐ.பி.எல் தொடர் நாயகன் விருதையும் வாட்ஸன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பது இலக்குகள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி அதன் பிளேஓஃப்ஸ் சுற்று கனவை சிதைத்தது சென்னை !

அபுதாபியில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பஞசாப் இந்த போட்டியில் களமிறங்கியது.
நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கே.எல். ராகுல் 29, மயங்க் அகர்வால் 26, கெய்ல் 12, பூரன் 2 என சொற்ப ஓட்டகளில் ஆட்டமிழந்தனர்.
6-வது வீரராக களம் இறங்கிய தீபக் ஹூடா 30 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ஓட்டங்கள் அடிக்க பஞ்சாப் அணி 20 பந்துப்பரிமாற்றங்களில்  6 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் அடித்தது.
தீபக் ஹூடா அரைசதம்: சென்னைக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்
சென்னை சார்பாக லுங்கி நிகிடி 3 இலக்குகளை  வீழ்த்தினார்.
பின்னர் 154 ஒட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரம்பம் முதலே டு பிளிஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை அணியின்  ஓட்டங்கள் 82 ஆக இருக்கும் போது டு பிளிஸ்சிஸ் 34 பந்தில் 48 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அடுத்து அம்பதி ராயுடு களம் இறங்கினார். ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 18.5 பந்துப்பரிமாற்றங்களில் 1 இலக்கு இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்து 09 இலக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிஎஸ்கே 9 விக்கெட்டில் அபார வெற்றி: பஞ்சாப் அணி வெளியேறியது
 இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் 6 வெற்றிகளுடன் பிளேஓஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். சென்னை அணி ஏற்கனவே தன்னுடைய பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ருத்ராஜ் , ஜடேஜா அதிரடி ஆட்டம் – கொல்கத்தாவின் அடுத்த சுற்று கனவுக்கு தடை போட்டது சென்னை !

ஐ.பி.எல். தொடரின் 49-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நேற்று அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் எம்.எஸ்.டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஷுப்மான் கில் 26 ஓட்டங்களிலும், சுனில் நரைன் 7 ஓட்டங்களிலும் ரிங்கு சிங் 11 ஓட்டங்களிலும் வெளியேறினர். ஒரு பக்கம் இலக்குகள் விழ மறுமுனையில் நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவர் 61 பந்தில் 87 ஓட்டங்களில் அவரும் வெளியேறினார். மோர்கன் 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார்.  இறுதியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 பந்துப்பரிமாற்றங்களில் 5 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு
173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக  ஷேன் வாட்சன், ருத்ராஜ் கெயிக்வாட் ஆகியோர் இறங்கினர்.
இருவரும் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 50 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், வாட்சன் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராயுடு 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  கெயிக்வாட் இம்முறையும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். டோனி ஒரு ஓட்டமெடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து சாம் கர்ரன் களம் இறங்கினார். சிறப்பாக ஆடிய கெயிக்வாட் 72 ஓட்டங்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜடேஜா இறங்கினார். ஜடேஜாவும், சாம் கர்ரனும் பொறுப்புடன் ஆடி சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதிப் பந்தில் ஜடேஜா சிக்சர் அடிக்க சென்னை அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 31 ஓட்டங்களும், சாம் கர்ரன் 13 ஓட்டங்களும் அடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்தனர். இது சென்னை அணியின் 5வது வெற்றி ஆகும்.
கொல்கத்தா சார்பில் பாட் கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான தொடரில் ஐ.பி.எல் தொடரில் பிரகாசித்த அதிக இளம்வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு !

இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
இந்த வருட ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் அநேகருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளமை சிறப்பாகும்.
ஆஸ்திரேலியா தொடர் டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. மயங்க் அகர்வால், 4. கேஎல் ராகுல் (துணைக் கேப்டன்), 5. மணிஷ் பாண்டே, 6. சஞ்சு சாம்சன், 7. ஜடேஜா, 8.  வாஷிங்டன் சுந்தர், 9. சாஹல், 10. பும்ரா, 11. முகமது சிராஜ், 12. நவ்தீப் சைனி,  13. தீபக் சாஹர், 14. வருண் சக்ரவர்த்தி, 15. ஹர்திக் பாண்ட்யா, 16. ஷ்ரேயாஸ் அய்யர்,
ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. ஷுப்மான் கில், 4. கேஎல் ராகுல் (துணைக்கேப்டன்), 5. ஷ்ரோயஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ஹர்திக் பாண்ட்யா, 8. மயங்க் அகர்வால், 9. ஜடேஜா, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. பும்ரா,  13. முகமது சிராஜ், 14. நவ்தீப் சைனி, 15. ஷர்துல் தாகூர்.
டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர்கள் விவரம்:-
1. விராட் கோலி, 2. மயங்க் அகர்வால், 3. பிரித்வி ஷா, 4. கேஎல் ராகுல், 5. புஜாரா, 6. ரகானே,  7. ஹனுமா விஹாரி, 8. ஷுப்மான் ஹில், 9. சகா, 10. ரிஷப் பண்ட், 11. பும்ரா, 12. முகமது ஷமி, 13. உமேஷ் யாதவ், 14. நவ்தீவ் சைனி, 15. குல்தீப் யாதவ், 16. ஜடேஜா, 17. அஸ்வின், 18. முகமது சிராஜ்.
கூடுதலாக நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பெரேல், டி.நடராஜன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தத்தொடரின் அட்டவணை..!
 போட்டி அட்டவணை

சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் – ஐந்து இலக்குகள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது மும்பை!

ஐ.பி.எல் தொடரின் 48-வது ஆட்டம் அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாடியது. ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ஜோஷ் பிலிப் 24 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 9 ஓட்டங்களிலும் , டி வில்லியர்ஸ் 15 ஓட்டங்களிலும், ஷிவம் டுபே 2 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
தேவ்தத் படிக்கல் 45 பந்தில் 74 ஓட்டங்கள் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 பந்துப்பரிமாற்றங்களில் 6 இலக்குகள் இழப்பிற்கு 164 எடுத்தது. குர்கீரத் சிங் மான் 14 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ஓட்டங்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி
மும்பை அணி சார்பில் பும்ரா 4 பந்துப்பரிமாற்றங்களில் 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 இலக்குகளை சாய்த்தார்.
இதையடுத்து, 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.
19 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிகாக்கும், 19 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷனும் வெளியேறினர். அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் சவ்ரவ் திவாரியுடன் ஜோடி சேர்ந்தார்.  ஆனால், திவாரி 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். பின்னர் வந்த குர்னால் பாண்டியா 10 ஓட்டங்களிலும் ஹர்திக் பாண்டியா 17 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஆனால், ஒரு புறம் விக்கெட்டுகள் சாய்ந்த மோதும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் அணியின் ஓட்டத்தை வேகமாக உயர்த்தினார்.
இறுதியில் மும்பை அணி 19.1பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்குகளை மட்டுமே இழந்து 166 ஓட்டங்கள் எடுத்தது. இதனால், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 5 இலக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 79 ஓட்டங்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் மும்பை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
பெங்களூர் தரப்பில் முகமது சிராஜ் மற்றும் சாஹல் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.

லங்கன் பிரிமியர் லீக் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி வீரர்கள் அறிமுகமும் ஊடகவியலாளர் சந்திப்பும் !

லங்கன் பிரிமியர் லீகில் விளையாடவுள்ள அணிகளில் ஒன்றான யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் (Jaffna Stallions) அறிமுகம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம்(26.10.2020) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் இணைப்பாளர் G.வாகிசேன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று வீரர்களின் அறிமுகமும் இடம்பெற்றிருந்தது. யாழ்.பரியோவான் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரியின் வீரர்களான வி.வியஸ்காந்த், தி.டினோஷன் மற்றும் க.கபில்ராஜ் ஆகியோரே அணியில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LPL will boost interest and offer opportunities for youngsters,Jaffna team  owners

இன்று இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட் , யாழ் கிரிக்கெட் சம்மேளன தலைவர் நிசாந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெங்களூரை 08 இலக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் !

ஐ.பி.எல் தொடரில் இன்றைய மாலை நேர ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூர் துடுப்பாட்டத்தை  தேர்வு செய்தது.
சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்திருந்தாலும் கூட எதிர்பார்த்த அளவிலான ஓட்டத்தை பெற முடியவில்லை. மிக மந்தகதியிலேயே அணியின் ஓட்டம் நகர்ந்தது. சென்னை பந்துவீச்சாளர்கள் பெங்களுர் வீரர்களை நன்கு கட்டுப்படுத்தினர். இறுதியில்  20 பந்துப்பரிமாற்ற முடிவில் பெங்களூர் 6 இலக்குகள் இழப்பிற்கு  இழப்பிற்கு 145 ஓட்டங்களையே பெற்றது. அணிசார்பாக நிதான ஆட்டத்தை பெளிப்படுத்திய தலைவர் விராட் கோலி 43 பந்தில் 50 ஓட்டங்களை பெற்றமையே அணியின் அதிகபட்ச ஓட்டமாக அமைந்தது.
விராட் கோலி அரைசதம் அடித்தும் ஆர்சிபி-யால் 145 ரன்களே எடுக்க முடிந்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா?
சென்னை அணி சார்பில் சாம் கர்ரன் 3 இலக்குகளையும், தீபக் சாஹர் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 146 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடகத்தில் இருந்தே அதிரடியாக விளையாடத் தொடங்கினர். சென்னை அணி 5.1 ஓவரில் 46 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது டு பிளிஸ்சிஸ் 13 பந்தில் தலா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. அம்பதி ராயுடு 27 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்மிழந்தார். தொடர்ந்து கெய்க்வாட்டுடன் தலைவர் டோனி ஜோடிசேர்ந்தார். சிறப்பாக ஆடிய ருத்துராஜ் கெய்க்வாட் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி அணியை 18.4 பந்துப்பரிமாற்றத்தில்  வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 பந்துப்பரிமாற்றத்தில் 2 இலக்கு இழப்பிற்கு 150 ஒட்டங்கள் எடுத்து 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியால் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்யும் வாய்ப்பு தள்ளிப் போகியுள்ளது.

வருண் சக்ரவர்த்தி அசத்தலான பந்துவீச்சு – டெல்லியை 59 ஓட்டங்களால் வெற்றிகொண்டது கொல்கத்தா!

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 42 ஆவது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்த கில் 9 ஓட்டங்களில் நார்ட்ஜி பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த ராகுல் திரிபாதியும் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 3 ஓட்டங்களில் வெளியேற கொல்கத்தா அணி 7.2 பந்துப்பரிமாற்றத்தில்  42 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளை இழந்து தடுமாறியது. அடுத்துவந்த சுனில் நரைன், ராணாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 பந்துகளை சந்தித்த நரைன் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 64 ஓட்டங்கள் குவித்து ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா 53 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 81 ஓட்டங்கள் குவித்து ஸ்டாய்னிஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.
நிதிஷ் ராணா அதிரடியால் டெல்லிக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 194 ஓட்டங்களை குவித்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் நார்ட்ஜி, ரபாடா, ஸ்டாய்னஸ் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 195 ஓட்டங்கள்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். கம்மின்ஸ் வீசிய முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் ரஹானே(0) வெளியேறினார். அடுத்து டெல்லி அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். மறுமுனையில் நின்றுகொண்டிருந்த தொடக்க வீரரான தவான் 6 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் ஷ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளை சந்தித்த பண்ட் 27 ரன்னில் வெளியேறினார்.  பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான ஷிம்ரான் ஹேட்மயர் 5 பந்தில் 10 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால், டெல்லி அணி 13.2 பந்துப்பரிமாற்றங்களில் 95 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை  இழந்து திணறியது.
சற்று நிலைத்து நின்று ஆடிய தலைவர் ஷ்ரேயாஸ் 38 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சக்ரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டெல்லி வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், 20 பந்துப்பரிமாற்றங்களில் முடிவில் டெல்லி அணி 9 இலக்குகளை இழந்து 135 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
வருண் சக்ரவர்த்தியின் சுழலில் சுருண்ட டெல்லி - 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி
இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 4 பந்துப்பரிமாற்றங்கள் வீசி 20 ஓட்டங்கள் கொடுத்து 5 இலக்குகளை வீழ்த்தினார். கம்மின்ஸ் 3 இலக்குகளை வீழ்த்தினார்