விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

“வீரர்களின் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தாமையே தற்போதைய கிரிக்கெட் வீழ்ச்சிக்கான முக்கிய காரணம்.” – சனத் ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்களின் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தாமையே தற்போதைய கிரிக்கெட் வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு எதாவது செய்வதற்கான வாய்ப்பு கிடைக்குமாயின் நூற்றுக்கு நூறு வீதம் தங்களது உழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வலைப்பயிற்சி அதிகமாக இல்லாததாலேயே கேன் வில்லியம்சன் களமிறக்கப்படவில்லை – தலைமை பயிற்சியாளர்

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வெளிநாட்டு வீரர்களில் பேர்ஸ்டோ, டேவிட் வார்னர், முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் களம் இறங்கினர்.
கடந்த வருடத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆபத்தான நிலையில் இருந்தபோதெல்லாம் தனியொரு மனிதனாக துடுப்பெடுத்தாடி  அசத்தி அணியின் வெற்றிக்கு உதவியது கேன் வில்லியம்சன் தான்.
தலைசிறந்த வீரரரான அவருக்கு இடம் கொடுக்காதது குறித்து ரசிகர்கள் அணி நிர்வாகத்தை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்ந நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் கேன் வில்லியம்சனை களம் இறக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் குறித்து டிரேவர் பெய்லிஸ் கூறுகையில்
‘‘போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற கேன் வில்லியம்சனுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை என் நாங்கள் எண்ணுகிறோம். வலைப்பயிற்சியில் கொஞ்சம் அதிகமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது நடந்திருந்தால் பேர்ஸ்டோவிற்குப் பதிலாக கேன் வில்லியம்சன் இடம் பிடித்திருப்பார். ஆனால் பேர்ஸ்டோ இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டி சென்று கொண்டிருக்கும்போது கட்டாயம் கேன் வில்லியம்சன் அணியில் இடம் பிடிப்பார்’’ என்றார்.
பேர்ஸ்டோ நேற்றைய போட்டியில் 40 பந்தில் 55 ஓட்டங்கள் அடித்தார். இந்த போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியடைந்தததும் குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி தலைவர் டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் !

14-வது ஐ.பி.எல் தொடரில்  சென்னை அணி நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோற்றது. 188 ரன் குவித்தும் சென்னை அணி  அணியால் வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவுக்கு அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருந்தது.

இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மெதுவாக பந்துவீசினார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் பந்துவீசாமல் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டனர்.

இதற்காக ஐ.பி.எல். விதிமுறைப்படி சென்னை அணி தலைவர் டோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.12 லட்சம் (இந்திய ரூபாய்)  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். விளையாட்டு விதிப்படி 20 ஓவரை 90 நிமிடங்களில் வீச வேண்டும். அதாவது ஒரு மணி நேரத்தில் 14.1 ஓவரை வீசி முடிக்க வேண்டும். சென்னை அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்து கொண்டதால் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

“இம்முறை எமது அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.” – விராட்கோலி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் திகதி சென்னையில் தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ்- பெங்களூர் அணியும் மோதுகின்றன.

இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர். பெங்களூர் அணி தலைவர் விராட்கோலி நேற்று சென்னை வந்தார். தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு பயிற்சியில் ஈடுபடுகிறார்.

ஏற்கனவே வந்த பெங்களூர் அணி வீரர்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடிந்த பிறகு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விராட்கோலி பெங்களூர் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

நாங்கள் மீண்டும் இந்தியாவில் விளையாடுகிறோம் என்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். வேறுபட்ட அமைப்பில் இருந்தாலும், வேறு வழியில் இருந்தாலும் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஒரு நல்ல உணர்வு இருக்கிறது.

இது ஒரு நீண்ட பயணம் – பெங்களூர் அணிக்கு திரும்பி வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஐ.பி.எல். போட்டியை நேற்றுதான் நாங்கள் முடித்தது போல் உணர்கிறோம். கடந்த போட்டியின் உத்வேகத்தை நாங்கள் பெற்றுள்ளோம். அணியில் சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். பழைய வீரர் பெயர்களும் உள்ளன. அவர்களை நான் பல ஆண்டுகளாக அறிந்து இருக்கிறேன்.

டேனியல் கிறிஸ்டியன் இதற்கு முன்பு பெங்களூர் அணியில் இருந்திருக்கிறார். மேக்ஸ்வெல், முதல் முறையாக இடம் பெற்றுள்ளார். ஆனால் அவரை நாம் அனைவரும் அடிக்கடி ஐ.பி.எல். போட்டியில் பார்த்து இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து நிறைய ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டி – இலங்கை வீரர்களின் நிதான துடுப்பாட்டத்தால் போட்டி சமன் !

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுக்களுக்கு 280 ஒட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக அணித்தலைவர் பிராத்வெயிட் அதிகபட்சமாக 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, இலங்கை அணிக்கு 377 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஆவது நாள் ஆட்ட நேரம் நிறைவடையும் போது2 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பில் ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 75 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்ட நாயகனாக பிராத்வெயிட் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தொடராட்ட நாயகனாக சுரங்க லக்மால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரி‌ஷப் பண்ட் தெரிவு !

ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக இருப்பவர் ஸ்ரேயாஷ் அய்யர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஸ்ரேயாஷ் அய்யரால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு யார் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலக்கு காப்பாளரான இளம் வீரர் ரி‌ஷப் பண்ட் டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் சுமித், அஸ்வின், ரகானே போன்ற மூத்த வீரர்கள் இருக்கும் போது டெல்லி அணி நிர்வாகம் ரி‌ஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளது.

இந்தநிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் பதவிக்கு ரி‌ஷப் பண்ட் தகுதியானவர் என்று ஸ்ரேயாஷ் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் பேசிய போது ,

ரி‌ஷப்பண்ட் சிறந்த மனிதர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. காயம் காரணமாக என்னால் ஐ.பி.எல். போட்டியில் ஆட முடியவில்லை. இதனால் டெல்லி அணிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் ரி‌ஷப்பண்ட் சிறந்தவர். தலைவர் பதவிக்கு தகுதியானவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு ஸ்ரேயாஷ் அய்யர் கூறி உள்ளார்.

ஸ்ரேயாஷ் தலைமையில் டெல்லி அணி கடந்த ஐ.பி.எல். போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரி‌ஷப்பண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் சி.எஸ்.கே. அணியை சேர்ந்தவருமான சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த சீசனுக்கு டெல்லி அணியின் தலைவராகக நியமிக்கப்பட்டுள்ள ரி‌ஷப்பண்டுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவர் சிறந்த தலைவராக உருவாகுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சிறப்பான பணி மூலம் டெல்லி அணியை அவர் பெருமைப்படுத்துவார்.

இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வலது கையில் அறுவை சிகிச்சை !

ஸ்கேன் மற்றும் ஆலோசகர் மதிப்பாய்வைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வலது கையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளார்.

ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சற்று முன்பு தனது வீட்டில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்ச்சருக்கு கையில் வெட்டு ஏற்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறித்த காயம் இந்தியா அணிக்கு எதிரான தொடரில் பிரகாசிக்க தடையாக இருந்த நிலையில் ஆர்ச்சர் குணமடைய இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி – வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா !

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் தவான் 98 ஓட்டங்களையும் , விராட் கோலி 56 ஓட்டங்களையும் , கே.எல் ராகுல் 62 ஓட்டங்களையும் , குருணால் பாண்ட்யா 58 ஓட்டங்களையும் பெற இந்தியா 50 பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்கு இழப்பிற்கு 317 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் 318 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பேர்ஸ்டோவ் 40 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜேசன் ராய் 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஜேசன் ராய்- பேர்ஸ்டோவ் ஜோடி முதல் இலக்குக்கு 135 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 1 ஓட்டத்துடன் ஏமாற்றம் அளித்தார்.
இரண்டு இலக்கு வீழ்ந்தாலும் மறுமுனையில் பேர்ஸ்டோவ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 94 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இங்கிலாந்து இலக்குகள் மளமளவென சரிந்தது. மோர்கன் 22 ஓட்டங்களிலும், பட்லர் 2 ஓட்டங்களிலும், சாம் பில்லிங்ஸ் 18 ஓட்டங்களிலும், மொயீன் அலி 30 ஓட்டங்களிலும், சாம் கர்ரன் 12 ஓட்டங்களிலும் வெளியேற இங்கிலாந்து 42.1 பந்துப்பரிமாற்றங்களில் 251 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் இந்தியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 8.1 பந்துப்பரிமாற்றங்களில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

கால்பந்து ஜாம்பவன் பீலேவின் சாதனையை முறியடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ !

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர், இத்தாலியில் உள்ள ஜுவன்டஸ் கிளப்புக்காக தற்போது விளையாடி வருகிறார்.

இத்தாலி கிளப் கால்பந்து போட்டி ஒன்றில் ஜுவான்டஸ்- காக்லியானி அணிகள் மோதின. இதில் ஜுவான்டஸ் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ரொனால்டோ 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இதன் மூலம் அவர் அதிகாரப்பூர்வ போட்டிகளில் ஜாம்பவன் பீலே (பிரேசில்) சாதனையை முறியடித்தார்.

இந்த 3 கோல்கள் மூலம் ரொனால்டோ 770 கோல்களை தொட்டார். அவர் பீலேவை முந்தினார். இந்த போட்டிக்கு முன்பு ரொனால்டோ அவரை சமன் செய்து இருந்தார். தற்போது பீலேவை முந்தி சாதனை படைத்துள்ளார்.

ரொனால்டோ கிளப் போட்டிகளில் 668 கோல்களும், போர்ச்சுக்கல் அணிக்காக 102 கோல்களும் அடித்துள்ளார். கிளப் போட்டிகளில் ரியல் மாட்ரிட்டுக்காக 450 கோல்களும், மான்செஸ்டர் யுனைடெட்டுக்காக 118 கோல்களும், ஜுவான்டஸ் கிளப்புக்காக 96 கோல்களும், ஸ்போர்ட்டின் லிஸ்பன் அணிக்காக 5 கோல்களும் அடித்துள்ளார்.

தனது சாதனையை முறியடித்த ரொனால் டோவுக்கு பீலே வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

“எப்போதும் மைதானத்தில் விளையாடும்போதும் என்னிடமும் மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறேன்” – ரவிசந்திரன் அஸ்வின்

“எப்போதும் மைதானத்தில் விளையாடும்போதும் என்னிடமும் மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறேன்” என இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் விளையாடாமல் உள்ள அஸ்வினிடம், எப்போது மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் அணிக்குள் திரும்புவீர்கள் என வினவிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உங்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று சொல்வார்கள். நான் என்னுடன் எப்படிப் போட்டியிட வேண்டும், முழு நிம்மதியுடன் இருக்கவேண்டும் என்பதை அறிந்துள்ளேன்.

ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு நான் எப்போது திரும்புவேன் என என்னிடம் கேட்பது நகைப்புக்குரியதாக உள்ளது. என் வாழ்வில் இப்போது நிம்மதியாக, மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இப்போதுள்ள நிலையில் என்னால் மகத்தான பங்களிப்பை வழங்க முடியும் என நம்புகிறேன்.

மக்களின் கேள்விகளையும் அவர்களுடைய கருத்துகளையும் பற்றி நான் கவலைப்படவில்லை. எப்போதும் மைதானத்தில் விளையாடும்போதும் என்னிடமும் மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறேன்’ என கூறினார்.

34 வயதான அஸ்வின் இதுவரை 78 டெஸ்ட், 111 ஒருநாள் மற்றும் 36 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.