விளையாட்டுச் செய்திகள்

Wednesday, June 23, 2021

விளையாட்டுச் செய்திகள்

பழனி முருகனுக்கு முடிக்காணிக்கை செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் !

தமிழகத்தின் சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் அண்மையில் இடம்பிடித்து சிறப்பாக அசத்தி வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகி அசத்தலாக பந்து வீசினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில் தாயகம் திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பழனி தைப்பூச விழாவில் முருகப் பெருமானைத் தரிசிக்க நண்பர்களுடன் நேற்று பழனி வந்தார்.பழனி மலைக்கோயிலுக்குச் சென்ற கிரிக்கெட் வீரர் நடராஜன், நேர்த்திக் கடனாக மலைக்கோயில் அடிவாரத்தில் முடிக் காணிக்கை செலுத்தினார்.

“இலங்கையின் கிரிக்கெட் தரத்தை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் முன்னேற்ற முடியாவிட்டால் வேறு யாராலும் முடியாது” – அர்ஜூன ரணதுங்க

“விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டால் வேறு எந்த அமைச்சராலும் எதிர்காலத்தில் முன்னேற்றததை ஏற்படுத்த முடியாது” என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

இலங்கை கிரிக்கெட்டினை வலுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் நாமல்ராஜபக்சவினை அவதானித்த வண்ணமுள்ளனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் நாமலின் குடும்பத்தவர்கள் என தெரிவித்துள்ள, ரணதுங்க இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட்டினை முன்னேற்றகரமான நிலைக்கு நாமலால் கொண்டு செல்ல முடியாவிட்டால் வேறு எவராலும் கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி காலத்தில் கிரிக்கெட்டில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகளை தடுப்பதற்காக பலர் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆதரவை பெற்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாமல் ராஜபக்சவிற்கு விளையாட்டை பற்றி தெரியும் என்பதாலும் அவர் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும் யாரும் தேவையற்ற விதத்தில் செல்வாக்கு செலுத்த முடியாது என ரணதுங்க தெரிவித்துள்ளார்.

“இந்திய வீரர்கள் ரசிகர்களின் இனவெறி பேச்சுக்கு ஆளானது உண்மை ” – மன்னிப்பு கேட்டது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் !

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் சீன் காரோல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள்(முகமது சிராஜ், பும்ரா) ரசிகர்களின் இனவெறி பேச்சுக்கு ஆளானது உண்மை தான். விரும்பத்தகாத இந்த சம்பவத்துக்காக நாங்கள் மீண்டும் இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டேடியத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகள், டிக்கெட் விவரங்கள், ரசிகர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம்.

மைதானத்தில் இருந்து சந்தேகத்தின் பேரில் வெளியேற்றப்பட்ட 6 ரசிகர்களுக்கும் இனவெறி புகாருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. நியூசவுத் வேல்ஸ் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களது விசாரணை முடியும் வரை நாங்கள் எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை ஆயுர்வேத மருத்துவரின் கொரோனா பாணியை எடுத்துக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா !

கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் மருந்தினை பயன்படுத்திய இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த கொரோனாவினால் பாதிக்கப்ட்டுள்ளார்.

துரித அன்டிஜென் பரிசோதனையின் போதே அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

அமைச்சரின் பத்து உதவியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவர் தனது மருந்தினை நாடாளுமன்றத்திற்கு கொண்டுசென்றவேளை இராஜாங்க அமைச்சர் அதனை பயன்படுத்தியிருந்தார்.

“நான் முட்டாள் போல் காட்சி அளித்தேன்” – அஷ்வினிடம் மன்னிப்பு கேட்டார் அவுஸ்திரேலிய அணி தலைவர் டிம்பெய்ன்!

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின்-விகாரி ஜோடியை வீழ்த்த முடியாததால் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் விரக்தி அடைந்தனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன், லபுசேன், மேத்யூ வாடே ஆகியோர் “சிலெட்ஜிங்”கில் ஈடுபட்ட னர். அஸ்வின் களத்தில் இருந்த போது டிம்பெய்ன் வார்த்தைகளால் உசுப்பேற்றி சீண்டினார். மோசமான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் அஸ்வினிடம் மன்னிப்பு கேட்டார்

4-வது டெஸ்ட் நடைபெறும் பிரிஸ்பன் மைதானத்துக்கு வா, பார்ப்போம் என்று சீண்டினார். இதற்கு அஸ்வின், “நீ இந்தியா வா பார்ப்போம். அதுதான் உனக்கு கடைசி தொடராக இருக்கும்” என்று பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து பெய்ன் சீண்டியதால், அஸ்வின் நடுவரிடம் புகார் அளித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே விகாரி அடித்த கேட்சை பெய்ன் கோட்டை விட்டார்.

இந்தநிலையில் ஆடுகளத்தில் சீண்டியதற்காக அஸ்வினிடம், டிம்பெய்ன் மன்னிப்பு கேட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“நான் செயல்பட்ட விதத்துக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் என்னுடைய அணியை நன்றாக வழிநடத்த விரும்பினேன். ஆனால் நேற்று கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. நெருக்கடி காரணமாகவே நான் தவறாக செயல்பட்டு விட்டேன். என்னுடைய அணியின் தரத்தை விட நான் குறைவாக நடந்து கொண்டேன். நேற்றைய ஆட்டம் எங்களது மதிப்பில் சரிவை ஏற்படுத்தி விட்டது. போட்டி முடிந்த பிறகு அஸ்வினுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டேன்.

நான் முட்டாள் போல் காட்சி அளித்தேன். அடிக்கடி பேசினேன். ஆனால் கேட்சை விட்டு விட்டேன் என்று கூறி எனது தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

பின்னர் நாங்கள் சிரித்துக் கொண்டோம். அதன்பின் எல்லாம் சரியாகி விட்டது. அடுத்த டெஸ்ட் போட்டிக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பான ஆட்டத்தை வெற்றி தோல்வியின்றி சமன் செய்தது இந்தியா !

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று முடிந்தது.

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்துள்ளது.

சிட்னி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டீவ் ஸ்மித் 131 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 91 ஓட்டங்களையும் வில் புகோவ்ஸ்கி 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 244 ஓட்டங்களை பெற்றது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் மற்றும் புஜாரா ஆகியோர் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹெசில்வுட் 2 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 94 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் இந்தியா அணிக்கு 406 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக கேமரூன் கிரின் 84 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 81 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவிச்சில், நவ்தீப் சைனி மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, போட்டியின் இறுதிநாள் வரை 334 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுகளை இழந்து களத்தில் தாக்குபிடித்தது. வெற்றி இலக்குக்கு 72 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில், இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலைப் பெற்றது.

இதன்போது இந்திய அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 97 ஓட்டங்களையும் செடீஸ்வர் புஜாரா 77 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அஸ்வின்- விஹாரி பொறுப்பான ஆட்டம்... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டிரா

ஹனுமா விஹாரி 161 பந்துகளுக்கு 23 ஓட்டங்களுடனும், அஸ்வின் 128 பந்துகளுக்கு 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்து  போட்டியின் போக்கை மாற்றியமைத்தனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹசில்வுட் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 131 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 81 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட அவுஸ்ரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ள நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களை இனவெறியை தூண்டும் வகையில் கிண்டல் செய்த அவுஸ்ரேலிய ரசிகர்கள் – மைதானத்தில் பதற்றம் !

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, களத்தடுப்பு செய்துகொண்டிருந்த இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜ் ஆகியோரைப் ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
இனவெறியை தூண்டும் வகையில் அவர்கள் பேசியதால் இந்த விவகாரம் குறித்து நடுவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டத்தின்போதும் இந்திய வீரர்களை குறிவைத்து பார்வையாளர்கள் சிலர் பேசியதை சிராஜ் கவனித்துள்ளார். இதனால் அவர் பந்துவீச்சை நிறுத்தினார். பின்னர் நடுவர் மற்றும் சக வீரர்களிடம் இந்த தகவலை கூறினார். இந்திய வீரர்களை கிண்டல் செய்த 6 ரசிகர்கள் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 10 நிமிடத்திற்கு பிறகு போட்டி தொடங்கியது.
இனவெறியை தூண்டும் வகையில் பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி – முதல் இன்னிங்சில் 244 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா !

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
நாணயச்சுழற்சியில் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 338 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் புகோல்ஸ்கி 62 ஓட்டங்களும், லபுஸ்சேன் 91ஓட்டங்களும், ஸ்மித் 131 ஓட்டங்களும் எடுத்து அணியை வலுப்படுத்தினர்.
அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 இலக்கு இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ரஹானே 5 ஓட்டங்களிலும் புஜாரா 9 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரகானே 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹனுமா விஹாரி 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  பொறுமையாக ஆடிய புஜாரா, சுப்மன் கில் இருவரும் 50 ஓட்டங்கள் எடுத்தனர். ரிஷப் பன்ட் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்தியா அணி 244 ஓட்டங்களில் தனது சகல இலக்குகளையும் இழந்தது. ஜடேஜா 28 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 இலக்குகளை கைப்பற்றி இந்திய அணியின் ஓட்டக் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார். ஹாசில்வுட் 2 இலக்குகளையும், ஸ்டார்க் ஒரு இலக்கையும் எடுத்தனர்.
இதனையடுத்து 94 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2ம் இன்னிங்சை தொடங்கியது.

நியூசிலாந்து அசத்தலான ஆட்டம் – தொடரை இழந்தது பாகிஸ்தான் !

நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 297  ஓட்டங்களை எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 6 இலக்குகள் இழப்புக்கு 659 ஓட்டங்களை  குவித்து தன்னுடைய ஆட்டத்தை இடைநிறுத்தியது. நியூசிலாந்து சார்பில் தலைவர் வில்லியம்சன் இரட்டை சதமும் ( 238 ), ஹென்றி நிக்கோல்ஸ் 157 ஓட்டங்களும், மிச்சேல் 102 ஓட்டங“களும் பெற்றனர்.
362 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 1 இலக்கு இழப்புக்கு 8 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது. நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் இலக்குகள் சரிந்தன. அந்த அணி 186 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அசார் அலி அதிகபட்சமாக தலா 37 ஓட்டங்களை  எடுத்தார். கெய்ல் ஜேமிசன் 48 ஓட்டங்களை கொடுத்து 6 இலக்குகளை வீழ்த்தினார். போல்ட் 3 இலக்குகளையும், வில்லியம்சன் 1 இலக்கையும்  எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் அந்த அணி 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ஏற்கனவே 20 ஓவர் தொடரையும் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. பாகிஸ்தான் அணி 2 தொடரை இழந்து ஏமாற்றம் அடைந்தது.
பாகிஸ்தானை இன்னிங்ஸ் கணக்கில் வீழ்த்தி நம்பர் ஒன் இடத்தை பிடித்து நியூசிலாந்து புதிய சாதனை
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தர வரிசையில் முதலாம்  இடத்தை பிடித்தது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அந்த அணி முதல் இடத்தை பிடித்தது. நியூசிலாந்து அணி 118 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
மேலும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் நுழையும் வாய்ப்பையும் நியூசிலாந்து பெறுகிறது.

வீணாகிப்போனது திமுத் கருணரத்னவின் சதம் – தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா !

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 10 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது. அதனப்படையில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸ்ஸில் சகல இலக்குகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித 60 ஓட்டங்களையும் வனிது ஹசரங்க 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்கா அணியின் வீரரான அன்ரிச் நொக்கியா 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி சகல இலக்குகளையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி சார்ப்பில் டீன் எல்கர் 127 ஓட்டங்களையும் வான் டெர் டஸ்ஸன் 67 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் விஷ்வ பெர்ணான்டோ 5 இலக்குகளையும், அசித பெர்ணான்டோ மற்றும் தசுன் சானக தலா 2 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தனர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சகல இலக்குகளையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் சார்ப்பில் அணித் தலைவர் திமுத் கருணரத்ன 103 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

அதனடிப்படையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 66 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை விளையாடிய தென்னாபிரிக்கா அணி இலக்குகள் இழப்பின்றி 67 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

அதனடிப்படையில் 2-0 என்ற ரீதியில் தென்னாபிரிக்கா தொடரை கைப்பற்றியுள்ளது.