உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

உணவுப் பணவீக்கம் அதிகமுள்ள முதன்மை நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்!

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 உலக நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியால் தொகுக்கப்பட்ட பட்டியலில் பல வாரங்களாக தொடர்ந்து இடம்பெற்று வந்த இலங்கை, புதிய தரவில் நீக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது,

இதன் காரணமாக இலங்கை அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இல்லை என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கி தனது சமீபத்திய மதிப்பீட்டில், லெபனான் நாட்டிலேயே அதிக உணவு விலை பணவீக்கம் காணப்படுவதாக கூறியுள்ளது.

261 சதவீதத்துடன் லெபனான் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் சிம்பாப்வே மற்றும் அர்ஜென்டினா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

பொருளாதார நிலைபேற்றுத் தன்மையை ஏற்படுத்த கல்வித்துறையில் முதல் மறுசீரமைப்பு !

நாட்டின் பொருளாதார நிலைபேற்றுத் தன்மையை அடையும் செயன்முறையில் துரிதமாக மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்த வேண்டிய முக்கிய துறையாக கல்வித்துறையை அரசு அடையாளங் கண்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அனைத்துப் பங்கீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் புதிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

அடுத்துவரும் 25 ஆண்டுகளுக்கான தேசியக் கல்விக் கொள்கைச் சட்டகம் மற்றும் ஏற்புடைய அனைத்து மறுசீரமைப்புக்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காக ஜனாதிபதி தலைமையில் மற்றும் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் பங்கேற்புடன் 10 உறுப்பினர்களுடன் கூடிய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்த நபருக்கு விளக்கமறியல் !

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான மூதாட்டிக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி, நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து ஐந்து முதியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன், 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த வீட்டில் சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பிருந்து தங்கியிருந்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த நபர் வெளிநாடொன்றில் வசித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அந்நாட்டில் இருந்து, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர் எனவும், அவரிடம் இருந்து கொலையானவர்களின் உடைமைகள் மற்றும் நகை உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்திய பொலிஸார் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என மன்றில் கோரினர்.

பொலிசாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மன்று, 48 மணி நேரத்தின் பின்னர் சந்தேகநபரை மன்றில் முற்படுத்துமாறு பணித்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேக நபரை சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அழைத்து சென்ற பொலிஸார், சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கொலை செய்யும் போது உடுத்தியிருந்த சாரம் என்பவற்றை குறித்த வீட்டின் கிணற்றில் இருந்து பொலிஸார் மீட்டு இருந்தனர்.

அதனை அடுத்து மேலதிக விசாரணைகள் முடிவடைந்த நிலையிலும் மன்றினால் வழங்கப்பட்ட 48 மணிநேர அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபரை முற்படுத்தினர்.

அதனை அடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

“மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசும் போது புலிகள் என கூச்சலிடுவதை ஏற்க முடியாது.” – எம்.ஏ சுமந்திரன்

பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான வேளையின் போது உரையாற்றிய இரா.சாணக்கியன்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரை  மற்றும் படுவான்கரை ஆகிய பகுதிகளில் பாலம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு இனவாதி, கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் பாதுகாவலனாக தன்னை நினைத்துக் கொண்டு ஒருதலை பட்சமாக செயற்படுகிறார். தமிழர்கள் வாழும் பகுதிகளில் உட்கட்டமைப்பு தேவைகள் நெருக்கடி நிலையில் காணப்படுகிறது.

தெற்கு மாகாணத்தில் தேவையற்ற வீதி அபிவிருத்திகளும்,பாலம் நிர்மாணிப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்ற.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முறையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதில்லை. ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன என?“ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

சாணக்கியன் தனது உரையை நிறைவு செய்வதற்கு முன்னர் அவர் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது.

இதற்கு சாணக்கியன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, “உங்களின் கேள்வி ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நீங்கள் சத்தமாக உரையாற்றுவதற்கு நான் அச்சமடைய போவதில்லை.“ என்றார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு கேள்விக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்போது சாணக்கியன் தொடர்ந்து உரையாட முற்பட்டு, “கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கும் போது உரிமை மறுக்கப்படுகிறது.“  என்றார்.

இதன்போது உரையாற்றிய மனுஷ நாணக்கார, “புலிகளின் உண்மை முகம் வெளிப்படுகிறது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இவர்கள் தான் தடையாக உள்ளார்கள் என கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனைத்தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், ‘மாவட்டங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து உரையாற்றும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த அமைச்சர் அரசியலில் எவ்வாறு செயற்படுகிறார் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். சபையில் உரையாற்றும் வழிமுறையை அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சரவை நோக்கி குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த அமைச்சர் ஆற்றிய உரையில், புலிகள் என்ற சொற்பதம் குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அதனை ஹென்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

55 வயதான பெண் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய 21 வயதுடைய இளைஞனை கடத்தி தாக்குதல் !

இளைஞர் ஒருவரை கடத்திச்சென்று தாக்கி காயப்படுத்திய இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்கேநபர்கள், மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மாகொல ஞான மௌலி மாவத்தையை சேர்ந்த 55 வயதான பெண் ஒருவருக்கு ஹங்குரன்கெத்த பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் சமூக வலைத்தளத்தில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இது குறித்து உறவினர்களிடம் அப்பெண் தெரியப்படுத்தியதையடுத்து, அவரின் மருமகன் மற்றுமொரு யுவதியின் போலியான நிழற்படத்தை பயன்படுத்தி, WhatsApp கணக்கை உருவாக்கி குறித்த இளைஞருடன் குறுஞ்செய்திகளை பரிமாறி கொழும்பிற்கு அழைத்து வந்துள்ளார்.

அந்த இளைஞர் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு – புறக்கோட்டைக்கு வருகை தந்த போது, அப்பெண் அவரது மகள், மருமகன் மற்றுமொரு நபருடன் இணைந்து இளைஞரை காரில் கடத்தி, சப்புகஸ்கந்தைக்கு அழைத்துச்சென்று தாக்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சப்புகஸ்கந்த – பமுனுவில மயானத்திற்கு அருகில் அவர்கள் இளைஞரைத் தாக்கி வீதியில் விட்டுச்சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அவசரப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அங்கு சென்ற பொலிஸார் குறித்த இளைஞரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

இலங்கையில் ஆண்டுதோறும் 3,000 தற்கொலை சம்பவங்கள் !

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாக இருக்கலாம் என சிரேஷ்ட விரிவுரையாளரும் உளவியலாளருமான டொக்டர் சத்துரி சுரவீர எச்சரித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 100,000 பேருக்கு 17 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன (100,000:17).என்றார்.

“துரதிஷ்டவசமாக, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான தரவு எதுவும் பெறப்படவில்லை. இதுவரை நாங்கள் இந்த ஆண்டு நான்கு மாதங்கள் மட்டுமே செலவிட்டுள்ளோம், ஆனால் கடந்த நான்கு மாதங்களுக்குள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளது என்ற தகவலைப் பெறுகிறோம்.

“இன்னும், ஆண்டுதோறும் 3,000 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன, கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது சம்பவங்கள் தினசரி பதிவாகின்றன.

தற்கொலை சம்பவங்கள் படிப்படியாகக் குறைந்துள்ளது, ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் இப்போது சிறிது அதிகரித்துள்ளது.” எனவே, தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) சுட்டிக்காட்டியுள்ளது

முல்லைத்தீவில் அரச பேருந்து மீது தாக்குதல் !

வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை செல்வபுரம் பகுதியில் கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

உந்துருளியில் வந்த இருவர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு சாலையில் இருந்து செல்லும் அனைத்து அரச பேருந்துக்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து இலங்கைக்கு 8.4 கோடி ரூபா பெறுமதியான குஷ் என்ற விசேட கஞ்சா !

பேலியகொட – லக்சிறி கொள்கலன் முனையத்தில் வைத்து நேற்று சுமார் 8.4 கோடி ரூபா பெறுமதியான குஷ் என்ற விசேட கஞ்சா வகை போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சரக்கு சேவை மூலம் கனடாவில் வசிக்கும் ஒருவரால் நாட்டுக்கு அனுப்பப்பட்ட இரண்டு மரப்பெட்டிகளின் அடிப்பகுதியில் நிரப்பப்பட்டிருந்த குஷ் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, இரண்டு மரப்பெட்டிகளின் போலியான அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12 கிலோகிராம் எடையுள்ள 24 குஷ் பொதிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்காக பொருட்களின் உரிமையாளரால் அங்கீகரிக்கப்பட்ட எழுதுவினைஞர் வந்திருந்தார். அவரும் போதைப்பொருளுடன் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வவுனியாவில் 12 ஏக்கர் காடு சட்டவிரோதமாக அழிப்பு – கண்டுகொள்ளாத வன இலாகா !

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் 12 ஏக்கர் காடு சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ள போதும் இது தொடர்பில் பொலிஸாரும், வன இலாகாவும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா, ஈச்சங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கட்டையர்குளம் பகுதியில் வனஇலாகாவுக்கு சொந்தமான காட்டுப்பகுதி 12 ஏக்கர் கடந்த சில நாட்களாக அழிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து அரச அதிகாரிகள் பலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே மக்கள் முறையிட்டும் குறித்த காடழிப்பு தடுத்து நிறுத்தப்படவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (23) குறித்த பகுதியில் காடழிப்பு மற்றும் அதனுடன் இணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது அங்கு சென்ற கிராம மக்கள் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்திருந்தனர். இருப்பினும் பொலிஸார் தமது முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காடழிப்பு இடம்பெற்ற போது குறித்த பகுதிக்கு தமது பகுதியில் இல்லாத வாகனங்கள் சில வந்து சென்றதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த பகுதியானது வரைபடத்தில் காட்டுப் பகுதியாக காணப்படுகின்ற போதும் எவருடைய அனுமதியும் பெறப்படாது. சில அதிகாரிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி காடழிப்பில் ஈடுபடுகின்றார்களா அல்லது காடழிப்புக்கு துணை போகின்றார்களா என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது தொடர்பில் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட செயலாளர், வனஇலாகா ஆகியோருக்கும் கிராம மக்களால் நேற்று திங்கட்கிழமை (24) எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ITN தொலைக்காட்சி நிறுவனத்தில் மூத்த அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான அறிவிப்பாளர் !

ITN இன் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவில் பணிபுரிந்த இஷாரா தேவேந்திர, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ITN பொது முகாமையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் சுதர்சன குணவர்தன தெரிவித்துள்ளார்.

ITN இல் பணிபுரிந்த ஊடகவியலாளர் இஷாரா தேவேந்திர, ITN இன் மூத்த அதிகாரி ஒருவரிடமிருந்து தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக சமீபத்தில் குற்றம் சாட்டினார். அத்துடன், ITN இல் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்து ஆதாரங்கள் மற்றும் ஓடியோ வீடியோ பதிவுகளுடன் அதிகாரிகளிடம் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

தன் சுயமரியாதையை காக்கவே பணியை விட்டு விலக முடிவு செய்ததாக கூறினார்.

மேலும் ஐடிஎன்-ல் பெண்கள் தொடர்ந்து இதுபோன்ற துன்புறுத்தல்களை சந்திக்கும் சூழல் உள்ளது என்று கூறியிருந்தார். அங்குள்ள முதியவர்கள் சிலர் பாலியல் இலஞ்சம் கோரி அழுத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஐடிஎன் தலைவர், ஐடிஎன் நிர்வாகம் வெளிப்புற விசாரணை அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார்.

“சனிக்கிழமை முதல் நான் விடுமுறையில் இருக்கிறேன் மற்றும் தாய்லாந்தின் சியாங் மாயில் UNDP ஏற்பாடு செய்த மாநாட்டில் கலந்துகொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஒரு அறிக்கையை வெளியிட்ட ஊடக ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, பாதிக்கப்பட்ட பெண்ணின் துணிச்சலையும், “காட்டுமிராண்டித்தனமான செயலை” அச்சமின்றி அம்பலப்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகளையும் பாராட்டியது.