உள்நாட்டுச் செய்திகள்

Thursday, June 24, 2021

உள்நாட்டுச் செய்திகள்

சட்டவிரோத  துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைது !

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத  துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவரை கைது செய்த தேசிய புலனாய்வு பிரிவினர், 10 துப்பாக்கிகளை அவர்களிடம் இருந்து மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று  திருக்கோவில் பிதான வீதியிலுள்ள அம்மன்கோயிலுக்கு முன்னால் இயங்கிவரும், லேத் மெசின் கடையினை முற்றுகையிட்டனர். அங்கு திரட் வகை உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 60 வயதுடைய தம்பிலுவிலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்

இதனையடுத்து குறித்த துப்பாக்கி தயாரிப்பான பட் எனப்படும் பாகமான துப்பாக்கியின் மரத்திலான பிடியை தயாரித்து வந்த, தச்சு தொழிலாழியான தம்பிலுவிலைச் சேர்ந்த 40 வயதுடைய முன்னாள் போராளியான ஒருவரையும், தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்த காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3பேரை கைது செய்ததுடன் அங்கிருந்து தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளையும் மீட்டனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்க நீதிமன்றத்திற்கு வாய்ப்பளிக்கப்படும் வகையிலான வர்த்தமானி வெளியீடு” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

“தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்க நீதிமன்றத்திற்கு வாய்ப்பளிக்கப்படும் வகையிலான வர்த்தமானி வெளியிடப்படும்” என  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்புக்காக சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள பரிந்துரைகள் பாதுகாப்பு வழிமுறைகளை சட்டமாக்கி வர்த்தமானியில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  எதிர்வரும் இரு தினங்களில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக புதிய சட்டம், வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வௌியிடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இந்நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நோய் தொற்று காணப்படும் பிரதேசங்களில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நான் எதிர்வரும் இரண்டு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளேன்.

குறித்த பிரதேசங்களில் முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு, சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு, சில வளாகங்களில் நுழையும் போது உடல் வெப்பத்தை அளவீடு செய்ய இடமளிக்காத நபர்களுக்கு எதிராக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் நோய் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை ஆகிய இரண்டு தண்டனையோ அல்லது ஒரு தண்டனையோ நீதி மன்றத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடமிருந்து பகிரப்படுமாயின் அது நாட்டை பிளவுபடுத்திவிடும்” – மாகாணசபை தொடர்பில் எச்சரிக்கின்றார் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர !

“அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும். இது பகிரப்படுவதானால், அது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதுதான் நாட்டை பிளவு படுத்துவதற்கும் வழிவகுக்கும்” என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் சரத்வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது,

“அதிகாரப்பரவலாக்கல் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும். இது பகிரப்படுவதானால், அது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதுதான் நாட்டை பிளவு படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

ஆனால், அனைவருக்கும் அதிகாரங்கள் இருக்க வேண்டும். இதுதான் அரசாங்கத்தினதும் நோக்கமாகும். தற்போது மாகாணசபை முறைமை தொடர்பாக ஆராயவேண்டிய நிலைமையில் இருக்கிறோம். மாகாண சபை முறைமை இல்லாமல் தற்போது இரண்டு வருடங்களை நாம் கடந்து விட்டோம். இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாதக- பாதக நிலைமைகள் தொடர்பாக ஆராயவேண்டும்.

இதனால், நாடு பின்நோக்கி நகர்ந்துள்ளதா, அல்லது நன்மை ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராயவேண்டும். நிதி விவகாரம் குறித்து பார்க்க வேண்டும். வளர்ந்துவரும் ஒரு நாட்டில் நிதியை அநாவசியமாக பயன்படுத்தக்கூடாது. இதனால்தான் மாகாணசபை முறைமை குறித்து ஆராயவேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை சலுகைக் கடனாக பெற இலங்கை தீர்மானம் !

சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை சலுகைக் கடன் ரீதியில் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி தலைமையிலான சீன உயர்மட்ட குழுவினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று முன்தினம்(09.10.2020)  பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இதன்போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கடனைப் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இன்றி 10 ஆண்டு காலப்பகுதியில் கடன் திருப்பிச் செலுத்தப்படவுள்ளது என்று திறைசேரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி கொரோனா சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கடன் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் என்றும் கூறுப்படுகிறது.

மன்னாரில் இரண்டு பகுதிகளை முழுமையாக முடக்க இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா உத்தரவு !

மன்னாரில் கொரோனா தொற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மன்னார் நகர் பகுதிகளான பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய இரு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கபட்டுள்ளன.

கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த. வினோதனும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில் மன்னார் பட்டித்தோட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  கட்டட வேலைக்காக, வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்த கட்டட தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்றுநோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரோடு நேரடியாக தொடர்பு கொண்டதாக தெரிவிக்கபடும் 42 பேர் முதற்கட்டமாக PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

இதன் பிரகாரம் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளதாக அறிக்கைகள் வெளியிடபட்டுள்ளன.

“சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் புதிய அரசமைப்பு திருத்தமாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது” – எம்.ஏ.சுமந்திரன் !

புதிய அரசின் இருபதாவது அரசியலமைப்புத் திருத்தம் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசியலமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் புதிய அரசமைப்பு திருத்தமாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்(11.10.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…..,

2ஆவது குடியரசு அரசியல் யாப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை இந்த சட்டமூலம் மீறுகிறது. ஆகையால் இது முற்றாக நிராகரிக்கப்படவேண்டும், சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினோம். அரசியல் அமைப்புச் சட்டத்தில் சில உறுப்புரைகளை மீறுவதாக இருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. நீதிமன்றிலே குறித்த சட்டமூலம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் உயர்நீதிமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமா ? அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமா ? என்பதை மட்டும் தான் நீதிமன்றத்தினால் தெரிவிக்க முடியும் என்று அரசியலமைப்புச் சொல்கிறது.

அரசியலமைப்பில் சர்வஜன வாக்கெடுப்பு இன்றி மாற்றம் செய்யமுடியாத சரத்துக்களில் பிரதானமானது ஜனாதிபதிக்கு சட்டவிலக்கு கொடுப்பது சம்பந்தமானது.  2ஆவது குடியரசு அரசியல் யாப்பின் படி ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பவர் தன்னுடைய பதவிக்காலத்தின் போது, அவருடைய எந்தச் செயலையும் நீதிமன்ற சவாலுக்கு உட்படுத்த முடியாது என்கிற அரண் போடப்பட்டது. அந்தக் காப்பரண் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சற்று விலக்கப்பட்டது. அதன் மூலம் ஜனாதிபதி விடுகின்ற தவறுகள் அல்லது செய்யாமல் விடப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்திலே அடிப்படை மனித உரிமை மனுத் தாக்கல் செய்யமுடியும் . கடந்த ஆட்சிக்காலத்தில் ஆட்சிக் கவிழ்ப்புத் தொடர்பில் மைத்திரிபால சிறீசேன மேற்கொண்ட அறிவிப்பினை நீதிமன்றம் 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தினை அடிப்படையாக் கொண்டே மைத்திரிபாலவுக்கு எதிரான தீர்ப்பினை வழங்கியதாக இருந்தது.

தற்போது 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மீண்டும் 2 ஆவதுகுடியரசு அரசியல் யாப்பின் படி ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பவருக்கு மீண்டும் ஏற்படுத்த முயலும் காப்பரணுக்கு அனுமதி வழங்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதியான தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது என்ற சரத்தினை மாற்றுவதற்கும் நீதிமன்றம் அனுமதி மறுப்புத் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு, ஊடகங்களுக்கு கொடுக்கிற அறிவுரைகளை பின்பற்றப்படவேண்டும் என்றும் பொது உத்தியோகத்தர்களுக்கும் அறிவுரைகளை அவர்கள் பின்பற்றாவிட்டால் அவை குற்றமாகும் என்பதை மாற்றமுடியாது என்றும் அவ்வாறு மாற்றுவதாக இருந்தால் அதுவும் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

20 ஆவது திருத்த உத்தேச சட்டமூலத்தின்படி ஒரு வருடத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாம் என்று முன்மொழியப்பட்டிருந்தாலும் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சிக்காலத்தில் அரைவாசிக்காலத்தின் பின்னரேயே அதாவது இரண்டரை வருடத்தின் பின்னரேயே கலைக்கமுடியும் அதற்கு முன்பதாக கலைப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருந்தபோதிலும் நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் பல விடயங்கள் நீதிமன்றங்களாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.அவற்றில், ஆணைக்குழுக்களுக்கு ஜனாதிபதி நியமனங்கள் செய்கிறபோது அதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபையிலே பெறவேண்டும் என்பது நீக்கப்பட்டு பாராளுமன்ற சபை சில கருத்துக்களைச் சொல்லலாம் என்றும் ஜனாபதி தான் விரும்பியவர்களை நியமிக்கலாம் என்றும் கொண்டுவரப்பட்ட திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதனை மூன்றில் இரண்டு பெரும்பாமை பலத்துடன் நிறைவேற்றலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று தெரிவித்த அவர் அவ்வாறான ஆணைக்குழுக்களை சுயாதீன ஆணைக்குழுக்களாக அழைக்க முடியாது என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது ஜனாதிபதிக்கான அதிகாரத்தை அதிகரிப்பதாகவே அமையும் என்பதால் இதற்கு எங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கை தொடரும்.

அதேவேளை இந்தத் தீர்ப்புக்கு பிறகு அரசாங்கம் என்ன தீர்மானத்தை எடுக்கப்போகிறது என்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற விடயங்களைக் கைவிட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்களை மட்டும் முன்னெடுப்பார்களா? அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்கிற விடயங்களையும் கூட நிறைவேற்றி, அந்தப் பகுதிகளையும் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவார்களா? என்ற தீர்மானத்தையும் அரசாங்கம் அறிவித்த பின்னர் தான் இதனை இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ள முடியும். இந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் குறித்த உத்தேச திருத்த வரைவுக்கு எதிரான நிலைப்பாடு உறுதியானதாகத் தொடரும். எதிரணியில் உள்ள அனைவரும் எதிராக வாக்களிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் எம்.ஏ சுமந்திரன்.

கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 119 பேர் தலைமறைவு – பொலிஸார் தீவிர தேடுதலில் !

கம்பஹா- மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்ட 119 பேரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக சுனில் ஜயலத் மேலும் கூறியுள்ளதாவது, “மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களைத் தேடுவதில் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து செயற்படுகின்றோம். மேலும், கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் வழங்கிய முகவரிகள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று  வரை 5ஆயிரத்து 357 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கொரோனாத் தொற்றுடன் உறுதி செய்யப்பட்டவர்களின் பரிசோதனை அறிக்கைகள் எம்மிடம் உள்ளன.

இதில் 119 பேரைக் கண்டறிய வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழ் மக்களே இலங்கையின் மூத்த குடிகள்’ எனக்கூறியமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் சி.ஐ.டி.அதிகாரிகள் விசாரணை !

முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது, பௌத்த பிக்கு ஒருவர் தெரிவித்த முறைப்பாட்டுக்கமைய சி.ஐ.டி.அதிகாரிகள், சுமார் ஒன்றரை மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சி.ஐ.டி.அதிகாரிகள், விக்கினேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை ஒன்று தொடர்பாக நேற்று (10.10.2020) மாலை இவ்வாறு விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே குறித்த விசாரணைகள் இடம்பெற்றதாக விக்கினேஸ்வரன்  தனியார் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

‘தமிழ் மக்களே இலங்கையின் மூத்த குடிகள்’ என்று வெளியிட்ட அறிக்கை இன நல்லுறவைக் கெடுப்பதாக இருக்கின்றது.  சமாதானத்துக்குப் பங்கம் ஏற்படுத்துகின்றது எனபௌத்த பிக்கு ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த விசாரணை இடம்பெற்றது என விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாகவே சி.ஐ.டி.அதிகாரிகளால் பல கேள்விகள் கேட்கப்பட்டன. எனினும் இவ்விடயத்தில் உறுதியாக இருப்பதாகவும் உண்மையான தகவல் ஒன்றைச் சொல்வதன் மூலம் இன நல்லுறவு பாதிக்கப்படும் என்றோ, சமாதானத்தை அது பங்கப்படுத்தும் என்றோ நினைக்கவில்லை என விசாரணையின்போது  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் ரீதியாக அல்லது வேறு காரணங்களுக்காக இந்த அறிக்கையை வெளியிடவில்லை. என்னிடம் கேள்வி கேட்கப்பட்டால் அதற்குப் பதிலளிப்பது அவசியம். அது எனது பொறுப்பு. அத்துடன் இவ்விடயம் தொடர்பாக எனக்கு ஓரளவு அறிவுள்ளது. அந்த அறிவை மக்களுடன் நான் பகிர்ந்துகொண்டுள்ளேன் என விக்கினேஸ்வரன் கூறியுள்ளார்.

இவ்வாறு விக்கினேஸ்வரனிடம் பெறப்பட்ட சாட்சியம் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு, இறுதியில் அதில் அவரது கையொப்பமும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்கிறது இலங்கை..!

கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுப்பதற்காக இலங்கை சுதேச மருத்துவ அமைச்சால் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சுதேச மருத்துவத்தை ஊக்குவித்தல், கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆயுர்வேத திணைக்களமும் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனமும் இணைந்து நோய் எதிர்ப்புப் பானத்தையும் மருந்துத் தூளையும் அறிமுகப்படுத்தியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்துகள் அனைத்தும் 100 சதவீத உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை எனவும், அவை ‘சதங்கா பனம்’ மற்றும் ‘சுவாதாரணி நோய்த்தடுப்பு பானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளன எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த மருந்துகள் இம்மாதம் 12.10.2020  முதல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். தற்போதைய நிலைமையில் மேற்கத்தேய மருத்துவத்தால் இன்னும் கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருப்பினும், இந்தச் சவாலைச் சமாளிக்கக்கூடிய மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் எமது சுதேச மருத்துவ அமைச்சுக்கு உள்ளது” – என்றார். இந்த மருந்துகள் நேற்று நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சரினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டன.

“இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தின் சில பிரிவுகளை சர்வஜனவாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறாமல் அவற்றை அரசமைப்புத் திருத்தமாக நடைமுறைக்குக்கொண்டு வர முடியாது “ – கசிந்தது உயர்நீதிமன்றின் தீர்ப்பு !

வெளிவரவுள்ள உத்தேச இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தின்3, 5, 14, 22 ஆம் பிரிவுகள் தற்போதைய அரசமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜனவாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறாமல் அவற்றை அரசமைப்புத் திருத்தமாக நடைமுறைக்குக்கொண்டு வர முடியாது என உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

எனினும், அந்தப் பிரிவுகளில் உரிய மாற்றம் செய்துகொண்டு ஏனையவற்றையும் சேர்த்து நாடாளுமன்றத்தில் மூன்றில்இரண்டு பங்கினரின் ஆதரவுடன் இருபதாவது திருத்தத்தை நிறைவேற்றி நடைமுறைக்குக் கொண்டு வரலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானித்திருக்கின்றது.

தேர்தல்கள் தொடர்பான ஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றிய பிரிவு, ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு வழங்கும் சரத்து,நாடாளுமன்றக் கலைப்புக்கான ஜனாதிபதியின் அதிகாரம், தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் ஆகியவை தொடர்பிலேயே சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது.

அரசமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பாக ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்றம் கடந்த வாரம் வரை விசாரணை நடத்தியிருந்தது. இந்த இருபதாவது திருத்தத்துக்கு எதிராகத்தாக்கல் செய்யப்பட்ட 39 மனுதாரர்களின் சமர்ப்பணங்களை செவிமடுத்த நீதியரசர்கள், தமது முடிவை சபாநாயகருக்கும், ஜனாதிபதிக்கும் இன்று காலையில் அனுப்பி வைத்த நிலையில் அது வெளியில் கசிந்துள்ளது.

அடுத்த, நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் அந்தத் தீர்ப்பை சபையில் அறிவிக்கும் போதே அது பொது ஆவணமாகும். எனினும் அதற்கு முன்னர் இன்றே அதன் விவரம் ஊடக மட்டங்களுக்குக் கசிந்துள்ளது.பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,நீதியரசர்கள் புவனேக அலுவிகாரை,சிசர டி ஆப்ரூ, விஜித் கே.மலலகொட ஆகிய நால்வரும் ஒரே தீர்ப்பைச் சேர்ந்து வழங்கியுள்ளனர்.

நீதியரசர் பிரியந்த ஜயவர்த்தனா மட்டும் தேர்தல்கள் தொடர்பான ஜனாதிபதியின் கடமைகள், நாடாளுமன்றக் கலைப்புக்கான ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பான விடயங்களிலும், பிற அம்சங்களிலும் ஏனைய நான்கு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்புக்குத் தாமும் இணங்குகின்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு வழங்குதல் மற்றும் தேர்தல்ஆணையத்தின் விசேட அதிகாரங்களை மட்டுப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்திமக்கள் ஆணை பெறவேண்டும் என்று ஏனைய நீதியரசர்கள் வழங்கிய முடிவு குறித்து அவர் எதுவும் தெரிவிக்காமல் விட்டுள்ளார். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி பின்வரும் சரத்தைகளை நிறைவேற்றுவதாயின் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் அனுமதியுடன் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படவேண்டும்:-

சரத்து 03
அரசமைப்பின் இருபதாவது திருத்தத்தின் சரத்து 03 ஜனாதிபதியின் கடமைகள், பொறுப்புகள் பற்றிப் பேசுகின்றது. அதிலே, தேர்தல் ஒன்றை சுயாதீனமான முறையில் நடத்துவதற்கான சூழலையும் நிபந்தனையையும் பேணுமாறு தேர்தல் ஆணையம் கோரினால் அதை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் என்ற பழைய ஏற்பாடு நீக்கப்படுவதாகஇருந்தது. அதைச் செய்வதாயின் – அந்த ஏற்பாட்டை நீக்குவதாயின் – சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் அனுமதி பெறுவதுஅவசியம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சரத்து 05
ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத்தொடர முடியாது, அவருக்குப் பதவிக்காலம் முழுவதும் சட்ட விலக்களிப்பு உள்ளது என்பது முன்னைய மூல ஏற்பாடு.அவருக்கு எதிராக அரசமைப்பின் 126பிரிவின் கீழ் அடிப்படை உரிமை மீறல்வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட முடியும் என்பது 19ஆவதுதிருத்தம் மூலம் கொண்டுவரப்பட்டது. அதைநீக்குவதையே இருபதாவது திருத்தத்தின் 5ஆவது சரத்து பிரேரித்தது.ஆனால் அதைச்செய்வதாயின் சர்வஜனவாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதிபெறப்பட வேண்டும் என இப்போதுஉயர் நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.

சரத்து 14
நாடாளுமன்றம் ஒன்றை அதன் பதவிக் காலம் ஆரம்பித்து நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கலைக்கமுடியாது என்பது 19ஆவது திருத்த ஏற்பாடாகும். இதனை ஒரு வருடமாகக்குறைக்கும் திருத்தத்தை இருபதாவது திருத்தத்தின் 14ஆம் பிரிவு பிரேரித்தது.அதனை ஏற்க உயர்நீதிமன்று இப்போது மறுத்துவிட்டது.தேவையாயின் இந்தக் கால எல்லையை நாடாளுமன்றத்தின் முழுப்பதவிக்காலமான ஐந்து வருடத்தில்அரைவாசியாக – இரண்டரை வருடங்களாக – மாற்றினால் அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி சட்டமாக்கலாம் என நீதிமன்றம் இப்போதுதீர்மானித்துள்ளது.

சரத்து 22
இது சுதந்திரத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் பற்றிக் குறிப்பது.தேர்தல் அறிவிக்கப்பட்டால், அரச நிர்வாகத்தின் பல மட்டங்கள் மீதான நியாயாதிக்கம் தேர்தல் ஆணையத்தின் கீழ்வரும் என 19 ஆவது திருத்தம் தெரிவித்திருந்தது. அதனை நீக்குவது பற்றிய விடயமே 22 சரத்தாக இருபதாவது திருத்தத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.அதை அங்கீகரிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனைச் செய்வதாயின் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள்அனுமதி பெற வேண்டும் என்று நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு விட்டது

ஏனையவற்றுக்கு அனுமதி

இரட்மைக் குடியுரிமை பெற்றோர் நாடாளுமன்றுக்குத்தெரிவு செய்ய இடமளிக்கும் ஏற்பாடுகள் உட்பட இருபதாவது திருத்தத்தின் ஏனையசரத்துக்களை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்என உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு வழங்கவும் -தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் சிலவற்றை விலக்கவும் -அனுமதி வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் மறுத்திருப்பதும், அதைச் செய்வதாயின் சர்வஜன வாக்கெடுப்பு மூலம்மக்கள் அனுமதி பெறப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியிருப்பதும் முக்கிய விடயங்க ள் என உயர் சட்டவட்டாரங்கள் தெரிவித்தன.