உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“சிறுவர் இல்லத்தில் வசிக்க விருப்பமில்லை.” – காணாமல் போன யாழ்ப்பாணத்து சிறுமிகள் வாக்குமூலம் !

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போன நிலையில் அவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் ஆவர்.

இந்த சிறுமிகள் பருத்தித்துறை பகுதியில் வைத்து மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள், சிறுவர் இல்லத்தில் வசிப்பதற்கு விருப்பமில்லை என தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் விசாரணைகளின் பின்னர் சிறுமிகள் மூவரும் சிறுவர் இல்லத்தில் மீளவும் சேர்க்கப்பட்டனர்.

“அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் செயல்முறை பற்றி அறிந்திருக்கவேண்டும்.” – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

1978ம் அரசியலமைப்பின் 12.1 பிரிவின் கீழ் குறிப்பிட்டுள்ள படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சட்டத்தினால் சமமான பாதுகாப்பு என்ற அரசியலமைப்பு உத்தரவாதத்தை கருத்தில் கொள்வதுடன் பொலிஸ் அதிகாரிகள் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் அடையாளம் மற்றும் செயல்முறையை அங்கீகரிக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெவ்வேறு துறைகளில் உள்ள சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் பால்நிலை மாற்றம் கொண்டவர்கள் மற்றும் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் செயல்முறை பற்றி அறிந்திருக்கவேண்டுமென்பதுடன் யோக்யார்கட்டா கோட்பாடுகளில் பொதிந்துள்ள அவர்களின் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மதிக்கவேண்டும் எனவும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாலின அடையாளத்தின் அடிப்படையில் பால்நிலை மாற்றம் கொண்டவர்களிற்கு எதிராக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாரபட்சம் காட்டலாகாது என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடைப்பிடிக்கவில்லை என்றால் அது அரசியலமைப்பின் 12.2 உறுப்புரையை மீறுவதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளது.

பாலின அடையாளத்தின் காரணமாக பால்நிலை மாற்றம் கொண்டவர்கள் உடல்ரீதியான தாக்குதல்கள் வாய்மொழி துஸ்பிரயோகம் மிரட்டல் மற்றும் அல்லது பிறவடிவங்களிலான வன்முறைகளை பொலிஸ் நிலையங்களில் சந்திக்கின்றனர் என இலங்கையின் மனித உரிமை  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பால்நிலை மாற்றம் கொண்டவர்களிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகித்தால் அது அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் அல்லது மனோரீதியாக சித்திரவதை செய்வதாக அல்லது இழிவாக நடத்துவதாக கருதப்படவேண்டும் என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு இது அரசமைப்பின் உறுப்புரை 11 மற்றும் அமுலில் உள்ள பிறசட்டங்களையும் மீறுவதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் உடலை பரிசோதனை செய்யும்போது அவர்களின் பாலினத்தை அடையாளம் கண்டு அதன்படி செயற்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மனித உரிமை ஆணைக்குழு சந்தேகத்திற்கான நியாயமான காரணங்கள் இருந்தால் அந்த நபரை சோதனையிடுவதற்கு முன்னர் அவரது அடையாள அட்டையை அல்லது பிற செல்லுபடியாகும் ஆவணங்களை சரிபார்க்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

பால்நிலை மாற்றம் கொண்டவர்கள் பொது இடங்களில் களங்கம் பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு அந்த நபர்களை மீறுபவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்து தட்டுப்பாடு – விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு !

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்து தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையும் இந்த விசாரணைகளின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விசாரணைகளுடன் தொடர்புடைய முறைப்பாட்டாளர்களும் பிரதிவாதிகளும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சமூகமளிக்காமையால், இந்த விசாரணைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

விரைவாக தலையீடு செய்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி, காலதாமதமின்றி மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய அரசமைப்பின் மூலமே தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்க முடியும்.” – அநுரகுமார திஸாநாயக்க

“அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய அரசமைப்பின் மூலமே தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்க முடியும்.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை வழங்குமா? என கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதில் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து அவர்,

“தற்போது உள்ள அரசியலைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலமாகவோ அல்லது அதனை மாற்றியமைப்பதன் மூலமாகவோ தமிழர் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வினை வழங்க முடியாது.

அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழருக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்.

தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது, இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் கூறியுள்ளார்.

ஆகவே, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.” என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம்; இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு தண்டனை வழங்க முற்பட்டால் நாம் சவேந்திர சில்வா பக்கமே நிற்போம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சைக்கு தோற்ற நடவடிக்கை!

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் (சிங்கள/தமிழ்) பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டக்கல்லூரியின் அபிவிருத்திக்காக தாம் செயல்பட்டு வருவதாகவும், சட்டக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பால் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 90 லட்சம் ரூபா நட்டம் !

தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு, 90 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக, மக்கள் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளியே செல்லாமையே இந்த வருமான இழப்புக்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நேற்றைய தினம் தனியார் பேருந்துகளின் வருமானம், 15 முதல் 20 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

“திருட்டு, ஊழல், வீண் விரயத்தை ஒழிக்காமல் I.M.F இன் மாயாஜாலத்தால் ஒன்றும் ஆகப்போதில்லை.” – ஜே.வி.பி

ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் மாயாஜாலத்தால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கம்பஹாவில் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் பதினைந்து நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது, ரூபாவின் பெறுமதி குறைப்பு, அரச நிறுவனங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட 15 நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னரே பணம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இலங்கை பெற்றிருந்த போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருளாதாரம் வலுவாக இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருட்டு, ஊழல், வீண் விரயத்தை ஒழிக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் மாயாஜாலத்தைக் காட்டினாலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உற்பத்திப் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும், அரசியல் கலாசாரத்தை மாற்றி குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் !

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது.

வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ஒவ் டெமோகிரசி என்ற அமைப்பின் அனுசரனையில் குறித்த குழுவினர் ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பாக ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்திற்கு எவ்வாறான பாடங்களை கற்றுகொள்ள முடியும் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கை அரசியல் பிரமுகர்களையும், அரசியலில் ஈடுபாடுள்ள தரப்பினரை சந்தித்த ஸ்கொட்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் kenneth j gipson, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனியாக சந்தித்து இதன்போது பேசியுள்ளார்.

கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கையில் இருந்தது போன்றதொரு நிலைமையினையே தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசவுள்ளதாக Kenneth j gipson இதன்போது சாணக்கியனிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார். அத்துடன், இலங்கைக்கு விஜயம் செய்யும்போது தமிழ் தரப்பினரை சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் இரா.சாணக்கியனிடம் தெரிவித்துள்ளார்.

“மக்களுக்கு எதிராக ஒரு தோட்டாவை கூட பயன்படுத்தாதவர் சவேந்திர சில்வா” – அநுரகுமார திஸாநாயக்க

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு தண்டனை வழங்க முற்பட்டால் நாம் சவேந்திர சில்வா பக்கமே நிற்போம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வாவுடன் எமக்கு சில விடயங்களில் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் தோட்டாக்களைப் பயன்படுத்தாமல் இருந்ததை மதிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“மக்கள் எழுச்சியின் போது அதனை ஒடுக்குவதற்குத் தோட்டாக்களைப் பயன்படுத்தாமல் மக்கள் பக்கம் நின்ற முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தேவையான நடவடிக்கையை முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேற்கொள்ளவில்லை என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வா நடவடிக்கை எடுக்காததால் தான், அவர் விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. எனவே நீங்களும் அவ்வாறு இருக்க வேண்டாம் என மற்றைய தரப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கவே அவருக்கு எதிராக நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தோட்டாக்கள் பயன்படுத்தாமை தொடர்பில் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, அவருக்குத் தண்டனை வழங்கப்பட முயற்சி எடுக்கப்படுமானால் நாம் சவேந்திர சில்வாவின் பக்கம் நிற்போம்.

ஏனெனில் அன்று அவர் மக்கள் பக்கமே நின்றுள்ளார். இரத்த ஆறு ஓடுவதைத் தடுத்துள்ளார்” எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – தேடுதலில் பொலிஸார் !

பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் கும்பலை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த நபர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் , அவற்றினை காணொளி பதிவாக கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்து , அதனை காண்பித்து தொடர்ந்து தமது இச்சைகளுக்கு மாணவர்களை பயன்படுத்தி வந்ததுடன் , மாணவர்களிடம் இருந்து பணமும் பெற்று வந்துள்ளனர்.

இவை குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அக்கும்பலை சேர்ந்தவர்களை அடையாளம் கொண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்தவற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.