உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மயானம் அமைப்பது தொடர்பில் சிக்கல் – வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவம் அதிகாலை 12.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நாகர் கோவில் பகுதியில் மயானம் ஒன்றுக்கு சுற்றுமதில் அமைக்கும் முயற்சியின் தொடராக ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து கடந்த திங்கட்கிழமை இரவு பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இதன் போது துப்பாக்கிப் பிரயோகமும் தடியடியும் பொலிஸார் மேற்கொண்டதாக மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பகல் இரண்டு தரப்புகளும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் சமரசத்தில் ஈடுபட்ட நிலையில் மயானத்துக்கான மதில் அமைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் இன்றைய தினம் அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உதிரிப்பாகங்களுடன் அசெம்பிள் செய்யப்பட்ட SENARO GN 125 பைக் !

புத்தம் புதிய SENARO GN 125 மோட்டார் சைக்கிள்கள் இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்துக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.

இலங்கையில் வாகன உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்தல், அசெம்பிள் செய்தல் மற்றும் உற்பத்தி செய்வதற்காக தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான செயற்பாட்டு நடைமுறை (SOP) இந்த மோட்டார் சைக்கிள்களின் அசெம்பிளில் பின்பற்றப்பட்டது.

செனாரோ மோட்டார் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான வடுகேவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக சாவிகள் மற்றும் அதனுடன் இணைந்த ஆவணங்கள் வழங்கப்பட்டன.

யக்கல பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அசெம்ப்ளி தொழிற்சாலையானது SENARO GN 125 மோட்டார் சைக்கிளை 35% பெறுமதி சேர்ப்புடன் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உதிரிப் பாகங்கள் மூலம் உற்பத்தி செய்து வருகின்றது, Senaro Motor Company Pvt. லிமிடெட் நிறுவனம் ரூ. இலங்கை வங்கியின் முழு நிதியுதவியுடன் இந்த முயற்சியில் 1.5 பில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது.

கிட்டிய எதிர்காலத்தில் பெறுமதி  கூட்டுதலை 50% ஆக அதிகரிப்பது மற்றும் 160 க்கும் மேற்பட்ட நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவது இதன் இலக்காகும்.

இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட, SENARO GN 125 மோட்டார் சைக்கிள் தற்போது உள்ளூர் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதிலும், உள்ளூர் நிறுவனங்களுக்கு புதிய ஆற்றலை சேர்ப்பதிலும் ஒரு சக்தியாக உள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் தலைவர் ரொனால்ட் சி பெரேரா (PC), பொது முகாமையாளர் ரசல் பொன்சேகா, பிரதிப் பொது முகாமையாளர் ரோஹன குமார, Senaro மோட்டார் நிறுவனத்தின் பணிப்பாளர் மொஹான் சோமச்சந்திர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கை மக்களிடையே குறைவடையும் மதுபான பாவனை – இலங்கை மதுவரித்திணைக்களம் கவலை !

மது விற்பனையில் வேகமான சரிவு ஏற்பட்டுள்ளதால், 13 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கலால் துறை மற்றும் நிதி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் கலால் வரியை குறைக்க ஆவண செய்யுமாறு நிதி அமைச்சிடம் கலால் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது .
அக்கடிதத்தில் கலால் வரியை 2000 ரூபாவால் குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது. தற்போது மது, பியர் ஆகியவற்றுக்கு 4500 முதல் 5500 ரூபாய் வரை கலால் வரி விதிக்கப்படுகிறது.

தற்போது, ​​மது விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது, மேலும் சில மது உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக மது விற்பனை பாரியளவில் குறைந்துள்ளதாக நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதுகுறித்து கலால் திணைக்கள கூடுதல் கலால் ஆணையர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளதாவது : மதுபான உற்பத்தியாளர்கள் போன்று கலால் திணைக்களமும் கலால் வரியை குறைக்க கோரியுள்ளது , மதுபானத்தின் விலை உயர்வால் , பலர் சட்டவிரோத மதுவை நாடியுள்ளனர். இந்த நிலையைக் கட்டுப்படுத்தும் வகையில் மதுவரியை இயன்றவரை குறைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கைகளின் படி மதுபான விற்பனை, சிகரட் விற்பனை போன்றவற்றால் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை விட இவற்றை பாவிப்பவர்களுக்கான மருத்துவசெலவு எகிறியுள்ளதாக கடந்த ஆண்டு தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில்; மக்கள் மதுபானங்களை நுகரும் திறன் குறைந்துள்ளதாக அரசாங்க திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது.

“நாமல் ராஜபக்ஷ அரசியல் அறிவு இல்லாத பிராய்லர் கோழி” – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத பிராய்லர் கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விபரித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய வீரவன்ச, மக்கள் அவதிப்படும் வேளையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் கிரிக்கெட் விளையாடுவதாக தெரிவித்தார்.

“அவர் ரணிலைப் போன்றவர், அவர் இன்னும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, மக்கள் கோபப்படுவது நியாயமானது, அவர் ஒருபோதும் கற்றுக் கொள்ள மாட்டார், அவர் வளர்ச்சியடையாத பிராய்லர் கோழி”

நாட்டினதும் ராஜபக்ச குடும்பத்தினதும் வீழ்ச்சிக்கு இந்த வாரிசு அரசியலே காரணம். கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித ராஜபக்சவை களமிறக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். டலஸ் அழகப்பெருமதான் அதனை நிறுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார் என்றும் விமல் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் நகைகடை முதலாளியும் – கடையில் பணிபுரிந்த இளம் யுவதியும் தற்கொலை !

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சந்தோஸ் நகைக்கடை மற்றும் நியுமைதிலி நகைக்கடை போன்றவற்றின் முதலாளியும் அவரது நகை கடையில் பணிபுரிந்த இளம் யுவதியும் தற்கொலை செய்துள்ளார்.

இருவரும் சுமார் ஓரிரு மணித்தியால இடைவெளியில் தற்கொலை செய்துள்ளனர்.

நாவாந்துறையை சேர்ந்த 22 வயதான யுவதியொருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்தார். அவர் நகைக்கடையில் பணிபுரிந்தவர். இவர் இன்று நகைக்கடைக்கு வரவில்லை.

மதியமளவில் தனது வீட்டில் தற்கொலை செய்தார்.

அவர் தற்கொலை செய்த தகவல் நகைக்கடையிலிருந்தவர்களிற்கு தெரிய வந்தது. இதையடுத்து, மதியம் சுமார் 2 மணியளவில் வர்த்தகர் தனது வீட்டிற்கு மதிய உணவு அருந்த சென்றார். வீட்டிலேயே தற்கொலை செய்துள்ளார்.

நாவலர் வீதி, ஆனைப்பந்தியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மனைவி, பிள்ளைகள் தற்போது கொழும்பில் தங்கியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இரண்டு மரணங்களிற்கும் தொடர்புள்ளதா அல்லது தனித்தனி சம்பவங்களா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் வீட்டினை சேதப்படுத்தி தீவைத்து ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் பொலிஸராரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸராரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொ. மேனன் தலைமையின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்கென யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி போலி இலக்கத்தகடுகளை மாற்றி பயன்படுத்தியமை தெரியவந்ததுள்ளது.

சில போலி இலக்கத்தகடுகளும் வன்முறைச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் நவாலி, மானிப்பாய், காரைநகர், விசுவமடு பகுதிகளைச் சேர்ந்த 24 தொடக்கம் 26 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்டப்டனர்.

மேலும் மூன்று சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

காட்டிலிருந்து புலிகளின் முன்னாள் உறுப்பினர் மீட்கப்பட்டதாக கூறி லாபமீட்ட முயற்சிக்கிறார்கள் !

மட்டக்களப்பு – தாந்தாமலைக் காட்டுப் பகுதியிருந்து புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக கூறி, பொய்யான செய்திகளை சிலர் வெளியிட்டு அதன்மூலம் இலாபமடைய முயற்சிப்பதாக போராளியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (13.03.2023) மட்டு. ஊடக அமையத்தில் முன்னாள் போராளியின் உறவினர்கள் ஊடக சந்திப்புகளின் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

அண்மையில் மட்டக்களப்பு – தாந்தாமலை காட்டிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியொருவர் மீட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்ததுடன், சிலர் அதனை வைத்து தமது தேவைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர் நடுக்காட்டில் மீட்கப்படவில்லை. தாந்தாமலை, ரெட்பானா எனப்படும் நடு ஊருக்குள் இருந்தே மீட்கப்பட்டார். அவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இருந்தார்.அதன் பின்னர் அதிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுவந்த நிலையில், 2007ஆம் ஆண்டு அவரது மனைவி அவரை பிரிந்து சென்றார். அத்துடன், கொக்கட்டிச்சோலை அரசடித்தீவில் உள்ள எங்களது வீட்டுக்கு வந்து சிறிது காலம் வசித்த பின்னர் தாந்தாமலையில் உள்ள தமது பரம்பரை வீட்டில் வசிக்கப்போவதாக அங்குச் சென்று வசித்து வந்தார்.

அது எங்கள் பரம்பரை வீடாகும். அது காடு அல்ல. ஊருக்கு நடுவில் உள்ள எமது காணியாகும். அங்குச் சென்று அவர் 15 வருடத்திற்கு மேல் வசித்து வருகின்றார்.அவர் சில வருடங்களாகவே இந்த நிலைமையில் உள்ளதாகவும் முன்னர் அவர் தமது காணியில் பயிர்செய்கைகள் முன்னெடுத்து தன்னை தானே பார்த்துவந்த நிலையில், கடந்த சில வருடங்களாக இவ்வாறு இருந்ததாகவும் எனினும் தான் மாதத்திற்கு இரண்டு தடைவ சென்று அவருக்குத் தேவையான உணவுப்பொருட்களை வழங்கிவந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரை கடந்த காலத்தில் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல முயற்சித்தபோதும், அவர் இணங்காத நிலையிலேயே இருந்து வந்ததாகவும் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்லைன் விளையாட்டுக்களில் ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டால் யாழப்பாணத்து பாடசாலை மாணவன் தற்கொலைக்கு முயற்சி !

யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.

உயிர் மாய்ப்பு முயற்சியிலிருந்து தப்பிய மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.

இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று நண்பகல் குறித்த மாணவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்குடன் பாடசாலையிலுள்ள மாடிக் கட்டிடம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்துள்ளான்.

எனினும், பாடசாலைக்கான மின்மார்க்க வயர்களில் சிக்குண்டதன் காரணமாக மாணவன் நேரடியாக நிலத்தில் விழாததால் உயிராபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

சக மாணவர்காளாலும், ஆசிரியர்களாலும் மீட்கப்பட்ட மாணவன் உடனடியாக அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மாணவனின் புத்தகப் பையிலிருந்து தன்னுடைய உயிர் மாயப்பினை நியாயப்படுத்தும் வகையிலான 7 பக்கங்களைக் கொண்ட மிக நீண்ட கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை மற்றும் கணினி விளையாட்டுகளில் ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டின் காரணமாகக் குறித்த மாணவன் அண்மைக் காலமாக உள நெருக்கீட்டுக்கு ஆளாகியிருந்ததாகவும், இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுத் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தினால் காயமேற்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் பெண் போராளி வெளிநாடு செல்ல உதவிய பொலிஸ் அதிகாரி கைது !

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பெண் ஒருவருக்கு, போலி ஆவணங்களுடன் வெளிநாடு செல்வதற்கு உதவியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) கைது செய்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த குறித்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர், வெள்ளவத்தையில் உள்ள முகவரியில் போலி ஆவணங்களை உருவாக்கி வெளிநாடு செல்வதற்கு சந்தேகநபரான கான்ஸ்டபிள் உடந்தையாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“யாழ் மாநகரசபையை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் கோஸ்டி மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.” – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு !

“யாழ் மாநகரசபையை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் கோஸ்டி மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் பேதே அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு இழுபறி நிலைக்கு பலரும் பலதரப்பட்ட கருத்துகள் கூறிவருகின்றனர். ஆனால் அதனை முன்னெடுக்கும் யாழ் மாநகரசபையில் அதிக ஆசனங்களை கொண்டள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் மக்களின் மீது அக்கறை கொண்டு முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அவர்களுக்குள் இருந்த உட்பூசல்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் தமிழரசுக் கட்சியின் பிடிக்குள் இருந்த கட்சிகள் இன்று தனித்தனியாக சென்றுள்ள நிலையில் அவர்களுக்குள் ஒருமித்த தெரிவு இருந்திருக்கவில்லை.

மாநகரின் மீது அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் எமது கட்சியுடன் அதிகார மட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனோ அல்லது அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சி.வி.கே சிவஞானமோ பேசியிருக்க வேண்டும்.

ஆனால் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியோக ஆலோசகருடன் தமது தெரிவான ஒருவரது பெயரை கூறி ஆதரிக்குமாறு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனே பேசியிருந்தார்.

எமது கட்சி ஏற்கனவே தொடர்ந்து கூறிவருது போல மக்களின் நலன்கருதியதாக உள்ளூராட்சி மன்றங்களை யார் ஆட்சி செய்ய முன்வருகின்றார்களோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொண்டுசெல்ல ஆதரவு கொடுத்துவந்திருந்தோம்.

ஆனால் யாழ் மாநகரசபையை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் தொடர்ச்சியாக இருந்துவரும் கோஸ்டி பூசல்களே இன்றைய சூழ்நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

அதேநேரம் ஜனநாயகத்தில் மக்களுக்கு இருக்கின்ற கொஞ்ச நம்பிக்கையும் இவர்களது இவ்வாறான அரசியல் நாகரிகமற்ற கூட்டுச் சுயநலன்களால் கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது  முறைப்படி எமது தலைமையுடன் பேசியிருந்தால் யாழ் மாநகரின் முதல்வர் தெரிவில் இவ்வாறான இழுபறிநிலை ஏற்பட்டிருக்காது என்றார்.