உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் – சுமந்திரன் உறுதி !

நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணை ஒன்றினை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

 

அந்தவகையில் குறித்த பிரேரணையை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுக்கவுள்ளார்.

எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த  முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களும் ஜனாதிபதிக்கு எதிரான குற்ற பிரேரணை தொடர்பான முன்மொழிவுகளை தன்னிடம் வழங்கியதாக சுமந்திரன் தெரிவித்தார்.

இருப்பினும் குற்றப் பிரேரணையை கொண்டுவருவதிலும் அதனை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாக சுமந்திரன் தெரிவித்தார்.

ஆகவே அவர்கள் வழங்கிய முன்மொழிவுகளில் இருக்கும் முக்கிய விடயங்களை இணைத்து நம்பிக்கையிலாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அவர் மேலும் கூறினார்.

அடுத்த மூன்று வருட ஆட்சியின் பிரதான திட்டங்கள் என்ன..? – ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் கோட்டா பாய ராஜபக்ஷ !

எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நீர் வழங்கல் திட்டங்களின் கொள்ளளவையும் தரத்தையும் மேம்படுத்தி, நாடு முழுவதும் புதிய நீர் திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜப்பானின் குமமோட்டோவில் இன்று (23) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட 4வது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

“நிலையான வளர்ச்சிக்கான நீர்: உகந்த பயன்பாடுகள் மற்றும் அடுத்த தலைமுறை” என்ற தலைப்பில் இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில், ஜப்பான் உட்பட ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 48 நாடுகளின் அரச மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 2017 இல் மியான்மாரில் நடைபெற்ற 3வது ஆசிய-பசுபிக் உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட “யாங்கூன் பிரகடனத்தில்” அளிக்கப்பட்ட பரிந்துரைகளை எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் பல்வேறு நீர் பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.

உச்சிமாநாட்டின் முன்னேற்றம் மார்ச் 2023 இல் நடைபெறும் ஐ.நா நீர் உச்சிமாநாட்டில் “குமமோட்டோ பிரகடனமாக” அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கும்மோட்டோ பிரகடனம் என்பது நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உயர்மட்ட தலைவர்களின் பங்களிப்புடன் கட்டியெழுப்பப்படும் அபிலாஷைகளின் தொகுப்பாகும். “இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நாம் நமது அறிவை ஒன்றிணைக்க முயற்சி செய்ய வேண்டும். ” என்று ஆசிய-பசுபிக் நீர் உச்சி மாநாட்டின் தலைவர் யோஷியுகி மோரி குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகள், சுகாதாரம் மற்றும் வறுமை போன்ற சமூகத்தின் பல சவால்களுக்கு நீர் பிரச்சினை அடிப்படையாக உள்ளன. அண்மைக்காலங்களில் நீர் தொடர்பான பேரழிவுகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன. ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில், கடந்த 30 ஆண்டுகளில் நீர் தொடர்பான பேரழிவுகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன. வறுமையை ஒழிக்க தண்ணீரைப் பயன்படுத்தி உள்நாட்டு சுகாதார சூழலை மேம்படுத்துவது அவசியம். ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் எங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம், ”என்று ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய் பரவிய போதும், கடந்த இரண்டு வருடங்களில் ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் 50% சதவீதத்திற்கும் அதிகமாக நீர் இணைப்புக்களை பொதுமக்களுக்கு வழங்க முடிந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று நீர் சுழற்சி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான நீர் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் விளைவாக வளங்களை பெற்றுக்கொள்வதற்குள்ள வாய்ப்பு தடைப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த இரண்டு வருடங்களில், தமது அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சிகளின் கொள்கையான பங்கேற்பு அபிவிருத்திக் கோட்பாட்டைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கியதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்த தீர்மானமிக்க காலகட்டத்தில் நமது பொருளதார மீட்சிக்கு உதவும் எமது நிலையான முயற்சிகளுக்கான முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றம், நிதியுதவி, விரிவான அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றுக்காக வழங்கப்படும் ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது என்பதை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் சஞ்சீவ் குணசேகர அவர்கள் ஆரம்ப விழா மற்றும் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

பிரதமர் வீட்டின் முன்னால் அணிதிரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் – திண்டாடும் பொலிஸார் !

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெரும் எண்ணிக்கையிலான பல்லைக்கழக மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பமாகி, பஞ்சிகாவத்தை, புஞ்சி பொரள்ளை, பொரள்ளை வழியாக, பிரதமரின் இல்லம் அமைந்துள்ள விஜேராம நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, பிரதமரின் இல்லத்தை மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஹேக் செய்த செய்த தமிழ் ஈழ சைபர் படை எனும் குழு !

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ சைபர் படை தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் குழுவினால் இவ்வாறு குறித்த இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி (http://www.health.gov.lk/) எனும் இணையத்தளத்தின் மீதே இவ்வாறு  சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

சர்வதேச தடகளப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 25 வயது இளம்பெண் வீராங்கனை தற்கொலை !

பெண்களுக்கான 400 மீற்றர் தடை ஓட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வென்ற கௌசல்யா மதுஷானி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குளியாப்பிட்டிய, தும்மலசூரிய பகுதி​யை சேர்ந்த 25 வயதுடைய இவர், சர்வதேச தடகளப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

அவர் தனது வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் 2014 ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 400மீ தடகள ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம், 2016 தெற்காசிய விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம், தேசிய 400மீ தடகள ஓட்டம் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் மற்றும் 13வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம், 13வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வெற்றி பெற்றுள்ளார்.

யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவி தற்கொலை !

பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் தங்கியிருந்த  பல்கலைக்கழக மாணவியே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.

உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் இது வரை தெரியவராத நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு – அவசரமாக தேவைப்படும் 53 வீதமான மருந்துகள் !

யாழ்.போதானா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைக்கு பெரும் தட்டுப்பாடுகள் நிலவுவதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளவிய ரீதியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையிலும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

போதனா வைத்தியசாலையில் 73 அத்தியாவசிய மருந்துகள், சத்திர சிகிச்சைக்கு தேவையான 13 மருந்துகள், அவசரமாக தேவைப்படும் 53 வீதமான மருந்துகள் மற்றும் ஆய்வு கூடத்திற்கு தேவையான 6 மருந்துகள் என்பன இல்லாது உள்ளதாகவும், வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காலிமுகத்திடலில் தொடரும் போராட்டம் – நதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு !

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்ற பொலிஸாரின் மனுவை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களிற்கு தலைமை தாங்கும் 16 பேரின் பெயர் விபரங்களை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் காலிமுகத்திடலில் கூடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களிற்கும் ஆர்ப்பாட்டங்களை எதிர்ப்பவர்களிற்கும இடையில் மோதல்கள் இடம்பெறலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக 16 தனிநபர்களிற்கு எதிராக உத்தரவினை பிறப்பிக்கவேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர். வன்முறைகள் இடம்பெறுவதற்கு முன்னர் அல்லது பொது குழப்பம் இடம்பெறுவதற்கு முன்னர் உத்தரவினை பிறப்பிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

எனினும் வன்முறைகள் நிகழ்ந்தால் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என நீதிபதி தெரிவித்தார்.

“ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம்.” – பொலிஸ் மா அதிபர் உறுதி !

எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் என பொலிஸ்மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம்  தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.

எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் என பொலிஸார் உறுதியளித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பொலிஸ்மா அதிபர் நேற்றையதினம் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும் சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற அனைத்து தகவல்களையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸார் கையளித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் நிமல் கருணாசிறி தெரிவித்தார்.

இலங்கையில் தொடரும் மருந்து தட்டுப்பாடு – உதவிக்கரம் நீட்டும் ஆசிய அபிவிருத்தி வங்கி !

இந்நாட்டுக்கு தற்போது தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

அதன்படி, 21.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.