உள்நாட்டுச் செய்திகள்

Friday, October 22, 2021

உள்நாட்டுச் செய்திகள்

கொரோனா தொற்றுள்ள இளைஞர் வீட்டிலேயே தற்கொலை – இலங்கையில் கொரோனா பலி 22 ஆக உயர்வு !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதுடைய ஆண் ஒருவரே நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  வைத்தியர் அசேல  குணவர்த்தன தெரிவித்துள்ளதாவது, “குறித்த இளைஞர் தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது, அவருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாறு உயிரிழந்தவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அப்பகுதிக்கு பொறுப்பான பொதுசுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் 23வயது வாலிபன் தூக்கிட்டு தற்கொலை !

யாழ்ப்பாணம் – மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த நபர் நேற்று(01.11.2020)  காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

23 வயதான சி.வினோதன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவருடைய மனைவி வெளிநாடொன்றில் வசித்து வரும் நிலையில் இச் சம்பவம் மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதிகளில் தற்கொலைகளும் வேகமாக பரவும் நோய்களை போல மலிந்து போய்விட்டது. காதல் தோல்வி, குடும்பப்பிரச்சினை, பெறுபேறுகள் போதாமை, கடன் பிரச்சினை என பல காரணங்கள் இந்தத்தற்கொலைகளின் பின்னணியாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளில் தொடரும் தற்கொலைகள் தொடர்பான பின்னணியை மையப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரையை காண இங்கே அழுத்தவும்

( http://thesamnet.co.uk/?p=65967 )

“இருநாட்டு மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு  தமிழக முதல்வரை சந்தித்து தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்” – அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா !

“இருநாட்டு மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு  தமிழக முதல்வரை சந்தித்து தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில்தெருச் சண்டைகள் போல் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் கடலில் சண்டை ஏற்படுவதை தடுக்க வேண்டும். இலங்கை இந்திய மீனவர்களின் சந்திப்புத் தொடர்பில் இந்தியாத் தரப்புகள் பேசுவதற்கு இரு திகதிகளை தருமாறு தூதரகம் ஊடாக என்னை தொடர்பு கொண்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா சூழ்நிலையினால் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதைத் தடுக்கும் முகமாக வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்த தீர்மானித்துள்ளோம்.

எதிர் வரும் அமைச்சரவையில் குறித்த விடையம் தொடர்பில் கலந்துரையாடி திகதியை உறுதிப்படுத்த முடியும் என நினைக்கிறேன். அத்துடன் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் இடம்பெற்றுவரும் நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் நிலவரங்கள் சிலவேளை சந்திப்புகளை தாமதப்படுத்தலாம். ஆகவே நான் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின்படி தமிழக முதல்வரை சந்தித்து இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை காண்பதற்கான முழுமையான முயற்சிகளை மேற்கொள்வேன் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“தம்பட்டமடிக்காது தக்க தருணத்தில் அரசுக்கு கை கொடுத்த எமது சமயோசித அரசியல் வெற்றி பெறும் நாட்கள் வெகு தொலைவிலில்லை” – 20க்கு ஆதரவளித்தமை தொடர்பாக பா.உ.நஸீர் அஹமட்!

“தம்பட்டமடிக்காது தக்க தருணத்தில் அரசுக்கு கை கொடுத்த எமது சமயோசித அரசியல் வெற்றி பெறும் நாட்கள் வெகு தொலைவிலில்லை” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை பற்றி தெளிவூட்டும் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ள நஸீர் அஹமட்  அதில்  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,

“எதையும் நிபந்தனையாக முன்வைக்காமல் இருபதை ஆதரித்ததாக சிலர் எம்மை விமர்சிக்கின்றனர். பேரினவாதத்தின் விழிப்புக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் சார்ந்த சில நலன்களை வியூகத்தின் வடிவிலே சாதிக்க வேண்டியுள்ளது.

இதனால்தான் இன்று வரைக்கும் மௌனியாகச் செயற்படுகிறோம். காலப்போக்கில் சமூகநலன்கள் கை கூடுகையில், எங்களால் பேசப்பட்டவைகள் எவை என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ளும். இவ்வேளையில் விமர்சிக்கும் வீணர்கள் வாயடைத்து வெட்கிக்கப் போவது உறுதி.

பேரம் பேசும் பலம் இழந்துள்ளதாகக் காட்டப்பட்ட அரசியல் பின்புலங்களிலும் அவ்வாறு பலம் குன்றவில்லை என்பதை நொடிப் பொழுதில் நிரூபித்தவர்கள் நாங்கள்.காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் காய்களை நகர்த்த வேண்டிய நிலைமைக்கு சிறுபான்மையினர் தள்ளப்பட்டுள்ளதை இந்த வீணர்கள் விளங்காதுள்ளமை தான் எமக்குள்ள கவலை. தம்பட்டமடிக்காது தக்க தருணத்தில் அரசுக்கு கை கொடுத்த எமது சமயோசித அரசியல் வெற்றி பெறும் நாட்கள் வெகு தொலைவிலும் இல்லை.

கொரோனா வைரஸின் சூழலில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சமய நம்பிக்கைகள் மீதான கெடுபிடிகளைக் கருத்தில் கொள்ளாமலும் நாங்கள் இருபதை ஆதரிக்கவும் இல்லை.அல்லாஹ்வின் உதவியால் எமது வியூகங்கள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில்” குறிப்பிட்டுள்ளார்.

“அரசு மக்களை அமைதியாகச் சாகடிக்க அரசு முயல்கின்றதா..? – நளின் பண்டார கேள்வி ! –

“தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவிடம் காணப்பட்ட இரக்க உணர்ச்சியை தற்போது காணமுடியவில்லை“ ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார என குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (01.11.2020) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தற்போது இரக்க குணமே இல்லை. அரசு கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவுகின்ற நிலையில் அரசு பொறுப்புணர்வில்லாமல் நடந்துகொள்கின்றது. தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவிடம் காணப்பட்ட இரக்க உணர்ச்சியை தற்போது காணமுடியவில்லை.

அமைச்சர்களும் பிரதிஅமைச்சர்களும் தங்களுக்கு வாக்களித்த மக்களைப் புறக்கணிக்கின்றனர். கொரோனா நிதியத்திற்கு உலக வங்கி வழங்கிய நிதி குறித்த ஆவணங்கள் எவையும் இல்லை.

அரசிடம் தற்போது உரிய திட்டங்கள் எதுவுமில்லை. அது தனது கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டது.

கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் இன்று சமூகத்துக்குள் ஊடுருவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால், அரசோ நாட்டை முழுமையாக முடக்காமல் மௌனம் காக்கின்றது. இந்தநிலையில், மக்களை அமைதியாகச் சாகடிக்க அரசு முயல்கின்றதா? என கேள்வி எழுப்பியுள்ளார் நளின்பண்டார.

தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கியுள்ள விசேட சலுகை !

இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் எதிர்வரும் 9ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பினும் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக உரிய திகதியில் பாடசாலைகளை மீள திறக்க முடியாது போகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கேட்டுள்ளதாகவும் சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தாமதடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“122 பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு மாணவர்களும் இத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். மாணவர்களின் செயற்பாடுகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதிருக்க மீண்டும் தொலைக்கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திய வகையில் அரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வசதிகள் குறைந்த கிராமிய பிரதேச மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்கும் வகையில் விசேட வேலைத் திட்டத்தை தயாரிப்பதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 9 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட இருந்த போதிலும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையை ஒக்டோபர் 5ஆம் திகதி வழங்கப்பட்டது. உயர் தரப்பரீட்சை முடிவடைந்த்தும் மூன்றாம் தவணை நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 23 வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை இணையம் மூலமாக கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. அதே நேரம் இணையவழியில் கற்பதற்கான தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத மாணவர்கள் சாதாரண தொலைபேசி ஊடாகக் கற்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது . சாதாரண தொலைபேசியில் 1377 என்ற இலக்கத்தை அழுத்தி உரிய தொடர்பு மொழியை தெரிவு செய்து கொண்டு , திங்கள் தொடக்கம் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மாணவர்கள் தமக்குத் தேவையான பாட விளக்கங்களையும் ஐயங்களையும் கேட்டறிய முடியும் எனவும் இதற்காக தொலை பேசிக் கட்ட ணம் எதுவும் அறவிடப்படமாட்டாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது . இக் கற்றல் செயற்பாடுகள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன . இதேவேளை இணையவழி கற்றல் நடவடிக்கைகள் 50 சதவீதமான மாணவர்களைச் சென்றடையவில்லை என்ற தகவல்கள் கண்டறியப்பட்டதன் அடிப்படையில் சாதாரண தொலைபேசியில் கற்கின்ற வசதி செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இந்த வருடம் யானைகள் தாக்கி 50க்கும் மேற்பட்டோர் இறப்பு – மனிதரின் துப்பாக்கிச் சூட்டினால் 300க்கும் மேற்பட்ட யானைகள் பலி !

இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் காட்டு யானைகள் தாக்கி 52 பேர் உயிரிழந்ததாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் பல்வேறு காரணிகளினால் 372 யானைகள் இதுவரையில் உயிரிழந்ததாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் மாதம் ஒன்றுக்கு 700 காட்டு யானைகள் பிறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 150க்கும் அதிகமான காட்டு யானைகள் குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே பல்வேறு சுகாதார காரணிகளால் உயிர் இழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 300க்கும் அதிகமான யானைகள் மனிதரின் துப்பாக்கிச் சூட்டிலும் வலைகளிலும் சிக்கி உயிர் இழக்கின்றன.

இந்தநிலையில், நாட்டில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி 6 000 வரையான யானைகள் இருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தாய் கொரோனா தொற்று பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்டதால் 25 வயது மகன் தற்கொலை !

கோப்புப்படம்

கொழும்பில் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய தாயாரை சுகாதார அதிகாரிகள் அழைத்து சென்றதால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய 25 வயதான மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹோமாகம தோலவத்த பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாயார் மஹரகமவில் உள்ள மீன் கடையில் மீன் கொள்வனவு செய்திருக்கிறார்.அந்த மீன் விற்பனை நிலையத்துடன் தொடர்பான பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பெண்ணும் களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது மன அழுத்தத்திற்கு உள்ளாகிய அவரது விசேட தேவையுடைய மகன் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகிறார் மாவை.சேனாதிராஜா !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை நியமிக்க பங்காளிக் கட்சிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று(31) யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலமையகத்தில் கூடி ஆராய்ந்தனர்.

இதன்போதே மேற்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இந்த முடிவை உடனடியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா, சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம் ஆகியோரும் புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், க.சிவநேசன் ஆகியோரும் ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் இந்த கலந்துகொண்டனர்.

இதன்போது, தேர்தல்கள் திணைக்களத்தால் அண்மையில் விடுக்கப்பட்ட அறிவித்தல் ஒன்றை சுட்டிக்காட்டிய சீ.வீ.கே.சிவஞானம் கூட்டணி கட்சிகள் அனைத்தும் செயலாளர்களை அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்தே, பங்காளிக் கட்சிகள் மாவை சேனாதிராஸாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது.

“வடக்கு மாகாண மக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்” – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா.

“வடக்கு மாகாண மக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் கிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைத்தியசாலையின் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“சமூகப் பரவல் என்பது அதன் அர்த்தத்தின்படி என்னவென்றால் தொற்றானது எவரிடமிருந்து ஒருவருக்குத் தொற்றியது என்பது தெரியாத நிலையாகும். இதுவரையில் நோயாளியாக இனங்காணப்படும் ஒவ்வொருவரும் இன்னொரு நோயாளியுடன் ஏதோவகையில் தொடர்புபட்டவர்களாகவே உள்ளனர். இதனால்தான் வைத்தியர்கள் இதுவரை சமூகப் பரவல் இல்லை என்று கூறுகிறார்கள். அதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சமூகப் பரவலா அல்லது தொடர்புகள் உள்ளதா? இல்லையா? என்பது இங்கு முக்கியம் அல்ல. எமது நாட்டில் தற்போது கொரனாத் தொற்று உள்ளதால் நாம் அனைவரும் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும்.

நாட்டு மக்கள் அனைவரும் சுகாதாரப் பிரிவினரது அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் கொரொனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தமது பாரிய பங்களிப்பை வழங்க வேண்டும்.

சுகாதார அறிவுறுத்தல்கள் மிகவும் இலகுவானவை. அதாவது முகக்கவசம் அணிதல், கைகளை நன்கு கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியனவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். அத்துடன் பெருமளவு மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வதும் முக்கியமாகும். பொதுமக்கள் இதனை நிச்சயம் கடைப்பிடிப்பார்கள் என நான் நம்புகின்றேன்.

வடக்கு மாகாண மக்கள் இந்தச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களை நிச்சயமாக நாம் பாராட்டுகின்றோம். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் சில நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்களுக்கு எம்மால் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறையினர் தெளிவாக மக்களுக்கு வழிகாட்டல்களை மேற்கொண்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். அந்த வழிகாட்டல்களை அனைவரும் கடைப்பிடிக்கும் பட்சத்தில் இந்தப் பிரதேசத்தில் கொரோனா நோயே இருக்கமாட்டாது” எனவும் அவர் தெரிவித்தார் .