உள்நாட்டுச் செய்திகள்

Friday, October 22, 2021

உள்நாட்டுச் செய்திகள்

துமிந்த சில்வா விடுதலை மனுவில் இட்ட கையெழுத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார் மனோகணேசன் !

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை வாபஸ் பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (29.10.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 2016 செப்டம்பர் 8 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அரச தரப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தீர்மானித்திருந்த குறித்த மனுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர்.

ஒக்டோபர் 20 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட இந்த மனு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் செல்லும் போது, துமிந்த சில்வாவின் விடுதலையானது உறுதிப்படுத்தப்படும் என்றும் ஆங்கில ஊடகம் கடந்த வாரம் அறிக்கையிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்ட மனோ கணேசன் துமிந்த சில்வாவை போன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை சிறையில் செலவிட்டுள்ளதாக கூறினார். ஆகவே அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்களின் குடும்பங்களுடன் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அந்த மனுவில் கையெழுத்திட்டதாக குறிப்பிட்ட மனோகணேசன் இப்பொழுது இதனை வாபஸ் வாங்குவதாக குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் !

உலகின் சுமார் 200க்கும் மேற்பட்ட ககுதிகளில் இந்த வருட ஆரம்பம் முதல் பரவி உலக நாடுகளை அச்சுறுத்திவரும்  அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 112ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் மக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இலங்கையிலும் அதன் பாதிப்பு தற்போதைய காலங்களில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் மாத்திரம் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 205ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் காரணமாக நாட்டில் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

20ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர் – இன்று முதல் அமுலுக்கு வருகிறது 20 !

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி இன்று முதல் 20 ஆவது திருத்த சட்டம் அமுல்படுத்தப்படும்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் கடந்த 21, 22 ஆகிய தினங்களில் இடம்பெற்றதையடுத்து 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, திருத்த சட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு 2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன், ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் வழங்கப்பட்டன.

அதனை அடுத்து, குழு நிலையில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்து மீது எதிர்க்கட்சியினரால் வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன் அதுவும் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இங்கு ஆதரவாக 157 வாக்குகள் கிடைக்கப்பெற்றமை சிறப்பம்சமாகும்.

குழு நிலையின்போது முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உட்பட 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் மீதான மூன்றாவது வாசிப்பும் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.  இதன்போது ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் வழங்கப்பட்டன.

அதற்கமைய, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் கடந்த 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

“20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த 09 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியிலிருந்து நீக்கியது ஐ.ம.சக்தி !

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை வழங்கியிருந்தனர்.

டயனா கமகே, அருணாசலம் அரவிந்த குமார்,இஷாக் ரஹ்மான்,பைசல் காசிம்,H.M.M.ஹாரிஸ், M.S.தௌபீக், நசீர் அஹமட்,A.A.S.M. ரஹீம்,M.M.M. முஷாரப் ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவளித்தனர்.

இந்த உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வரிசையிலிருந்து நீக்கி, ஆளும் கட்சியின் ஆசன வரிசையில் ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சியின் பிரதம கொறடா கோரிக்கை விடுத்துள்ளார்.

“அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இனங்களிடையே துவேசத்தை விதைக்கிறார்” – தவராசா கலையரசன் குற்றச்சாட்டு !

“அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இனங்களிடையே துவேசத்தை விதைக்கிறார்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றஞசாட்டியுள்ளார்.

நேற்று பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை அவர் முன்வைத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

20ஆவது திருத்தம் என்பது நிறைவேற்று அதிகார நடைமுறையை பெற்றுக் கொடுக்கிறது. இதன்மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவிழந்து செல்கின்றது. 19ஆவது சீர்திருத்தத்தில் இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவான நியாயமான பல செயற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவான ஒரு காரணியாக இருந்தது.

20 ஆவது சீர்திருத்த நடைமுறையில் எமது தமிழ்தேசிய தலைமைகள் நிதானமாக செயல்பட்டு இருக்கிறார்கள். 20வது சீர்திருத்தத்தை எமது தலைவர்கள் யாரையும் துன்புறுத்தி செயற்பட வைக்கவில்லை. இதனை இதற்கு முதலும் செய்ததில்லை இனி வரும் காலத்திலும் செய்யப் போவதுமில்லை. சீர்திருத்தத்தில் உள்ள பாதக சாதக தன்மைகளை எடுத்துரைக்கும் சக்தியாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் இருந்துள்ளது.

20 ஆவது திருத்தத்தை மூவின மக்களும் எதிர்த்த நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து இருப்பது மன வேதனைக்குரிய விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களையும் தமிழர்களுடன் சேர்த்து சிறுபான்மை இனம் என்று பேசி வந்ததும் அவ்வாறு பேசிய தமிழ் தேசிய தலைவர்களுக்கு 20ஆவது திருத்தத்தை ஆதரித்து சிறந்த ஒரு பதிலடி கொடுத்துள்ளனர். இனியாவது தமிழ் தேசிய தலைவர்கள் திருந்த வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இனங்களிடையே துவேசத்தை விதைத்து பிரிவினைவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். அவர் திருந்த வேண்டும். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 18வது சீர்திருத்தத்தை எதிர்த்தது, 19 ஐ ஆதரித்தது , 20 ஐ எதிர்க்கின்றது இதனை நன்கு ஆராய்ந்த பிறகு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் புதிய தொற்றாளர்கள் தொகை – கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை 9ஆயிரத்தை தாண்டியது !

இன்றைய தினம் நாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த 211 பேருள் , தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள ஒன்பது பேருக்கும் மற்றும் முன்னைய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 202 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று பரவியுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 140 பேர் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 81ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நான்காயிரத்து 75 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் நான்காயிரத்து 987 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, நாட்டில் 19 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான அழுத்தத்தை வழங்கவே துமிந்தசில்வா விடுதலை மனுவில் கையெழுத்திட்டேன்” – பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்

துமிந்தசில்வாவை விடுதலை செய்வதற்காக கோரிய மனுவில் கையெழுத்திட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் மீது பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இது பற்றி மனோகணேசன் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஏன் குறித்த மனுவில் கையெழுத்திட்டேன் என்பது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை மனதில் வைத்தே துமிந்தசில்வாவை விடுதலை செய்யக் கோரும் மனுவில் கையெழுத்திட்டேன். துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான வலுவான அழுத்தத்தினை கொடுக்கலாம். அதற்கான ஒரு சந்தர்ப்பமகக கருதியே அதில் கையெழுத்திட்டேன்.

தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்த நினைத்தேன். குறித்த மனுவில் கைச்சாத்திடும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

அது சுயாதீன ஆவணம் – எதிர்க்கட்சியில் உள்ள பலர் கைச்சாத்திட்டுள்ளனர். எங்கள் கட்சியை சேர்ந்தவர்களும் அதில் கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.

“இலங்கையை அமெரிக்காவின் இந்து சமுத்திர இராணுவ ஆதிக்கத்தின் பங்குதாரராக இணைக்கும் திட்டமே அமெரிக்க இராஜங்க செயலாளரின் வருகையாகும்” – அனுரகுமார திசாநாயக்க

“இலங்கையை அமெரிக்காவின் இந்து சமுத்திர இராணுவ ஆதிக்கத்தின் பங்குதாரராக இணைக்கும் திட்டமே அமெரிக்க இராஜங்க செயலாளரின் வருகையாகும்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(28.10.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அமெரிக்கா தனது இராணுவ பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  இலங்கையை இந்து சமுத்திர இராணுவ ஆதிக்கத்தின் பங்குதாரராக இணைக்கும் திட்டமே அமெரிக்க இராஜங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

இலங்கை கடந்த காலங்களில் அமெரிக்காவுடன் இராணுவ மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தது. அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்காவுடனான எக்‌ஸா உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். எனினும் இலங்கை இதுவரை சர்வதேச போர் அமைப்புக்களுடன் எந்தவொரு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் இராணுவ அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கியதில்லை.

இந்த நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது. எனவே சதித்திட்டங்களுடான இராணுவ ஒப்பந்தங்களில் கைச்சாத்திட வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முற்றாக முடக்கப்படுகின்றது மேல்மாகாணம் – கொழும்பு அபாயநிலையில் என்பதை ஏற்றுக்கொண்டார் ஜெனரல் சவேந்திர சில்வா !

மேல் மாகாணம் முழுவதும் நாளை(29.10.2020) நள்ளிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணத்தில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அந்த பிரதேசங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு நகரின் தற்போதைய நிலை தொடர்பில் செய்திளார்கள் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிடம் வினவிய போது தெற்கு பதிலளித்த அவர்,

“கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாயநிலை உள்ளமை வெளிப்படையானது. ஆனால் அதுகுறித்து உறுதியாக எதனையும் கூற முடியாதுள்ளது. கொழும்பின் சில பகுதிகளில் 7 நாட்கள் வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தொற்று நோயியல் நிபுணர்கள் வழங்கியுள்ள தரவுகளின் பிரகாரம் இன்னமும் வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை“ – அமைச்சர் ரமேஷ் பத்திரன

கொவிட்-19 வைரஸ் இலங்கையில் சமூகப் பரவலடைந்துள்ளதாக நிபுணர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்ததுள்ளார்.

முழு நாட்டையும் முடக்கி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு அரசாங்கம் தயாராகவில்லை. அதேபோன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கும் எதிர்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்களுக்கும் பொருளாதார சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமெனவும் அவர் கூறினார்.

அத்துடன், நாட்டில் நிரம்பல் ஏற்பட்டுள்ள மீன் வகைகளை கொள்வனவு செய்து டின் மீன் உற்பத்திகளை அதிகரிக்க உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரமேஸ் பத்திரன இவ்வாறு கூறினார். ஊடகச்சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில்களையும் வழங்கியுள்ளார்.

கேள்வி : – வைத்தியசாலைகளில் கட்டில்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளரே?

பதில் :- இலங்கையில் தற்போதைய சூழலில் 4,468 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோயாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை வேறாக பராமரிப்பதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையங்களாயின் அங்கு விசேட கண்காணிப்பின் கீழ் அவர்களை பேணவும் வைத்தியசாலைகளில் விசேட சிகிச்சை பிரிவுகளை உருவாக்கமும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி :- நாடு முழுவதும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறிப்படுகின்றனர். இது ஒரு கொத்தணியா அல்லது வைரஸ் சமூகப் பரவலைடைந்துள்ளதா?

பதில் :- நோயை கட்டுப்படுத்துவது மற்றும் ஒழிக்கும் செயற்பாடுகள் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம்தான் அரசாங்கம் செயற்படுகிறது. தொற்று நோயியல் நிபுணர்களின் வழங்கியுள்ள தரவுகளின் பிரகாரம் இன்னமும் வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை.

கேள்வி :- கொவிட் 19 க்கு உள்ளானவர்களுடன் முதல் தொடர்பை பேணியுள்ளவர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு அரசாங்க அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துவிட்டதா?

பதில் :- தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துள்ளமை தொடர்பிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமையால்தான் முதல் தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலின் வேகம் தீவிரமாக அதிகரித்துள்ளது. முதல் முறை பரவலிலிருந்த வைரஸையும் விட தற்போது பரவியுள்ள வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாகவுள்ளது. அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். சுகாதார வழிக்காட்டல்களை முழுமையாக பின்பற்றுவதும் அவசியமாகும்.

ஆகவே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுகாதார ஆலோசர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.