உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஆரம்பம் – அரசியலில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் விசேட அவதானம் !

பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த காலத்துக்குள் பட்டம் பெறாமல் இருந்தால் அவர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்குவது தொடர்பான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவிக்கையில்,

சில மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி 9 முதல் 10 வருடங்கள் வரை பரீட்சைக்குத் தோற்றாமல் அரசியல் பணியை மேற்கொள்வதனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் கணக்கெடுப்பை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பல்கலைக்கழக வேந்தர்களின் உதவிகளையும் பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் – வடக்கில் 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தி !

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 231,982 பரீட்சார்த்திகள் க.பொ.த உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

அவர்களில் 10,863 பேர் அனைத்துப் பாடங்களிலும் ´ஏ´ சித்தி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 498 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் இருந்து 16 ஆயிரத்து 564 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையிலேயே 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தியை பெற்றுள்ளனர்.

இதில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 3 ஆயிரத்து 9 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 193 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தியடைந்துள்ளனர்.

வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 56 பேருக்குக்கும், வடமராட்சி கல்வி வலயத்தில் 56 பேருக்கும், வலிகாமம் கல்வி வலயத்தில் 53 பேருக்கும், கிளிநொச்சி கல்வி வலயத்தில் 49 பேருக்கும்,முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 47 பேருக்கும், மன்னார் கல்வி வலயத்தில் 39 பேருக்கும், தென்மராட்சி கல்வி வலயத்தில் 36 பேருக்கும், வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 12 பேருக்கும் துணுக்காய் கல்வி வலயத்தில் 9 பேருக்கும் தீவக கல்வி வலயத்தில் ஒருவருக்கும் 9 ஏ சித்தி கிடைத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 03 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ள வடக்கின் தமிழ் அரசியல் கட்சிகள் !

புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு கிழக்கில் அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் உள்ளிட்ட 03 யோசனைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வடக்கின் தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (25) பிற்பகல் கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், எஸ். ஸ்ரீதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

அந்த கலந்துரையாடலில் வடக்கு கிழக்கில் காணி கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, சுவீகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக தமிழ் மக்களுக்கு வழங்குதல், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது உள்ளிட்ட 3 யோசனைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

22 கரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைக்குள் நுழைய தடை !

பயணிகள் 22 கரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிந்து கொண்டு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அவர்கள் வருவதற்கு முன்னர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் அனுமதி பெற்றால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் பயணிகள் தங்க நகைகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு அல்லது சாதாரண பயணிகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தாது என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வீட்டு வேலைக்குச் செல்லும் இலங்கை பெண்களுக்கு பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து விசேட பயிற்சிகள் !

மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்லும் சில பெண்களுக்கு பாதுகாப்பான பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் விபசார வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களினால் இலங்கைப் பெண்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முதலாளிகளுடன் பாதுகாப்பான உடலுறவை எவ்வாறு பேணுவது? அவர்களின் உடலை சரியாக மசாஜ் செய்வது எப்படி? அந்த முதலாளிகளை எப்படி பாலியல் ரீதியாக மகிழ்விப்பது? என இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், குவைத், ஓமான், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் பாலியல் தூண்டுதல் மாத்திரைகள் மற்றும் கருத்தடை உறைகள் குறித்து சம்பந்தப்பட்ட பயிற்சியின் போது விளக்கமளிக்கப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதை வெளிப்படுத்திய விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்காத கல்வித் திணைக்கள அதிகாரிகள் !

இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – சீன தூதுவர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹொங்க்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (25) இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி குறித்து இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என சீன தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்தார்.

சீனா தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களை கண்டிப்பதாகவும் சீன தூதுவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் இலங்கையை விட்டு 200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் !

“பொருளாதார நெருக்கடியினால் 200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். ஆகவே மிகுதியாக இருக்கும் வைத்தியர்களையாவது தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.” என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்பு மருத்துவ சேவைத்துறையில் தாக்கம் செலுத்தியுள்ளது.வைத்தியர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெறும் வயதெல்லையை மறுபரிசீலனை செய்யுமாறு சுகாதாரத்துறை செயற்குழு கூட்டத்தின் போது பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.

குருநாகல் வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவின் விசேட வைத்தியர்களில் இருவரும்,களுத்துறை பொது வைத்தியசாலையில் இரண்டு மகப்பேற்று பிரிவு விசேட வைத்தியர்களும் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்கள். நாட்டில் மருந்து தட்டுப்பாடு காணப்படும் பின்னணியில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை தோற்றம் பெற்றால் வைத்தியசாலைக்குள் போராட்டம் தோற்றம் பெறும்,அது பாரதூரமான எதிர் விளைவுகளை தோற்றுவிக்கும் என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் இருந்து சுமார் 200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளார்கள்,ஆகவே மிகுதியாக இருப்பவர்களை பாதுகாத்துக் கொள்வதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டும்.

விசேட வைத்தியர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெறும் வயதெல்லை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்.பொருளாதார பாதிப்பு மருத்துவ துறையில் தீவிரமடைந்தால் முழு நாடும் மிக மோசமாக பாதிக்கப்படும் என்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அகதிளாக இந்தியாவில் தஞ்சம் !

மேலும் ஐந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தனுஷ்கோடியின் முதல் தீவை இவர்கள் சென்றடைந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் சென்று மண்டபத்தில் உள்ள சிறப்பு முகாமில் முகாமிட்டுள்ள அகதிகளின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது.

பத்து இலங்கையர்களைக் கொண்ட குழுவொன்று புதன்கிழமை இராமேஸ்வரம் கரையை இரகசியமாக வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு இளைஞர், ஐந்து குழந்தைகள் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா கால சுகாதார நடைமுறைகளை மீண்டும் பின்பற்றுங்கள் !

காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களை மீண்டும் பின்பற்றினால் இந்த வைரஸ் நிலைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.