உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் – சபையில் மனோகணேசன் கோரிக்கை!

“தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் பேரில் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டும்.” என மனோ கணேசன்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச. 08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்நது தெரிவிக்கையில்,

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தெரிவிக்கும்போது, இன்னும் 40 பேரே அவ்வாறு சிறைச்சாலைகளில் உள்ளதாகவும் அவர்கள் தொடர்பான விசாரணைகள் சம்பந்தமாகவும் தெரிவித்தார்.

எனினும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை கட்டங்கட்டமாக அல்லாமல் ஒரே தடவையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க முடியும். அத்தகைய நம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள் மூலமே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும்.

ஏற்கனவே கடந்த தீபாவளியின் போது எட்டுப் பேரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தது போன்று எதிர்வரும் பொங்கல் தினத்திலும் மேலும் சிலரை விடுதலை செய்யுமாறு நாம் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதேவேளை அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் பேரில் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் வரவு -செலவுத் திட்டத்தில் மலையக தோட்டப்பகுதி மக்கள் தொடர்பில் எத்தகைய வேலை திட்டங்களும் முன் வைக்கப்படவில்லை.

தற்போதைய நிலைமையில் நிவாரணங்களை வழங்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றாவது குறிப்பிட்டிருக்க வேண்டும்.

நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் பேசப்படும் நிலையில், கிராமப் புறங்களில்  அது 36 வீதமாகவும் நகர்ப்புறங்களில் அது 46 வீதமாகவும் காணப்படுவதுடன் மலையகத் தோட்டப்புறங்களில் அது 53 வீதமாகவும் காணப்படுகின்றது.

அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதுடன் தோட்டப் பகுதி மக்களுக்காக அரசாங்கம் எத்தகைய திட்டத்தை முன்னெடுக்கப் போகின்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சமுர்த்தி உதவி வழங்குவது முறைப்படுத்தப்பட வேண்டும் அதற்காக தற்போதுள்ள சமுர்த்தி பட்டியலை நீக்கிவிட்டு மின் கட்டண பட்டியலை வைத்து அதற்கான செயற் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் நியாயமானதாக அமையும் என்பதால் அதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

இலங்கையை விட்டு வெளியேறிய இலட்சக்கணக்காண மக்கள் – மத்திய வங்கி அறிக்கை !

2022 ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 2,51,151 பேர் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஆரம்பமாவதற்கு முன் வருடாந்தம் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில் இது பாரிய அதிகரிப்பென்று மத்திய வங்கி கூறுகிறது.

இதேவேளை, 2022 ஒக்டோபர் மாதத்தில் 28,473 பேர் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் 11,399 திறனற்ற தொழிலாளர்கள், 7,887 பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 6,165 பேர் உள்நாட்டு சேவைகளுக்காக சென்றுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பதிவாகியுள்ள வெளிநாட்டுப் பணம் 355 மில்லியன் டொலர்களென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2022 ஜனவரி-ஒக்டோபர் இல் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 2,929 மில்லியன் டொலர்கள். 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில், இந்த மதிப்பு 4,895 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப கல்வி ஆரம்பம் !

2023ஆம் ஆண்டு முதல் சாதாரண தரப் பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்குவதோடு , 8ஆம் தரத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடமாக அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் வேலை வாய்ப்புகளைத் தேடுவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடினமான பணியாக இருக்கும் என்றும், இந்த வளர்ச்சியைத் தயாரிக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தரம் 10 இல் பாடத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் தரம் 8 முதல் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

21ஆம் நூற்றாண்டின் தேவைகளை இளைஞர்கள் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

காலாவதியான பரீட்சை நிலைய கல்வி முறையிலும் சிறு திருத்தங்களைச் செய்து தீர்வு காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

முறைமை மாற்றங்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்றும், இளைஞர்களும் இத்தகைய மாற்றங்களை கோருகின்றனர், கல்வி மாற்றத்தில் புரட்சிகர மாற்றங்களை அமல்படுத்த தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் தீவிரமான நிலையில் காற்று மாசு நிலை – கட்டாயமாக முகக்கவசங்களை அணியுங்கள் !

பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்ள்ளார்.

இது தொடர்பில் வைத்தியர் தெரிவிக்கையில்

“இயலுமானவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். இந்தியாவில் இருந்து வரும் காற்றால் , ​​கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, புத்தளம், கண்டி, வவுனியா போன்ற முக்கிய நகரங்களில் இந்த மோசமான காற்று மாசு நிலை பதிவாகியுள்ளது

இந்த நிலைமையை இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்தவரை கட்டுப்படுத்தினால் நல்லது. மேலும் முகக்கவசத்தை அணிவது முக்கியம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இராணுவத்தினருக்கு புதிய வரவு-செலவு திட்டத்தில் 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது எதிர்க்கப்பட வேண்டிய விடயமல்ல.“ – இரா.சாணக்கியன்

“2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நடுத்தர மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ‘சர்வஜன நீதி’ ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இராணுவ சிப்பாய்களின் நலனுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஆனால் ஒதுக்கப்படும் நிதி உண்மையில் இராணுவ சிப்பாய்களை சென்றடைகிறதா என்பதை ஆராய வேண்டும்.

நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ள நாட்டு மக்களுக்கான நலன்புரி சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் இராணுவத்தின் உயர் அதிகாரிகளின் சீறுடை பிரான்ஸ் நாட்டில் இறக்குமதி செய்யப்படப்படுகிறது.

இராணுவ உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் நவநாகரிக பொருள் கொள்வனவுக்கு செல்லும் போது அரச செலவுடன் அவர்களுக்காக இராணுவ சிப்பாய்கள் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. இவ்வாறான அடிப்படை முறையற்ற செயற்பாடுகள் முதலில் திருத்திக் கொள்ளப்பட வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ள பின்னணியில் நேரடி வரி அறவிடலினால் நடுத்தர மக்கள்பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்படவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நடுத்தர மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் சிகரெட்விற்பனை விலைக்கும், சிகரெட்நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிப்பிற்கான வரைபுகளை தயாரிக்கும் அரசாங்கம் சிகரெட் நிறுவனத்திடமிருந்து முறையாக வரி அறவிட நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை வகுக்கவில்லை.

ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் சிகரெட் நிறுவனத்திற்கு பல்வேறு வழிமுறையில் வரி விலக்கு வழங்கியுள்ளன. 2000 ஆம் ஆண்டு ஆட்சியில்  சிகரெட்ஒன்றின் விற்பனை விலைக்கும் – நிறுவனத்திடமிருந்து அறவிடப்படும் வரிக்கும் இடையில் சமனிலை தன்மையை பேணப்பட்டது. ,பிற்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் சிகரெட் நிறுவனங்களுக்க சார்பாகவே செயற்பட்டது.

இலங்கையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சிகரெட் உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் 2021ஆம் ஆண்டு வரி விதிப்புக்கு முன்னர் பல பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வருடம் மாத்திரம் 40 முதல் 50 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட் ஒன்றின்விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது. ஆனால் சிகரெட் உற்பத்திக்கான வரி விலக்கு 50 சதவீதத்தால் வழங்கப்பட்டது.

ஆகவே நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த நிறுவனம் பெறும் வருமானத்தில் ஒருபகுதியை அரசாங்கம் பெற்று அதனை நடுத்தர மக்களின் நலன்புரி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயம் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை நிதியமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

வரவு -செலவு திட்ட 3ம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் – வாக்களிக்காத தமிழ்தேசிய கூட்டமைப்பினர் !

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 3ஆம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்போது, 2 பேர் வாக்களிக்கவில்லை.

மேலும் 2023 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமவிங்கவினால் கடந்த மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை. அத்துடன் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போதும் வாக்களிக்காத கூட்டமைப்பினர் தமிழர் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவு தருவதாக கூறியதால் கூட்டமைப்பினர் எதிராக வாக்களிக்காது நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்ததாக அறிவிறித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் குற்றச் சுட்டெண் 4.64 சத வீதமாக அதிகரிப்பு – NARC அறிக்கை !

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் நிகழும் நாடுகளில் இலங்கை 6ஆவது நாடாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் சர்வதேச பொலிஸாருடன் தொடர்புடைய NARC வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் குற்றச் சுட்டெண் 4.64 சத வீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கையில் 30 பாதாள உலகக் குழுக்கள் உள்ளதாகவும் குறிபிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில்14 வயது சிறுமி குழந்தை பிரசவம் – சந்தேகத்தில் 73 வயதான முதியவர் கைது !

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், சிறுமியுடன் நெருங்கி பழகியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம் யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மாணவனை மிரட்டி தேசிய மட்ட போட்டியில் இருந்து விலக வைக்க அதிபரும் வலயக்கல்வி அதிகாரியும் போட்ட கபட நாடகம் – நடவடிக்கை எடுக்குமா வலிகாமம் வலயக் கல்வி அலுவலகம்..?

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனை தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்க விடாமல் அதிபர், ஆசிரியர்கள் தடுத்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முறைப்பாட்டை விசாரிப்பதற்காக பாடசாலைக்கு வருகை தந்த வலிகாமம் கல்வி வலய அதிகாரி ஒருவரும், குறித்த மாணவனை சுய விருப்பின் பேரில் போட்டியில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதித் தருமாறு வற்புறுத்தினார் எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நாடகம் ஒன்று கோட்டம், வலயம், மாவட்டம், மாகாண மட்டங்களில் வெற்றிபெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) கொழும்பில் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்குபற்றும் மாணவர்களில் சிலர் அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர். அவர்களில் சிலர் பாடத் தெரிவின் அடிப்படையில் மேற்படி பாடசாலையில் இல்லாத பாடங்களை கற்பதற்கு விரும்பியதால் வேறு பாடசாலைகளில் அனுமதி பெற்றிருக்கின்றனர் எனத் தெரியவருகின்றது.
இதேபோன்றே, மேற்படி மாணவனும் ஊடகவியல் பாடத்தைக் கற்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். அந்தப் பாடத்திற்கு பாடசாலையில் ஆசிரியர் இன்மையால் வேறு பாடசாலையில் அனுமதி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். குறித்த மாணவனும் தேசிய மட்டத்திற்கு செல்லும் நாடகக் குழுவில் இடம்பெற்றிருந்ததால் கடந்த வியாழக்கிழமை பாடசாலையில் இடம்பெற்ற ஒத்திகை பார்க்கும் நிகழ்விற்கு சென்றார்.
இதன்போது, அவரை அழைத்த அதிபர் வேறு பாடசாலைக்கு செல்லவிருக்கும் மாணவன் என்பதால் நாடகத்தில் பங்குபற்ற முடியாது எனக் கூறி அவரது விடுகைப் பத்திரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினார். வீட்டிற்கு சென்ற மாணவன் விடயத்தை பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து பாடசாலைக்கு சென்ற தாயார் தமது கோரிக்கை இன்றி தனியே மகனிடம் விடுகைப் பத்திரத்தைக் கொடுத்தமை தொடர்பாக தமது ஆட்சேபனையை வெளியிட்டார். மேலும். நாடகத்தில் தமது மகன் இடம்பெறாமை குறித்தும் கவலையை வெளியிட்டார். இதன்போது, கொழும்பிற்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு நிதி இல்லை எனவும் தாம் போட்டிக்கு செல்லவில்லை எனவும் அதிபர் தமக்கு தெரிவித்தார் என தாயார் கூறினார்.
எனினும், பின்னர் நாடக ஒத்திகைக்காக மாணவர்களுக்கு அறிவிக்கும் வாட்சப் குழு கலைக்கப்பட்டு குறித்த மாணவன் இணைக்கப்படாமல் புதிய குழு உருவாக்கப்பட்டு நாடக ஆற்றுகைக்கான ஒத்திகை இடம்பெற்றிருக்கின்றது. இதை அறிந்த தாம் அதிபரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அதிபர் என்ற வகையில் தமக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உண்டெனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் என தாயார் கூறினார்.
மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக வலிகாமம் வலயக் கல்வி அலுவலகம், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றில் பெற்றோர் நேற்று (06) முறைப்பாடு செய்தனர்.
இதன்போது, மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர், விசாரணை நடத்துவதற்காக நேற்று (06) பிற்பகல் பாடசாலைக்கு சென்றபோது,  இரு பெற்றோர்களும் ஆசிரியர்கள் சிலரும் குறித்த மாணவனுக்கு எதிரான கருத்துக்களை கடுமையாக முன்வைத்தனர்.
அங்கிருந்த பெற்றோர்கள், குறித்த மாணவன் போட்டியில் கலந்துகொள்வதாக இருந்தால் தமது பிள்ளைகளை தாம் பங்குபற்ற அனுப்பமாட்டார் எனக் கூறியிருக்கின்றனர். குறித்த மாணவன் ஒழுக்கம் அற்றவர் எனவும் அவரை இனி பாடசாலை நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதிக்க தாம் விரும்பவில்லை எனவும் ஆசிரியர்கள் கூட்டாகத் தெரிவித்தனர் என தாயார் கூறினார்.
மாணவனுக்கு குரல் வளம் சரியாக இல்லை என அங்கிருந்த இசைத்துறை பாட ஆசிரிய ஆலோசகர் தெரிவித்தார் எனக் கூறிய தாயார், நாடகம் மாகாண மட்டம் வரை சென்று வெற்றிபெறுவதற்கு சரியாக இருந்த குரல்வளம் இப்போது எப்படி திடீரென இல்லாமல் போகும் எனக் கவலையுடன் கேள்வி எழுப்பினார்.
தீர்வை வழங்குவதற்காக பாடசாலைக்கு வந்திருந்த கல்வி வலய உயரதிகாரி, மாணவனின் தாயாரை வெளியே அனுப்பிவிட்டு அறையினை பூட்டி, குறித்த மாணவனை சுயவிருப்பில் நாடகத்தில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதி ஒப்பிட்டு வழங்குமாறு கோரினார் எனவும் தாயார் தெரிவித்தார். இவர்கள் இவ்வாறு முறையற்று நடந்துகொண்டால் வலிகாமம் வலயத்தின் கல்வி எப்படி உயரும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக குறித்த பாடசாலையின் அதிபரை தொடர்புகொண்ட வேளை அதிபர் பதில் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறிவிட்டு அழைப்பினை துண்டிப்பதாகவும் அறிய முடிகிறது.
இன்றையதினம் இது தொடர்பில் தகவல் பெறுவதற்கு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டவேளை குறித்த மாணவன் தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்பதனை உறுதிப்படுத்தினார்.
மாணவர்களை வழிப்படுத்தி வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய கல்விச் சமூகமே மாணவர்களின் திறமைகளை குழிதோண்டிப் புதைப்பது என்பது மிகுந்த மனவேதனையையும் பாடசாலைச் சமூகம் மீதான அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான வங்கி முகாமையாளர் கைது !

பாடசாலையொன்றில் பயிலும் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை எனவும் அவரது மனைவி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது தொலைபேசி மூலமாக அறிமுகமான குறித்த நபர் சிறுமியை கருப்பு கண்ணாடி பதித்த ஜீப்பில் அழைத்துச் சென்று பொது வாகன நிறுத்துமிடங்களில் வைத்து துஸ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.