உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

கைவிசேஷம் தர மறுத்த வெளிநாட்டவரை தாக்கிய நபர் – யாழில் சம்பவம் !

தனக்கு கைவிசேஷம் தர மறுத்தவரை நபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார்.

மட்டுவில் பகுதியில் புத்தாண்டான கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு உறவினர் சிலருக்கு கைவிசேடம் வழங்கியுள்ளார். இதை கேள்வியுற்று மதுபோதையில் சென்றவர் தனக்கும் கைவிசேடம் தருமாறு கோரினார்.

இதன்போது கைவிசேடம் கொடுத்தவர் நாளை காலை வருமாறு கோரியுள்ளார். இதன்போது மதுபோதையில் இருந்தவர் அவர் மீது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். தாக்குதலால் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதியிடம் பொன்சேகா முன்வைத்துள்ள கோரிக்கை !

நாட்டில் இடம்பெறும் அமைதியான மக்கள் போராட்டங்கள் குறித்து ஊழல் ஆட்சியாளர்கள் விடுக்கும் சட்டவிரோத உத்தரவுகள் குறித்து பாதுகாப்பு செயலாளரும் இராணுவதளபதியும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என சரத்பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது முகநூல் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். குறித்த பதிவில்,

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைக்கு எனது உத்தரவின் கீழ் நீங்கள் படையணிகளிற்கு தலைமை தாங்கினீர்கள். ஆகவே நாட்டில் உருவாகியுள்ள பொதுமக்கள் போராட்டம் குறித்து ஊழல் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படும் சட்டவிரோத உத்தரவுகளை நீங்கள் புறக்கணிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

உயிர்வாழ்வதற்கான போராட்டத்திற்காக மாத்திரம் சிவில் சமூகத்தின் மீது அழுத்தம் திணிக்கப்பட்டுள்ளது இந்த நிலை ஊழல் மிகுந்த திறமையற்ற நிர்வாகத்தினாலேயே ஏற்பட்டுள்ளது. இதுவே அமைதியான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

தங்கள் அதிகாரத்தை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக ராஜபக்ச அரசாங்கம் பொதுமக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதனை சர்வதேச சமூகம் கடுமையாக கண்டிக்கும். மனிதாபிமான நடவடிக்கைகக்கு தலைமைவகித்த யுத்தவீரர்கள் எவரும் அவமானப்படுவதை தான் விரும்பவில்லை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் பெறுமதியானவை அல்ல.”- கெஹெலிய ரம்புக்வெல விசனம் !

பெறுமதியான நோக்கங்களிற்காக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே காலிமுகத்திடலில் இளைஞர்கள் கூடியுள்ளனர் சிறந்த நோக்கங்களிற்காக இல்லை. ஆர்ப்பாட்டங்களிற்கா கூடியுள்ள இளைஞர்களின் நோக்கங்கள் குறித்து கேள்விகள் உள்ளது.  முக்கியமற்ற ஒன்றுகூடல்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.

அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என காண்பிப்பதே எதிர்கட்சியின் கடமை.  பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையேற்பட்டால் தாங்கள் எதிர்கட்சியை நோக்கி செல்லவும் தயார்.

ஜனாதிபதி பதவி விலகினால் ஆட்சிபொறுப்பை யார் ஏற்பது போன்ற விடயங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எந்த அரசியல்வாதியும் நாட்டை வேண்டுமென்றே வங்குரோத்து நிலைக்கு தள்ளப்போவதில்லை. தவறுகள் இடம்பெற்றுள்ளன அதனை திருத்துவதற்கு அரசாங்கம் முயல்கின்றது.

ஆட்சி கட்டமைப்பு இல்லாமல் நாட்டை பின்னோக்கி செல்ல அனுமதிக்க முடியாது.காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் போல இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் அர்த்தபூர்வமானவையாக காணப்படவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“எங்களால் தமிழ்மொழியை சரளமாகப் பேச முடியாமைக்கு வெட்கப்படுகிறோம்.”- தமிழர்களை போராட வருமாறு சிங்களக் கலைஞர்கள் அழைப்பு !

எதிர்காலச் சந்ததியினருக்கான தாய்நாட்டைப் பாதுகாக்கும் வகையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் இலங்கைவாழ் அனைத்துத் தமிழர்களும் கலந்துகொள்ளுமாறு சிங்களக் கலைஞர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தங்களால் தமிழ்மொழியை சரளமாகப் பேச முடியாமைக்கு வெட்கப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ள சிங்களக் கலைஞர்கள், இலங்கை தேசத்தின் 90 வீதமான தமிழர்களுக்குச் சிங்கள மொழியை சரளமாகப் பேச முடியும் என்பது பெருமைக்குரியது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் சிங்களக் கலைஞர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
“பேரன்புமிக்க தமிழ்ச் சகோதரர்களே! இது உங்களுடைய தேசம். நாம் பிறந்த இந்தத் தேசத்தை நமது எதிர்காலச் சந்ததிக்காகப் பாதுகாப்போம். ஆகவே, கசப்புணர்வுகள் கடந்து அவற்றை மறந்து காலிமுகத்திடலுக்கு வாருங்கள்; எம்மோடு இணையுங்கள். அன்பான தமிழ்ச் சகோதரர்களே! உங்களை அன்போடு அழைக்கின்றோம். வந்து எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.

நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு சீராக அமையும் என்று நம்பி. இருந்தோம் ஆனாலும் அந்த நம்பிக்கை வீணாகி விட்டது. ஆகவேதான் கலைஞர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து இருக்கின்றோம். இன்றைய இந்த ஆட்சியானது நமக்குத் தேவையில்லை. நாட்டை சிறந்த முறையில் நிர்வகித்துக்கொண்டு நடத்துபவர்களே எமக்குத் தேவை. அதற்காக நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்” – என்றனர்.

காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக தனிப்பட்ட இராணுவப்பயிற்சி – அம்பலப்படுத்திய அரசியல்வாதி !

“காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தி வருவோர் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.” என  முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கடவத்தையில் உள்ள இந்த இராணுவ கமாண்டோ படைப் பிரிவின் முகாமில், தற்போது காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எழுப்பி வரும் கோஷத்தை கூறியவாறு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நபர்களுக்கு பயிற்சிகளை வழங்கி முடித்த பின்னர், காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தி வருவோர் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எதற்காக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இராணுவ முகாமில் சிலர் போராட்டம் நடத்துகின்றனர். அங்கு இராணுவத்தினர் அதில் தலையிட தயாராக இருக்கின்றனர்.

தாக்குதல் நடத்த கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இது கடவத்தை கமாண்டோ படைப் பிரிவின் முகாமில் நடத்தப்படும் பயிற்சி என்பதை பொறுப்புடன் கூறுகிறோம். இந்த முகாமில் நடத்தப்படும் பயிற்சி என்ன என்பதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

எதற்கு தயாராகின்றனர், எங்கு இந்த பயிற்சி நடக்கின்றது என்பதற்கான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும். அதேவேளை கோட்டாபய வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய நபர், காலிமுகத் திடல் போராட்ட களத்திற்கு சென்றிருந்தார். வடை விற்பனை செய்யும் கடை ஒன்றில் அந்த நபர் காணப்பட்டார். அரசாங்கம் தமக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்த போராட்ட களத்திற்குள் சிலரை அனுப்பியுள்ளது. இது குறித்து கவனமாக இருக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரிடம் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் அமைச்சரவையை மீண்டும் நியமிப்பது தொடர்பாக அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

ஓரிரு நாட்களின் அமைச்சரவை பதவியேற்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஜனாதிபதிஅரச தலைவர், பிரதமர் ஆகியோரை தவிர ஏனைய ராஜபக்சவினர் இல்லாத அமைச்சரவையை நியமிக்க தயாராகி வருகின்றனர். போராட்டத்தின் தன்மையை பார்க்குமாறு நாமல் ராஜபக்ச உட்பட ராஜபக்சவினரை கேட்டுக்கொள்கிறோம்.

வீதியில் மக்கள் உங்களை தூஷண வார்த்தைகளால் திட்டுகின்றனர். அரசாங்கம் ஒன்றை முன்னெடுத்துச் செல்ல வாக்குகளை பெற்றால் மாத்திரம் போதாது. வாக்குகளை பெற்று ஆயுதங்களை காட்டி அதிகாரத்தை தக்கவைக்கவும் பார்த்தனர். எனினும் சமூகத்தில் சிறிதளவேனும் அங்கீகாரம் இருக்க வேண்டும். மக்கள் மத்தியில் ராஜபக்சவினர் மோசமான அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அப்படியால், ராஜபக்சவினர் யாருக்கு தலைமையேற்க போகின்றனர். எப்படி ராஜபக்சவினர் அரச தலைவராகவும் பிரதமராகவும் பதவி வகிக்க முடியும்.

எரிபொருள், மின்சாரம் போன்றவற்றை வழங்கியதும் காலிமுகத் திடல் போராட்டம் கலைந்து விடும் என அரசாங்கம் எண்ணுகிறது. அதன் பின்னர் அமைச்சரவையை நியமிக்கலாம், அதுவரை பதவியில் இருந்து விலகி இருக்கலாம் என ராஜபக்சவினர் கருதுகின்றனர்.

பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய ராஜபக்சவினர் தற்போதைக்கு அமைச்சு பதவியை ஏற்பதில்லை என்றே தீர்மானித்துள்ளனர். அரசாங்கம் இந்த முடிவை எடுத்து அறிவித்தால், போராட்டம் மேலும் பல மடங்காக அதிகரிகும் என நாங்கள் அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம் எனவும் துமிந்த நாகமுவ கூறியுள்ளார்.

மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை !

“திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு குடும்ப ஆட்சியே காரணம். வரலாற்றில் நாடு காணாத மோசமான அரசாங்கம் தற்போதைய அரசாங்கம்.

இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்வேறு நாடுகளில் திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது .

நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்க பிரேரணையை நிறைவேற்றி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சி செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை ஸ்தாபிப்பதாகவும் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

 

“சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள்.” – எம்.ஏ.சுமந்திரன்

“சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அங்கு பேசிய அவர்,

“ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது என 2010 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் சொல்லி விட்டனர். 2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். இன்றுதான் சிங்கள மக்கள் அதைச் சொல்கின்றனர். இது எமக்குச் சிரிப்பாக இருக்கின்றது.

யார் இந்தப் போராட்டக்காரர்கள் என்று பார்த்தால் இளைஞர்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜபக்சக்கள் இங்கே இடம்பெற்ற போரைக் காட்டி கடன் வாங்கினார்கள். இப்போதும் நாட்டைக் காட்டி கடன் வாங்கி இருக்கிறார்கள். நாம் அன்று அல்லல்பட்டோம். எங்களுக்காக ஒருவர் கூட அன்று பேசவில்லை. ஆனால், இப்போது போராட்டத்தில் உள்ள இளைஞர்கள் இதை உணர்வார்கள்.

இதே காலிமுகத்திடலில் 66 வருடங்களுக்கு முன்னர் சாத்வீகப் போராட்டத்தை அன்று மேற்கொண்டோம். இதைத் தற்போதைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அன்றும் நாம் சமத்துவத்துக்காகப் போராடினோம். ஆகவே, உங்களின் போராட்டத்தின் நோக்கத்தை அறிவதற்கு நாம் இப்போது ஆவலாக உள்ளோம் என்றார்.

தொடரும் பெற்றோல் நெருக்கடி – பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினை முற்றுகையிட்ட பொதுமக்கள் !

மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன கிளையினை இன்று பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்தவேளையில், அதனை பொலிஸார் தடுத்த நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு மக்களும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருட்கள் வழங்கப்படாது என்று வெளியான அநாமதேய தகவல்களையடுத்து பெருமளவானோர் இன்று மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினை முற்றுகையிட முற்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் நிலைமையினை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துடன் அங்கிருந்தவர்களை கலைந்துசெல்லுமாறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

கோட்டாபாயராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைதான பொலிஸ் அதிகாரி – நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு !

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் நேற்று கலந்துகொண்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

கொழும்பு நீதிவான்  நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நீதிவானின் உத்தரவின் பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் எதிரான குறித்த போராட்டத்தில் சீருடையுடன் கலந்துகொண்டு மக்களுக்கு ஆதரவாக குறித்த  அதிகாரி குரல் கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அதன்பின்னர் அவர் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டதுடன், ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டதையடுத்து, கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலையில் இருந்து தந்தை மற்றும் 9 வயது மகனின் சடலம் மீட்பு !

தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இன்று (15) காலை குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பை பார்வையிட வந்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவரும் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலைக்குள் நுழைந்துள்ளதுடன் பிற்பகல் 2.00 மணி ஆகியும் வெளியே வராத காரணத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே சென்று அவதானித்த போது தண்ணீர் தொட்டியில் இருந்து குறித்த இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ரப்பர் தொழிற்சாலையின் நிர்வாக தர அதிகாரி என்பதுடன், தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பாதுகாப்பு குறித்து விசாரிக்க அங்கு வந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

தொழிற்சாலைக்கு தண்ணீர் சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட தொட்டியில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் காலி அக்மீமன பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.